சிவராத்திரி

வெளிச்சத்தில் ஓராயிரம் விழாக்களும் பண்டிகைகளும் கொண்டாடப்படும் வழமைக்கு நடுவே ஏன் ராத்திரியில் கண்விழித்து தியானித்துக் கிடக்கவேண்டிய அவசியம் நமக்கு கையளிக்கப்பட்டிருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அடர் கரு இரவு என்பது அமாவாசை தினம் அல்ல. சந்திரன் இல்லாத அமாவாசைக்கு அடுத்த நாள் சிறு ஒளித் திரளோடு தொடர்புடையது ஆனால் அமாவாசைக்கு இரண்டு நாட்கள் முந்தைய இரவு அடர் கருமையானது.

சிவராத்திரி என்பதற்கும் அமாவாசைக்கும் என்ன தொடர்பிருக்க முடியும்? நிலவுக்கும் சிவனுக்கும் என்ன தொடர்பு? நிலவை மையமாக வைத்து ஒரு பிரபஞ்ச நிகழ்வு நடந்தேறி இருக்குமா? கண்டிப்பாக இருக்காது, ஏனென்றால் நிலவு என்பது பிரபஞ்சத்தி ஒரு துகள். பிறகு ஏன் அமாவாசைக்கு இரண்டு நாள் முன்பு அந்த ஆழ்கருமையான அந்த இரவு சிவராத்திரிக்கு அடையாளமாய் ஆனது? என்ன நிகழ்ந்தது சிவராத்திரி அன்று? ஏன் அன்றைக்கு மனிதர்கள் விழித்துக் கொண்டிருக்க வேண்டும்? என்னதான் நிகழும் அப்போது?

சத்குரு ஜக்கி கூறுகிறார் அந்த ஒரு குறிப்பிட்ட நாளில் சூரியன் தெற்கிலிருந்து நகர்ந்து வடக்கில் பிரவேசிப்பதால் அந்த தினத்தில் மனித உயிர்சக்தியானது மேல் நோக்கி உறிஞ்சப்படுகிறதாம். அப்படியாய் மேல் நோக்கி உறிஞ்சப்படுவதற்கு ஏதுவாக முதுகுத்தண்டினை நாம் நிமிர்த்தி நேராக உயர்த்தி வைத்திருக்க வேண்டுமாம். இந்த உத்தராயண சமயத்தில் எல்லா சூரிய மண்டலத்திலிருக்கும் எல்லா கோள்களுமே வேறு ஒரு அதிர்வுகளோடு இருக்குமாம். இப்படியாய் மனிதர்களுக்குள் நிகழும் மாற்றம் அவர்களின் ஆன்மப் புரிதலை உயர்த்தும் அதனால் மஹா சிவராத்திரியன்று விழித்திருக்க வேண்டும். இது மத ரீதியான நம்பிக்கை கிடையாது அறிவியல் என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் விவரிக்கிறார்.

சிவன் சக்தியை மணந்த நாள் என்று புராணங்களில் சில இடத்தில் கூறுகிறார்கள். வேறு சிலரோ பிரளய தினத்தில் எல்லாம் சிவனுள் ஒடுங்கும். அப்படி சிவன் தனக்குள் ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் அடக்கி சலனமற்று இருக்கையில் சக்தியான பார்வதி சிவனிடம் வேண்டிப் பிரார்த்தித்து மீண்டும் உயிர்களைப் படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் அந்த நாள்தான் சிவராத்திரி என்று வேறு சில இடத்தில் என்னால் வாசித்தறிய முடிந்தது.

சிவராத்திரி என்று சொல்லுமிடத்திலேயே அது சிவசக்தியின் சங்கமம் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். எல்லா கேள்விகளையும் என் முன் அடுக்கி வைத்து விட்டு எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். காரணமின்றி காரியம் இல்லை என்பது சத்தியமானால் இங்கே இத்தனை கோடி பேர் செய்யும் ஒரு காரியத்திற்கு ஒரு காரணம் இல்லாமலா போய்விடும். எதுவுமற்ற ஒன்றில் ஏதோ ஒன்று நிகழத்தொடங்கிய அந்த இருளின் அடையாளமாய்த்தான் சிவராத்திரி இருக்கக் கூடும். அண்டசராசரமும் ஆழ்மெளனத்திலிருந்த போது அங்கே மெல்லிய அசைவுகளாய் சக்தியின் ஆட்டம் தொடங்கலாயிற்று....

சிவமென்னும் சலனமற்றதை சலனமாக்கிய சக்தியின் இணைவே...சிவராத்திரி....அதை வெறுமனே உறங்கிக் கடந்து சென்றுவிடலாமா என்ன...?

சம்போ...!!!!

எழுதியவர் : Dheva .S (31-Jul-14, 12:08 pm)
சேர்த்தது : Dheva.S
Tanglish : sivarathiri
பார்வை : 293

சிறந்த கட்டுரைகள்

மேலே