===+++வழியெங்கும் பிதற்றுபவனின் குரல் - அலகுகளால் செதுக்கியகூடு+++===

குழந்தைகள் யோகிகள்
கள்ளம் கபடம் அறியாதவர்கள்...

மகிழ்ச்சியில் சிரிக்கும்
துன்பத்தில் அழுகும்
உன்மையான உணர்வின் வெளிப்பாடுகள்...

சுயநலமற்ற நிலா சூரியன்கள்...

இன்றைக்கும் என்றைக்கும் - இந்த
மானுடத்தின்
நிரந்தர எடுத்துக்காட்டுகள் - வாழ்க்கையின்
துருப்புச்சீட்டுக்கள்....

ஒட்டுமொத்த பிரிவினைகளுக்கும்
வக்கிரங்களுக்கும் அப்பாற்பட்டவர்கள்..

நிலுவையுலகை மாற்றும்
வல்லமை கொண்டவர்கள்...

குழந்தைகள் யோகிகள்
கள்ளம் கபடம் அறியாதவர்கள்...!!!


-----------------நிலாசூரியன்.

========

கடந்த ஆண்டு பங்குனி மாதம் 9 ஆம் நாள், புதுச்சேரி புதிதாக பூத்துக் குலுங்கியதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள் என்று நம்புகிறேன், ''ஆம்..!'' எழுபதுக் குழந்தைகளை பெற்றெடுத்த எண்பது வயது குழந்தைக்கு, ஐம்பத்தொன்பது வயதுக் குழந்தையின் தலைமையில், பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டதைத்தான் இங்கு நான் கூறுகிறேன்.

அதாவது சகாத்திய அகெதெமி விருதை வென்ற இன்றைய இளையபாரதி அய்யா ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு, நமது தளத்தின் இலக்கிய முரசு அய்யா அகன் அவர்களின் தலைமையில், பாண்டிச்சேரியில் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது தளமறிந்த உண்மைதானே....?

விழாவினில் கலந்துகொண்ட நமதுத் தோழமைகள், விழாவின் சிறப்பினை மெச்சி, தளத்தில் தங்கள் மகிழ்ச்சியை நம்மோடும் பகிர்ந்துகொண்டார்கள், நாமும் விழாவின் சிறப்பினை அறிந்து மனம் மகிழ்ந்தோம்.

அய்யா அகன் அவர்களின் பெரும்பணியால் விழா சீரோடும் சிறப்போடும் நடந்து முடிந்து இருக்கிறது, விழாவின் நினைவுகளில் மனம் மகிழ்ந்து இருக்கும் இந்த வேளையிலும், அய்யா அகன் அவர்களின் வினைவலியைப் போற்றிப்பாடாமல் என்னாலும் இருக்க இயலவில்லை.

தங்கம் மண்ணுக்குள் புதைந்தே கிடந்தால் மதிப்பேது..? என்னைப்போல் புதைந்து கிடந்த பலரின் இருப்புகளை அடையாளப்படுத்திக் காட்டிய பெருமை அய்யா அகன் அவர்களையேச் சாரும்.

59 வயது கண்டுவிட்டாலும், இன்றும் மன எழுச்சியோடு ஒரு இளைஞனைப்போல் அவர் சேவையாற்றும் பாங்கு என்னில் பிரமிப்பையே கூட்டுகிறது, முன்பைவிட இந்த தடவை நிறைய ஆண் படைப்பாளிகளையும் பெண் படைப்பாளிகளையும், வெளியே கொண்டு வந்து அடையாளப்படுத்தி அகிலத்தின்முன் நிறுத்தி இருக்கிறார், இவரின் இந்த பணிக்கு கோடிகோடி நன்றி கூறி முழவறைய ஆர்கலிக்கிறது மனது, ஆனால் நன்றி என்ற வார்த்தைக்கும் மேலான ஒன்றை தேடிக்கொண்டு இருக்கிறேன்.

மேலும் மேலும் இவரதுப் பயணம் என்றென்றும் செம்மையாகத் தொடர, எனது முல்லைநிலத்துக் கிளுவ முள்ளைபோல், பாதையோரங்களில் பக்கபலமாய் இருக்கவே விரும்புகிறேன்....!

இவரைப்பற்றி இன்னும் முரலாமல் முழங்க நிறைய இருக்கிறது, அவற்றை இன்னொரு கருத்துரையில் கண்டிப்பாக கூறுகிறேன், இப்பொழுது நான் சொல்லவந்த விடயத்தை கூறிவிடுகிறேன்.

பங்குனி 9 ஆம் நாள் அன்று, அய்யா ஈரோடு தமிழன்பன் அவர்களின் எண்பதாவது பிறந்தநாள் விழா முன்னிட்டு, தளத்தில் உள்ள பல தோழமைகளுக்கும் விருதளிக்கப்படடதை நாம் அறிவோம், அதே நேரம், ''தொட்டில் சூரியன்,'' அலகுகளால் செதுக்கியகூடு,'' ''எனக்கென்று ஒரு முகமில்லை,'' ''செங்காத்து வீசும் காடு,'' ''தமிழன்பன் ஒரு மகாகவி,'' ''தமிழன்பன் கவிதையின் அழியாதக் காதலன்,'' ''வகுப்பறையில் வண்ணத்துப் பூச்சிகள்,''சூரியக் கீற்றுகள்,'' ''தமிழென்(ண்)பது தமிழன்பன்,'' ''தமிழன்பன் தமிழுக்கு அளித்துள்ள புதுவடிவங்கள்,'' - ஆகிய நூல்களெல்லாம் வெளியிடப்பட்டன, அனைத்துப் படைப்புகளும் அருமையானப் படைப்ப்பாளிகளால் படைக்கப்பட்டு இருக்கின்றன, அந்த படைப்புகளையெல்லாம் இந்த சித்திரை 11 ஆம் தேதிக்கு மேல்தான் என்னால் வாசிக்க இயலும், ஏனென்றால்... நூல்கள் எல்லாம் என் கைக்கு வந்து சேர சித்திரை 11 ஆகிவிடும், ஆனால் அதுவரை பொறுமை காக்க முடியாமல்தான் இந்த கருத்துரையை இங்கே பதிவு செய்துவிட்டேன், இதற்கு காரணம் அந்த ''வழியெங்கும் பிதற்றுகிரவனின் குரலே,''

ஆமாம்..! யார் அந்த பிதற்றுகிரவன்...? அது வேறு யாருமில்லை நமது தோழர் திரு ரமேஷாலம் அவர்கள்தான்.

இவரது பிதற்றல்கள் என்னையும் பித்தனாக்கிவிட்டது, அதன் விளைவே இந்த கருத்துரை.

ஒரு மரத்தில் இருந்து ஒரு இலை உதிர்ந்து விழுவது என்பது, எப்பொழுதும் நடக்ககூடிய இயற்கையான விடயம்தான், இதை சாதாரணமாகத்தான் நாம் எல்லோரும் பார்க்கிறோம், ஆனால் ஒரு இலையானது மரத்தை பிரிந்து மண்ணிற்கு வரும் கணத்தில், அந்த மரத்திற்கும் மண்ணிற்குமான குறைபட்ட இடைவெளித் தருணங்களின் நிகழ்வுகள் என்ன, அத்தருணத்தில் இலையின் நிலைப்பாடு என்னவாக இருக்கும், மண்ணின் முதல் அணைப்பை அந்த இலை எவ்வாறு உணர்ந்திருக்கும், இவற்றை எல்லாம் எல்லோராலும் எளிதாக உணர்ந்துகொள்ள இயலாது, அதை உணர்ந்து கொள்கிரவர்களால் மட்டுமே உரைக்கவும் முடியும், இப்பொழுது புரிந்துகொள்ளுங்கள் ''வழியெங்கும் பிதற்றுகிரவனின் குரல்'' எப்படி இருக்குமென்று.

மலர்ந்த மலர்களை நாம் பார்த்து ரசிக்கமட்டுமே செய்கிறோம், ஆனால் அந்த மலரின், அன்றாட வாழ்க்கையை அணு அணுவாய் கூர்ந்தாராய எல்லோராலும் முடிவதில்லையே..., மெல்ல மெல்ல மொட்டுக்களைத் தழுவி கட்டவிழ்க்கும் தென்றலுக்கும், முட்டி முட்டி மொட்டுடைக்கும் காற்றுக்கும் உள்ள நூலிழை வேறுபாடுகளையும் நுணுக்கமாக கூறுவதில் வல்லவன் இந்த பிதற்றல்காரன், கொஞ்சம் கொஞ்சமாக விரிகிற விரிமலரின் மெல்லசைவைகூட இவனால் தெளிவாக பதிவு செய்ய முடிகிறது, விரிகிற மலரின் முதல் வாசத்தையும், விரிந்த மலரின் முதல் தேனையும் நுகர்ந்த தும்பி இரண்டின் நிலைபாடுகள் எப்படி இருக்கும்? இப்படி நம்மால் புரிந்துகொள்ள முடியாத புரிதல்களுக்கும்கூட இவன் அகராதியாய் இருப்பது அனுபவத்தின் உச்சம்தானே...

காற்றில் கலந்து, காணாமல் கரைந்துபோன குயிலின் ராகத்தை, மூங்கில் தோப்புகளில் நாமெல்லாம் தேடிக்கொண்டு இருக்கிறோம், ஆனால் இவன் குழல் வாசித்துக் கொண்டிருக்கிறான், இவனால்மட்டும் எப்படி அந்த ராகத்தை கண்டுபிடிக்க முடிந்தது? அதுதான் இந்த பிதற்றல்காரன் நுனையின் அருவினை என்பதை புரிந்துகொண்டால் சரிதான்.

அட என்னய்யா சொல்லவர என்று யாரோ ஒரு தோழர் கூறுவது கேட்கிறது, அதனால் இந்த விவரிப்பை இதோடு நிறுத்திக்கொண்டு நான் கூற வந்ததை கூறிவிடுகிறேன்.

''அலகுகளால் செதுக்கிய கூடும்,'' அதற்கு தோழர் திரு ரமேஷலம் எழுதுகிற ''வழியெங்கும் பிதற்றுபவனின் குரல்'' என்ற விமர்சன தொடருமே..! என்னையும் இப்படி பிதற்ற வைத்துவிட்டது தோழமைகளே...

பன்னாட்டுப் படைப்பாளிகளின் படைப்புகளை உள்ளடக்கிய ''அலகுகளால் செதுக்கிய கூடு'' பலராலும் பேசப்படுகிற ஒரு நூலாக இருக்கிறது, முத்து, பவளம், வைரம், வைடூரியம், மாணிக்கம், மரகதம், என அனைத்து திரவியங்களும் நிறைந்த ஒரு படைப்புதான் ''அலகுகளால் செதுக்கியக்கூடு'' என்பதை, பலரின் பாராட்டுதல்களிலும், கருத்துக்களிலும் உணரமுடிகிறது.

தோழர் கவிஜி மற்றும் தோழர் ரமேஷாலம் ஆகியோரின் விமர்சன கருத்துரைகள், ''அலகுகளால் செதுக்கியக்கூடு'' நோக்கி, நம்மையும் இழுத்துச்செல்கிறது என்றால் அதுதான் உன்மையும்கூட.

ஒரு காராளன் தன் நிலத்துக்கான விதையை எப்படித் தரமானதாக தேர்ந்து எடுத்து விதைப்பானோ, அப்படித்தான் ''அலகுகளால் செதுக்கியகூட்டின்'' தொகுப்பாசிரியர் திரு தி. அமிர்தகணேசன் அவர்கள், நல்ல தரமான (க)விதைகளை பொருக்கி எடுத்து விதைத்து இருக்கிறார்,அதுவும் நமது மன நிலங்களில் முளைத்துக்கொண்டு இருக்கிறது.

''அலகுகளால் செதுக்கியக்கூடு'' நாம் அனைவரும் கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய ஒரு நூலாகவே அடையாளம் காட்டப்பட்டு இருக்கிறது, தோழமைகளே நீங்களும் ''அலகுகளால் செதுக்கியக்கூட்டை'' வாசித்து மகிழுங்கள், அதற்கு முன்பே தோழர் திரு ரமேஷாலம் அவர்கள் ''அலகுகளால் செதுக்கியகூடு'' பற்றி தளத்தில் விமர்ச்சன கட்டுரைகளை ''வழியெங்கும் பிதற்றுபவனின் குரல்'' என்ற தலைப்பில் எழுதிக்கொண்டு இருக்கிறார், அதையும் வாசித்து அந்த நூலின் விபரங்களை தெளிவாக அறிந்துகொள்ள்ளுங்கள் என்பதற்காகவே இந்த கருத்துரையை இங்கு நான் பதிவு செய்து இருக்கிறேன்.



நன்றிகளுடன்
-------------------------நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர். (17-Apr-14, 10:51 am)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 133

சிறந்த கட்டுரைகள்

மேலே