வாசமில்லா வலைப்பூ - படைப்பு கவிஞர் சி அருள்மதி

வாசமில்லா வலைப்பூ !

காதல் கொற்றத்தில் நுழைந்து
உன்னைப் பதிவிறக்கம் செய்ய
பலமுறை சொடுக்கினேன் பயனில்லை .

இணைப்பறு நிலையில்
என்னை எரிதமாக்கிய காதல் அஞ்சலே!

காதல் குருடனாய் புனைகிறேன்
புதுக்கவிதை புடையெழுத்தில் !

உன் பின்னொட்டாய் நான்
என் முன்னொட்டாய் நீ !

என் இதய இரும்பில் பிடித்த ‘காதல்துரு’ நீ !

சுழியமாய் இருந்த என்னை
பூரியமாக்கிய காதல் செயலி நீ !

உவமும் துடிமமும் ஒன்றிணைந்த
காதல் குறியீடு நீ !

என் காதல் வலைப்பதிவில் புகுந்துவிட்ட
மென்வழு நீ !

உன் வருடுபொறிக் கண்ணால்
என் மனச்சாளரத்தைப் பதிந்து கொண்டவள் நீ !

கம்பியில்லா காதல் இணைப்பில்
என் நேரவளையத்தை அரித்துத் தின்னும்
நச்சு நிரல் நீ !

என் ஐம் பொறிமொழியும் புரிந்து கொள்ளும்
காதல் நுண்மி நீ !

என் தரவுத்தளத்தில் பதிந்து விட்ட
மாறிலி நீ !

உன் நினைவால் என் நிலைவட்டு நெகிழ்கிறது.
என் மையச் செயலகம் சில்லுகளாய் சிதைகிறது.

மின் வெளியில் முகில் கணிப்பில்
மீண்டும் உட்புக முயல்கிறேன்
உன் மெய்நிகர் வெளியில்
காதல் சமிக்கையுடன் !

புரிதலுக்காக:

கொற்றம் (Domain) பதிவிறக்கம்(Download)
சொடுக்கி (Click)
இணைப்பறு(Offline)
எரிதம் (Spam)
அஞ்சல் (mail)
புடையெழுத்து (Braille)
பின்னொட்டு (Suffix)
முன்னொட்டு (Prefix)
சுழியம் (Zero)
பூரியம் (1 followed by 20 zero) செயலி(Application)
உவமம்(Analog)
துடிமம்(Digital)
குறியீடு(symbol)
வலைப்பதிவு (Blog)
மென்வழு(Bug)
வருடுபொறி (Scanner)
சாளரம் (window)
பதிவு (Copy)
கம்பியில்லா(Wireless)
நேரவளையம் (Time Zone)
நச்சு நிரல்(Virus)
பொறிமொழி(Machine Language)
நுண்மி(Bit)
தரவுத்தளம் (Database)
மாறிலி(Constant)
நிலைவட்டு(Hard Disk)
மையச்செயலகம்(CPU)
சில்லுகள் (Chip)
மின் வெளி(Electronic Space)
முகில் கணிப்பு (Cloud Computing)
மெய்நிகர் வெளி(Virtual Space)
சமிக்கை (Signal)

எழுதியவர் : கவிஞர் சி. அருள்மதி (22-Apr-14, 12:27 pm)
பார்வை : 282

மேலே