கோணம்

சுற்றி எழுந்த சப்தங்களும் அடுப்பங்கறையில் இருந்து வந்த காபியின் வாசனையும்....திண்ணையில் பேப்பர் கசங்கலில் ஏற்பட்ட காகித சப்தங்களில் அப்பா நியூஸ் பேப்பர் வாசிக்கிறார் என்ற எதார்த்தமும், பக்கத்து வீட்டுக் கறவை 'ம்மாமாமமம...' என்று கத்தியதில் விடிந்தே விட்டது என்றும் தெரிந்து கொண்டான் மகேஷ். இன்றைக்குக் கடை சீக்கிரமே திறக்க வேண்டும் பக்கத்து மண்டபத்தில் கல்யாணம். நிறைய பேர்கள் வருவார்கள் போன் செய்ய....மனதுக்குள் கணக்கு போட்டபடி.... எழுந்த மகேஷ்....

கணக்குகள் போட்டபடியே அடி எடுத்து வைத்தான்.... வீட்டின் அளவுகள் அவனுக்கு அத்துபடி... அவன் படுக்கையில் இருந்து நேரே எழுந்து 5 அடிகள் எடுத்து வைத்து.. இடது புறம் திரும்பி நேரே போனால் சமையலறை..இப்போது காலை உணவின் வாசனை அவன் மூக்கை துளைத்தது...

சமையலறை கடக்கையில் அம்மாவின் வளையல் சப்தம் துல்லியமாக கேட்டது பாத்திரங்கள் கழுவி எடுத்து வைக்கும் வேகத்திலேயே தெரிந்து விடும் அது அம்மாதான் என்று ...பற்றாக்குறைக்கு மஞ்சள் தேய்த்துக் குளித்து ஒரு வித மணம் வீசும்.....அவள் உடுத்தியிருக்கும் சேலையிலிருந்து வரும் வாசமும்... ஆதரவான குரலும்.. எப்போதும் ஒரு இனம் புரியாத சந்தோசத்தைக் கொடுக்கும் அவனுக்கு...'மகேஷ் குளிச்சுட்டு சாப்பிட வாப்பா' இன்னிக்குக் கடை தொறக்க சீக்கிரமா போறேன்னு சொன்னியே...ஆமாம் அம்மா இதோ வர்றேன்னு சொல்லிக் கொண்டே.. இன்னும் ஒரு 5 அடியில் அவனுக்கு எட்டியது குளியலறை.

ஒவ்வொரு முறை தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றும் போதும் சிலிர்ப்பாய் நீர் உடலோடு ஓடி.... உடல் மட்டும் நனைக்காமல் மனசும் நனைத்து... ........

சாப்பாட்டை முடித்துவிட்டு அவசர அவசரமாய் கிளம்பிய மகேஷ்.. கைகளால் தலையை சரி செய்து கொண்டு.. முகத்துக்குக் கொஞ்சம் பாண்ட்ஸ் பெளடர்....எல்லாம் தானாகவே செய்வான் கண்ணாடி அவனுக்கும் அவனுக்குக் கண்ணாடியும் சிறு வயதில் இருந்து அவசியமில்லாமல் போய்விட்டது... வெளியில் காய் விற்கும் முனுசாமியின் கூவலில் மணி 7:20 ஆகிவிட்டது என்று உணர்ந்தான்.. தன்னுடைய ஜோல்னா பை இருக்கும் பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டு... மறக்காமல் தன்னுடைய கூலிங் கிளாஸ் எடுத்து பாக்கெட்டில் வைத்தவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை சட்டென்று நேரே மாட்டிக் கொண்டான்.

ஹாலில் இருந்து திண்ணைக்கு வந்தவன் இடது புறம் திரும்பி.. தான் அமரும் அந்த நாற்காலியை சினேகமாய்த் தடவிப் பார்த்தான்.. பின் அதில் அமர்ந்து பக்கத்திலிருந்த செருப்புகளைக் காலுக்குக் கொடுத்து.. அம்மா வர்றேன்மா என்று சொன்ன மாத்திரத்தில் ஏதோ பொறி தட்ட.. அடடா அதை எடுக்க வில்லையே... என்று எண்ணியவன்.. திண்ணையின் மூலையில் இருந்த அதை எடுத்துக் கொண்டு.. தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தான்...

தம்பி தங்கைகள் எல்லாம் பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டு இருந்ததை உணர்ந்த அவன் அவர்களை விட்டு எப்போதும் விலகியே இருப்பான். அவர்களும் மகேஷிடம் அதிகம் பேசுவதில்லை. என்ன ஒன்று இவனுக்குத் தேவையானது அவர்களிடம் இல்லை. மகேசுக்கு எது தேவை என்று அவனுக்கே தெரியாது. வாசல் கடக்கும் போது மட்டும் அப்பாவிடம் சொல்லுங்கம்மா என்று சொல்லி விட்டு ஒரு வித நிதானத்தோடு தெருவில் நடந்தான்... ம்ம்ம் ஒவ்வொரு வீடாய் கடந்து கொண்டிருந்தான்.....

பாட்டு எப்போதும் அலறும் இது குமார் வீடு... வாசலில் எப்போதும் சாணம் தெளித்து இருக்கும் இது முருகேஷ் வீடு.. மெல்ல நடந்து கொண்டிருந்தான்.. வழியில் யாரோ இருவர் பேசிக் கொண்டே இவன் கூடவே நடந்து வந்தார்கள்...

" நேத்துதானப்பா நடந்திருக்கு பட்டப் பகல்ல போட்டு வெட்டியிருக்கான். ரோட்ல சுத்தி எல்லோரும் பாத்துட்டுதான இருந்து இருக்காங்க....துடி துடிச்சு செத்து போயிருக்கானப்பா" ஒருவர் இன்னொருவரிடம் சொல்ல அது தானாகவே மகேஷின் காதுகளை வந்து சேர்ந்தது. ' ஆமாம் அநியாயம் பெருத்து போச்சு ' என்ன பண்ன சொல்றீங்க மற்றொருவர் இவரிடம் சொல்ல..

மகேஷ் யோசிக்க ஆரம்பித்தான்....ஒருவரை இன்னொருவர் கொல்வது எப்படி? அதை எப்படி பார்த்துக் கொண்டு இருப்பது..அவனின் மூளையில் ஏறவில்லை அல்லது அது பற்றி கற்பனை இல்லை...மெளனமாய் தன்னுள் இருந்த ஆழமான ஒரு விசயத்திற்குள் விழுந்த மகேஷ்.. நடந்து கொண்டே இருந்தான்....திடீரென ஏதேதோ சப்தங்கள்....கூச்சல்.......குழந்தையின் அலறல் சப்தம்...யாரோ ஒரு அம்மாவின் கதறல்..." அய்யோ இப்டி கண்ணு மண்ணு தெரியாம வண்டிய வேகமா ஓட்டிட்டு வந்து ஸ்கூலுக்குப் போன புள்ள மேல ஏத்திட்டானே....."

கதறலையும் யார் யாரோ வண்டியை ஓட்டி வந்தவரை வசை பாடுவதையும் கேட்டுக் கொண்டே கடந்தவனின் காலில் சரளைகளின் சப்தமும் பக்கத்தில் இருந்த ஒரு வெல்டிங் ஒர்க் சாப்பின் வேலை செய்யும் சப்தமும் கேட்க அவை கடக்கும் போதே ஒரு துர்நாற்றம் கொண்ட சாக்கடையின் மணம் மூக்கைத் துளைக்க மூக்கைப் பிடித்துக் கொண்டு...

இடது பக்கம் திரும்ப.. 10 அடி தூரத்தில் காக்கைகள் கரையும் சப்தம் கேட்டது.. ஆமாம் அரசமரமும் அங்கே இருக்கும் கோவிலும் ஒருவித எண்ணெய் வாசனைகளுடன் இவனுக்குள் வரும்..உள்ளே இருக்கும் சாமி பற்றியெல்லாம் மகேஷுக்கு கவலை இல்லை....ஏதோ ஒன்று நம்மை எல்லாம் படைத்து இருக்கிறதா என்ற கவலையும் இல்லை.. அவனுக்கு கடவுளும் மனிதர்களும், தானும் இன்னபிற விசயங்களும் ஒன்றுதான்...

உணர்ந்தால் இருக்கு என்று சொல்வான்..அதுவும் அவன் உணர்ந்த மாதிரிதான் சொல்வான்.. இவன் கற்பனைகளுக்கு அதிக வேலை கொடுக்கவே மாட்டான்...கொடுக்கவும் தெரியாது... கற்பனைகள் விவரித்து விவரித்துப் பார்ப்பது ஒரு போதையை மட்டும் கொடுக்கும். ஆனால் உண்மை அதற்கு முற்றிலும் மாறுபட்டது என்பது நிதர்சனமான உண்மை ஆனால் அவன் பிறவியிலேயே அப்படி நினைக்கப் பெறும் அதிர்ஷ்டசாலியாக இருந்தான்

மகேஷுக்கு ஆச்ச்ரயமான விசயம் என்னவென்றால் மனிதர்களின் அலட்சியமும், தன் பொறுப்பை உணராமல் நடக்கும் விதமும்தான்...! கோவிலைத் தாண்டி போகும் போது கிசு கிசுப்பாய் யாரோ மரத்துக்கு அந்தப் பக்கம் பேசுவது கேட்டது.. யாரோ ஒரு ஆணும் பெண்ணும் அத்துமீறிக் கொண்டிருந்தது சிணுங்கலாய் கேட்டது.. கவனியாமல்.. அந்த காலை வேளையின் முக்கியத்துவம் கொடுத்த வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தான் மகேஷ்....

மகேஷின் உலகத்தில் குழப்பங்கள் இல்லை...ஆனால் சுற்றி நடக்கும் விசயங்கள் பற்றி ஒரு வித கூர்மையான அகப்பார்வை கொண்டவன்....! கார்களின் சப்தமும் வாகனங்களின் ஹார்ன்களும் மனிதர்களின் நெரிசல்களும் உணர்ந்தான் மகேஷ். ஆமாம் அவன் மெயின் ரோட்டுக்கு வந்து விட்டான் எப்போதும் அவன் சரியாக வந்து ஏறும் அந்த சாலையில் இடது புறம் ஒரு 20 அடிகள் நடந்து நேரே ரோடு கிராஸ் செய்து போனால்... அவனின் கடை.....! மகேஷ் காத்திருந்தான்...கையிலிருந்த அதை எடுத்து மெல்ல தட்டிக் கொண்டே .............
.............
.............
.............
.............


'கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா .... ப்ளீஸ் ரோடு கிராஸ் பண்ணனும்... ப்ளீஸ் '

மகேசை யாரும் கண்டு கொள்வதாய் தெரியவில்லை...மீண்டும் மீண்டும்.. தன் கையில் இருந்த தடியில் இருந்த மணியை அழுத்தித் தட்டிக் கூப்பிட....

யாரோ ஒருவர் அவன் அருகில் வந்து 'வா தம்பி நான் க்ராஸ் பண்ண போறேன் உன்னை கொண்டு போய் அங்க விட்டுடுறேன் ' என்று சொல்லவும் ... சொன்னவரின் கரத்தை அன்போடு பற்றி.. நன்றிங்க சார் என்றான் மகேஷ்....

மகேஷ் சாலை கடந்து கொண்டிருந்தான்.. விழிகளில் ஒளியற்று போயிருந்தாலும் அவன் மனதில் ஒளி இருந்தது..! இல்லாத ஒரு அவயம் பற்றி அவனுக்குக் கவலையில்லை.. ஆனால் இருக்கும் அந்த அவயத்தின் பயன்பாடு மனிதர்கள் எப்போதும் அறிந்ததில்லை. மனிதர்களின் பார்வைகள் எல்லாமல் இருப்பதாலேயே..அத்து மீறல்கள் செய்யப் படுகிறது... அகங்காரம் கொள்கிறது...கண்டும் காணாமல் செல்கிறது.....!

பயன்பாடுகள்..இருக்கும் போது யாராலும் அறியபடுவதில்லை.... ஆனால் இல்லாதவர்களுக்கு சராசரி மனிதர்களின் செயல்பாடுகள் எல்லாம் ஆச்சர்யம்தான்....!

இன்னும் சொல்லப் போனால் பார்வை என்ற புலன்களின் மயக்கத்தில் கண்ணால் கண்டுவிட்டு ஆராயாமல் கற்பனைகள் கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில் விசயங்களை உணர்ந்து கேட்டு தெளிந்து சத்தியத்தைக் கைக்கொள்ளும் இவர்கள் பார்வை என்ற புலன் இருப்பவர்களோடு..எல்லா வகையிலும் மேம்பட்டவர்கள்தான். உண்மையில் கண்ணிருந்தும் குருடராய் இருக்கும் மனிதர்கள் சில நேரம் காட்சிகளை மறந்து விட்டு.. உணர்வு பூர்வமான குருடர்களாக இருப்பது எவ்வளவோ மேன்மையானது.....

அன்றைய தினத்தின் நிகழ்வுகளைத் தன்னுள்ளே தேக்கி வைத்த மகேஷின் சிறிய டெலிபோன் பூத் அவனுக்காகக் காத்திருந்தது......

எழுதியவர் : Dheva .S (7-Aug-14, 10:28 pm)
பார்வை : 197

மேலே