ஒண்ணுமில்லை

வீடும் பழக்கடையும் ஒன்றுதான். வாசலையொட்டிய முன்னறையை இடித்து "அண்ணாமலை பழக்கடை"யாக்கி இருந்தார்கள். வீடு அடைபடும் வரை கடையும் திறந்திருக்கும். நான்கு வீதிகளின் சந்திப்பு என்பதால் கடையில் எப்போதும் வியாபாரம் நடந்துகொண்டிருக்கும். கடையை மூடுவதும், பழங்களை அடுக்குவதும், அழுகத் தொடங்கிய பழங்களைப் பிரிப்பதுமாக இரவு 10 மணி வரை அங்கே விளக்கு எரிந்துகொண்டே இருக்கும். இன்று ஏழரை மணிகூட ஆகவில்லை, ஆனாலும் வெளிச்சம் குறைந்திருந்தது. கடையின் ஒரு பக்க ஷட்டரை இழுத்திருந்தார்கள்.

சந்துரு பல்சரை வேகமாக முடுக்கினான். கடை வாசலில், இறக்கப்படாத ஷட்டரின் அருகே நான்கு பேர் பழம் வாங்க நின்று கொண்டிருந்தார்கள். சொல்லிக் கொள்ளாமல் ஒரு பரபரப்பு நிலவியது.

வண்டியை நிறுத்திவிட்டு, ட்யூஷன் நோட்டுகளைத் தன்னிச்சையாக எடுத்தான். பிறகு அதிலேயே வைத்துவிட்டு, பழக்கடை வாசலில் நுழைந்தபோது எதிரே வந்தவரின் முரட்டு உடல் அவனைத் தள்ளி விலக்கிவிட்டு விரைந்தது. திரும்பிப் பார்த்தான். பழக்கடை அண்ணாமலை எதையோ ஒன்றை மூட்டை தூக்கிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தார். தெருவின் உள்புறத்திலிருந்து பழக்கடையின் ஆட்டோ பறந்துவந்து, நின்று உறுமிக்கொண்டிருக்கும்போதே அவர் ஏறினார். மீண்டும் ஆட்டோ பறந்தது. அவர் தூக்கிச் சென்றது மூட்டை அல்ல, ஒரு கிழவி என்பதை மட்டும் சந்துருவால் ஊகிக்க முடிந்தது.

கடைப் பையன்களில் பாதி பேர் தெருவிற்கு வந்திருந்தார்கள். ஒருவன் டிவிஎஸ் 50யில் ஆட்டோவை விரட்டிக் கொண்டிருந்தான்.

"முதலாளியோட அம்மாதான் சார், கொஞ்சநாளா உடம்பு சரியில்ல" பழம் வாங்கிக்கொண்டிருந்தவரிடம் கடைப் பையன் சொல்வது கேட்டது. அதற்கு அவர் மீண்டும் எதையோ கேட்டார். "எண்பது இருக்கும்" என்று சொன்ன கடைப்பையன், சந்துருவைப் பார்த்ததும் மெல்ல புன்னகைத்தான். "அப்பா சொல்லிட்டுப் போனார் தம்பி" என்றபடியே ஏற்கெனவே பழங்கள் போட்டுத் தயாராக இருந்த பிளாஸ்டிக் பையை எடுத்துக்கொடுத்தான்.

இமாம் பசந்த். பையைக் கையில் வாங்கும்போதே வாசம் அவனிடம் தஞ்சமானது. மாம்பழத்தின் சுவை அதன் வாசத்திலேயே தெரிந்தது.

சந்துரு மாம்பழத்துடன் வாசலைக் கடந்தபோது அவனது பவர் ஷூ வழுக்கிப்போய் நின்றது. சமாளித்துக்கொண்டான். வீட்டுக்குள்ளிருந்து வந்த அண்ணாமலையின் மனைவி, "தம்பி ஒதுங்கிப்போ" என்றாள். "டே... வெங்கடேசா... இதக் கழுவித் தள்ளுடா. செத்துத் தொலையாம, இருக்கறங்கவங்கள சாகடிக்குது கெழம்" அவள் குரல் வீட்டுக்குள் தேய்ந்துகொண்டேபோய் மறைந்தது.

பழத்தை வண்டி வளையத்தில் மாட்டிவிட்டு, வண்டியைக் கிளப்பி, கியர் மாற்றும்போது ஏதோ ஒரு வழுக்கல், இடைஞ்சலாக இருந்தது. வண்டியை ஒரு மின்விளக்கின் ஓரமாக நிறுத்திவிட்டு, ஷூவைப் பார்த்தான். ஒன்றும் தெரியவில்லை. காலை பின்பக்கமாக மடக்கிப் பார்த்தான். நடந்து மறைந்ததுபோக, மறையாமல் பிதுங்கிய மஞ்சள்நிறப் பொருள் தெரிந்தது. மாம்பழக்கூழாக இருக்குமோ என்று நினைப்பு வந்த அதே நேரத்தில், ஒரு துர்நாற்றமும் சேர்ந்து எழுந்தது.

இளகிப்போன மலம்.

அருவருப்புடன் மின்கம்பத்தில் தேய்த்தான். தன் நோட்டுப் புத்தகத்திலிருந்து ஒரு தாளைக் கிழித்து புட்-ரெஸ்ட் மீது வைத்து, அதன் மேல் கால்களை வைத்துக்கொண்டான். ஆனாலும், அது கண்ணில் பட்டுவிட்டதாலோ என்னமோ, இமாம் பசந்த் வாசம் பிறகு எழவே இல்லை.

வீட்டுக்கு வந்ததும் வண்டியைப் போர்ட்டிகோவில் நிறுத்திவிட்டு, பக்கவாட்டில் செம்பருத்திச் செடியின் ஓரமாக இருக்கும் குழாயடியில் தன் ஷூவைக் கழற்றாமல் அப்படியே கழுவினான். தரையில் தேய்த்தான். ஈரத்துடன் ஷூவை வீட்டுக்கு வெளியிலேயே விட்டுவிட்டு, பழப் பையை கொண்டுபோய் மேசையில் வைத்தான். அன்று இரவு எல்லாரும் பழம் சாப்பிட்டார்கள். அவனால் ஏனோ அந்தப் பழத்தைத் தொட முடியவில்லை.

மறுநாள் பள்ளிக்கூடம் போகிறபோது பார்த்தான், அண்ணாமலை பழக்கடை மூடியிருந்தது. தெருவின் நிழலோரமாய் பாடை கட்டிக் கொண்டிருந்தார்கள். வாரைகள் ஒழுங்கில்லாமல் சாலைக்கு இடையூறாகக் கிடந்தன. வண்டியைவிட்டு இறங்கி, தள்ளிக்கொண்டு போக வேண்டியதாயிற்று. பழக்கடையின் ஷட்டர் ஓரமாக, தென்னை ஒலைகள் சாய்க்கப்பட்டிருந்தன. கீழே புதுப்பானைகள். நான்கு பேர் குந்திக்கொண்டு, வைக்கோலைக் கொளுத்தி தப்பட்டத்தைச் சூடேற்றிக் கொண்டிருந்தார்கள். ஷாமியானா போடுவதற்கான தளவாடங்களுடன் ஒரு மூன்றுசக்கர வண்டி நின்றிருந்தது.

எல்லாரும் டைனிங் டேபிளில் சுற்றி அமர்ந்து சாப்பிடுவது அடிக்கடி நடப்பதில்லை. பெரும்பாலும் சந்துருதான் முதலில் சாப்பிட்டுவிட்டுப் பள்ளிக்குக் கிளம்புவான். அதன் பிறகு அப்பா. அதன் பிறகு அம்மா, அல்லது அம்மம்மா, தாத்தா. தனியாக உட்காரும்போது வேகமாகச் சாப்பிட்டுவிட்டு எழுந்தோடினாலும், எல்லாருமாக உட்காரும்போது ஏதோ ஒரு பேச்சு எழுகிறது. பேச்சும் உணவு நேரமும் நீண்டுகொண்டே போகிறது.

அப்பாவின் செல்போன் சிணுங்கியது.

சட்டைப்பையில் கை விட்டு இரண்டு செல்போன்களையும் எடுத்து டைனிங் டேபிளில் வைத்தார். வெளிச்சம் காட்டிய செல்போனை எடுத்துக் காதில் வைத்தார். அப்பா எப்போதும் போனை எடுத்தவுடன் "ஹலோ" என்று சொன்னதே இல்லை. பதிவு செய்யப்பட்ட எண்ணாக இருந்தால், எதிர்முனையில் இருப்பவரின் பெயரைச் சொல்லி, "சொல்லு" என்பார். புதிய எண்ணாக இருந்தால், மறுமுனையிலிருப்பவர் பேசும்வரை முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு காத்திருப்பார்.

"ஹாங் சொல்லும்மா, நல்லா இருக்கியா? என்ன திடீர்னு என் நம்பர்ல?..ம்... உங்க அக்காளுக்கு என்ன, செல்போனை எங்கயாவது வச்சிட்டு தேடறதுதான் வேல... குடுக்கட்டுமா! ம்..ம்.. நல்ல சேதி,.. எப்போ.. சரிம்மா சொல்லிடறேன்.. சரி.. ம்"

செல்போனை டேபிளில் வைத்துவிட்டு, "ரேவதிக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கு. சிசேரியனாம்" சாம்பார் சாதத்தை உருட்டி வாயில் போட்டார். "நிர்மலாதான் பேசினா, சாந்தி நம்பர் இல்லையாம், உன்னையே பேசச் சொன்னா". அப்பா தானே சாதத்தைப் பரிமாறிக்கொண்டு ரசத்துக்கு கை நீட்டினார். அம்மா எழுந்து குனிந்து ரசக் கிண்ணத்தைத் தள்ள முயன்றாள். பெருத்த உடம்பு. குனிய முடியவில்லை. சந்துரு எழுந்து ரசக் கிண்ணத்தை எடுத்து அப்பா முன் வைத்தான்.

அம்மா உட்கார்ந்தாள். அவள் நின்றாலும், உட்கார்ந்தாலும் ஒன்றுபோலத்தான் இருக்கிறது. இதற்கே அவளுக்கு மூச்சு வாங்கியது.

"இப்ப எங்க பாத்தாலும் சிசேரியனா இருக்குது."

"முன்ன பேறுகாலம். பெத்துக்கிட்டாங்க. இப்ப கீறுகாலம். கீறித்தான் எடுக்கணும்" தாத்தா சொல்லிவிட்டு அவர் மட்டுமே சிரித்தார்.

அம்மாவின் வயிற்றைக் கீறித்தான் சந்துரு பிறந்தான்.

"இப்பவெல்லாம் நாலு நாள்ல வீட்டுக்கு வந்திடறாங்க" என்றாள் அம்மா. "சந்துரு பொறந்தப்ப பதினைஞ்சு நாள் ஆஸ்பத்திரியிலேயே இருந்தேன். தையல் பிரிஞ்சிடும்னு பயங்காட்டினாங்க. போன வாரம் வரலட்சுமி பொண்ணு கீதாவுக்கு சிசேரியன். தையலே தெரியல. ஒரு பெரிய பிளாஸ்திரி போட்டுவச்சிருக்காங்க. ரெண்டாவது நாளே நல்லா நடக்கிறா... எவ்வளவோ மாறிப்போச்சி. என்னமோ என் அதிர்ஷ்டம், சாந்தி என்னோடவே இருந்தா! எனக்கு ஒரு வேலையும் இல்லாம பண்ணிட்டா. இவனையும் அவதானே பாத்துக்கிட்டா!"

"ஒரு வருஷம் இருந்திருப்பாளா?... "-அம்மம்மா கேட்டாள்"

"என்னம்மா மறந்துட்டியா, இவன் பஸ்ட் பர்த் டே முடிஞ்சி சம்பத் கல்யாணம் வரைக்கும் நம்மளோடதானே இருந்தா"

"ஆமாமாம்" தலையசைத்தார் அப்பா. "சம்பத் கல்யாணத்தப்பத்தானே இவன் பேதியா போயிக்கிட்டிருந்தான்"

"கொஞ்சமான கோலமா காட்டினான்" அம்மா சந்துருவைப் பார்த்துச் சிரித்தாள். "தூக்கி மடியில வச்சா போதும், போயிடுவே, தோள்மேல சாய்ச்சுக்கிட்டா உடனே மூத்திரம்தான். அது எப்படித்தான் வருமோ! (சிரித்தாள்) சாந்தி பொண்ணுதான் சளைக்காம சிரிச்சிக்கிட்டே கழுவித் தள்ளுவா. குட்டி, குட்டின்னு உயிர விடுவா. ஒரு நாளைக்கு எத்தனைதடவ துணியை அலசிப் போட்டிருப்பா. நான் தூக்கணும்னா முதல் கேள்வியா, "எப்போ போனான்"னு கேட்டுட்டுத்தான் தூக்குவேன்".

"இப்போ சாந்தி பொண்ணு எங்க இருக்கா?. அவள கல்யாணத்துக்கு அப்புறம் பாக்கவே முடியல" அம்மம்மா கேட்டாள்

"திருச்சியலதான் இருக்கிறா. களம்பூராம் வூட்டு கல்யாணத்துக்கு வந்திருந்தாளே. இப்ப அவளுக்கு ரெண்டு குழந்தைகளாயிடுச்சு. அக்கா சந்துரு எப்படி இருக்குது? பெரியவனாயிட்டானா? எவ்ளோ உசரம்? ஒரு போட்டோ இருந்தா குடேன். குழந்தைய கூட்டிக்கிட்டு வராம ஏன் தனியா வந்த... உயிர எடுத்துட்டா. போட்டோ அனுப்புக்கான்னு அட்ரஸ் கொடுத்தா... தொலைஞ்சு போச்சு."

அப்பாவின் போன் வேறுவிதமாக சிணுங்கியது. இரண்டாவது போனை எடுத்தார். அது அவரது அலுவலக பயன்பாட்டுக்கான போன். அதில் எப்போதுமே அதிகாரத்தின் தொனி இருக்கும்.

"என்ன?.. அதெல்லாம் முடியாது தர்மராஜ். எப்போ அந்த நாயி விஜிலன்ஸூக்குப் போச்சோ, அப்பவே அத கழட்டி வுட்டுட்டேன். போவட்டும் தர்மராஜ். நியாயமான வழியிலேயே பைல் மூவ் ஆவட்டும். அத மொடமாக்கிறது எப்படின்னு தெரியாதா நமக்கு? இது மாதிரி எத்தனை பேர பாத்திருப்போம்.

தர்மராஜ் அவனுக்காகப் பரிஞ்சு பேசாதீங்க. விஜிலன்ஸூலயும் நமக்கு தகவல் சொல்ல ஆள் இருக்கவே நான் உஷாரா இருந்தேன். இல்லைன்னா என் கதி என்ன? யாரு? அட, தோழர் நம்ம ஆளுப்பா. அட உனக்கு தெரியாது தர்மராஜ். கட்சிக்காக அப்படி பேசியிருப்பாரு. அவரு நமக்கு தோதான ஆளு. ஒண்ணும் பிரச்சினையாகாது. அவன் அந்த பைலை மறந்துவிட வேண்டியதுதான். அவனை வுடு தர்மராஜ். அத என்ன பண்ணீங்க, ம்.. மாமா அக்கவுன்ட்ல போடுங்க. நேர்ல பேசிக்கிடுவோம்".

தாத்தா பெயரில் அக்கவுன்ட் இருந்தாலும் அதன் ஏடிஎம் கார்டு அப்பாவிடம்தான் இருக்கிறது. அம்மாவின் இரண்டு ஏடிஎம் கார்டுகளில் ஒன்றும் அப்பாவிடம்தான் இருக்கிறது. ஏடிஎம் அறைக்குள் நுழைந்தால் எல்லா கார்டுகளையும் போட்டுப் பார்ப்பார். ஸ்டேட்மென்ட் எடுப்பார். வெளியே காத்திருப்பவர் கண்ணாடிக் கதவை மெல்லத் தட்டினால், அலுவலகத்தில் ஒரு கடைநிலை ஊழியனைப் பார்ப்பதைப்போலவே அந்த நபரைத் திரும்பிப் பார்ப்பார்.

அப்பா தட்டிலேயே கையைக் கழுவி, நாற்காலியின் மீது இருந்த டவலை, உடலை சற்று முன்நகர்த்தி இழுத்துக் கைகளைத் துடைத்தார். "சாந்திகிட்ட மறக்காம பேசிடு". உத்தரவு போட்டுவிட்டு உள்ளே போனார்.

தாத்தா மீண்டும் சாந்தியைப் பற்றி பேசினார். "அந்தப் பொண்ணு ஏதோ பணக் கஷ்டத்துல இருக்குதுன்னு மணி அண்ணன் சொன்னாரு. கல்யாணத்துல பாத்தியே ஒண்ணும் சொல்லலியா?"

"சொல்லணுமா, பாத்தாலே தெரியுதே" என்றாள் அம்மா. "புருஷன் சரியில்ல. நாம எவ்வளவு கொடுத்தாலும் அழிச்சிடுவான். நாமலே போய் கொடுத்தா பணத்துக்கு மதிப்பு இருக்காது. தேவைன்னா வரட்டும். அவ நமக்கு உழைச்சா, நாமளும் அவளுக்குச் செய்வோம். ஒரு வருஷம் குழந்தையை அவ்வளோ ஆசையா பாத்துக்கிட்டாளே, அவ குழந்தைகளுக்கு ஏதாவது கொடுப்போம்னு அவ கொடுத்த அட்ரஸூக்குப் போனம்மா. வயலூர் கோயிலுக்குப் போற வழிதான். அன்னிக்கினு பாத்து மழைன்னா மழை. அவ வூட்டுக்குப் பக்கத்துல ஒரு வாய்க்கால், பேரு மறந்துபோச்சி, அதுல காவிரி வெள்ளம் முழுக்க உள்ள வந்து, அவ குடியிருந்த ஏரியா பூரா வெள்ளம். கார் போகாதும்மான்னு டிரைவர் சொல்லிட்டான். திரும்பி வந்துட்டேன். அதுங்க அதிர்ஷ்டம் அவ்வளவுதான்"

அம்மா தனது தட்டை எடுத்துக்கொண்டு மெல்ல நடந்து, அப்பாவின் தட்டில் தனது தட்டை வைத்து, இரண்டையும் எடுத்துப்போய் ஸிங்க்கில் போட்டாள்.

மழைச் சாரலில் பால்கனி முழுதும் நனைந்து, மழைநீர் படுக்கை அறைக்குள் நுழைவதைப் பார்த்தான். பழைய துணிகளைக் கதவின் கீழே போட்டுவைத்தான். மறுபடியும் ஏதோ தோன்றியதால், கதவைத் திறந்துகொண்டு பால்கனியில் நின்றான். மழை நின்று பெய்துகொண்டிருந்தது. காற்றடித்தால் மட்டும் சாரல் அவனை நனைத்தது.

தெரு முழுதும் நனைந்து, விளக்கு வெளிச்சத்தில் மின்னியோடும் வெள்ளத்தைப் பார்த்துக்கொண்டு நின்றான். சாக்கடை நிரம்பி வழிந்து, வீட்டுக்கு வாசலில் போடப்பட்ட வளைமேட்டினைத் தாண்டிவர வெள்ளம் முயன்று சுழித்துக்கொண்டிருந்தது. செம்பருத்திச் செடியோரம் இருந்த சுற்றுச்சுவர் துளை வழியாக தெருவெள்ளம் உள்ளே வந்து கொண்டிருப்பதையும் கண்டான். போர்ட்டிகோவில் தள்ளியே நிறுத்தியிருந்தபோதிலும் பல்சர் நனைந்து மின்னியது.

வீணையின் நரம்புகள் ஒரு இழுப்பு இழுத்த சத்தம். செல்போன் மெசேஜ். அப்பாதான் "குட்நைட்" அனுப்பியிருந்தார். இரண்டு பெக் அடித்துவிட்டு, படுக்கப்போகும் முன்பாக குறுந்தகவல் அனுப்புவது அவர் வழக்கம்.

மழையைப் பார்த்துக்கொண்டு நின்றான். ஒரு கார் விரைந்து சென்றது. சற்று நேரம் கழித்து இரண்டு இளைஞர்கள் மோட்டார் பைக்கிள் வேகமாக, பேசிக்கொண்டே, மழையில் தெப்பமாக நனைந்தபடி சென்று மறைந்ததும் மீண்டும் மழையின் சத்தம் தவிர வேறு எதுவும் இல்லை. தெருவில் ஓடும் வெள்ளத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தான். அவன் குடியிருந்த ஏரியா பூரா வெள்ளம். கார் போகாதும்மான்னு டிரைவர் சொல்லிட்டான். சாந்தி அக்கா! யார்? இதுவரை தன் மனப்பதிவில் இல்லாத முகம். யார்? எப்படி இருப்பார்? அக்கா சந்துரு எப்படி இருக்குது? பெரியவனாயிட்டானா? எவ்ளோ உசரம்? ஒரு போட்டோ இருந்தா குடேன்.

சம்பத் சித்தப்பா கல்யாண ஆல்பத்தில் நிச்சயமாக சாந்தி இருக்க வேண்டும். நிச்சயமாக இருப்பாள். வீடியோ கேசட்டில் இருந்த கல்யாண நிகழ்ச்சியைச் சமீபத்தில்தான் தர்மராஜ் அங்கிள் டிவிடியாக மாற்றித் தந்தார்.

பால்கனி கதவை மூடிவிட்டு அம்மாவின் அறைக்குள் நுழைந்தான். அலமாரியில் இருந்த குடும்ப நிகழ்ச்சிகளின் ஆல்பம் மற்றும் டிவிடிகள் இருக்கும் நான்காவது வரிசையில், டிவிடி ஆல்பத்தை எடுத்தபோது, சரியாகச் செருகப்படாத ஒரு டிவிடி விழுந்தது.

அம்மா விழித்துக்கொண்டாள். "என்னடா தேடற"

"ஒண்ணுமில்ல"

எழுதியவர் : கணேஷ் கா (2-Feb-14, 1:07 am)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 432

மேலே