வண்டி அப்பாவா சைக்கிள் அப்பாவா ------ஒரு அதிர்ச்சியான நிகழ்வின் பதிவு

வண்டி அப்பாவா..? சைக்கிள் அப்பாவா..?
------ஒரு அதிர்ச்சியான நிகழ்வின் பதிவு.


" வண்டி அப்பாவா..? சைக்கிள் அப்பாவா..? எந்த அப்பா சார்..? "மூன்றாம் வகுப்பு
படிக்கும் அந்த மாணவியிடமிருந்து இப்படி ஒரு பதிலை நிஜமாகவே எதிர்பார்க்கவில்லை நான்.

தலைமுடி அங்கொன்றும், இங்கொன்றுமாக காற்றில் பறந்துகொண்டிருந்தன.அவளே தலை சீவியிருக்க வேண்டும்... கண்களில் வயதுக்கு மீறிய ஒரு ஆயாசம் தெரிந்தது. சட்டை பட்டன்களில் ஒன்றிரண்டு இல்லாமல் பின்னூசி போட்டு குத்தியிருந்தாள். கையை கட்டிக்கொண்டு பேசியபேச்சில் ஒரு மெல்லிய பதற்றம் தெரிந்தது..

உங்க அப்பா என்ன பண்றாரும்மா..?
என்னுடைய இந்த கேள்விக்குதான் அந்த மாணவி திடுக்கிடும் எதிர் கேள்வியை கேட்டாள் என்னிடத்தில்.

என்ன பதில் சொல்வதென்று நான் தடுமாறிய அந்த தருணத்தில், எனக்கு உதவியாய் இடையே புகுந்தார் தலைமையாசிரியை. "செல்வி, போயி ஆறாம் வாய்ப்பாடு படி. நான் கேட்கறப்ப ஒப்பிக்கணும். சரியா..?" தலைமையாசிரியையின் உத்தரவுக்கு, தலையாட்டிக்கொண்டே போய் உட்கார்ந்து கொண்டாள் செல்வி.
நான் சொன்னேனல்ல சார்..உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கும்னு... வருத்தம் தெரிந்தது அவர் பதிலில்.

போனவாரத்துல ஒருநாள் வீட்டுப்பாடம் எழுதாம வந்துட்டா...அடிக்கடி இப்படி நடக்கறதுனால கிளாஸ்மிஸ் அவளை மிரட்டறதுக்கு எங்கிட்ட அனுப்புனாங்க... நானும் அவளை நாலு தோப்புக்கரணம் போடச்சொல்லி, கண்டிச்சப்ப 'ஓ'ன்னு அழுதுட்டா..."ஒழுங்கா எழுதிட்டுவராமா இப்ப எதுக்குடி கண்ணை கசக்குறே"ன்னு கேட்டேன்.

வீட்டுப்பாடம் எழுதறதுக்கு எங்க அம்மா விட மாட்டீங்கறாங்க டீச்சர்.... ன்னு அழுதா..
"அம்மா விடமாட்டீங்கறாங்களா..? பொய்யாடி பேசறன்னு"..லேசா காதை பிடிச்சு முறுக்குனேன் .

இல்ல டீச்சர்,நெசம்மா சொல்றேன்..
எங்க அப்பா வூட்ல இல்லாதப்பா பைக்ல ஒரு அங்கிள் வருவாரு...அவரு வந்தா எங்கம்மா என்னையும்,என் தம்பியையும் "விளையாடப்போங்க"ன்னு வெளில அனுப்பிச்சிடுவாங்க . அன்னைக்கெல்லாம்தான் எங்களால வீட்டுப்பாடம் எழுத முடியாது டீச்சர்..என் தம்பிகிட்டே வேணா கேளுங்க டீச்சர்...
திக்கி,திக்கி அழுதுட்டே அவ சொன்னப்ப நானும் நம்பல முதல்ல.

ஆனாலும் எங்க சத்துணவு ஆயா அந்த ஏரியால இருந்துதான் வர்றாங்க; அவங்ககிட்ட இந்த விசயத்தை சொல்லி , "அது உண்மைதானான்னு விசாரிக்க முடியுமா ஆயம்மா?" ன்னு கேட்டேன்.
ரெண்டே நாள்ல அந்தம்மாவும் விசாரிச்சுட்டுவந்து சொன்னத கேட்டப்ப எனக்கும் உங்களமாதிரி லேசா ஒரு அதிர்ச்சி .

இந்த பொண்ணோட அம்மா ஏதோ ஒரு பனியன் கம்பெனில வேலை செய்யுது. அப்பா லாரி டிரைவர்.. வெளியூர் போய்ட்டா பத்து,பதினைஞ்சு நாளைக்கு ஒரு தடவை தான் வீட்டுக்கு வருவார் .. அவர் ஊரிலில்லாத நாள்ல அவங்க வீட்டுக்கு பைக்வண்டி ல யாரோ ஒருத்தர் வருவார்போல... அந்தாளு வர்றப்ப எல்லாம் குழந்தைகள அந்தம்மா வெளில அனுப்பிச்சிடுது..
தலைமை ஆசிரியை விவரித்தார்.

வருத்தம் எனக்கு.
அது சரிங்க மிஸ்...வண்டி அப்பாவா,சைக்கிள் அப்பாவான்னு ஏன் கேட்டா? இன்னுமே நம்பமுடியாமல் கேட்டேன்.

ஓ..அதுவா..அவங்கம்மா அந்தாளையும் அப்பான்னு கூப்பிடச் சொல்லி அடிப்பாங்களாம்....அவன்கிட்டே பைக் இருக்கு... அவங்கப்பா கிட்டே சைக்கிள் இருக்கு...அதான் அவ உங்கிட்ட அப்படி கேட்டா .. என்றார்.

அவங்க அப்பாவுக்கு இதெல்லாம் தெரியாதா..? அந்தம்மாவுக்கும் அவருக்கும் ஒண்ணும் பிரச்சனையே வரலையா ? கொஞ்சம் பதற்றம்தான் எனக்கு.

அவங்க ரெண்டுபேரும் சண்ட போடாறத ஊரே வேடிக்கை பார்க்குதுங்கிற விசயத்தையும் ஆயாம்மா சொன்னாங்க ... என்றவர் தொடர்ந்தார்..
" சார் , இதுமாதிரி நிறைய குழந்தைங்க இருக்காங்க.. ...அம்மாவோ,அப்பாவோ யாராச்சும் ஒருத்தர் ஓடிப்போயிட்டா பிறகு பாட்டியோ,தாத்தாவோ வளத்தற குழந்தைங்க , தப்பான உறவுகளால பிறக்கிற குழந்தைங்க, தினமும் குடிச்சுட்டு வந்து குழந்தைங்க கண்ணு முன்னாடியே அம்மாவ கொடுமைப்படுத்துறது மட்டுமல்லாம தப்பா நடக்கறவங்களோட குழந்தைங்க... பாவம் சார்..." வருத்தமாக சொன்னார் எச்எம் மிஸ்.

நீங்களாவது அப்படிப்பட்ட குழந்தைகள கொஞ்சம் கேர் எடுத்து சொல்லித்தர முடியாதா மிஸ்..? தாளாத ஆதங்கத்தில் கேட்டேன் நான்
எப்படி சார் முடியும்?முன்னயே எங்களுக்கு எங்க வேலைய தவிர எக்ஸ்ட்ரா வேலைகள் ரொம்ப அதிகம்...இதுல இந்தமாதிரி குழந்தைகள எப்படி தனியா கவனிக்கிறது ? என்று தங்களுடைய இயலாமைக்கான காரணத்தை சொன்னார் தலைமையாசிரியர்.

அரசு பள்ளிக் குழந்தைகளை உற்சாகப்படுத்த,ஊக்கப்படுத்த தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புகளை அவ்வப்போது, சமயம் கிடைக்கிற தருணங்களில் நடத்துவேன். அப்படி போனபோதுதான் ஒரு பள்ளிக்கூடத்தில் இந்த மோசமான அனுபவம் எனக்கு கிடைத்தது.

திருப்பூர் என்றாலே நிச்சயம் ஏதாவது ஒரு வேலை கிடைத்துவிடும் என்பதால் வேலை தேடும் எல்லோருடைய முதல் விசிட்டிங் ஸ்பாட் திருப்பூர்தான். வீட்டை விட்டு ஓடி வருகிற காதலர்களின் புகலிடமும் இதுதான்.

வறுமையின் காரணமாக இப்படி வருகிறவர்கள் தனியாகவோ அல்லது வேறு சிலபேருடனோ வாடகைக்கு வீடு எடுத்து தங்குவார்கள். அவர்களின் அடிப்படை பொருளாதார பிரச்சனைகள் ஓரளவு சரியானபிறகு கிடைக்கிற தனிமையும், பணம் சம்பாதிக்கிற தைரியமும் மது, காதல், தொடர்பு...என வாழ்வை மெல்ல திசை மாற்றி விடுகிறது. ஜாலிக்காக ஆரம்பித்தது சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்புகளையும் உருவாக்கிட ..அதன் கோர விளைவுக்கு ஒரு சேம்பிள்தான்.. நான் மேலே சொன்னது..

எல்லோரும் இப்படி அல்ல.. என்றாலும் இந்தமாதிரியான சம்பவங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது என்பதே வருத்தமான உண்மை....

இந்த தேசத்தின் உன்னதமான பாரம்பர்யமும்,கலாசாரமும் மெல்ல,மெல்ல மீறப்பட்டு வருகிறது .. பெரு நகரங்களில் மட்டுமே நடக்கிற இது மாதிரியான நிகழ்வுகள் , சிறு நகரங்களிலும் தொடர்வது வருத்தமான விஷயமே.

நமது அரசியலில் ஏற்ப்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம் , தேசத்தின் வருங்காலத்தையும் சீர் செய்து, நல்வழியில் இட்டுச்செல்லுமென நம்புவோம்..

கலாசாரத்தின் கம்பீரத்தை கெடுக்காத பொருளாதார முன்னேற்றமே சரியான முன்னேற்றம்....!!

எழுதியவர் : முருகானந்தன் (30-Jul-14, 11:30 am)
சேர்த்தது : MURUGANANDAN
பார்வை : 79

மேலே