சிறப்புக்கவிதை 8 - ஆன்மாவின் ஆத்திரம் -கவிஜி

நிமிர்ந்து பார்த்தால் வானம் அகன்றது தான் வாழ்க்கையைப் போலவும் எந்தச் சலனமும் இல்லாமல் நீண்டு கிடப்பதோடு , வேடிக்கை பார்ப்பதாகவும் . எனில் ஏதோ ஒன்றின் பார்வைக்கு கீழ் தான் எதுவும் , யாவும்....அதுவொரு சலனமற்ற காடு ...சற்று தொலைவில் சிதைந்த ஓய்வு இருக்கை. அதன் மேல் படிந்த வெறும் தூசிகளை விரட்டிக்கொண்டிருக்கும் காற்றுக்கு நெருக்கமாய் வந்தமரும் திரிசங்கு நிலையின் விவரமறிகையில் , விரைந்தோடிக் காடு கவ்விக் கொண்டதொரு தீ ....

கவிதையின் தளர்வில் , இரண்டிற்குமிடைப்பட்ட ஒரு இறுக்கம் ...பறக்க எத்தனிக்கும் பறவையொன்றின் கட்டப்பட்ட இரு சிறகுகளின் வலி ....எல்லை தாண்டும் அலைகளின் கூச்சல் பின்வாங்குதல் போலான ஏமாற்றச் சிதறல்கள் ...

நின்று போன
உயிரின்
கழுத்தறுத்து கதறும்
தீக்காட்டை
அணைக்கவே முடியாத
ஆத்திரம்.....

இந்த உயிர் எங்கே நிற்கிறது ?அதன் எல்லை எதுவரை ?இதோ மீண்டுமான தேடலுக்குள் நுழைகின்றது ஆத்திரமாய் , ஆன்மாவாய் ..பிறகெப்படி அணைக்க முடியாத தீக்காட்டை அணைப்பது ?! என்பதன் கேள்விக்குள் மீண்டுமாகக் குடிலிட்டுக் கொள்கின்றது ஒரு துணிச்சலாய் ..எரிவது ஆத்திரமாக மட்டுமே இருப்பதில் தீக்காட்டை அணைக்க முடியாமல் திணறுவது விழி கொண்ட தேகமாகவே இருக்க முடியும் ....

"கூடு கலைக்கும் குயில் "

மனமெல்லாமும் சிறைப்படுத்திக்கொண்ட ஒரு குயிலின் குடியிருப்பு கூடாகவும் , அது கூடு கலைக்கையில் , மரம் சுமக்கும் வெறுமையைச் சுமந்து நிற்பதாக மௌனம் சுமந்து துடிக்கின்ற மனவெளி ஓட்டங்களின் சுழற்சியில் நிதானிக்கின்றது கவிதையின் உணர்வோட்டம்....

உயிர்நீத்தல் என்றில்லாமல் உயிரோடிருத்தலும் இறப்பே என்பதன் வலி கேள்வியாகத்தான் சிதைமூட்டும் . அக்கணம் ,

எரிந்தே சாகிறேன்
என்று எரிந்தே செத்தேன்...

என்கிறார் கவிஞர் கவிஜி ....

மனதோடு போராடும் மாயைகளும் மயக்கங்களும் , உணர்வுகளின் கொப்பளங்களாய்ச் சீழ்பிடித்துச் சிதைகின்ற சித்திரவதைகளின் பிடிக்குள் மரணங்களை எப்போதும் எங்கேனும் சந்தித்துக்கொண்டே இருப்பது உளவியல் கூ(ற்)று ..

உணர்வுகளின் மீட்சிகளை நறுக்கத் துடிக்கின்ற ஆத்திரம் ...காற்றோடு மோதும் காற்றைப் போலானது இந்த ஆன்மாவின் ஆத்திரம்...விழுந்தபின் எழுகின்ற பேச்சுக்கு இடமின்றி மீண்டும் ஒரு மோதலுக்குக் காத்திருக்கும் மானுட வேட்கையின் பரிதாபம் ..காணாமல் போன காட்டுக்குள் வழி மறந்தும் போகும் விழி சிவந்தும் போகும்....

ஏற்கனவே இறந்தேன்
என்று
எவர் சொல்லியும்
கேட்காத நான்
இறக்கத்தான் வேண்டுமா ?

இறந்தவனை மீட்கும் போராட்டத்தில், இறந்திருப்பது தானே என்பதை உணர விரும்பாத சடலத்தின் உணர்வற்ற நிலைக்குள் கவிஞர் தம்மை நிலைப்படுத்தியிருப்பதன் மூலம் இறப்பின் பொருள் உணர்த்திப் போகின்றார் .....

தனக்கென்ற வட்டமிடுதலில் விரல் அகற்றும் விருப்பம் , பரவுகின்ற தீயாய் சாம்பல் மிஞ்சவிருக்கும் காடு முழுதும் பற்றியெரிகின்ற நினைவுகளின் கண்ணோட்டம் .....

தொலைவதன் நிழலில் இளைப்பாறுகின்றது இந்த "ஆன்மாவின் ஆத்திரம் "

எழுதியவர் : புலமி (23-Apr-14, 1:14 am)
பார்வை : 83

சிறந்த கட்டுரைகள்

மேலே