அகன் அவர்கள் தேர்ந்தெடுத்த -சிறப்புக் கவிதை 3 -சிறுங்கை - சேதுபதி -விமர்சனம்

"நான்..... நீ..... அவுங்க.... இவுங்க.... இப்படி எல்லாருமா சேர்ந்து என்னென்னமோ பண்ணி எப்படியோ இருந்த பூமிய இப்படி ஆக்கிட்டோம்........."

"இது தீரா கோபம்....... தீரா சாபம் போல......"

"மழையை பிழையாக்கிய கணினி மனிதர்கள்தானே நாம்....."

கவிஞரின் பார்வையில் கண்ணீர் வருகிறதோ என்னவோ.....அவர் பார்வை பட்ட வார்த்தைகளில் குருதி வழிகிறது........ என் விழியெங்கும் குத்திக் கிழிக்கும் நிஜங்களில், மூளை செத்துவிட்டால் என்ன என்று தோன்றுகிறது..........

மழையைக் கொன்றது யார்?.....உழவனைக் கொன்றது யார்? ...... வேளாண்மையைக் கொன்றது யார் ?

கவிஞர் கையில் செருப்போ, சாட்டையோ......?

(அடி வாங்கிக் கொள்ளும் முதல் ஆள் நானாகத்தான் இருக்க வேண்டும்..... இது என் பூமி..... என் பூமிக்கு இதுவரை நான் என்ன செய்தேன்......?மரணத்தை தவிர நான் என்ன கொடுத்து விட்டேன்....!)

"பூமியை மலடாக்கி.... வானத்தை புகையாக்கி.......உழவனைத் தற்கொலை செய்யத் தூண்டி,சாலையெங்கும் வாகனம் விதைத்து.... மாலையில் சூரியனைக்கூட கொன்று எறியும் பரிணாமத்தில், தேமேவென..... கண் கட்டி கதை பேசி.... குடித்து, கும்மாளமிட்டு, தூக்கம் வராமல் மருத்துவர் தேடும்.. வினோத பேயின் கை வசத்தில் இந்த மானிடப் பிறவி எனக்கு...." என்று சொல்லியே கொல்லுகிறார் கவிஞர்.....

நமக்கு புத்தாண்டு என்பதே "ஹாப்பி நியூ இயர் தானே....!???????"

அடையாளங்களைத் தொலைப்பதில் தமிழனை யார் முந்தி விட முடியும்.....? உலக மனிதன் கல் கொண்டு வேட்டையாடித் திரிகையில் அதே கல் கொண்டு சிலை வடிக்க தெரிந்த என் பாட்டனை காணாமல் செய்யும் வரலாற்றைத்தானே....நம் பள்ளியில் படித்தோம்.. படிக்க சொல்கிறோம்....விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை என்பது விசை......இன்று விதைகளையும் உறங்க வைக்கும் திசைதானே நமக்கு வழி காட்டுகிறது......

உலக மயமாக்கலில் எந்த சுப்பனுக்கும், எந்த குப்பனுக்கும் வயிறு நிறைந்தது.....? வல்லரசாவதில் எந்த காறைப் பல்காரன் சிரிப்பான்?

இருக்கின்ற வயல்களையெல்லாம், வீடு கட்டி விட்டு, செங்கல்லையும் மணலையும் தின்று செரிக்கும் வயிறு வேண்டும் என்று எந்த கடவுளிடம் கேட்பது?

பொங்கலைப் பானை வைத்துக் கொண்டாடுவது போய்.... தொலைக்காட்சிப் பெட்டிக்குள், கண்கள் வைத்து வைத்துக் கொண்டாடும் நாகரீக வளர்ச்சிக்குள், காலைப் பிடித்து இழுத்து விடும் நண்டுகளாய் மனமாற்றம் ஆகி விட்டதில் ஆங்கிலத்தில் வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்ளலாம்....

நாலாம் தலைமுறையும் தெரியவில்லை..... நாம்தான் தலை முறை என்றும் தெரியவில்லை....ஓசோன் மண்டல ஒளிபரப்பும் தெரியவில்லை.. ஒரு செல் அமீபாவின் உரு மாற்றமும் தெரியவில்லை...... தெரிந்ததெல்லாம்.... ஹாய்யும் ஹல்லோவும் தான்.

"யார் புள்ளைய யார் கட்றது" என்று கத்திக் கூச்சலிட்டு பின் திட்டமிட்டு, திருட்டுத்தனமாய், கெளரவம் என்று புத்தி பேதலித்து, கொலைகளை செய்ய கத்துக் கொண்ட இனத்தை என்ன செய்வது......? கொலை செய்வதை தவிர.

மட்டைப் பந்து பார்த்துக் கொண்டு, எவன் செத்தால் எவனுக்கென்ன? என்று தொலைக் காட்சியும், கோணலாய் இருந்தாலும், என்னுதாக்கும் என்று கோண முறுக்கை தின்று கொண்டே, வயிறு முட்ட பூச்சிக் கொல்லி மருந்தை அடித்துக் கொண்டு, குறட்டை விடும் ஒரு கூட்டத்தை எப்படி கடந்து விட?

துளி மழை இல்லாமல் போனதன் பின்னணியில் சத்தமில்லாமல் இயங்கி வரும் ஒரு ஏகாதிபத்தியத்தின் மண்டையோட்டு முகமூடி பல்லிழித்துக் கொண்டு இருப்பதை காணாமல் போவதுதானே.. நமது ஓட்டுரிமை.....

'தமிழ் தமிழ்' என்று சொல்லிக் கொள்ளலாம்.. இன்னமும் கையெழுத்தை அந்நிய மொழியில் தானே போட்டுக் கொண்டிருக்கிறோம்.........நமக்கு எல்லாமே மாதிரி தான்...... நமக்கு அசலாக இருப்பதை விடவும் சுலபம் நகலாக இருப்பது தானே.....!

கத்திக் கிடந்த நாழிகையில், நாதியற்ற கோபத்தை..என்ன செய்தும் தீர்க்கமுடியவில்லை....எல்லாம் இழந்த பின்னும் விரல் கொண்ட தன்னம்பிக்கை போல, மிஞ்சிக் கிடக்கும் வாழ்வுதனை சூது கவ்வ விடாமல், சூத்திரம் புதியதாக படைக்க, அது கசந்திடினும், காலை வேண்டி நிற்கும் சூரியனில் ஒரு துளி இனிப்பாய் உராய்ந்து சென்று வீழ்ந்தாலும் மறுபடியும் எழும் பீனிக்ஸ் பறவை தேடும் கவிஞரின் விழிகளில் நிறைந்து நிழல் கொடுக்கிறது யாருமற்ற அனாதையாக்கப்பட்ட ஒரு வேப்ப மரம்....இங்கு வேப்ப மரம் என்பது..... விடுதலை வேண்டும் வியர்வைத் துளி ஒன்று....

கலைத்தவர், ஓய்வெடுத்து விட்டு யோசியுங்கள்.... யோசித்தவர்.... நெல் மணிக்கான தவத்தில் இறங்குங்கள்....

இங்கே தவங்கள் சுலபமல்ல......

வாழ்த்துக்கள் கவிஞரே........

கவிஜி

எழுதியவர் : கவிஜி (22-Apr-14, 5:33 pm)
பார்வை : 113

மேலே