வழியெங்கும் பிதற்றுபவனின் குரல் 22

கவிஜியின் அடுத்த கவிதை...

"ஒரு கோடிப் பிரிவுகள்".

அநேகமாக...நாம் எல்லோருமே நம்மை ஒரு முறையாவது நம் வாழ்வில் தொலைத்திருப்போம்.
அதுவும் எப்படி...நம்மை நாம் தேடிக் கண்டு பிடிப்பதாய் நினைத்துக் கொண்டு.

நாம் மருந்தென நினைப்பதே நோயாகும் வியாதியின் பிடியில் சிக்கியபடி.

சுற்றி வளைப்பானேன்? காதல்தான் அது.

காதல் தொலைத்துவிடுகிறது...ஒருவனின் இருப்பை.

காலமற்று வாழச் செய்கிறது ஒருவனை.

நிகழ், எதிர் என எதுவும் இல்லாமல்...அவன் காலத்தை....
அதனூடாக அவனையே தொலைந்து போக வைக்கிறது.

கவிஜி எழுதுகிறார்...

"மனசெங்கும் ஜன்னலாய்த்
திறந்து கிடக்கிறது....
கவனம் கலைத்தவளின்
பாதச் சுவடுகளின் பார்வைக்காய்..."

பகல், இரவு....தொலைந்து...தன் அடையாளம் தொலைந்து...மனசு திறந்த ஜன்னலாகி விடுகிறது.

எதற்காக?

மனம் கலைத்தவளின் முழு உருவம் பார்ப்பதற்காகக் கூட இல்லை...பாதச் சுவடு பார்ப்பதற்கும்...அந்தப் பாதச் சுவடு இவனைப் பார்க்குமா என ஏங்குவதற்கும் .

காதலின் வலி தாங்காது தூர தேசம் செல்ல
முடிவெடுக்கையில்...
மனசெங்கும்... ஒரு கோடிப் பிரிவுகளாய்
கிழித்துப் பிரிக்கப்பட்ட பிரிவின் வலிகள்.

கடைசியில்...

"அவளைத் தொலைப்பதில்...
கண்டுபிடிக்கப் படாமலே
போகிறேன்...நான்...".

இதுதான் கவிதை. யதார்த்தத்தைப் புறம் தள்ளாமல்...பிரிவின் வலிகளையும் மறைக்காமல்...எழுதுகையில்..
கவிதை தன் தனித்துவத்தை அடைகிறது.

இயல்புக்கு மாறான விஷயங்களைக் காதலின் வலி தந்ததாய்ச் சொல்லாமல்...காதலின் வலியிலிருந்து விடுபட...காதலியைத் தொலைக்க முயற்சிக்கையில் கவிஞர் தான் யாரெனத் தன்னாலேயே அறிய முடியாமல் போன யதார்த்தம் சொல்லி...இந்தக் கவிதையை நிறைவு செய்கிறார்.

கவிதைக்குப் பொய்யழகு எனப் படித்திருக்கிறேன்...
ஆனால்...உண்மையை, வாழ்வின் யதார்த்தத்தை... சொல்லும் கவிதை
மிக அழகு.

இந்தக் கவிதை...மிக...மிக...அழகான கவிதை.

மீண்டும் வருவேன்....காலத்தின் பெரும் துணையோடு...

அடுத்த கவிதையைச் சொல்ல.

எழுதியவர் : rameshalam (17-Apr-14, 3:08 pm)
பார்வை : 81

மேலே