இன்னொரு விடியல்

"கார்த்தீ...!" அலறியபடி எழுந்தான், திவாகர். அவன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. முகமெல்லாம் வியர்வை. பட்டென்று விளக்கு எரிந்த சுத்தம்.

"திவாகர்.. திவா.. என்னைப் பாரு.. தாத்தாடா.. கனவு கண்டியாப்பா? அவனருகே அமர்ந்து தட்டிக் கொடுத்தார்."

"தண்ணி கொண்டா.. போ.." பாட்டியை விரட்டினார்.

"இந்தாப்பா, தண்ணி குடி.. திவா, எதையும் நினைக்காம, பேசாமத் தூங்குப்பா.. எல்லாம் சரியாயிடும். படுத்துக்கோ.. நானும் இங்கேயே இருக்கேன். இந்தா.. லைட்டை அணைச்சுட்டு நீ போ.. அமைதியாத் தூங்குப்பா.." பாட்டி போய் விட, திவாகர் மறுபடி படுத்துக் கண்களை மூடிக் கொண்டான்.

"ஸார்". "நோ அதர் வே. ஹோப் யு கேன் அண்டர்ஸ்டாண்ட். பெட்டர் ஃபைன்ட் சம் அதர் கம்பெனி.." நாளை முதல் நீ இங்கே தேவையில்லை என்று நாசூக்காக ஆங்கிலத்தில், சொல்லிவிட்டார்கள். சில மாதங்கள் முன்பு கார்த்தி.. அதன்பின் முரளி... அப்போதிருந்தே எதிர்பார்த்து, வீட்டில் கூட சொல்லி வைத்ததுதான்...

இருந்தாலும், நாளை முதல் வேலை இல்லை. இன்றே ஐ.டி. கார்ட் பிடுங்கப்பட்டுவிடும். காலையில் வரும்போது வணக்கம் சொல்லி, உள்ளே விட்ட வாட்ச்மேன், நாளை இந்தக் கதவைத் தாண்டிவரவிடமாட்டான். எல்லாத்துக்கும் மேலாக, மாதம் ஐம்பதாயிரம்.. அது இல்லாமல், வீடு எப்படித் திணறிப்போகும்? இனி அடுத்து என்ன? கார்த்திக், முரளி யாருக்கும் இன்னும் சரியான வேலை இல்லை என்ற நிஜம் எல்லாம் அவனைப் பயமுறுத்தியது.

எங்கேயோ கடல் கடந்த ஒரு நாட்டில் திவாலான வங்கிகளால், இங்கிருக்கும் இளைஞர்களின் தலையெழுத்து திடீரென மாறி, அவர்கள் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது. சுகமாய் நடந்து கொண்டிருக்கும் போது, பெரிதாய் அடைபட்டுவிட்ட பாதை. இனி அடுத்து என்ன... என்ற குழப்பத்தில் தள்ளி விட்டது. நிஜமாகவே கை நிறைய வாங்கிய சம்பளம் நின்று போய் விட, அதை நம்பிக் கடனில் வாங்கிய கார், வீடு எல்லாம் போனதில், அதிர்ந்து போயிருந்தான் திவாகர். அதேநிலைதான் கார்த்திக்கும், முரளிக்கும். எல்லாக் கம்பெனியுமே, சரிவின் விளிம்பில் நிற்க, சரியான வேலை கிடைக்காத நிலையில், கார்த்தி வீட்டில் நடந்ததுதான் கொடுமை.

அவன் தங்கைக்கு நிச்சயம் முடிந்திருந்த நிலையில், ஏற்கெனவே குறித்திருந்த நாளில் திருமணம் சிறப்பாக நடத்த முடியாது என மாப்பிள்ளை வீட்டாரிடம் மூணு மாதம் தவணை கேட்டான் கார்த்திக். அவர்கள் மறுத்து விட்டதோடு, அதேநாளில் திருமணம் முடிக்க வேறு பெண்ணையும் பார்த்து விட்டார்கள். அந்த அதிர்ச்சியில், கார்த்தியின் அப்பா, மாரடைப்பில் போனதில் கார்த்தியின் குடும்பமே இடிந்து போனது. அதன்பின்னும் அவன் எதிர்பார்த்தபடி வேலை அமையவில்லை என்று கோழைத்தனமாக ஒருநாள், திடீரெனத் தற்கொலை செய்து கொண்ட கார்த்திக்... அந்த ஊரிலேயே இல்லாமல், எங்கே போனார்கள் என்றே தெரியாமல், சிதறிவிட்டது அவன் குடும்பம்.

போகட்டும்பா.. நிம்மதியா இருக்கணும். உனக்கு மறுபடி நல்ல வேலை கிடைக்கும். நம்பிக்கையோட இரு. என்னதான் கைநிறையக் காசு வந்தாலும், யந்திரமாட்டம், யாரோ முகம் தெரியாத ஒரு கம்பெனிக்காரனுக்கு நீ வேலை செய்யறயேன்னு எனக்கு எவ்வளவு வருத்தமா இருந்தது தெரியுமா? இப்போ உனக்குக் கொஞ்சம் ரெஸ்ட் கிடைச்சிருக்கு. நல்லாச் சாப்பிடு. தூங்கு. சினிமாப் போ. மெதுவா வேலை தேடலாம்..."

இப்படி.. அப்பா மட்டுமல்ல, குடும்பமே அவனுக்கு ஆறுதலாய் நின்றது. அதையும் மீறி வேலை தேடிக் கிடைக்காமல், கொஞ்சம் அவன் ஓய்ந்து போக அப்பா, இங்கிருந்து அவனுக்கு ஒரு மாற்றம் வேண்டும் என "கொஞ்ச நாள் தாத்தா வீட்டில, கிராமத்தில இருப்பா. நல்ல காத்து, அமைதி, உனக்கு இப்போ அந்த மாற்றம் அவசியம்னு தோணுது.." என உடனே, கிராமத்தில் இருந்த தாத்தாவிடம் அவனை ஒப்படைத்துவிட்டார்.

கண் விழிக்கும் போது, எப்போதும் கேட்கும் ஏ.சியின் மென் இரைச்சல் இல்லை. கீச்..கீச்செனப் பெயர் தெரியாத பறவைகளின் சத்தம் ஒரு சங்கீதம் போல அவனை எழுப்பியது. தலை வலி தரும் குளிர் இல்லை.. பதிலாக.. ஜன்னல் வழியே, மெல்ல நுழைந்து, அவனை இதமாய் வருடி விட்டுப் போனது வேப்பமரக்காற்று. கண்ணை உறுத்தும் விடிவிளக்கு வெளிச்சம் இல்லை. உதயக்கதிரின் ஒளி, கனவு போலக் கண்களைத் தடவியது. ஏதேதோ மலர்களின் மணம் மூக்கில் ஏறி, அவனைப் பரவசத்தில் ஆழ்த்தியது. எழுந்து கொள்ளவே மனமில்லாமல், அப்படியே படுத்துக் கொண்டே இருப்பதில் கிடைக்கும் நிம்மதி மட்டுமே போதும் என்றிருந்தது. எத்தனையோ காலமாய், அவன் தேடியும் கிடைக்காத அமைதி தானாகவே வந்துவிட்டது. தன்னை இங்கு அனுப்பிய அப்பாவுக்கு, மனதுக்குள் நன்றி சொல்லிக் கொண்டான்.

சிறு வயதில் அவன் பார்த்த ஆறு, இப்போது சாக்கடையாய், எல்லாவிதமான குப்பைகளுடனும் இருந்தது. தாத்தா வீட்டிலிருந்து தோட்டத்துக்குப் போகும் வழியில் இருந்த பெரிய, பெரிய மரங்கள் இருந்த இடத்தில், வீடுகள் முளைத்திருந்தன. தோட்டத்திலும், பாதி இடம் எந்த மரமும் செடியும் இல்லாமல், குறைந்தபட்சம், புல் கூட வளராமல், கட்டாந்தரையாய் இருந்தது. அந்த வெறுமையில், மனதில், சொல்லத் தெரியாத வேதனை பரவியது. தாத்தாவிடம் கேட்க, அவர், கொஞ்ச நேரம் அமைதியாகிவிட்டார்.

தோட்டத்தில், கிடந்த கல் பலகை பெஞ்ச்சில் உட்கார்ந்திருந்தார்கள்.

"திவாகர், அங்கே, உன் ஊர்ல தொலைஞ்சு போன அமைதியும், நிம்மதியும், இங்கே நிறைய இருக்குன்னு நீ நினைக்கிறே. இங்கே இருக்கறவங்க அதையெல்லாம் தொலைக்கறதுக்கு, அங்கே போயிட்டாங்க. அதான், கொஞ்சம் கொஞ்சமா, கிராமம் எல்லாம் செத்துக்கிட்டிருக்கு. அந்த மாய உலகத்தில் மூழ்கிப் போனாலும் போவாங்க.. திரும்ப இங்கே வரமாட்டாங்க... ஆனா.. திடீர்னு, நல்ல புத்தி வந்து, திரும்பலாம்னு நினைக்கும்போது, ஒரு கிராமம் கூட இல்லாமப் போயிடும். சரி.. அப்புறமா இதைப் பத்தி இன்னும் பேசலாம். இப்போ இப்படியே கொஞ்சம் நடந்துட்டு, வீட்டுக்குப் போவோம். உங்க பாட்டி உனக்கு ஆப்பம் பிடிக்கும்னு செய்யப் போறேன்னா.. நேரமானாக் கோபம் வந்துடும். கோபத்தில உங்க பாட்டி வேற அவ்வளவா நல்லா இருக்க மாட்டா.. வா, வா.." நொடியில், தன் உணர்வுகளில் இருந்து வெளியே வந்து விட்டுச் சிரித்த தாத்தாவை வியந்தபடி தொடர்ந்தான் திவாகர்.

"என்னடா இன்னும் காணமேன்னு, கூப்பிட்டுவிடலாமான்னு நினைச்சேன். வந்துட்டீங்க.. மஞ்சரி வந்திருக்கு. உள்ளே இருக்கு. நீங்க சாப்பிட்டுட்டுப் பேசுங்க.."

"அப்படியா? நானே அவளைக் கூப்பிடணும்னு நினைச்சேன். திவாகர், வாப்பா... உனக்கு ஒரு வித்தியாசமான பொண்ணைக் காட்டறேன்.." - தாத்தாவின் குரலில் தனி உற்சாகம்.

உள்ளே நுழைந்ததும் அந்தப் பெண் வெளியே வந்தாள். இவள்.. இந்தப் பெண்... திவாகர் யோசிக்கும்போதே... அவள்... மஞ்சரி கண்டுபிடித்துவிட்டாள்.

"நீங்க மிஸ்டர் திவாகர்.. காலேஜில் என்னோட சீனியர்..."

"ஆமா... நீங்க... எங்கே இங்கே.. தாத்தா நாங்க ரெண்டுபேரும் ஒரே காலேஜ்தான். காலேஜ்ல பாட்டு, டான்ஸ், க்விஸ் எதுன்னாலும், இவங்கதான் ஃபர்ஸ்ட். அதனால எல்லோருக்கும் தெரிஞ்சவங்க. கேம்பஸ்ல செலக்ட் ஆகி, அப்புறம் யு.எஸ்.போயிட்டதா சொன்னாங்க.. இங்கே என்ன பண்றீங்க? ஐ ஜஸ்ட் கான்ட் பிலீவ் மை ஐஸ்..."

"டேய்... இவ்வளவு நேரமா தமிழ்தானேடா பேசினே.. இப்போ என்ன திடீர்னு..."

"ஐயோ.. தாத்தா ரொம்ப நாளைக்கப்புறம், காலேஜில எங்கூடப் படிச்சவங்களை, அதுவும் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத இடத்தில பார்த்ததில பேசிட்டேன் தாத்தா.."

"பாரும்மா.. அவனையும் அறியாத சந்தோஷத்தில அவனால அன்னிய பாஷையிலதான் பேச முடியுதாம்..."

"தாத்தா.. போதும்.. விடுங்க.. உங்ககிட்டே பேசமுடியாது."

"திவாகர், என் தாத்தாவும், உங்க தாத்தாவும் ஃபிரண்ட்ஸ். அப்புறம்... நான் இங்கே இருக்கறது பத்தி.. தாத்தாவே சொல்லுவாங்க.. சரி, நான் கிளம்பறேன். பிள்ளைகளுக்கு ஒரு நாடகம் எழுதியிருக்கேன். பார்த்துட்டு, திருத்தி வைங்க தாத்தா. இதைக் குடுக்கத்தான் வந்தேன். திவாகர்... நீங்க இங்கதானே இருப்பீங்க.. வீட்டுக்குக் கட்டாயம் வரணும்.."

"நான் அழைச்சுட்டு வரேன்மா..." தாத்தாவின் பேச்சில் தனி ஆனந்தம்.

"ஏன் தாத்தா, இந்த மஞ்சரி ஏன் இங்கே இருக்கா?"

"எல்லாம் உன் கதைதான்.. யு.எஸ்.போனா. அப்புறம், ஒரே பொண்ணுன்னு இங்கே வரச் சொல்லிட்டாங்க அவ வீட்டில. கல்யாணமும் பண்ணி வைச்சாங்க. இங்கே பார்த்துட்டிருந்த வேலை போச்சு.. அதோட, அவனும் இவ வேண்டாம்னு போயிட்டான்.."

"தாத்தா..."

"ஆமாப்பா... இந்த அருமையான பொண்ணைவிட, மாசாமாசம் வர பணம் பெரிசாப் போச்சு அவனுக்கு. பணம் இல்லன்னதும் அவன் முகமே மாறிப் போச்சு. தன்னைவிட, தான் சம்பாதிக்கறதுதான் வேணும்னு கட்டியவன் நினைச்சா, எந்தப் பொண்ணாலதான் தாங்க முடியும். அதுவும் இவளை மாதிரி ஒரு அருமையான பொண்ணுக்கு... டைவோர்ஸ் ஆயிடுச்சு... தாங்க முடியாம, இவ அப்பாவுக்கு ஸ்ட்ரோக்.. இவ அம்மாவோட அப்பாதான் என் ஃப்ரண்ட். இங்கே இருக்கான். பொண்ணுக்கு அடுத்தடுத்து அடி.

மனசு கேட்காம, தனியா இருக்க வேண்டாம்னு இங்கே கூட்டிட்டு வந்துட்டான். வந்து ரெண்டு மூணு நாள்ல மஞ்சரி இங்கே வந்தா, தாத்தாவோட... இப்போ இந்த ஊருக்கே செல்லப் பொண்ணாயிட்டா. இப்போ அவ போறேன்னு சொன்னாக்கூட யாரும் விட மாட்டாங்க. அவளும் போகமாட்டா. அப்படி என்ன பண்றான்னு கேட்காதே. நேர்ல பாரு. புரியும் "

தாத்தா அவன் ஆர்வத்துக்கு அணைபோட்டு விட்டார்.

அன்று மாலையே மஞ்சரியைப் பார்க்கக் கிளம்பிவிட்டான்.

வழவழவென்ற சிவப்பு சிமெண்ட் தரை... ஒரே மாதிரி உடையில், சிறு பிள்ளைகள் நடனம் ஆட, அவர்களை ஆட்டுவித்துக் கொண்டிருந்தாள் மஞ்சரி. மாலை வெயிலின் பொன் வண்ணப் பின்னணியில், ஏதோ ஓவியம் போல மனதில் பதிந்துபோனது அந்தக் காட்சி. மேலே அந்தக் கால பர்ணசாலை போல மூங்கில் கூரை... சுற்றிலும் சிறு தொட்டிகளில் காற்றில் ஆடிய மலர்ச் செடிகள்... பின்னால் சிறிய வீடு. அதிலும் அழகான தோட்டம். தாத்தா வீட்டினுள் சென்றுவிட, திவாகர் மட்டுமே அங்கு மஞ்சரியைப் பார்த்தபடி நின்றான். அவனைப் பார்த்ததும் உடனே வந்தாள் மஞ்சரி.

"திவாகர், தாத்தா நான் எப்படி இங்கே வந்தேன்னு சொல்லியிருப்பாங்க. ஆனா... நான் அவங்களாலதான் இப்படி இருக்கேன்னு சொல்லியிருக்க மாட்டாங்க.. அம்மாவுக்கு அவங்க அப்பாவோட இருந்தா ஒரு ஆறுதலா இருக்கும்னுதான் நான் இங்கே வந்தேன். உங்க தாத்தா ஒரு ஜெம் தெரியுமா?

நான் ஆடுவேன்னு தெரிஞ்சதும், பிள்ளைகளைக் கூட்டி வந்தார். வசதி இல்லாம டான்ஸ் கத்துக்க முடியலம்மா. நீ சொல்லிக் கொடுன்னார்.. காலேஜ்ல ஆடினதோட சரி. அப்புறம் அந்த வேளையில நாள் முழுக்க மிஷினோட பேசி, மிஷின் போலவேதானே ஓர் அர்த்தம் இல்லாத லைஃபில இருந்திருக்கோம் நாம எல்லாருமே. ஆரம்பத்திலே தாத்தா சொன்னார்னு, ஒரு டைவெர்ஷனா இருக்கட்டும்னு ஆரம்பிச்சதுதான். விட்டுப் போன பாட்டும் மறுபடி ஆரம்பிச்சிருக்கேன். இப்போ, இந்த நிமிஷம் நான் வாழறதுதான் உண்மையான, அர்த்தம் நிறைஞ்ச வாழ்க்கைன்னு சொன்னா அது நிஜம் திவாகர். இப்போ எவ்வளவோ சந்தோஷமா, நிம்மதியா இருக்கேன்னு தெரியுமா? மனசில இருக்கிற அந்த அமைதிக்கும், நிம்மதிக்கும் நீங்க எந்த விலையும் தரவே முடியாது. நான் எந்த வேலை பார்த்தாலும், இது எனக்குக் கிடைக்காது திவாகர்... இன்னும் கொஞ்சநாள் இங்கே இருந்தா நீங்களும் ஃபீல் பண்ணுவீங்க. இயல்பா, இங்கே ஓடற தண்ணி சுத்தத்துக்கு, வாயில் நுழையாத வாஸ்து பேரைச் சொன்னதும் கணக்குப் பார்க்காம காசு கொடுத்து வாங்கறாங்க... இந்த சுத்தமான காத்துக்கும் காசு குடுத்து அதையும் தனியா உட்கார்ந்து வாங்கிட்டுப் போறாங்க. கிராமம்தாம்மா உயிர்நாடி. அது இப்போக் கடைசி மூச்சு விட்டுட்டு இருக்கு. உங்களைப் போலப் படிச்சவங்கதான் இனி, கிராமத்துக்கு உயிர்த் தண்ணி ஊத்தணும்னு உங்க தாத்தா சொன்னாங்க. இந்தத் தோட்டம் அவரோட ஐடியாதான். வாழ்க்கையில் இனி என்ன இருக்குன்னு இடிஞ்சு போயிருந்தாங்க எங்க அம்மா. இந்தத் தோட்டம் இவ்வளவு அழகா, அவங்கதான் இப்போ பாத்துக்கறாங்க. இந்த மாதிரி இடத்துக்குத்தானே, ரிஸார்ட்டுன்னு ஆயிரக்கணக்கான பைசாக் குடுத்துட்டுப் போறீங்கன்னு தாத்தா கேலி பண்ணுவாங்க. பின்னால வாங்க. இந்தப் பூந்தோட்டம் முழுக்க இங்கே இருக்கற பிள்ளைகளோட சேர்ந்த என் உழைப்பு. தனியா ஒரு ரோஜாத்தோட்டம் பாருங்க இந்த ரோஸ் எல்லாம் பொக்கேயாப் பண்ணி பக்கத்தில சிட்டில ஆஃபிஸ், ஹோட்டலுக்குக் கூடத் தரோம். முன்னே இருந்த முதுகுவலி, தலைவலின்னு எதுவுமே இப்போ எனக்கு வரது இல்லை. ரெகுலரா, பார்லர் போவேன். ஜிம் போவேன். இங்கே எதுவுமே இல்லை. மனசு சொல்றபடி உடம்பு கேட்குது. உழைக்கிறேன். மனசுக்குத் திருப்தியா இருக்கு. அப்போ நாம வேலை பார்த்தது, யாரோ முகம் தெரியாத ஆளுக்கு... இது, நமக்கே நமக்கு... பிடிச்சுப் பண்ற வேலை. மூளையை அடகு வச்சு, அடிமையா வேலை செய்யாம, ஆசையாப் பண்றதிலே நிச்சயமா ஒரு தனி சந்தோஷம் இருக்கு... இதை எனக்குப் புரிய வச்சது உங்க தாத்தாதான். அப்பாவுக்குக் கூட இப்போக் கொஞ்சம் பரவாயில்லை. முழுமையாத் தேறிடுவார் சீக்கிரமேன்னு எங்களுக்கு நம்பிக்கை வந்திருக்கு."

மஞ்சரியின் பேச்சில், பிரமித்துப் போயிருந்தான் திவாகர். தாத்தா இத்தனை செய்திருக்கிறாரா? உடனே அவரைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.

"மஞ்சரி, யு ஆர் கிரேட்... மத்தவங்களுக்கு உன்னால முடிஞ்ச நல்லது செய்யணும்னு உனக்குள்ளே இருக்கிற நல்ல மனசுதான் தாத்தா சொன்னபடியே நீ கேட்டது. உன்னை இப்படிப் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா.. இது எத்தனை நாளைக்கு? நீ இப்படியே இருந்திட முடியுமா? மறுபடி எல்லாம் சரியானதும், உனக்கு நிச்சயமா நல்ல வேலை கிடைக்குமே..."

"இல்ல திவாகர்... எனக்கு இங்கே இருக்கத்தான் பிடிச்சுருக்கு"

அன்று முழுக்க திவாகரால் தூங்க முடியவில்லை.

காலையில், பேப்பர் படித்துக் கொண்டிருந்த தாத்தாவின் முன் உட்கார்ந்த திவாகர், "தாத்தா, நல்லா யோசிச்சுப் பார்த்தேன். நீங்க அத்தனை வழி காட்டியிருக்கும்போது அதில போகாம, மறுபடி அதே யந்திர உலகத்துக்குப் போக எனக்கும் பிடிக்கலை. என் மனசிலேர்ந்து சொல்றேன் தாத்தா.

படிக்காத ராணியும், அத்தனை படிச்சு அமெரிக்கால்லாம் போன மஞ்சரியும் இத்தனை பேருக்கு வேலை தர்ற போது, நான் அவங்களைவிட, பத்துப் பேருக்காவது வேலை தர மாட்டேனா? சும்மா நீங்க சொன்னதுக்காக மட்டும் இல்லை. நிஜமாகவே இதைச் சாதிச்சுக் காட்டணும்னு ஒரு வேகம் வந்திருக்கு தாத்தா... இன்னிக்கே அதுக்கான முதல் படி எடுத்து வைக்கிறேன். மஞ்சரி வீட்டுக்குப் போகணும் தாத்தா..."

"ஏய்... என்னடா இது... முதல் படின்னு தப்பான படியில காலை வைக்காதடா"

"ஐயோ தாத்தா... அவங்க வீட்டில இன்டர்நெட் இருக்கு இல்ல... அதுக்குத்தான்"

"இன்னிக்குத்தான்டா நிஜமாவே நீ என் பேரன்... வா... வா... உடனே கிளம்பு"

தாத்தாவின் சந்தோஷம் தன்னையும் தொற்றிக் கொண்டதற்கு, மஞ்சரியுடன் இனி இங்கேயே இருக்கப் போகிறோம் என்பதும் ஒரு காரணமா... திவாகருக்குத் தெரியவில்லை.

எழுதியவர் : கணேஷ் கா (2-Feb-14, 12:57 am)
சேர்த்தது : கா. கணேஷ்
Tanglish : innoru vidiyal
பார்வை : 355

மேலே