சிறப்புக் கவிதை 35 விமர்சனம் - நான் எழுதாத கவிதை ரமேஷாலம்

ரமேஷாலம் ... தளத்தில் பரவலாக அறியப்பட்ட ஒரு படைப்பாளி.. இந்தப் போதிமரம் பழுத்துக் கனிந்து தெறித்து விட்டிருந்த போதும்.. இன்னும் நான் பூக்கவே இல்லையென எப்பொழுதும் தென்றல் தருவித்துக் கொண்டிருக்கும்.... இந்தக் கவிதையே நான் மேலெழுதிய வரிகளுக்கு சான்று. இது கவிதையல்ல... ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு தலைப்பு. இந்தக் கங்கையில் தீர்த்தமெடுத்து எங்கும் தெளிக்கலாம்... சத்தமில்லாமல் சமூகம் கழுவுதற்கு இங்கு பாத்திரங்களும் செய்முறைகளும் நிரம்பி இருக்கிறது...

இக்கவிதையின் மூலம் இலக்கும் வில்லும் கொடுத்து விட்டு அம்பெய்தப் பணித்திருக்கிறார் இந்தத் துரோணாச்சாரி.. கவிதை முடிந்திருப்பதை பாருங்களேன்..
"இப்படி...
உன்னையும்...என்னையும் சொல்ல
எவ்வளவோ இருந்தும்....

உன் கண்களைப் பார்த்து....
நிலவு என்றும்...
மீன் என்றும்தான்...
இன்னமும் எழுதிக் கொண்டிருக்கிறேன்...

காதலை மட்டுமே கடை விரிக்கும்...
என் கவிதையால்..."
நாரத முனி அமர்ந்திருப்பதை போலவே இல்லை..? இந்தக் கவிதைக் கலகங்கள் எல்லாம் நன்மையில் மட்டுமே முடியும். என்னைக் கேட்டிருந்தால் இந்தப் படைப்பிற்கு "தலைப்புகளிலான கவிதை" என்று பெயரிட்டிருப்பேன்.. ஒவ்வொரு வரியிலும் உயிர் இருக்கிறது... கரு இருக்கிறது..

எழுதத் துடிக்கும் பலபேர் இங்கு வந்து பாருங்கள்.. இது உங்களுக்கான களம்.. நீங்களே உங்களுக்கு ஆசான். ஆயுதங்கள் மட்டும் பரப்பி வைத்திருக்கிறார் கவிஞர்... எப்படி வேண்டுமானாலும் கையாளுங்கள். முடிவென்பது மனிதத்திற்கு நலம் தருவிப்பதாக இருக்கட்டும்.

இக்கவிதையின் ஒவ்வொரு வரியும் க "விதை".
விருட்சங்கள் வேர்விடும்..

எழுதியவர் : சரவணா (16-May-14, 9:24 am)
பார்வை : 105

சிறந்த கட்டுரைகள்

மேலே