அம்மா

காலை 5 மணிக்கு எழுந்தும் குளித்து,காலை சமையல்,மதிய சமையல் முடித்து,கணவரை எழுப்பி அவருக்கு 'காபி' கொடுத்து,குளிக்க வெந்ர் வைத்துக் கொடுத்து,குழந்தையை எழுப்பி அவனை குளிக்க வைத்து,சாப்பாடு ஊட்டி விட்டு,பள்ளி சீருடை மாட்டி,கணவருக்கு உணவு பரிமாறி,மூவருக்கும் மதிய உணவு எடுத்து வைப்பதர்க்குள் மணி 8.30 தாண்டிவிட்டது.

அலுவலக வேலையால் சோர்ந்திருந்த கணவரின் அலுப்பையும்,கோபத்தையும் வெளிக்காட்ட ஏதுவாய் அவரின் அலுவலக கோப்பு காணாமல் போக ஒட்டு மொத்த கோபத்தயும் ஆத்திரத்தயும் என் மேல் கொட்டித் தீர்த்து விட்டுச் சென்றார். பொங்கி வந்த அலுகையை அடக்கியது அந்த தொலைபேசி சத்தம். குழந்தையின் பள்ளியிலிருந்து வந்திருந்தது அந்த அழைப்பு. பள்ளி வாகனம் இன்று வராது என்பது தகவல். தலையே சுற்றிக் கொண்டு வந்தது. குழந்தையை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் பள்ளிக்கு சென்றேன். அங்கிருந்தே நேராக என் அலுவலகத்திற்குச் சென்றேன்.

எத்தனை வேகமாகச் சென்றும் பலனில்லை. அறை மணி நேரம் தாமதமாகி இருந்தது. என் வருகைக்காய் காத்திருந்தார் மேல் அதிகாரி. எனது எந்த விளக்கத்தயும் கேட்க அவர் தயாராக இல்லை. இந்த மாதத்தில் இது மூன்றாவது வருகைத் தாமதம். சம்பளப் பிடிப்புடன் கூடிய விடுப்புக் கடிதத்தில் கையெழுத்து வாங்கப் பட்டது. மனச் சோர்வுடன் அங்கிருந்து வெளியேறினேன். தலை வலியும் மன அழுத்தமும் அதிகமாக தெரிந்தது.காலாற நடக்கத் தொடங்கினேன்.

திடீரென அம்மாவின் நினைவு வந்தது. பள்ளியில் படிக்கும் காலம் முழுவதும் என் எல்லா வேலைகளையும் அம்மா தான் செய்வாள். தலை துவட்டி,தலை வாறி,உணவு பரிமாறி,தினமும் வாசல் வரை வந்து கையசைத்து வழியனுப்புவாள்.அவற்றை எல்லாம் நான் ஒரு நாள் கூட பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. அவை எல்லாம் ஒரு அம்மாவின் கடமைகள் என பல முறை வாதாடியதும் உண்டு.

இன்னும் அந்த நாள் என் நினைவில் இருக்கிறது.என் 16வது பிறந்த நாள். எனக்குப் பிடித்தமான உணவுகளை செய்திருந்த அவர்,என் நெற்றியில் முத்தமிட்டு என்னை வாழ்த்துவதற்காய் எழுப்பினாள். உயிர் தோழியின் வாழ்த்துக்காய் காத்திருந்த நான்,உறக்கத்திலிருந்து எழுந்தும் உறங்குவது போலவே படுத்திருந்தேன். நெடு நேரம் காத்திருந்த அம்மா பின் என்ன நினைத்தாளோ, பிறந்த நாள் பரிசை மேசையில் வைத்து விட்டு சென்று விட்டாள். என் பிறந்த நாளை மறந்திருந்த தோழியோ அன்று முழுவதும் வாழ்த்தாமல் போகவே இரவு அம்மா மடியில் படுத்து அழுதேன்.என்னை பக்குவமாய் சமாதானப் படுத்தினாள் அம்மா.


உள்ளூர் பள்ளிப் படிப்பு முடிந்து நான் மதுரையில் கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்க நேர்ந்த போது ஒரு நாள் கூட தவறாமல் தொலைபேசியில் அழைப்பாள். நான் அதனை அவமதித்த நாட்களும் உண்டு. அம்மாவுக்கு மிகவும் பிடித்த மதுரை மல்லிகை வாங்கி வரும் படி பல முறை சொல்லியும் அந்த மூன்று வருடத்தில் நான் ஒரு முறை கூட வாங்கிச் சென்றதில்லை. அதற்காக அவள் என்னை கடிந்து கொண்டதும் இல்லை.


அகாலமாய் அப்பா மாரடைப்பில் இறந்து விட உடைந்து போனாள் அம்மா. பின்னர் அப்பாவின் பொறுப்பையும் அம்மாவே செய்ய வேண்டி இருந்தது. தைரியமும், தன்னம்பிக்கையும் ஊட்டி வளர்த்து எனக்கு திருமணமும் செய்து வைத்தார். இத்தனை செய்த அம்மாவுக்கு இது வரை என்ன செய்திருக்கிறோம் என மனம் வெட்கிக் கூசியது. அவள் பிறந்த நாள் கூட எனக்குத் தெரியாதே.

இன்று அம்மாவுக்குப் பிடித்தமான மல்லிகை பூ வாங்கிச் செல்ல வேண்டும் என்று உறுதி செய்து கொண்டு கடைக்குச் சென்றேன். ஓரு முழம் மல்லிப் பூவுடன்,அம்மாவுக்குப் பிடித்த ஒன்றை முதல் முறையாக செய்யும் சந்தோசத்துடனும் வீட்டிற்குச் சென்றேன். கையில் இருந்த மல்லிகை பூவை சுவரில் மாட்டியிருந்த அம்மாவின் படத்துக்கு சூட்டி விட்டுத் திரும்பினேன்.

எழுதியவர் : Shinara (2-May-14, 7:19 pm)
Tanglish : amma
பார்வை : 653

மேலே