மருத்துவ நேரிசை வெண்பா பாடல்கள் 29, 30 – உடும்பு இறைச்சி

பழமொழி நானூறில் வரும் கீழேயுள்ள நேரிசை வெண்பாவை வாசித்த பொழுது உடும்பு இறைச்சியைப் பற்றிய நேரிசை வெண்பாவை வாசித்தேன். அது எத்தகையது என்பதை ,

'பார்ப்பாரும் தின்பர் உடும்பு' என்ற பழமொழியிலிருந்து அறியலாம்.

கள்ளி யகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்
எள்ளற்க யார்வாயின் நல்லுரையைத் - தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலைநாட! நாய்கொண்டால்
பார்ப்பாரும் தின்பர் உடும்பு. 87

இப்பாடலுக்கு விளக்கம் பின்னால் தருகிறேன். உடும்பைப் பிடிப்பது மிகவும் சிரமம். அதை எப்படி வேட்டையாடிப் பிடிக்கிறார்கள் என்பதை சு.வெங்கடேசன் எழுதிய 'காவல் கோட்டம்' புத்தகத்தில் வாசித்தேன்.

இப்பொழுது உடும்பிறைச்சி பற்றிய இரண்டு வெண்பாக்கள் கீழே:

வெண்பா 1

சொலும்வாதபித்தமொடு தொல்வறட்சி யும்போம்
பலமிலாத் துர்ப்பலர்க்கும் பாரில் – பலம்வந்
திடுந்துவர்ப்பி நிப்பும் இயற்கையிலே யுள்ள
உடும்பின் இறைச்சிதனை உண். 1

குணம்:

இயற்கையிலேயே துவர்ப்பும் இனிப்பும் உள்ள உடும்பு இறைச்சியினால் வாதபித்தம், சருமச்சூடு வறட்சியும் நீங்கும். நோயினால் பலமில்லாத துர்பாக்கியமான பலர்க்கும் பலம் வந்திடும்.

வெண்பா 2

கிட்டு முடும்பிறைச்சி கேள்விநோய் மூலமுளை
வெட்டைசிர நோய்சோபை மேகம்புண் – குட்டகய
சீதமிரத் தக்கடுப்புத் தீராக் குடல்வாதம்
பேதியிவை போக்குமெனப் பேசு. 2

குணம்:

உடும்பிறைச்சி, உண்பவர்க்கு காதுநோய், மூலமுளை, வெட்டை, தலைநோய், சோகை, பிரமேகம், புண், குஷ்டம், சயரோகம், சீதமும் ரத்தமுமான பேதி, தீராத குடல் வாதம், பேதி போன்ற நோய்களைப் போக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-May-14, 5:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 328

மேலே