ஆதி

ஆசைகள் அறுபட்டுப் போய்க் கிடக்கின்றன அதைத் தூண்டி விட்ட அகங்காரம் மரணித்து சில மணித்துளிகள் ஆகின்றன. வெற்று நினைவுகளோடு உக்கிரமாய் அமர்ந்த தியான உச்சத்தில் செத்தொழிந்தே போய்விட்டன உறவுகளும், உறவுகளில் கலந்திருக்கும் பொய்மையும், பொய்மையில் அடங்கியிருந்த மாயைகளின் ஆட்டங்களும்.....

அகங்காரம் கொண்ட மனதினை சற்று முன் நேருக்கு நேராய் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியதில் என்னிடம் கேள்விகள் கேட்க சொல்லி தூண்டிய மனதிடம் கேள்விகள் கேட்க எத்தனித்த அந்த கணத்தில் உள்ளிருந்து ஒலித்த ஒரு குரல் சட்டென்று கேள்வி அறு....கேள்வியை அறி....என்று சொல்லாமல் சொல்லிய தருணத்தில் உற்று நோக்கிய பொழுதில்தான் மெல்ல மெல்ல கயமை மனம் கழண்டு விழ ஆரம்பித்தது......

உள் நோக்குதலை நிறுத்து புறம் நோக்கிப் பாய் என்று மாயக்கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்த மனதின் வலிமையினை எதிர்கொள்ளல் சிரமமாய்த்தான் இருந்தது....

மட்டறுக்க மறுத்தல் ஊறு விளைவிக்கும் என்று யாம் பயிற்றுவிக்கப்பட்டு இருந்தோம். ஜென்மங்களாய் எமக்குள் ஊறிக்கிடந்த உணர்வான நினைவுகள்..மட்டறுக்காமல் கேள்விகளை மீண்டும் மனதிடம் திருப்பத் தூண்ட... புறம் நோக்கி ஏன் பாய வேண்டும்? என்ற கேள்வியை பவ்யமாய் மனதின் காலடியில் சமர்ப்பித்து.....மெளனமாய் பதில் எதிர் நோக்கிய பொழுதில் மெல்ல தெரிந்தோம்...கட்டளைகள் பிறப்பிக்கும் முட்டாள் மனம் எப்போதும் அறியாது கேள்விகளுக்கான பதிலை...ஒன்று அது ஏமாற்றும் அல்லது... ஏமாறும்....

எமது ஏமாற்றத்தை தவிர்க்க ஏமாற்றுதலை செயற்படுத்தும் உத்தி எமக்குத் தெரிந்து போனது பித்து மனமோ கேள்விக்கான விடையறிவித்தலை அறியாமல் மேலும் ஒரு கட்டளை பிறப்பித்து பக்கத்தில் கேட்ட ஒரு சப்தத்தை கவனிக்கச் சொன்னது. கண் திறந்து பாரென்று பல்லிளித்து கபட நாடகம் ஆடியது.

ஏன் பார்க்க வேண்டும்? என்ற எதிர் கேள்வியில் திணறிய மனதிடம் அடுத்த ஒரு தாக்குதலை தைரியமாய்த் துவக்கினேன்...! நீ யாரென்றேன்....????? எம்மிடம் கட்டளைகள் பிறப்பிக்க எங்கிருந்து வருகிறது உமக்கு கேள்விகள்...? மூலம் எது? உன் இலக்குதான் என்ன? என்பது போன்ற கேள்விகள் அசுரத்தனமாய் உள் சென்று தாக்க மனம் என்ற விசயத்தின் முழு பலமும் எமது கட்டுப்பாட்டுக்குள் வந்தது...

எதிர் கேள்விகளில் கன்மேந்திரியங்கள் மறந்து ஞானேந்திரியங்களில் நிலைத்து நின்ற ஒன்று மனதை வென்ற பின் கிடைத்த வெற்றிடமாயிருந்தது....! சப்தமும் சலனமுமின்றி லயித்துக் கிடத்தல் ஜனித்துப் போயிருந்த ஒற்றை புள்ளியில் தான் ஆசைகள் அறுபட்டும் அகங்காரம் மரணித்தும் போய் கிடந்தன சுவடுகளற்று.....

ஒற்றைப்புள்ளியில் லயிக்க லயிக்க..ஒன்றுமில்லா வெளியில் உணர்வென்ற ஒரு விசயம் மட்டும் எஞ்சியிருக்க ஆழ் தூக்கத்தில் கனவுகளற்ற வெறுமை போன்று இருத்தல் என்ற ஒன்றுண்டு என்ற உணர்வோடு இருக்கிறேன் என்ற உணர்வு மறைந்து..........உடல் மறந்து....உலகம் மறந்து உலகின் நியதிகள் மறந்து நியதிகளற்ற வெளியில் கிடக்கும் பொழுதில் கிடப்பவனும் கிடத்தலுமின்றி மெளனத்தின் உச்சமாயிருந்த அதன் சப்தங்கள் கடுமையாகத்தானிருந்தன......

சப்தமில்லாதவை எல்லாம் பலமாக இருந்த அதே நேரத்தில் பலமில்லாதவை எல்லாம் இரைச்சலாயிருந்தன. காலமற்ற வெளியில் ஸ்தூலமற்று சூட்சுமமாய் விரவிக்கிடந்த சுகம் இன்னதென்று அப்போது அறியாதவனாய் அல்ல.....அல்ல அறியாத வஸ்தாய் கிடந்திருந்த கணங்களை கணக்கு கூட்ட யார் இருந்தார் அப்போது? ஒன்றுமில்லா ஒன்றில் சங்கமித்த சந்தோசம் கிடைத்தது எதற்கு? உடலாயிருந்து உணர்வுக்குள் போனபின் உடல் பெற்றதா? இல்லை உணர்வுக்குள் உணர்வாயிருந்த ஒன்றில் தானே நிகழ்ந்ததா?

வெளிச்சமும் இருளும் கலந்த ஒரு திசைகளற்ற வெளியில் மிதந்தேனா இல்லை கிடந்தேனா? இல்லைப் பறந்தேனா? நெருக்கமாய் எல்லாம் இருக்க விலகியே அனுபவித்தேனே அது எப்படி? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ற சப்தமாய் அதிர்ந்த பொழுதிலேயே அங்கிங்கு என்று எங்கும் நீக்கமற விரவியிருந்து எமக்குள் யாமே செயல் செய்து யாமே விளைவுகளை எல்லாமாய் நின்று ரசித்தோமே அது எப்படி? உடலற்றுப் போனதனால் மறைந்து போன எல்லைகள் விரியாமல் விரிந்து அறியாத இடங்களில் எல்லாம் வீரியமாய் நிகழ்தலாய் தொடர்ந்ததே எப்படி....?

ஆதி....ஆதி ஆதி நான்...
அண்டசராசரத்தின் மூலம் நான்
அசையும் அனைத்தின் மூலம் நான்
சிவமாயிருந்த வித்து நான்...
அடியும் முடியும் இல்லா
ஆனந்த சிவன் நான்..
எனது தாண்டவமே..கூத்தாகி
கூத்தில் அசையும் அதிர்வுகளே...
தோற்றங்களாகி...சலனத்தை
நடத்தும் சத்திய பிரம்மம் நான்.....!

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பயணமற்று இயக்கமற்ற இயக்கத்தில் பரவியிருந்தது எல்லாமே என் இயல்புகள்தான்.....இதோ..........

மெல்ல மெல்ல உணர்வுகளை மட்டுப்படுத்தி சலனங்களுக்குள் நுழைந்து சப்தமாய் மிகப்பெரிய காற்றின் இரைச்சலை உணர்ந்து அது வேகமாய் சீற்றமுடன் நெருக்கமாக உணர, அதுவே என் சுவாசமாக உணர்ந்த அந்த மணித்துளியில் எனக்குள் உடம்பென்ற உணர்வு கச்சிதமாய் வந்து விட்டது. உடலின் பருமனும்....திடமும் இருத்தலும் அமர்தலில் இருந்த கனமும் தெரிய இதோ உடலுக்குள் வந்து விழுந்த மூன்றாம் விநாடியில் என் கன்மேந்திரியங்களுக்குள் போய் பதுங்கிக் கொண்டன அது வரை ஆளுமை செய்து வந்த ஞானேந்திரியங்கள்....

மெல்ல கண்விழித்து பார்வையை புறத்தில் செலுத்தினேன்......காட்சிகள் பற்றிய விவரிப்பு செய்யாமல் பதுங்கிப் படுத்துக் கொண்டிருந்த மனதினை உசுப்பிவிட்டேன்.. ஒரு களிறு போல பிளிறுக் கொண்டு எழுந்து நின்றது....கட்டளைகள் இட்ட மனமென்னும் மதயானை.....கட்டுப்பட்டு நின்றது....

மெல்ல நடந்து தோட்டத்துக்குள் வந்தேன்...........அதிகாலை வானம் சுகமான ஒரு இருளோடு மர்மமாய் எனைப் பார்த்து சிரிக்க...பரவியிருந்த குளுமையில் விரவியிருந்த ஆக்சிஸனை உள் வாங்கி ஆழமாய் சுவாசித்து மெல்ல நடந்து கொண்டிருந்தேன்...

மனமென்ற யானை எனக்குள் சப்தமின்றி ஆடி ஆடி அமைதியாய் நின்று கொண்டிருந்தது.... நான் சினேகமாய் அதை தட்டிக் கொடுத்து நடந்து கொண்டிருந்தேன்..........

மெலிதாய் விடியலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது பொழுது....!

எழுதியவர் : Dheva .S (6-Aug-14, 9:59 pm)
சேர்த்தது : Dheva.S
Tanglish : Aathai
பார்வை : 136

சிறந்த கட்டுரைகள்

மேலே