காலம் வரைந்த கலைஞன் - ரெம்ப்ராண்ட்

மேலே இருக்கும் ரெம்ப்ராண்ட்டின் ஓவியத்தை மெர்சியிடம் மார்க் கிராஸ் காட்டுகிறார். மார்க் கிராஸ் ஒரு ஓவியரும் கூடத்தான், ஓவியரும் கூடத்தான் என்று சொல்லும் போதே அவர் வேறு எதுவாகவோ இருக்கவேண்டும்தானே...?! ஆமாம் அவர் களிமண்ணால் சிற்பங்கள் செய்யும் சிற்பியும் கூட. அந்த பாத்திரத்தில் நடித்தவருக்கு குறைந்தபட்சம் 70 வயதாவது இருக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. கொஞ்சம் ஐன்ஸ்டீனின் சாயல்வேறு அவருக்கு. அவர் பெண்களை மட்டுமே படமாக வரைந்து கொண்டு பின் களிமண்ணால் செதுக்கி செதுக்கி சிற்பம் செய்வார். பெண் என்றால் ஏதோ ஒரு பெண்ணின் சிலையாய் அது இருந்து விடமுடியாது. நிர்வாண மாடலாய் ஒரு பெண்ணை நிற்க வைத்து முதலில் பெண்ணின் உடலை வரைந்து கொண்டு பின் அந்தப் பெண்ணை கொண்டு அவர் சிலையும் செய்தாக வேண்டும்.

நிர்வாணம் என்ற சொல் வெறுமனே விஷமற்ற பாம்பைப் போன்றது ஆனால் பெண்ணின் நிர்வாணம் என்பது கலை என்னும் விசம் நிரம்பிய நாகத்தைப் போன்றது. அது அழகு. அதுவே விஷம். பெண்ணின் உடல், அதன் வளைவு நெளிவுகள், அந்த உடலில் இருக்கும் சூட்சும குறிப்புகள், மேடு பள்ளங்கள் என்று காமம் என்ற சொல்லை ஒரு உளி எடுத்து செதுக்கி எறிந்து விட்டு பார்த்தோமானால் கலை என்று எதைச் சொல்கிறேன் என்பது விளங்கும். பொதுவாகவே காமம் உள்ளதை உள்ளபடி பார்க்கவிடுவதில்லை. அது ஒரு எதிர்ப்பார்ப்போடு எப்போதும் அலையும் ஒரு மிருகம். எப்போது பாயும் என்று சொல்லவே முடியாது. மிருகத்தை உயிரோடு வைத்துக் கொண்டு ஒரு கலைஞனால் படைக்க முடியாது. ரசிக்க முடியாது. உறங்க முடியாது.


ஹென்றி மாட்டீஸ்

மெர்சி மார்க் கிராஸிடம் மாடலாக வேலை செய்ய வந்திருக்கும் பெண் என்பதையும், த ஆர்ட்டிஸ்ட் அண்ட் மாடல் என்ற திரைப்படத்தின் கதை என்ன என்பதையும், அந்த திரைப்படம் என்ன மாதிரியான அதிர்வுகளை எனக்குள் உருவாக்கியது என்பதை எல்லாம் இப்போது நாம் பார்க்கப் போவதில்லை. படத்தைப் பற்றி பேசுவதற்கு முன்பு படத்தில் இருக்கும் விசயங்களை பற்றியும் அது பகிர்ந்திருக்கும் செய்திகளைப் பற்றியும் அறிந்து கொள்ள விரும்பி இணையத்தை இரண்டு மூன்று நாட்களாகவே மேய்ந்து கொண்டிருந்தேன். 1860களில் பிறந்த ஹென்றி மாட்டீஸ் என்ற பிரெஞ்ச் சிற்பியின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது என்று அறிந்து கொண்டேன். இதை அறிந்து கொண்டு ஹென்றி மாட்டீஸ் எப்படி எல்லாம் வாழ்ந்திருப்பார் என்று போய் அவரின் வாழ்க்கையை வரலாற்றை தேடி அறிந்து கொள்ள நான் விரும்பவில்லை. ஒருவேளை மாட்டீசின் நிஜவாழ்க்கை எனக்கு போரடித்து இந்த படத்தைப் பற்றி சொல்ல ஒன்றும் தோன்றாமல் போய்விடுமோ என்ற பயம்தான் அதற்கு காரணம்.

இராஜராஜ சோழனைப் பற்றிய என் ஆவலையும், தேடலையும், ப்ரியத்தையும், வரலாற்றுப் பதிவுகளில் வாசித்து அறிந்து கற்பனை செய்து வைத்திருந்த அந்த பிரம்மாண்டமான சித்திரைத்தையும், சிதைத்துப் போட்டது இராஜராஜ சோழன் என்னும் தமிழ்த் திரைப்படம். சில காரியங்களை செய்யாமலேயே இந்த உலகம் இருந்திருக்கலாமோ என்று எனக்கு தோன்றும். அதில் ஒன்று இந்த திரைப்படத்தை எடுத்தது. உடையார் நாவலை வாசித்துக் கொண்டிருந்த போது சட்டென்று சிறகு விரித்துப் பறந்து போக எத்தனித்த என் கற்பனைக் கழுகினை சட், சட்டென்று சிறகு வெட்டி தரையில் இழுத்துப்போட்டுவிடும் சிவாஜியின் உஷ்ணமான மேடை நாடக நடிப்பு.

ரெம்பிராண்ட் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதலை இந்த ஆர்டிஸ்ட் அண்ட த மாடல் படத்தில் ஒரு காட்சி வலுவாய் செய்து விடுகிறது. மேலே இருக்கும் புகைப்படத்தை தனது மாடலான மெர்சியிடம் மார்க் கிராஸ் தாத்தா காட்டுவார். இதைப் பார்த்தாயா...? ஓவியம் நன்றாக இருக்கிறதா என்று அவர் கேட்டு முடிப்பதற்கு முன்பாகவே அந்தப் பெண் ஓ....வெறி நைஸ் என்று பதில் சொல்லிவிடுவாள். இது ஒரு தலை சிறந்த ஓவியம். ஒரு நொடியில் இது நன்றாக இருக்கிறது என்று கூறிவிட்டாளே என்ற தன் கோபத்தை ஆதங்கத்தை ஒரு படைப்பின் உன்னதத்தை உணர்ந்தவராய்....

"எந்த ஒரு விசயத்தையும் முதலில் எப்படி பார்ப்பது என்று கற்றுக் கொள்ள வேண்டும். அதில் என்ன இருக்கிறது என்று உற்று நோக்கவேண்டும்.. ..அது அல்லாது வெறுமனே எல்லாவற்றையும் கடந்து சென்று விடக்கூடாது என்று அதட்டிவிட்டு. மேலே இருக்கும் சித்திரத்தை பற்றி விவரிப்பார். இது போன்ற கோட்டு ஓவியங்களை பார்க்கும் போது அதன் வளைவுகளை, நெளிவுகளை நாம் கவனிக்க வேண்டும் என்பார். நடந்து செல்லும் குழந்தை முதன் முதலாய் நடக்கப் பழகுகிறது என்றும் அந்தக் குழந்தை அப்படி நடந்து பழகுவது அதற்கு ஆவலாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்று சொல்லிவிட்டு.....அதன் மகிழ்ச்சியை எப்படி நாம் புரிந்து கொள்வது தெரியுமா...? அந்த சிறு குழந்தையின் பக்கவாட்டு கன்னத்தை பார், அந்தக் புஷ்டியான கன்னம், முன்னால் சிரிக்கும் குழந்தையின் உப்பலான பக்கவாட்டுத் தோற்றம்.....

அந்தக் கோட்டினை உற்று நோக்கினால்தான் அந்த குழந்தையின் மகிழ்ச்சி பிடிபடும்....! அதோடு மட்டுமில்லாமல் அந்த குழந்தையை இடது புறம் கை பிடித்து அழைத்துச் செல்வது குழந்தையி சகோதரியாய் இருக்கலாம், அவளுக்கு குழந்தைகளை பிடித்து அழைத்துச் சென்று பழக்கம் இல்லாததால் வெகு சிரத்தையாய் குனிந்து பிள்ளையை கவனமாய் அழைத்துச் செல்கிறாள்.....வலது புறம் இருப்பது குழந்தையின் அம்மாவாய் இருக்கவேண்டும். இரண்டு பிள்ளைகள் பெற்றவள் அவள், அதனால் தன் அனுபவத்தின் மூலம் பிள்ளையை எப்படி பிடித்து நடக்க வைக்க வேண்டும் என்று அறிந்தவளாதலால், கொஞ்சம் பயமின்றியே....அவள் குழந்தயையின் கையைப் பிடித்திருக்கிறாள்...."

கிராஸ் விவரித்துக் கொண்டே சென்று கொண்டிருந்தார். நான் படத்தை பாஸ்(Pause) செய்து நிறுத்தி விட்டு யோசிக்க ஆரம்பித்தேன். இது ஒரு படம். ஓவியம். அவ்வளவுதான். ஒரு ஒவியன் வெறும் கோடுகளால் எத்தனை விதமான உணர்வுகளைத் தனக்குள் வெளிப்படுத்தி விடுகிறான். எத்தனை அழுத்தமான நுண்ணுணர்வுகள் கொண்டவனாய் அவன் இருந்திருப்பான்..? ஒவ்வொரு சூழலையும் எவ்வளவு நுணுக்கமாய் அவன் கவனித்தவனாய் இருந்திருப்பான். தன்னைச் சுற்றி நிகழும் சிறு சிறு நிகழ்வுகளையும் அசைவுகளையும், உற்று கவனிக்கத் தெரிந்தவனே அதை எழுத்தில், பேச்சில், ஓவியத்தில், இசையில், ஆடலில், பாடலில் கொண்டுவரத் தெரிந்தவனாகிறான்....

இன்னும் சொல்லப் போனால் மொழிகள் என்று நாம் அறிந்து வைத்திருப்பது யாவும் ஒரு தூரமே பயணித்து கேட்டுக் கொண்டிருப்பவனுக்கு புரிதலை உண்டு பண்ணுகிறது. பேசியவர்கள் பேசியது எல்லாம் புரிந்திருந்தால் இப்படி உருவாகி இருக்குமா முரண்பாடான இந்தப் பேருலகம். இரண்டு பேர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மாறி மாறி விளக்கிக் கொள்கிறார்கள். இவனின் நியாயத்தை இவனும், அவனின் நியாத்தை அவனும் நுணுக்கமாய் எடுத்தும் சொல்லிக் கொள்கிறார்கள் ஆனால் கடைசி வரையில் ஒருவரின் வலியையோ, சோகத்தையோ, எதிர்பார்ப்பையோ ஒருவருக்கு ஒருவர் முழுதாய் புரியவைக்க முடிவதேயில்லை. மொழி இந்த உலகம் முழுவதும் தோட்டா இல்லாத துப்பாக்கியாகவே பெரும்பாலும் வெடித்துக் கொண்டிருக்கிறது.

பேசுபவர்கள் எல்லாம் நினைத்துக் கொள்கிறார்கள் தாங்கள் எல்லாவற்றையும் இந்த உலகத்துக்கு புரியவைத்துவிட்டோம் என்று. கேட்கிறவர்கள் எல்லோரும் நினைத்துக் கொள்கிறார்கள்......என்றாவது ஒரு நாளாவது இவன் நாம் நினைப்பதை பேசிவிடமாட்டானா என்று.....ஆனால் இரண்டு நடப்பதே இல்லை.



ஒரு கலைஞன் சராசரி மனிதர்களிடம் இருந்து எப்போதும் வித்தியாசப்பட்டே இருக்கிறான். அவனும் பேசுவான் ஆனால் அவன் வார்த்தைகள் அவனுக்குள் இருக்கும் நியாயத்தை மட்டும் கூர் தீட்டிக் கொள்ளும் சுயநலக் கத்திகளாக எப்போதும் இருப்பதில்லை. அவன் எதிராளியின் வலிபற்றி பேசுகிறான், எங்கோ அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு இனத்தின் விடுதலை பற்றி பேசுகிறான், அதுவரையில் அவன் சந்தித்திராத மனிதர்களின் தேவைகள் பற்றி பேசுகிறான், வானத்தையும், பூமியையும், பூமியில் படிந்து கிடக்கும் நிலையாமைப் பற்றியும், வாழ்க்கையில் சந்தோஷமாயிருக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும், மனிதர்கள் மனிதர்களைப் போற்ற வேண்டிய அவசியத்தை பற்றியும் அவன் பேசிக் கொண்டே இருக்கிறான்.

பூக்களைப் பார்க்கிறான். அதன் சந்தோசத்தை ஒரு கவிதையாகவோ, ஓவியமாகவோ, புகைப்படமாகவோ, ஒரு பாடலாகவோ, இசையாகவோ வடித்து வைத்துவிட அவன் முனைகிறான். ஒரு கலைஞன் எப்போதும் தன்னைச் சுற்றி நிகழும், தான் அனுவிக்கும் விசயங்களை கூர்மையாக சக மனிதனிடம் பகிர்ந்து செல்லவே எப்போதும் விரும்பிகிறான்.

ரெம்ப்ராண்டின் ஓவியங்களை தேடித் தேடி நான் பார்க்க ஆரம்பித்தேன். வாழ்க்கையின் விவரிக்க முடியாத வேறு பக்கத்திற்கு அவை என்னை அழைத்துச் சென்றன. மனித உணர்வுகளை கோடுகளுக்குள் கொண்டு வந்து அதைக் காண்பவர்களிடம் பரிமாற்றம் செய்யக் கூடிய மந்திர சக்திக் கொண்டவை அவனின் ஓவியங்கள். 1600களில் வாழ்ந்து மறைந்த அந்த டச்சுக்காரனைப் பற்றி பற்றி இன்னமும் பேசிக் கொண்டிருக்கின்றன அவனது ஓவியங்கள் அம்ஸ்ட்ர்டாமில் இருக்கும் மியூசியங்களில்.

ஏதேதோ அமானுஷ்யமான உணர்வுகளோடு சல்லாபித்துக் கொண்டிருக்கும் போது தோன்றும் புது புது விசயங்களை பதிவு செய்து கொண்டிருக்கும் எந்த கலைஞன் பொருளாதாய உலகத்தில் வென்றிருக்கிறான் என்று சொல்லுங்கள் பார்ப்போம்? ரெம்ப்ராண்டின் வாழ்க்கையை அறிய முற்பட்ட எனக்கு....அதை வாசித்து முடித்த போது மனம் கனத்துப் போயிருந்தது. அவன் மனைவியை குறுகிய காலத்திலேயே இழந்து, நான்கு குழந்தைகளைப் பெற்று குழந்தையிலேயே மூன்று பிள்ளைகளை இழந்து, பின் தன்னையும் பிள்ளையும் பார்த்துக் கொள்ள வந்த பெண்ணை மனைவியாக்கிக் கொண்டான். அந்த பெண்ணை மாடலாகக் கொண்டு அவன் நிறைய கோட்டோவியங்களை வரைந்துமிருக்கிறான்.

கடன் தொல்லையால் தன்னிடம் இருந்த அத்தனை ஒப்பற்ற படைப்புகளையும் கொடுத்து ஈடு செய்த ரெம்ப்ராண்ட்...வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான சூழலில் இருந்த போது உருவாக்கிய படைப்புகள்தான் வெகு பிரம்மாண்ட புகழை அவனுக்குத் தேடிக் கொடுத்திருக்கிறது. நிறைய இருக்கிறது ரெம்ப்ராண்ட் பற்றி பேசுவதற்கு, அவன் ஓவியங்களின் தனித்தன்மை பற்றி விவாதிப்பதற்கு.....



எந்த ஒரு தலை சிறந்த படைப்பும் தன்னைப் பற்றி மட்டும் பேசிவிட்டு வாய் மூடிக் கொள்வதில்லை. அது ஒரு ரசிகனை கிளர்வான மனோநிலைக்கு கொண்டு சென்று பல புதிரான விசயங்களைப் பற்றி பேசுவதோடு நிறைய விசயங்களைக் கற்றுக் கொடுத்து புதுப் புது திறப்புக்களையும் கொடுக்கிறது. ஒரு படைப்பில் லயித்து முடித்து வெளியே வரும் போது அந்த படைப்பு பற்றிய பிரக்ஞை இன்றி வேறு ஏதோ ஒரு புதிய தேடலில் நீங்கள் இறங்கி இருக்கிறீர்கள் என்றால்...மிகச்சரியாய் அந்த படைப்பு வெளிப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

த ஆர்ட்டிஸ்ட் அண்ட் த மாடல்
(The Artist and the Model)


என்னும் திரைப்படம் வெகு நேர்த்தியாய் அந்த செயலை செய்திருக்கிறது. வேறு ஒரு கட்டுரையில் அந்த திரைப்படம் பற்றி நிறைய பேசுவேன்...!



தேவா சுப்பையா...

எழுதியவர் : தேவா சுப்பையா (19-Apr-14, 7:50 pm)
பார்வை : 220

சிறந்த கட்டுரைகள்

மேலே