கரிசல் மண்ணில் ஒரு காவியம் 13

கரிசல் மண்ணில் ஒரு காவியம்.13

அத்தியாயம் 13.

ராசா இன்று மிகவும் உற்சாகமாக இருந்தான்.ஒரே பாட்டும் ஆட்டமுமாக மிகவும் ஆனந்தமாக அங்கும் இங்கும் சுறுசுறுப்பாக ஒரு இடத்தில் இல்லாமல் ஓடி ஆடி கொண்டாட்டமாக காணப்பட்டான்.இதைக்கண்ட அவன் தாய்,”என்ன இவனுக்கு ஆச்சு?என்னைக்கும் இல்லாத பொங்கம் இவனுக்கு.”என எண்ணிய அவள் “டேய் ராசா என்னடா உனக்கு?இன்னிக்கு இவ்வளவு சந்தோசமா இருக்க? என்னடா சங்கதி?” எனக் கேட்டாள்.

“அப்படியா?அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா.அடுத்த வாரம் பரிச்ச வருதுல்ல அதான்.வேற ஒண்ணுமில்லம்மா.”எனச்சமாளித்தான்
‘டேய் பெத்தவளுக்கு தெரியாதா புள்ளயோட அருமை.எல்லாம் எனக்குத் தெரியுண்டா. பரிச்சயின்னா எல்லாருக்கும் பயம்தான வரும்.நீ என்னமோ புதுசா சொல்லுற.உண்மையச்சொல்லு.வேறென்னமோ இருக்கு.”
“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லயே!.என்னைக்கும் போலதான் இன்னைக்கும். ஏம்மா அப்படிக்கேக்குற?”என வழிந்தான்.

“டேய் தெரியுண்டா மவனே!சும்மா சொல்லு. கமாலாவப் பாத்தியாக்கும்.?”என அவளும் ஆமோதிப்பதுபோல் போட்டு வாங்கினாள்.
“அது......அது ......அது வந்து.........என சொல்ல இழுத்தவன்.அப்புறம் தயங்கியவனாய் “அதெல்லாம் இல்லயே......என்ன நீ சும்மா சும்மா நோண்டி நோண்டி கேள்வி கேக்குற.நாந்தாங் ஒண்ணும் இல்லேங்கிறல்ல.அப்புறம் சும்மா நொய் நொய்னுக்கிட்டு:”எனத் தாயிடம் உண்மையை மறைக்க முயன்றான்.

“இல்ல எங்கிட்ட எதையோ மறைக்கிற.நீ எத எங்கிட்ட மறைக்கனுமன்னு நினைக்கிறியோ அது எனக்கு புடிக்காத விசயம்ன்னு ஒளிக்கிற..........டேய் நீ வளர்றதப் பாத்துப் பாத்து பெருமைப் படுறெங்.ஆனா அதே நேரத்துல எனக்குப் பயமாவும் இருக்கு,உனக்கு அப்பா இல்லேங்கிற குற தெரியக்கூடாதுன்னு செல்லமா வளத்துட்டெங். நாளக்கி யாரும் உன்னப்பாத்து “நீ என்னதாங் இருந்தாலும் பொம்பள வளத்த புள்ளதான............அறுதலி (தாலி அறுத்தவள்) வளத்த புள்ளதான.அதாங் அடங்காம அலையுறன்னு ஊர்ல உள்ளவங்க கேவலமா பேசியிறக் கூடாதேன்னு உன்னப் பொத்தி பொத்தி வளக்குரேங்.ஏங் நெனப்புல மண்ணள்ளிப் போட்டுருவியோன்னு எனக்குப் பயமா இருக்கு.”எனத் தன் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்தாள்.

“அம்மா ஏம்மா அழுகுற.அப்படியெல்லாம் உன்ன அசிங்கப்படுத்துற மாதிரி நடக்க மாட்டேம்மா.என்ன நம்பும்மா”எனத் தாயை தன்னிடம் தவறில்லை என்பதை நம்ப வைக்க முயற்சித்தான்.ஆனாலும் இவன் பொய் சொல்லவும் கற்றுக்கொண்டான் என்பதையும் புரிந்து கொண்டாள்.காதல் மலரும் போதே இயல்பாக பொய்யும் பூத்து விடுவதும் என்பதும் இயற்கைதானே.தன் பிள்ளையின் வளர்சியைக் கண்டு மகிழும் பெற்றோர்க்கு கூடவே பயமும் சேர்ந்து வளர்வதும் இயற்கைதான்.ஏனென்றால் எல்லாப் பெற்றோரும் தன் பிள்ளைகள் இச்சமுதாயத்தில் நல்லவர்களாகப் போற்றப்பட வேண்டும் ..அதைப்பார்த்துப் பெருமை அடைய வேண்டும் என்றுதானே கனவுகளோடு வாழ்கிறார்கள்.அதற்கு ராசாவின் தாயார் மட்டும் விதிவிலக்கா என்ன?அவள் தன் பிள்ளை இந்த வயதிலேயே காதல் வயப்பட்டு கல்வியில் கவனம் தவறி விடுவானோ என்ற அச்சம் அவளைப் பற்றிக்க்கொண்டது.அவனிடமிருந்து உண்மையை வரவழைக்க மீண்டும்மீண்டும் சில வினாக்களைத் தொடுக்கிறாள் .

“டேய் இங்க பாரு! இது பருத்தி மாறு புடுங்கிக் காச்சுப்போன கைகள்..ஊர்ல உள்ளவகெல்லாம் சொல்றாங்க நல்லா வயசு வந்த புள்ளய வீட்ல வச்சுக்கிட்டு நீ ஏங் இப்படிக் கஷ்டப்படனும்.அவனப் படிக்க வச்சு என்ன பண்ணப்போற.இந்தக் காலத்துல படிச்சவங்களுக்கு எல்லாம் வேல கிடக்கிறதாக்கும்.பைத்தியக்காரி.அவன ஒரு வேலவெட்டிக்குகு அனுப்பாம இப்படி வீட்ல வச்சு அழகு பாக்குறய.இப்படி படிப்பு படிப்புன்னு படிக்க வக்கிறியே அவங் நாளக்கி உன்னயத் தெருவில சட்டிதான் எடுக்கவிடப் போறாம் பாருன்னு எங்கிட்ட உன்னயப்பத்தி அவங்க அப்படிப் பேசும்போது அவங்ககிட்ட நாங் என்ன சொல்லுவேங் தெரியுமா.’அடி போங்கடி!பொறாம புடிச்சவளுகளா ஏம்புள்ளயப்பத்தி எனக்குத் தெரியும்முடி.உங்க புத்தி மதி ஒண்ணும் எனக்குத் தேவ இல்ல.நாங் கஷ்டப்படுறது போதாதா ஏம்புள்ளையும் இந்தக் கஷ்டத்த அனுபவிக்கனுமா?அவங் எனக்குக் கஞ்சி ஊத்துனாலும் சரி ஊதாட்டியும் சரி.அதப்பத்தி எனக்குக் கவல இல்ல உழைக்க முடிஞ்ச வரைக்கும் உழப்பேங் முடியாட்டி ஏதாவது மாத்திறையப் போட்டு செத்துருவேண்டி”.ன்னு அவளுககிட்ட வீர்ர்ப்பாப் பேசி உன்ன நம்பி இந்த உசுர உனக்காக சுமந்துக்கிட்டு இருக்கேண்டா ராசா !ஏங் நெனப்புல மண்ணள்ளிப் போட்டுருவியோன்னு தாங்யா எனக்குப் பயமா இருக்கு.”என தன் மனத்தில் உள்ளதெல்லாம் கொட்டி அவளுடைய லட்சியம் கனவு எல்லாமே அவன்தான் என்பதைகூறி தன் எண்ணங்களின் உணர்வுகளை கண்ணீர் ஊற்றால் எழதிக் காட்டினாள்.

“அம்மா ஏம்மா நீ அழுகுற.நீ பயப்படுற மாதிரியெல்லாம் ஒண்ணும் ஆவாதும்மா .என்னைய நம்பும்மா.நாங் ஒம்புள்ளம்மா.நிச்சயமா ஒம்பேரக் காப்பாதுவேம்மா.என்னைய நம்பும்மா....கமலா பழையபடி பள்ளிக்கூடம் வாராளாம்மா.அவ ஒரு பொண்ணுங்கிறாதால்ல அவ படிப்பு கெட்டுறக்கூடாதுல்ல.அதனால அவா திரும்பவும் படிக்கப்போறாங்குற சந்தோசந்தாம்மா எனக்கு.வேறொண்ணும் இல்லம்மா.என்னைய நீ புரிஞ்சுக்கோம்மா””எனத் தன் அம்மாவை சமாதானப்படுத்தி நம்பிக்கையூட்டினான்.

“அது நல்ல விசயன்தாங்.அவ பள்ளிக்கூடம் வந்தாலும் அவகிட்ட முன்ன மாதிரியெல்லாம் ரொம்ப பழகக்கூடாது.என்ன! அவா ஒரு வயசுப்பொண்ணு.மத்தவங்க கண்ணுக்குத் தப்பாத் தெரியாம ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும் தெரிஞ்சதா.போ பள்ளிக்கூடம் நேரமாச்சுல்ல பொறப்புடு.மத்தியான சாப்பாடு கம்மந்தோச சுட்டு மொளகாத் தொவையல் அரச்சி மூடி வச்சிருக்கேங்.சோறு வேணும்னாலும் அடுப்புல கவுத்தி வச்சிருக்கேங்.உனக்கு எது வேணுமோ சாப்புட்டுக்கோ.சாப்புட்டுட்டு ஏனத்தக் நல்லாக் கழுவி மூடி வச்சுரு.நாங் முதலாளி வீட்டுப் புஞ்சைக்கு மாறு புடுங்கப் போறெங்.பள்ளிக்கூடம் போகும்போது கதவால நல்லா சாத்தி கயிறு வச்சு நல்லா இறுக்கிக் கட்டிட்டுப்போ!ஏன்னா தொறந்து போட்டுப் போய்ட்டியின்னா நாய் வந்து எல்லாத்தையும் தின்னுட்டுப் போயிரும்.பாத்துக்கோ!நாங் வரட்டா.என மக்கனுக்கு சொல்லவேண்டியதெல்லாம் சொல்லிவிட்டு வேக வேகமாக வேலைக்கு விரைந்தாள் அன்னை.

ராசாவும் மணமான கம்மந்தோசை மொளகாத் தொவையல் நல்லா ருசிச்சு சாப்பிட்டுவிட்டு பாத்திரங்களைக் கழுவி பத்திரமாக மூடி வைத்துவிட்டு.வீட்டுக் கதவை நன்கு கயிறு வைத்து இறுக்கிக் கட்டிவிட்டு தன் பைக்கூட்டைத் தூக்கிக்கொண்டு பள்ளிக்குக் கிளம்பினான்.
வழகாமாகப் பார்ப்பதுபோல் கமலா வீட்டு ஜன்னலைப்பார்க்கிறான் அவள் ஜன்னல் ஓரமாக நின்றுகொண்டு ராஜாவை ஏக்கமுடன் நோக்குகிறாள்.எல்லாவற்றையும் அவளும் கேட்டுவிட்டவளாய் தன் பார்வையில் கண்ணீர் ஒழுகக் காட்டுகிறாள்.அம்மா சொன்னதெல்லாம் கேட்டுவிட்டாளோ என எண்ணி தன் தலையை தொங்கவிடுகிறான்.அவன் மௌனம் ,”ஆமாம் அம்மா அப்படித்தான் சொன்னாள்.அவள் பெற்ற்வளாச்சே அவள் பிள்ளையைப்பற்றி அவளுடைய கவலை.அதனால் என்ன?அம்மாவை நான் சமாளிதுக்கொள்கிறேன்”என்பதுபோல் தன் ஆறுதலான பார்வையில் அவளுக்கு உணர்த்தினான்.

சரி விடு பெற்றவள் அவள் உன்னை விட்டுக்கொடுத்துவிடுவாளா?கடவுள் விட்டபடி நடக்கட்டும்.பார்த்துக்கொள்ளலாம் என அவளும் தன்னையும் அவனையும் தேற்றும் விதத்தில் ஒழுகும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அவனிடம் பேசுவதற்கு ஆயத்தமான சைகையில் க்குக்கும் எனச்செறுமினாள்.அதையும் புரிந்து கொண்டு தன் நோக்கை மெதுவாக மேலே உயர்த்தி .என்ன சொல்லப்போகிறாய் எனும் ஆர்வத்தில் அவளைப் பரிவோடு பார்க்கிறான்.
மெதுவான தளதளத்த குரலில் “ராசா!எனும் அழைப்பிலேயே அவளையும் மீறி கண்கள் சொரிகிறது.அவளை அதற்குமேல் நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம் என்பதுபோல் .நீ ஒண்ணும் கவலைப்படாதே எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் எனும் விதத்தில் மௌனத்தில் தன் தலை அசைத்து மறுமொழி செய்து தன் கைகளை காட்டி நான் வருகிறேன் எனச்சொல்வதுபோல் அவளைப் பார்த்துக் கொண்டே நகர்கிறான்.

ஆனாலும் கமலா ,ராசா! நாங் சொன்னது ஞாபகம் இருக்குல்ல சாரட்ட சொல்லி எப்படியாவது எங்க அப்பாட்ட வந்து பேசச்சொல்லு.நாங் இந்த சிறைச்சாலையை விட்டு எப்படியாவது வெளியில வரணும்.அதுக்கு நீதாங் உதவனும் எனக் கூறி தன் கைகளைக்கூப்பி வணங்கி கண்ணீர் உதிர்த்தாள்.அப்போது அவன் நெஞ்சே கசங்கி விட்டதுபோல் வலித்தது`அடக்கிப்பார்த்தும் அடக்க முடியாதவனாய் கதறி ஓசை வெளியில் வராதபடிக்குதன் வாயைப்பொத்திக்கொள்கிறான்.பின் சமாளித்துக்கொண்டு தன் வழியும் விழிகளைத் துடைத்து.மேலும் அவள் சோக முகத்தைக் காணத் துணிவில்லாதவனாய் தன் முகத்தைத் தாழ்த்திக்கொண்டு வேகமாக் நடந்தான் தொடர்ந்து தன் கண்களில் உதிர்த்தும் துடைத்தும் கொண்டு.

(தொடரும்}
கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (24-Feb-14, 12:50 pm)
பார்வை : 224

மேலே