ஒரு முடிவின் மன அவஸ்த்தைகள்

நாளை முடிவு .....எதோ ஒன்றின் முடிவு, நான் மிகவும் எதிர்பார்த்திருந்த முடிவு, என் வாழ்க்கையின் தற்போதைய விரும்பத்தகாத சூழலை ஒட்டுமொத்தமாக மாற்றபோகிற முடிவு, அது ஒரு தேர்வு முடிவாக இருக்கலாம், தேர்தல் முடிவாக இருக்கலாம், எனக்கு எய்ட்ஸ் இருக்கிறதா இல்லையா என்பதை முடிவு செய்கிற முடிவாக இருக்கலாம், என் காதல் விண்ணப்பத்திற்கு என் காதலி சொல்லும் சம்மத மற்றும் சம்மதமின்மை கொண்ட ஒரு முடிவாக இருக்கலாம், கேட்ட கடன் அல்லது கொடுத்த கடன் உரிய நேரத்தில் கிடைப்பது பற்றிய முடிவாக இருக்கலாம் .....இப்படியாக எந்த முடிவாகவும் அது இருக்கலாம்.

அந்த முடிவை நான் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். பொதுவாக, ஒரு முடிவு ஏற்படும் முன் அதுகுறித்த ஒரு யூக முடிவு அதாவது உத்தேச முடிவு ஒரு முன்னோட்டம் போல நம் மனத்திரையில் காண்பிக்கப்படுகிறது. முடிவுகள், முடிவுகளாக வெளியிடப்படுவதற்கு முன்னமே நமக்குத் தெரிந்துவிடுகின்றன. அந்த முடிவுக்கான சூழல், அது சம்பந்தப்பட்ட அதிர்வலைகளை நம் மீது செலுத்தி முன்கூட்டியே பூடகமாக முடிவை அறிவித்து விடுகிறது. ஆனாலும், என்னால் அந்த முடிவின் எதிர்மறைத் தன்மையை இப்போதே ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. கிரிக்கெட்டில் கடைசிப் பந்தில் சிக்சர் அடித்து வெற்றிக்கு வழிவகுக்கும் ஒரு கிரிகெட் ஆட்டக்காரனாக வாழ்க்கை எனக்கு வெற்றி தேடித்தராதா என்கிற கவர்ச்சி என்னை அந்த முடிவின் மீதான விரும்பத்தகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்திக்கொள்ளச் செய்கிறது.

சரி ........அந்த முடிவு நல்ல முடிவாக அமைந்தால் எனக்கு என்னவாகும் ? எனது தற்போதைய விரும்பத்தகாத சூழல் மாறும் . ஒரு புதிய விரும்பத்தகுந்த சூழல் கிடைக்கும் ! அவ்வளவுதான் ........
ஒருவேளை அந்த முடிவு எதிர்மறையாக அமைந்தால் என்ன ஆகும் ? இதே சலித்த விரும்பத்தகாத சூழலில்தான் இன்னும் கொஞ்ச காலம் உழல வேண்டும், அடுத்து, முன் செய்த முயற்சியை விட அதிக பிரயத்தனத்தோடு இன்னும் கடினமாக முயற்சி செய்யவேண்டும்.

ஆனால், ஒரு முயற்சியை நம் அதிகப்பட்ச பிரயத்தனத்தோடு செய்த பிறகு அது தோற்கிறது என்று தெரிந்து மீண்டும் அதைவிட அதிக முயற்சி செய்யவேண்டும் என நினைத்தாலே ஒரு அயர்ச்சி ஏற்படுகிறது. கஷ்டம்தான் ! இதில் ஒரு ஆறுதல் என்னவென்றால், அந்த முடிவு வெற்றிகரமாக அமைந்தால் என்னில் ஏற்படும் நடத்தை மாறுபாடுகள் எதையும் என்னிடம் பழகுவோரிடம் நான் முன்கூட்டியே வெளிப்படுத்தித் தொலைக்கவில்லை. எனக்கு என் முயற்சியின் மீது நம்பிக்கை இருப்பதை விட என் தலையெழுத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது.

எல்லாருக்கும் ஒரு கல் எய்தி ஒரு மாம்பழம் கிடைத்தால் எனக்கு மட்டும் பத்தாவது கல்லில்தான் மாம்பழம் கிடைக்கிறது. அதுவும் புளித்த மாம்பழம் ! இது ஒரு எழுதப்படாத விதியாகவே என் முப்பதுவருட வாழ்விலும் என்னை ஒரு விசுவாச எதிரியைப் போலப் பின் தொடர்ந்துவருகிறது. ஆகவே, நாளை கிடைக்கப்போகும் முடிவின் எதிர்மறைத்தன்மையை நான் கிட்டத்தட்ட எதிர்பார்த்தே வந்திருக்கிறேன்.

ஏதாவது ஒரு மாயம் மந்திரம் நிகழ்ந்து வெற்றி கிட்டுதல் என்பது என் வாழ்வில் அபூர்வமாகவே நிகழ்ந்திருக்கிறது. அந்த வெற்றி நிகழ்வுகளை நான் பட்டியல் போட்டால் இக்கட்டுரையோ, சிறுகதையோ, அல்லது ஏதாவது ஒன்றோ எனது டைரிக்குறிப்பு போல ஆகிவிடும். அத்தகைய டைரிக்குரிப்புகளை நான் ஏற்கனவே சுயபட்சாபத்தோடும், சுய பிரக்ஞையோடும், நிறைய எழுதிவிட்டபடியால், இது எனது டைரிக்குறிப்பு வடிவத்தைத் தவிர வேறு எந்தவொரு வடிவத்தையும் ஏற்பது குறித்து எனக்கு ஆட்சேபணையில்லை.

மதில் மேல் நிற்கும் பூனையாக வரப்போகும் அந்த முடிவை எதிர்பார்க்கவில்லை எனினும், மதிலின் விரும்பத்தகாத ஒரு எதிர்மறைப் பக்கச் சுவற்றைப் பிடித்து தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு பூனையாக நான் அந்த முடிவை எதிர்பார்த்துத் தொலைக்கிறேன். எனது பூனை முற்றிலும் அந்த எதிர்மறைப் பக்கத்தினுள் விழுந்துவிட வில்லை. மாறாக ஊசலாடிக்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட தொண்ணூறு சதவிகிதம் அது கீழே விழுந்துவிடலாம். ஆனால் பத்து சதவிகிதம் அது ஒரு ஜெர்க் செய்து ஒரு தாவு தாவி, அப்படியே எகிறி சுவற்றின் நேர்மறைப் பக்கத்தினுள் விழுந்துவிடலாம். இங்கே இதுதான் எனக்குப் பிரச்சனையே !

வரப்போகும் முடிவின் மீதான ஒருதுளி நம்பிக்கையே, ஒரு பிரபஞ்சமென விரிந்து, தன் எதிர்பார்ப்பு எனும் சுமையால் என்னை அழுத்துகிறது. நான் அசுவாரசியமாய் இருப்பது போலக்காட்டிக்கொண்டு அந்த முடிவை உள்ளுக்குள் ஆவலோடு எதிர்பார்ப்பவனாகிறேன். ஆனால், அந்த எதிர்பார்ப்பை நான் ஏன் தவிர்க்க நினைக்கவேண்டும் ? காரணம் ஒன்றும் பெரிதல்ல .....எல்லாம் ஒரு தற்காப்பு நடத்தைதான். இந்தத் தற்காப்பு நடத்தை என்கிற பதம் உளவியலில் பயன்படுத்தப்படுகிறது. அங்கே, தற்காப்பு நடத்தை என்பது கராத்தே அல்ல ! மனதின் ஈடுகட்டும் செயல்பாடு ..........ஒரு ஏமாற்றத்தையோ, ஒரு இழப்பையோ தாங்கமுடியாமல் மனம் தான் சிதைவுறுவதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள தற்காப்பு நடத்தை எனும் ஈடுகட்டும் செயல்முறைகளில் ஈடுபடுகிறது !

மேலும், இந்தத் தற்காப்பு நடத்தையைப் பற்றி நான் மேலும் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு எப்போதுமே ஏற்கனவே சொன்னதை மீண்டும் சொல்வது அறவே பிடிக்காத ஒன்று ! எத்தனையோ சிறுகதைகளை பாதி எழுதி கவனக்குறைவால் கணினித் திரையில் இருந்து அது அழிய நேரிடும்போது, மீண்டும் எழுத சலித்துக்கொண்டு நான் அந்தக் கதைகளை முடிக்காமலேயே விட்டிருக்கிறேன். சலித்துக்கொண்டு என்பதை விட, வெறுத்துக்கொண்டு என்று சொல்லலாம் ! ஆகவே, இந்தத் தற்காப்பு நடத்தையைப் பற்றி நீங்கள் மேலும் அறிய விரும்பினால் அதைப்பற்றி ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கும் உளவியல் புத்தகங்களை அணுகவும். என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம் .......

நான் மிகவும் எதிர்பார்த்து, நாளை வரப்போகும் அந்த முடிவை அணுகினால் என்ன ஆகும் ? எதிர்பார்த்தது கிட்டாமல் மனம் உடையும் ! அந்த உடைதலில் ஏற்படப்போகும் வலிதான் என்னை பயப்படுத்துகிறது. மேலும், யாவற்றையும் மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்கவேண்டுமே என்ற அயர்ச்சி ! அதனால்தான் நான் கிட்டத்தட்ட ஒரு தோல்வியான முடிவை எதிர்பார்ப்பது போலவே என்னைக் காட்டிக்கொள்கிறேன் என்னிடமே !

ஆனாலும் ஒட்டிக்கொண்டிருக்கும் அந்த ஒருதுளி நம்பிக்கையை என்ன செய்வது ? என்னால் அந்த நம்பிக்கையை முற்றிலும் அழிக்க முடியவில்லை. குற்றுயிராகவேணும் அது உயிரோடு இருந்து தொலைக்கிறது. அது என்னை வதைக்கிறது, ஒரு புற்றுநோயைப் போல அணுஅணுவாக சித்ரவதை செய்கிறது ! கொஞ்சம் லூசாக விட்டாலும் அந்த நம்பிக்கை பரந்து விரிந்து ஒரு பேரண்டமாய் என்னை ஆக்கிரமித்துக் கொள்ளும். நான் மிகுந்த ஆர்வத்துடனும், தீராத ஏக்கத்துடனும் வரப்போகும் அந்த முடிவை எதிர்பார்க்க ஆரம்பித்துவிடுவேன். அதுவொரு மரண அவஸ்தை. அந்த அவஸ்தையிடம் இருந்து தப்புவதற்காகத்தான் முடிந்தமட்டும் அந்த நம்பிக்கையைத் தட்டியே வைத்திருக்கிறேன். ஆனால் அதுவே ஒரு அவஸ்தையாக இருந்து என்னை வதைக்கிறது.

சரி .........ஆகவேண்டியதைப் பார்க்க வேண்டும் . இதோ, என் கையில் இன்னொரு கல் நான் முன்பு வீசிஎறிந்த தூரத்தைவிடவும் அதிக தூரம் கடக்கும் முனைப்புடன் காத்திருக்கிறது, புயல் பிரித்துப் போட்ட என் குடிசைகளின் ஓலைக்கீற்றுகளை நான் பொறுக்க ஆரம்பிக்கிறேன், மழை பட்டு அழிந்து போன என் ரெக்கார்ட் நோட்டின் மங்கிய எழுத்துக்களை அவநம்பிக்கையோடு தடவிப் பார்க்கிறேன், இன்னுமொரு புதிய ரெக்கார்ட் நோட்டை மறுபடியும் நிரப்பவேண்டும் என்ற பெருமூச்சோடு !

முற்றிலும் எதிர்பார்க்கும் ஒரு வெற்றியோ, ஒரு தோல்வியோ, முற்றிலும் ஒரு வெற்றியாகவோ, முற்றிலும் ஒரு தோல்வியாகவோ இருப்பதில்லை ................


========================================
=================================
========================


- குருச்சந்திரன்

எழுதியவர் : குருச்சந்திரன் (29-Jul-14, 10:26 pm)
பார்வை : 215

மேலே