ஒருமனம் இரு கண்கள்

திரைஅரங்கில் கூட்டம் அவ்வளவாக இல்லை, பணி சுமையில் தப்பித்து கொஞ்சம் மனசாந்திக்கு திரைப்படம் பார்க்க வந்திருந்தேன் தனியாக. எண்ணி 20 முதல் 25 பேர் மட்டுமே பரவலாக அமர்ந்திருந்தோம். யாரும் முன் இருக்கையில் இல்லாததால் காலை நன்றாக நீட்டி உட்கார்ந்திருந்தேன். திடீரென பின் மண்டையில் ஒரு கை பட
" யாருடா அது??" என்று திரும்பி பார்த்தேன்,
ஒரு தம்பதியினர் வந்து என் இருக்கையின் பின் அமர்ந்தனர்.
" சாரி பாஸ்" என்றார் அவர்.
நானோ முறைத்து விட்டு திரும்பிவிட்டேன்.

சிறிது நேரத்தில் திரைப்படம் தொடங்க கதாநாயகன் நடந்து வருவது போன்ற ஒரு கட்சி வந்தது.
" ஹே!!! ஹீரோ வந்துட்டார், கருப்பு சட்டை போட்டுகிட்டு தலை கோதி விட்டுகிட்டு சூப்பர் அ நடந்து வரார்" என்று சப்தமாக கை தட்டிக்கொண்டே கூறினார்.
ஏற்கனவே இருந்த எரிச்சலால் நான் திரும்பி ஒரு நமட்டு சிரிப்பு சிரித்து விட்டு திரும்பினேன். பின் கதாநாயகன் என்னென்ன செய்கிறாரோ அதற்கெல்லாம் ஒரு கத்தல், கை தட்டல், சிரிப்பு என பின் இருக்கையில் அந்த சுமாரான படத்திற்கு பயங்கரமாக கருத்துகளை கூறிக்கொண்டே இருந்தார்அந்த ஆண். எனக்கு வந்த எரிச்சலுக்கு எழுந்து அவரிடம் சண்டை போடலாமென நினைத்தேன், சரி போகட்டும் போ இடைவேளைக்கு அப்பறம் வேற இருக்கை மாறி அமர்ந்துகொள்ளலாம் என நினைத்து பொறுத்துக்கொண்டேன். திரையில் நடக்கும் ஒவ்வொரு கட்சிக்கும் அவர் நடப்பது அப்படியே சொல்லிக்கொண்டே இருந்தார். ஆத்திரம் கண்ணை மறைத்து, எழுந்தேன்
"என்னைய நெனசிகிட்டு இருக்க நீ?? நீ மட்டும் தான் படம் பாக்க வந்திய?? நாங்க எல்லாம் எதுக்கு வந்திருகோம்?? வாய மூடிகிட்டு பேசாம பாரு, புரிஞ்சித??" என்று அலுவலகத்தில் இருந்த கோபத்தையும் சேர்த்து கொட்டி விட்டு அமர்ந்தேன்.
அதன் பின் எந்த சப்தமும் பின் இருக்கையில் இருந்து வரவே இல்லை, சிறுது நேரத்தில் அந்த பெண்மணி அந்த ஆணிடம் ஏதோ முனகுவது என் காதில் விழுந்தது. அதை கண்டுகொள்ளாமல் நான் திரைப்படத்தினை பார்த்துகொண்டு இருந்தேன்,

இடைவேளை வந்தது, எழுந்து பின் இருக்கையில் இருப்பவரை ஒரு முறை முறைத்துவிட்டு வெளியே சென்று ஒரு தேநீர் குடித்துவிட்டு,கழிவறைக்கு சென்றுவிட்டு திரும்பினேன், எனக்கு எதிரே என் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர் வந்துகொண்டு இருந்தார், நான் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு அவரை கடக்க முயன்றேன்,
"தம்பி ஒரு நிமிஷம்" என்ற குரல் கேட்க திரும்பினேன்.
பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர்
" என்ன??" என்றேன்.
" மன்னிச்சிக்கோங்க, நன் அப்படி காத்திருக்க கூடாது தான், ஆனா நான் அப்படி கத்தலனா நாங்க இந்த படத்துக்கு வந்ததே வேஸ்ட்" என்றார்.
நான் குழம்பி போய் " ஏன் நீங்க மட்டும் தான் காசு கொடுத்து பாக்குறிங்க நான் ஒசி ல பாக்க வந்தென?? ம்ம் ??" என்றேன்,
" நான் அப்படி சொல்லலப்பா, என் மனைவிக்கு கண்ணு தெரியாது அதனால தான், இதுவரைக்கும் நான் அவளை படம் பாக்க கூப்டுகிட்டு அவ வந்ததே இல்ல, அவளும் வர மாட்டேனு தான் சொலுவ, இப்போ தான் ரொம்ப கஷ்ட பட்டு பேசி அவள கூப்டுக்கிட்டு வந்திருக்கேன், அவளால பாக்க முடியாதுன்னு நினைகிறத நான் அவளுக்கு சொல்லி புரிய வைக்கிறேன், உங்களுக்கு கஷ்டமா இருந்த வேற சீட்டுக்கு மாறிகொங்க, வேனும்ன டிக்கெட் காண காச நான் கொடுத்துடுறேன்" என்றார்.
அவர் கூற கூற என் மண்டையில் யாரோ கொட்டுவது போல ஒரு உணர்ச்சி,
" ஐயோ சார், மன்னிசிகொங்க, ஆபீஸ் ல இருந்த டென்ஷன் ல அப்படி கத்திட்டேன், சாரி சார் ப்ளீஸ் நீங்க எப்பவும் போல மேடம்க்கு சொலுங்க, மேடம் கிட்டயும் சாரி சொந்த சொல்லிடுங்க " என்று சொல்லி விட்டு என் இருக்கைக்கே வந்து அமர்ந்து கொண்டேன்.திரைப்படம் தொடர்ந்தது, இப்பொழுது பின் இருக்கையில் இருந்த வந்த சப்தம் எனக்கு இனிமையாக இருந்தது.

(குறிப்பு: இந்த சிறுகதையை என் தோழி ஜெயபிரியங்கா 2012 ஆம் ஆண்டு கல்லூரியில் படித்துகொண்டு இருக்கும்பொழுது எழுதியது. அவள் எழுதியதை அப்படியே எழுதவில்லை என்றாலும் அவளின் கதை கருவை முயன்றவரை நான் அவளின் சம்மதத்துடன் இங்கு தந்துள்ளேன்)

எழுதியவர் : ஜெயபிரியங்கா (riaz) (4-Apr-14, 12:10 am)
Tanglish : orumanam iru kangal
பார்வை : 882

மேலே