சிறப்புக் கவிதை தேர்வு - வா தோழா- கவிஞர் கேஎஸ்கலை-

சிறப்புக் கவிதை- வா..தோழா..- கவிஞர் கே.எஸ்.கலை.
------------------------------
பாடல் வடிவிலும்,ஒப்பித்தல் வடிவிலும் கவிதைகள் எப்போதும் மனிதனுக்கு மிகநெருக்கமாகவே இருந்து வந்திருக்கின்றன.இன்பம்,துன்பம்,ஆச்சரியம்,அதிசயம்,நீதி என வாழ்வின் சகலகூறுகளையும் அவை வெளிப்படுத்தும் தன்மை பெற்றதாயிருக்கின்றன. அதனை வெளிப்படுத்தும் விதத்தில் காட்டப்படும் நிபுணத்துவத்தைப் பொறுத்து,கவிதை செய்தல் என்பதும் ஒரு கலையாக இன்று மாறி நிற்கிறது. அதனால்தான், “கவிதை எனது கைக்கருவி..” என்கிறார் கவிஞர் இன்குலாப்.

கைக் கருவியாய் இருக்கும் கவிதையை,பயன்படுத்தும் உத்திகளாலும்,வெளிப்பாடுகளாலும் அதனை ஒரு சிறப்பான இடத்திற்கு கொண்டு செல்லமுடியும் என்றே,பல கவிஞர்கள் நிரூபித்து வருகிறார்கள்.

அந்த வகையில்“வா தோழா” எனும் தலைப்பில் கவிஞர் கே.எஸ்.கலை எழுதியுள்ள கவிதை,அவரின் மற்ற கவிதைகளைப் போலவே சிறப்பான ஒன்று.

கவிதைகளை நாம் எழுதும்போது,வார்த்தைக் கொக்கிகளில் சிக்கிக் கொண்டு,மிரள,மிரள விழிப்பதுண்டு.இறுதியில் எதனை வலியுறுத்துவதற்காக எழுதத் துவங்கினோமோ,அது மறைந்துபோய் “வெறும் வார்த்தைகள்” மட்டுமே கவிதையாக.?. தேங்கிவிடுவதும் உண்டு.

ஆனால்,கவிஞர் கலை, எப்போதும் அந்த சிக்கலில் மாட்டுவதில்லை என்பது என்னை,ஆச்சரியத்திற்குள்ளாக்கும் விஷயமாகவே இருக்கிறது.

அமைப்பு,பொருள்,சந்தம்,தேர்ந்த சொற்கள் என கவிதையின் அத்தனை பகுதிகளையும் நிறைவாக்கி நிற்பதாலேயே,அவரின் கவிதை எப்போதும் கவிதை ரசிகர்களின் அதிகமான வரவேற்பைப் பெறுகிறது.அந்த வகையிலேயே இந்தக் கவிதையும் முகம் காட்டுகிறது.

பொதுவாக ஒரு படைப்பு என்பதை வாசித்து முடித்தவுடன்,அது வாசகனின் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தின் அளவைப் பொறுத்து நமக்கு நெருக்கமாகிறது.

இந்தக் கவிதையைப் பொறுத்தவரை..பெண்ணியம் பேண்”, தாயே கடவுள்”, இயற்கை மருந்து” என, நீதிகளாகச் சொல்லப்பட்ட சில விஷயங்கள் நமக்கு பழக்கப்பட்டதாக இருந்தாலும்,சொல்லும் உத்தியில் வித்தியாசம் காட்டுகிறது.

“அயலானை மதி..”யெனச் சொல்லும்போதே,நாம் மதிப்பது அயலானுக்கு வெறும் நாடகமாய் தெரிந்தால் என்ன செய்வது.? நாம் மதிப்பதை அவருக்கு எப்படி உணர்த்துவது..? அதற்காகவே
“அன்பால் அணை..”க்கச் சொல்கிறார் கவிஞர்.

நமது அன்பு உண்மையாயிருக்கும்போது,வந்தவர் தர்மத்திற்கெதிராய் செயல்பட்டால்.., அதர்மத்தை மிதி..என வழிகாட்டிப்போகும் கவிஞர், அதற்கு “துணிவே துணை..” என தைரியமும் ஊட்டுகிறார்.

கவிதை தொடங்குகின்ற, நான்கு வரிகள் கொண்ட முதல்பத்தியே,அடுத்தடுத்த வரிகளுக்கும் தொடர்புள்ளதாய் அமைகிறது. கவிதை நெடுகிலும் இத் தொடர்பென்பது நீடிக்கிறது.

பொய் பேசு.. என்று வாசித்தபோது என்னடா இது..,ஒரு கவிஞன் வாசகனுக்கு இதையா சொல்லித் தருவான்.? என்று நினைக்கின்றபோதே.., இடம் பார்த்து.. என்று அந்த வரியை முடிக்கிறார்.

ஏன் இடம் பார்த்து பொய் பேசவேண்டும்..?” நன்மை பயக்கின்ற இடத்தில் பொய் பேசுவதால் தப்பில்லை என்பது நமது மூதாதையன் வள்ளுவன் காட்டிய,அவனால் ஒத்துக் கொள்ளப்பட்ட வழியல்லவா..? இதனையே தனது வரிகளால்,அவருக்கேயான புதிய உத்தியால் சொல்லிப் போகிறார் கவிஞர்.கூடவே..நன்மை பயக்கும் இடம் பார்த்து பொய் சொன்னாய் சரி..இனி பொய் சொன்ன இடத்திலிருந்து,நிலையிலிருந்து திரும்பி வா..அதுவும் பொய் சொன்ன நிலையிலேயே திரும்பி வா..என்று சொல்லாமல், “மெய் காத்து..” அதாவது திரும்பி வா மெய்க் காத்து..என்கிறார்.

மெய்யை தனது மெய்யாகக் கொண்ட ஒருவன்,தான் சென்ற இடத்தில் பிறர் நன்மைக்காக பொய்யைச் சொல்லிவிட்டு, மீண்டும் தனது இயல்பான குணமாகக் கொண்டிருக்கும் மெய்யுடன் திரும்பி வரவேண்டும்..என்று சொல்லும் ஒரு சொற் சித்திரம்,காட்சியாக மனதுக்குள் பரவி நிற்கிறது.இதனை இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் விரித்துச் சொல்லிக் கொண்டே போகலாம்..! அதற்கு இடம் கொடுப்பதே இக்கவிதையின் சிறப்பாக இருக்கிறது.

இதேபோல்தான் “தீண்டாமை பேணு..”,“மரம் வெட்டு..” போன்ற வரிகளின் துவக்கம்,வாசிப்பவனை ஒரு அதிர்ச்சிக்குள்ளாக்கி,அதன் காரணத்தை விளக்கும்போது இன்பத்திற்குள் தள்ளுகின்ற வித்தையைச் செய்து போகிறது.

கவிதையின் இதுபோன்ற போக்கு,வாசகனுக்கு நிச்சயம் ஒரு மாறுபட்ட அனுபவத்தைத் தருகிறது என்பதை மறுக்க முடியாது.

பொதுவாக கவிதை எழுதும் கலையை,சிறப்பாகக் கையாளும் மிகச்சில கவிஞர்களுள்,கவிஞர் கலையும் ஒருவர் என்பதை நிறுவிச் செல்வதைக் காணமுடிகிறது.

அன்புடன்
பொள்ளாச்சி அபி

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (24-Apr-14, 6:24 pm)
பார்வை : 255

மேலே