மழை

ஜன்னலைத் திறந்தேன். "சிலீர்" எனக் காற்றும் சாரலும் வந்து முகத்தில் மோதின. நல்ல மழை பார்த்து எத்தனை நாளாயிற்று. ஜன்னல் கம்பிகளில் என் கன்னங்கள் பட, கன்னம் தொடங்கி உயிரின் கடைசி முடிச்சு வரைக்கும் இனம் புரியா சிலிர்ப்பு. இந்நேரம் அவள் இங்கு இருந்திருந்தால் ஜன்னலை மூடச் சொல்லி இருப்பாள்.

எல்லோரையும் போலத்தான் அவளும். வெயில் கொளுத்தும்போது, "ஸ்...அப்பா! ஒரு மழை அடிச்சா நல்லா இருக்குமில்ல" என்பாள். சிறு தூறல் விழுந்தால் போதும், அவளுக்கு ஜன்னல்களும், கதவுகளும் அடைக்கப்பட்டாக வேண்டும்.

எனக்கு அப்படியில்லை. சின்ன வயதிலிருந்தே மழையை ரசிப்பது மட்டுமல்ல அதில் குளிரக் குளிரக் குளிக்க வேண்டும். மனதின் அழுக்கெல்லாம் கரைந்து, மறைந்து புதிதாய் பிறந்தாற்போல ஆகும்வரை மழையில் நனைந்துக் கொண்டே நடக்க வேண்டும்.

மனம்போல் அமைந்தது கல்லூரி வாழ்க்கையும். வெளியூரில் தங்கிப் படித்ததால் மழையில் நனைவதைத் தடுப்பாரில்லை. மழை வந்ததும் அறையை விட்டு நானும் கிளம்பி விடுவேன். ஆளரவமற்ற சாலையில் மழை அம்புகளை மேனியில் தாங்கியபடி நடக்கத் தொடங்குவேன்.

கேசம் கலைத்து உச்சந்தலையில் விழுந்து நெற்றியின் வழியே இறங்கி மூக்கின் நுனியில் வந்து நின்று கொண்டிருக்கும் மழைத்துளி பிடிக்கும். வெட்ட வெளியில் நின்று இரு கை விரித்து மழைத்துளிகளைச் சேகரித்துப் பருகப் பிடிக்கும். மழையில் நனைவதைப் பொறுத்தவரை ஊருடன் ஒத்து வாழ் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

பள்ளிக் காலத்திலும் வகுப்புகள் நடக்கையில் மழை பெய்தால் எனக்கு இருப்பு கொள்ளாது. வானம் தொடுக்கும் மழைச் சரத்தை மார்பில் ஏந்தாமல் வகுப்பறையில் தமிழ் வீரம் என்ன சுகம் ஓடும் சிற்றோடையாய் மழை நீரோட, வகுப்பு முடிந்ததும் நானே கப்பல் விடும் சிறு பையன் ஆவேன்.

இப்போதோ மழையில் நனைவதே அரிதானது. மழை பெய்யும்போது அலுவலகத்தில் இருந்தாலொழிய மழையில் நனைவது சாத்தியமில்லை. அலுவலை விரைந்து முடித்துவிட்டு நனைந்தபடி வீட்டுக்கு வந்ததுண்டு. "இப்ப என்ன ஓணமா ஓடிப்போகுது ஆபிஸ்ல இருந்து கொஞ்சம் லேட்டாதான் வந்தா என்ன அல்லது சீக்கிரம் கேட்டுக்கிட்டு வரணும். ரெண்டும் இல்ல. மழையில் நனைஞ்சு உடம்புக்கு ஏதாவது வந்தா என்ன செய்ய" எனத் தொடங்கி குறைந்தது மூன்று நாட்களாவது அதுகுறித்து முணுமுணுப்பாள் மனைவி. அவள் கோபச் சாரலுக்குப் பயந்தே இரண்டு புதுக்குடைகளும், ஒரு மழைக்கோட்டும் வாங்க வேண்டியதானது. அலுவலகம் புறப்படும்போது மழை பெய்வதுபோல இருந்தால் மறக்காமல் கையில் குடையையும் திணிப்பாள். இதற்காகவே அவளுக்கு ஞாபக மறதி வேண்டும் என மழையையே வேண்டிக் கொள்வேன்.

அவள் பேசுவதுகூட மழைபோலத்தான். சாரலாய், தூறலாய், அடைமழையாய், கோடை மழையாய்...இருக்கும் அவள் பேச்சு. சட்டென்று சமரசமும் ஆகிவிடுவாள். "ஜலதோஷம் பிடிச்சுக்கிட்டா உங்களுக்குத் தாங்க முடியாது. குழந்தை மாதிரி ஆயிடுவீங்க. அதுக்காகத்தான் சொல்றேன்" என்பாள்.

அதிகம் படித்ததில்லை அவள். "எட்டாங் கிளாஸ் வரைக்கும் படிச்சிருக்கேன்" எனத் திருமணமான இந்த ஆறு மாதங்களில் பத்து முறையாவது சொல்லியிருப்பாள். எழுத்துக் கூட்டிப் படிப்பாள். வளைந்து நெளிந்து ஓடும் மழை நீராய் கையெழுத்துப் போடுவாள்.

பிடிவாதமும், சற்றே முன்கோபமும் உள்ள அவளே ஒரு பாமரக் கவிதைதான். வலுக்கட்டாயமாக ஏதேனும் கவிதைப் புத்தகம் கொடுத்து வாசிக்கச் சொன்னால், சில வரிகள் வாசிப்பதற்குள் கொட்டாவி விட்டுவிட்டு உறங்கச் செல்வாள். இல்லையெனில், "எனக்கு நாலு வரி படிக்க முடியல. நீங்க எப்படி இப்படி இவ்ளோ புக் படிக்கிறீங்க" எனப் புகழ்ந்தபடி மெல்ல நழுவுவாள், துலக்காமல் கிடக்கும் பாத்திரங்களையோ, துவைக்கக் கிடக்கும் துணிகளையோ சாக்காகக் கொண்டு.

ஜன்னலுக்கு வெளியே தோட்டத்தில் அவள் வைத்திருக்கும் ரோஜாச் செடி முதல் மொட்டு விட்டிருக்கிறது. விதவிதமாய் செடிகள் வளர்க்க வேண்டும் என்பது அவள் ஆசை. முதல் முயற்சியில் நான்கு வண்ணங்களில் ரோஜாக்களும், ஒரு மல்லிகையையும் ஒரு மாதத்துக்கு முன் வாங்கி வரச் சொன்னாள். அவளே குழிபறித்து நட்டு, நீருற்றி செடிகளோடு சிநேகம் காட்டினாள். தலை நிறைய மல்லிகை வைத்தாலும் வலது காதோரம் ஒரு ரோஜா வைப்பது அவள் விருப்பம்.

மொட்டுவிட்ட ரோஜா இன்னும் ஓரிரு நாள்களில் பூவாகலாம். "முதல் பூவை உங்க கையால எனக்கு வச்சிவிடணும்" என என்னிடம் அவள் இதுவரை பலமுறை சொல்லியிருப்பாள். அவள் வளர்க்கும் ரோஜாச் செடியின் முதல் பூவை நான் சூட்டி விடுவதில்தான் அவளுக்கு எத்தனை மகிழ்ச்சியும், பாசமும்!

பாசமா? அது அத்தனைப் பாசம் இருந்தால் அப்படி ஒரு சின்ன ஒன்றுமற்ற விஷயத்துக்காக கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டுக்குச் செல்வாளா, நீ எக்கேடும் கெட்டுப் போ என்றபடி. என்ன விஷயத்துக்காகக் கோபித்துச் சென்றாள் என்பதுகூட எனக்கு நினைவில்லை. கோபித்துச் சென்றவள் அவள். அவளே போன் செய்யட்டும் என்றே நானிருந்தேன். எப்படியும் நான் பேசிவிடுவேன் என அவள் அங்கிருக்கிறாளோ? வீட்டுக்குப் போய் ஆறு நாள்களாகியும் இதுவரை ஒரு போன்கூட செய்யவில்லை. அவளே பேசட்டுமே முதலாவதாக!

மழை இன்னும் ஓய்ந்தபாடில்லை. எலும்பைத் துளைக்கும் இந்தக் குளிருக்கு இதமாய் அவள் அருகில் இருந்தால் என்னும் நினைப்பே என்னுள் மழைக்காகக் காத்திருக்கும் கோடைக்கால பூமிபோல உஷ்ணத்தை ஏற்படுத்தியது. அவளின் சிவந்த மெல்லிய காது மடல்களின் விளிம்பை விரல்களால் தீண்ட வெட்கத்தில் சிவக்கும் முகத்தை கைகளால் மூடிக் கொள்ளும் அவளின் குறும்புத்தனம் கண்முன்னே வந்து சென்றது.

இந்த மழைக்குச் சூடாக ஒரு கப் காபி பருகினால் இதமாக இருக்கும் எனத் தோன்றியது. கேஸ் அடுப்பைப் பற்றவைத்து காபி தயாரித்தேன். பாத்திரங்கள் அங்குமிங்கும் சிதறிக் கிடந்தன. ஒருவாய் காபி பருக கசந்து கிடந்தது. இன்னும் சிறிது சர்க்கரை கலந்தேன். கசப்பு சற்றே குறைந்திருந்தது என்றாலும் இன்னும் கொஞ்சம் சர்க்கரை கலக்கலாம் என்றது வாய். சிறிது கலக்க, தித்திப்பு திகட்டியது. அவளாயிருந்தால் என் ரசனைப்படி காபி தயாரித்து கொடுத்திருப்பாள். திருமணமாகி இத்தனை நாள்களில் ஒருநாள் கூட காபியில் இனிப்பு கூடியதுமில்லை, குறைந்ததுமில்லை. எங்கு சுற்றியும் என் மனது அவளிடமே வந்துவந்து நின்று விடுகிறது. காபியை கஷ்டப்பட்டு விழுங்கிவிட்டு, தம்ளரைக் கழுவிவைத்துவிட்டு வாசலுக்கு வந்தேன்.

செல்போன் ஒலித்தது. இந்நேரம் யாராக இருக்கும் யோசனையுடன் எடுத்தேன். புதிய எண்ணாக இருந்தது. "ஹலோ" என்றேன். எதிர்முனையில் பேச்சுக்குரலில்லை.

இரண்டு, மூன்று முறை ஹலோ சொல்ல வேண்டியதாயிற்று. சரி, யாருக்கோ பொழுதுபோகவில்லை போலும் என நினைத்தவாறு இணைப்பைத் துண்டிக்க முயன்றேன்.

"போனை வச்சிடாதீங்க, நான்தான்..." என்றது எதிர்முனைக் குரல். எனக்குள் இன்ப மின்னல். அவள்தான். "நான்தான்னா...யாரு"? மகிழ்ச்சியை வெளிக்காட்டாதவாறு வீராப்பாய் கேட்டேன். "நான்தான்" என்றாள் மீண்டும்.

"என் பேரைச் சொல்லத்தான் வெட்கப்படுவே. உன் பேரைச் சொல்ல என்ன வெட்கம்"?

"சௌக்யமான்னு கேட்க மாட்டீங்களா"?

"சௌக்யமா இருக்கத்தானே பிறந்த வீட்டுக்குப் போயிருக்கே. அப்புறம் சௌக்யமாத்தானே இருப்பே"

"நீங்க சௌக்யமா"?

"நீ சௌக்யம்னா, நானும் சௌக்யந்தான்"

"இன்னும் கோபம் குறையலியா"?

"இருந்தாதானே குறையறதுக்கு"

"எப்போ வருவேன்னு கேட்க மாட்டீங்களா"? குழைந்தாள்.

"உனக்கு எப்போ என்னை பார்க்கணும்னு தோணுதோ அப்ப புறப்பட்டு வா"

"நான் நாளைக்குக் காலையில வர்றேன்" என்றவள், "இன்னைக்குக் காலையில டாக்டர் வீட்டுக்கு நானும் அம்மாவும் போனோம்" என்றாள் மெதுவாக.

"உடம்புக்கு என்ன"? மனம் பதறியது.

"நீங்க பயப்படுற மாதிரி ஒண்ணுமில்ல. செக்கப்புக்குத்தான்"

"டாக்டர் என்ன சொன்னார்"?

"நாற்பது நாள் ஆச்சாம். நீங்க அப்பாவாக போறீங்க"

எனக்குள் ஆயிரம் சந்தோஷ மின்னல்கள் அணிவகுத்தன.

"நெஜம்மா"?

"ம்"

"உடம்பைப் பத்திரமா பாத்துக்கோ. எத்தனை நாள் தங்கி ஓய்வெடுக்கணுமோ எடுத்துக்கோ"

"நீங்க இல்லாம போரடிக்கிது. உங்களைப் பாக்கணும்போல இருக்கு. நாளைக்கு நான் அப்பாவைக் கூட்டிக்கிட்டு வர்றேன்"

"ம். வேண்டாம். நானே உன்னைக் கூப்பிட வர்றேன்"

"அலைச்சல்தானே உங்களுக்கு"

"பரவாயில்லை"

"அப்புறம் உங்க இஷ்டம். உங்களை எனக்கு ரொம்பத் தேடுது" குரலில் தெரிந்த ஏக்கம், மனதுக்குள் என்னவோ செய்தது.

"சரி வச்சிடட்டுமா, நாளைக்கு வர்றேன்"

போனை வைத்தேன்.

இன்னும் மழை விடவில்லை. எனக்கு குளிரக் குளிர நனைய வேண்டும் போலிருந்தது.

மொட்டை மாடிக்கு வந்தேன். கை, கால்களைப் பரப்பியவாறு தரையில் படுத்தேன். சரம் சரமாய் மழை அம்புகளை என்மீது எய்தது வானம். காதலியாய், மனைவியாய் தெரிந்த மழை இப்போது தாய்மை நிறைந்ததாகவும் தெரிந்தது.

எழுதியவர் : கணேஷ் கா (2-Feb-14, 12:55 am)
சேர்த்தது : கா. கணேஷ்
Tanglish : mazhai
பார்வை : 337

மேலே