கண்ணாடி

அது ஒரு பிரபலமான ஹோட்டல். பல மாடிகள் கொண்ட கட்டடத்தில் உள்ளது. இந்த ஹோட்டலில் எல்லாம் சிறப்பாக இருந்ததால் வாடிக்கையாளர்கள் வருகையும் அதிகரித்தது. ஆனால் இந்த கட்டடத்தில் இருந்த லிப்ட் மெதுவாக இயங்கியது பலருக்கு பிடிக்கவில்லை. லிப்டுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததால் வெளியில் காத்திருந்தவர்கள் கோபம் அடைந்தனர். லிப்ட் மெதுவாக செல்வதாலும், மாடியின் ஒவ்வொரு புளோரிலும் பலர் இறங்கி, ஏறுவதால் ஏற்படும் தாமதத்தினாலும் பலர் எரிச்சல் அடைந்தனர். நல்ல ஹோட்டல் என்பதால் பலர் பொறுத்துக் கொண்டு வந்து சென்று கொண்டிருந்தனர்.

ஹோட்டலின் புகார் புத்தகத்தில் தினசரி இந்த குறை குறித்து அதிக வாடிக்கையாளர்களால் எழுதப்பட்டது. இந்த ஒரே குறை திரும்ப, திரும்ப எழுதப்பட்டதால் ஹோட்டல் நிர்வாகமும் சங்கடப்பட்டு, வாடிக்கையாளர்களின் குறைகளை எப்படி சரி செய்யலாம் என யோசித்தது. லிப்ட் வேகத்தை அதிகப்படுத்தலாம் என முயற்சித்தபோது அதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிந்தது. லிப்டை மாற்றுவதானால் அதற்கு பல லட்சம் செலவாகும். அதற்கு அப்போதிருந்த சூழ்நிலையில் வழியில்லை.

வாடிக்கையாளர் மத்தியில் ஹோட்டலுக்கு நல்ல பெயர் இருப்பதால் தான் சலிப்படைந்தாலும் பொறுத்துக் கொண்டு வந்து செல்கின்றனர். அப்படிப்பட்ட வாடிக்கையாளர்களின் குறையை போக்க என்ன செய்யலாம் என மண்டையை பிய்த்துக் கொண்ட ஹோட்டல் நிர்வாகம், பல முறை ஆலோசனை கூட்டம் நடத்தியும் அதற்கு எந்த பலனும் ஏற்படவில்லை.

முடிவில் ஹோட்டலின் சாதாரண ஊழியர் ஒருவர் தயங்கிக் கொண்டே தனக்கு தோன்றி யதை கூறினார். ‘லிப்டின் உள்ளேயும், வெளியேயும் முகம் பார்க்கும் கண்ணாடியை பொருத்தினால் இந்த பிரச்னையை தீர்க்க முடியும்’ என்று கூறி அதற்கு விளக்கமும் கொடுத்தார். அந்த ஊழியர் கூறியதை செயல்படுத்தி பார்க்க ஹோட்டல் நிர்வாகம் முடிவு செய்தது. என்ன ஆச்சரியம்... அதன் பிறகு ஹோட்டலின் புகார் புத்தகத்தில் அந்த குறை குறித்து எந்த வாடிக்கையாளரும் எழுதவில்லை.

ஊழியர் கூறியபடி லிப்டின் உள்ளேயும், வெளியேயும் முகம் பார்க்கும் பெரிய கண்ணாடிகள் பொருத்தப்பட்டதால், லிப்டின் உள்ளே இருந்தவர்கள் கண்ணாடியில் தங்கள் பிம்பத்தை பார்த்து ரசிக்கும் நேரத்தில் லிப்டின் தாமதத்தை மறந்தனர். வெளியே இருந்தவர்கள் காத்திருக்கும் நேரத்தில் வெளியில் இருந்த கண்ணாடியில் தங்கள் அழகை சரி செய்து கொள்வதில் கவனம் செலுத்தியதால் தாமதத்தை மறந்தனர்.

சரி செய்ய முடியும். ஆனால் செலவாகும் என ஹோட்டல் நிர்வாகம் தயங்கிய நிலையில், மாற்றி யோசித்த அந்த ஊழியரால் சிறிய செலவில் பிரச்னை முடிவுக்கு வந்ததால் வாடிக்கையாளர்களையும் திருப்திபடுத்த முடிந்தது. ஹோட்டல் நிர்வாகத்திற்கும் அதன் பிறகு வியாபாரம் அதிகரித்தது. எல்லா பிரச்னைகளுக்கும் ஒரு தீர்வு கண்டிப்பாக இருக்கும். அதற்கு கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும்.

எழுதியவர் : (23-Jul-14, 5:54 pm)
Tanglish : kannadi
பார்வை : 252

மேலே