சிறப்புக் கவிதை 7- என்னமோ ஏதோ - கேஎஸ்கலை

ஒரு கவிதையின் கதவினைத் திறக்கும் சாவியைப் போன்றது கரு."என்னமோ ஏதோ " என்பதன் உட்சுவர் முழுமைக்கும் பரவிக்கிடக்கின்றது ஒரு விரக்தி.கவிதையின் இறுதி வரிகளான ,

பழகிப் போன பாதையில்
விரும்பிப் போக முடியாமல்
திரும்பிப் போக தெரியாமல்
வெரித்து, மரித்து, எரித்து, சிரித்து
தரித்து கிடக்கும் விரக்தி !

என்பதில் முழுமூச்சோடு தன்னை நிறுத்திக் கொண்டிருக்கும் விரக்தியின் விரல் பிடித்து மேலேறுகையில் , மேலிருந்து இறங்கு முகமாய் தலை கவிழ்த்துகொண்டிருக்கின்றது கவிதை.அதுவே விரக்தியின் வெற்றியும் ...
ஒன்றுமேயல்லாததிலிருந்துஅள்ளி இறைக்கப்படுவதும் ஒன்றுமேயல்லதாது என்று முறுவலிக்கின்றது கவிதையின் தொடக்கவரிகள் . சுயநலச் செடிகள் ஈரமுள்ள இடங்களில் வேரூன்றத் துடிப்பது சரி ..என்றால் வறட்சியினை விசாலமாக்கிகொண்ட பாறையில் வேரூன்றிக்கிடப்பதில் , அந்தச் சுயநலத்தின் பொருளே அர்த்தமற்றதாகும் என்கிறார் கவிஞர் ..
முட்கள் பாடுகின்ற தோழமைக் கீதம் ..அதிலும் விடமேறிய முட்கள்...இது எப்படி இருக்கும் ? கவனத்தில் கொள்ளப்படுகின்ற அச்சுறுத்தலாக இருப்பினும் , வரிகளின் பின்னோட்டம் ஒரு வெறுப்பை வசதியாய்ச் சுமந்துகொண்டிருக்கின்றதில் விடமூட்டக்கூடியதே எளிதில் என்பதற்கு இலக்கணமாய் இருக்கும் ..மலட்டு விதைகளுக்கு விருட்சங்களே அல்லாத போது கிளைகளும் பயனற்றதே என்கிறது கவிதையின் கீழ்க்கண்ட வரிகள் ,

ஈரலிப்பு நிலத்தில்
மலட்டு விதைகளுடன்
கிளை பரப்பி நிற்கும்
வார்த்தை விருட்சங்கள்
வாழ்த்து துதிகளாய் !

பலதரப்பட்ட விஷமங்களினின்றும் விடுவித்துக்கொள்ள நினைக்கும் ஒருவகை விரக்தியானது , யாரை மேதாவியெனக் கண்டதோ அவனே பாவியென்றும் வெறித்துப்பார்க்கின்ற சூழலுக்குள் தன்னை இறுக்கிக்கொண்டுள்ளதாக கவிதையின் பொருளை நிலைப்படுத்திப்போகின்றது , சரிகளின் வாதங்களை முன்னிறுத்திப் பிதற்றும் சமிஞ்ஞைகள் .....

கவிதையின் சாலையெங்கும் கவிஞரின் ரௌத்திர தரிசனங்கள் ...கண்டும் காணாமலும் பயணிக்கும் மனச் சலனங்கள் .....

ஒரு வெறுப்பை நகமாக்கி வளர்த்துக்கொண்டிருப்பதின் விரல் பிடித்த , போலிப் புகழ்ச்சிகளின் எதிர்ப்பிலமைந்த வீதியிலான பயணம் பற்றிய கவியாக்கம் "என்னமோ ஏதோ "....

எழுதியவர் : புலமி (22-Apr-14, 2:59 pm)
பார்வை : 91

மேலே