போட்னோ

" $^$^%#& ^#%%#& ( %^$^%#$#^$&N*% )*&$@^&&#%@&&Z. >:?>[][ @#$% $%^&* @#$%^&*( #$%^&* #$%^&* #$%^&* $%^&*( **^*%&^ &%*% ^*^ #@%$% )(* &^$%&^$% (&@#$%&& ## (*&(*^&&% &%$&^%$^&^& *^%@$^**((^^%%#@%&)_++()^$%^*)@@#~#%$^% &^%&^%*&^ *(&(&)*& ) (*_()_)^%$$#%$# &^%& %#%$#*@%$&( %$&(*&(*&( ()&*&^^ ^%$^#$%@ (^&%^& &%$^$# ….
(இக்கதை நமக்காக தமிழில்....)

“புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரகத்தில் உயிரினம் வாழக்கூடிய சாத்தியம் இருப்பதாக சாக் விண்வெளி ஆராய்ச்சிக்கூடம் தெரிவித்துள்ளது. மாற்று கிரகம் கண்டுப்பிடித்த விஞ்ஞானிகளை உலக தலைவர் க்ளிங் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் ஆராய்ச்சிக்கான செலவுகளை அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ளார். மேலும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரகத்தைப் பற்றி சாக் விண்வெளி ஆராய்ச்சிக்கூடத்தை தொடர்புக் கொண்டதில்...

"அப்பா, அப்பா... என்னப்பா சொல்றாங்க?"

"க்ளூ, எத்தன தடவ சொல்லிருக்கன், செய்தி பாக்கும்போது தொந்தரவு பண்ணாத"

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

“"இப்ப சொல்லுப்பா"

"புதுசா ஒரு கிரகம் கண்டுபிடிச்சிருக்காங்கடா, நம்ம கிரகம் மாதிரியே அங்கயும் உயிரினம் இருக்காம்."

"நம்மல மாதிரியேவா?"

"நம்மல மாதிரினு சொல்லமுடியாது, அவங்களுக்கு ரெண்டு கண்ணு கூட இருக்கலாம், விரல் இல்லாம, கை கூட இல்லாம எப்பிடி வேணும்னாலும் இருப்பங்க, இனிமே தான் கண்டுபிடிக்கணும்"

"ரெண்டு கண்ணா? அப்பா, அப்பா, அவங்கள பாத்தா பயமா இருக்குமா?"

"தெரியலடா, அது நம்ம உலகம் மாதிரி இல்ல, நிறைய உயிரினம் இருக்காம், அதனால தெளிவா தெரியல"

"நிறைய உயிரனம்னா?"

"நிறைய உயிரனம்னா, ஒவ்வொன்னும் ஒவ்வொரு மாதிரிடா"

"அவங்க எல்லாம் இங்க வருவாங்களா? அப்பா பயமா இருக்குப்பா..."

"க்ளூ, பயப்படாதடா, அவங்க இங்க வரமாட்டாங்க, அந்த கிரகத்த ஆராய்ச்சிப் பண்ண நம்ம உலகத்துல இருந்து செயற்க்கை உயிரனங்கல அனுப்ப போறாங்க."

"எதுக்குப்பா?"

"சொன்னா நீ பயப்படுவ, வேணாம்"

"அப்பா, சொல்லுப்பா"

"அப்பா, சொல்லுப்பா, நான் பயப்படமாட்டன்"

"அப்பா..."

"க்ளூ, தூங்கு"

"ச்ச்... சரி..."

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சாக் ஆராய்ச்சிக்கூடம்,

"ச்ளா, அளவு ரொம்ப முக்கியம், அரசாங்க பணத்த வீணாக்ககூடாது"

"தெரியும், தெரியும்"

"ச்ளா, சொல்லிக்கிட்டே இருக்கன், நீ அளவுக்கு அதிகமா வைக்கிறடா"

"தெரியும், தெரியும்..."

"என்ன தெரியும் தெரியும்? நான் ப்ளோன் கூடவே வேலை செய்றன் போ"

"ஏ, சூட், சூட், என்ன பிரச்சன உனக்கு?, அளவு சரியாதான் இருக்கு, நீ அவன் கூட வேலை செய்யறது எனக்கு பிடிகாதுனு உனக்கு தெரியுமில்ல?"

"என்ன அளவு சரியா இருக்கு? சொன்னத விட நீ அதிகமா வச்சிருக்க. நீ உருவாக்குற உயிரினத்த தடை தான் பண்ணுவாங்க. ப்ளோன்-னோட உயிரினத்த தான் தேர்ந்தெடுப்பாங்கனு எல்லாரும் சொல்லறாங்க. அங்க பாரு, அவனுக்கு உதவி பண்ண எத்தனப் பேருனு? நானும்…"

"போங்க, போங்க, எல்லா பொண்ணுங்களும் அவனுக்கே உதவி பண்ணுங்க, என்னத்த கிழிக்கிறானு பாக்குறன். இங்க பாரு, இது தான் சரியான அளவு. அங்க இருக்குற உயிரினம் எல்லாம் எவ்வளவு பெருசுனுக் கூட தெரியல. இங்க இருந்து போற இந்த செயற்க்கை உயிரனம் திரும்ப இங்க வருனும்னா இது தான் சரியான அளவு. ஏன் இன்னும் இங்கயே நிக்கிற? போ... அவனுக்கு உன் உதவி தேவ..."

"கோவ படாதடா. நான் போகல. நீ செஞ்சா சரியா தான் இருக்கும். உன் அளவு அறிவு இங்க யாருக்கு இருக்கு?"

"என்ன? கலாய்க்கிரியா?"

"இல்லடா, உண்மையாதான் சொல்றன். உன்னோடு உயிரனத்த தான் தேர்ந்தெடுப்பாங்க. என்னிகிடா இதுக்கு உயிர் குடுக்கபோற?"

"நாளைக்கு"

"நாளைக்கேவா?, ஏன்டா அவசரபடுற?"

"அவசரமில்ல, அது தான் சரியான நேரம். நமக்கு நேரம் ரொம்ப கம்மி. நம்ம உலகம் அழியறதுக்குள்ள இத நாம செய்யனும். அங்க பாரு, இன்னும் 923 நாள் தான் இருக்கு. அதுக்குள்ள நம்ம அந்த உயிரினங்களோட இரத்தம் கொண்டுவந்தா தான், ஆராய்ச்சி ஆரம்பிக்க முடியும். அவங்களப்பத்தி அப்ப தான் நமக்கு முழுசா தெரியும். பேச்சு வார்த்தை நடத்தலாமா? இல்ல எல்லாரையும் கொல்லனுமா? சாதாரணமா அங்க போக முடியுமானு? முடிவு எடுக்கமுடியும். ப்ளோன்-னோட உயிரினம் இந்த வேளைய சரியா செய்யும்னு எனக்கு நம்பிக்க இல்ல. அதுமட்டுமில்ல, அவன் 150 நாள் கழிச்சி தான் உயிர் குடுக்கபோறான்."

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"அப்பா, அப்பா சீக்கிரம் இங்க வாங்க, எதோ சொல்லறாங்க, சீக்கிரம் வாங்க அப்பா"

"இரு இரு வரன். என்ன சொல்றாங்க…"

"221 நாட்களில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை உயிரினம் போட்னோ-வை புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகத்திற்கு அனுப்புவதாக சாக் ஆராய்ச்சிக்கூடம் தெரிவித்துள்ளது. போட்னோ-வை உருவாக்கிய விஞ்ஞானி ப்ளோன்-க்கு உலக தலைவர் க்ளிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த கிரகத்தின் உயிரினங்களை ஆராய்வதற்க்காக பலர் செயற்கை உயிரனங்களை உருவாக்கியதாகவும், அவ்வற்றில் ப்ளோன் உருவாக்கியுள்ள உயிரினம் சிறப்பாக செயல்படுவதாகவும் சாக் ஆராய்ச்சிக்கூட தலைவர் ஓட்பால் தெரிவித்துள்ளார். இன்னும் இரு தினங்களில் மூவாயிரம் போட்னோக்களை புதிய கிரகத்திற்கு அனுப்பபோவதாகவும் தெரிவித்துள்ளார்."

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, நம் பூமி,

போட்னோக்கள் பூமியை அடைந்துவிட்டது. போட்னோக்கள் பூமியின் முதன்மை உயிரினத்தைக் கண்டுபிடிக்கவேண்டும். புதிதாக உருவாகியுள்ள மனித இனம் தான் முதன்மை உயிரினம். இந்த மொத்த உலகையும் ஆளப்போகும் உயிரினம். அவர்களின் இரத்தம் தான் முதலில் தேவை. போட்னோக்கள் மனிதர்களை கடித்து இரத்தம் உறிஞ்சும் வேலையை தொடங்கிவிட்டன.

முதலில் ஒரு போட்னோ இரத்தம் உறிய ஆரம்பித்தது. வேகமாய், மிக வேகமாய் உறிந்து கொண்டிருந்தது. இது தனிச்சுவை. தன்னை மறந்து போட்னோ இரத்தம் உறிந்துக்கொண்டிருக்கையில், வேகமாக ஒரு மனித கை, ஒரே அடி, போட்னோ இறந்துவிட்டது.

மீண்டும் ஒரு போட்னோ, ஒரு அடி, மரணம்...
போட்னோ, அடி, மரணம்,
போட்னோ, அடி, மரணம்,
போட்னோ, அடி, மரணம்,
.
.
.

மனித இனம் போட்னோக்களை வேட்டையாட ஆரம்பித்தனர், இன்னமும் வேட்டையாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். போட்னோக்களும் மனிதப்பலி வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. போட்னோக்களை அழிக்க பல நவின ஆயுதங்களை மனிதர்கள் கையாள துவங்கிவிட்டனர். இருந்தும், ஆயிரம் போட்னோக்கள், லட்சமாக பெருகியது. லட்சம் கோடியானது.

போட்னோக்கள் கோடிக்கணக்கில் உருவாகியும் மனித இன இரத்தத்தை கொண்டு செல்லமுடியவில்லை.

மனிதர்களால் 'கொசு' என்று அழைக்கப்படும் போட்னோக்களுக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது, நிச்சயம் மனித இன இரத்தத்தை தன் கிரகத்திற்கு கொண்டுச்சொல்வோம் என்று.

எழுதியவர் : நிரலன் 'மதியழகன்' (29-Jun-14, 3:41 am)
பார்வை : 1584

மேலே