காலச்சுவடுகள் 16 - கவித்தாசபாபதி

ஒரு காட்டுவாசியின் கனவுகள்
******************************************


அந்தப்
பச்சைமலைக்காட்டின்
பள்ளத்தாக்குகள்
பூக்களால் நிறைந்திருப்பது போல
அதோ ஒரு காட்டுவாசியின்
மனப்பள்ளங்கள் பூக்கின்றன.

***

கண்டெடுக்க முடியாத
காட்டு மூலிகைகளை
கொண்டு போனவங்க
பீடி வாங்க காசு கொடுத்தாங்க..!

எஸ்டேட்டு துரைக்கு
கருங்குரங்கு அடிச்சு தந்தேன்
அவர் என்னை
காட்டுமிராண்டி' ன்னு அழைப்பாரு..!

காட்டதிகாரி பெண்டாட்டி
தேன் வேணும் என்றாங்க
மலைத்தேனே வடிச்சுத் தந்தேன்
நல்லாத்தா சிரிச்சாங்க...

வனவிலங்கு விழாவாம்..
மந்திரி என்று யாரோ
வருவதாக சொன்னாங்க
மான்கறி கேட்டாங்க - ஒரு
மானையே புடிச்சி தந்தேன்..
ஏதேதோ நலத்திட்டம்
வருவதாக சொன்னாங்க
வந்ததையெல்லா - வரும்
வழியிலேயே தின்னாங்க

கோடைவிழா காலத்தில்
கோட்டையி லிருந்து ஒரு
ஆபீசர் மகன் வந்தான்- என்
கொஞ்சுங்கிளி 'மருதி'யெ
கற்பழித்துப் போனான்

அந்தச்
சோகத்தெ சொல்லியழுதா
சொல்லியழுங் கண்ணீரில்
சுமைதான் கரைஞ்சிருமா?

ஓட்டைக் குடிசையிலே
உயிர் ஒழுகி சிந்துகையில்
ஓட்டுச் சீட்டெழுத
வந்தாங்க..வந்தாங்க..
எம் பேரெனக்குத் தெரியலையே..!

முள்ளு தெச்ச கண்ணெ
மூடிநான் அழுகையிலே
மூங்கில் காட்டு நெஞ்சம்
மூண்டு எரிகையிலே
பச்சைமலைக் காட்டுப்
பள்ளத்தாக்குப் பூக்களில்
பனி தூங்கும் பூவொண்ணு
எம் பேரை சொல்லிச்சு..

"உன் பெயர்
காட்டுமிராண்டி அல்ல..!" (1995)
****************


தொடருக்கு மட்டுமே.. நூலில் இடம் பெறாது இக்கவிதை

(எமது "தரையில் இறங்கும் தேவதைகள் " நூலிலிருந்து )

எழுதியவர் : கவித்தாசபபதி (3-Aug-14, 12:08 pm)
பார்வை : 147

மேலே