போவாயோ எபோலா போவாயோ- நாடகம்

[எதிர்மறை யதார்த்த (சர்ரியலிச) நகைச்சுவை நாடகம்]

பகுதி 1

இடம்: மாதவன் வீடு. நேரம் : 2.8.2014 காலை எட்டு மணி

பாத்திரங்கள்: மாதவன், மாதவனின் அப்பா கணபதி, அம்மா தேவயாணி, தங்கை ருபேலா மற்றும் நண்பன் ராமகிருஷ்ணன்

மாத: டேய் ராமகிருஷ்ணா, அடப்பாவி நண்பா, எப்படா துபாய்லேர்ந்து திரும்பி வந்தே?
ராமகி: இப்பத்தாண்டா, அலைக்கழிஞ்சு நேரா வரேன். நாம என்னதான் காலேஜ் ஃப்ரண்ட்ஸா இருந்தாலும் உன் வீட்டுக்கு நான் வர்றது இதுதான் முதல் தடவைடா. பை த பை நா துபாய்லேர்ந்து வர்லே...(ஏதோ சொல்ல வர)

மாத: (இடை மறித்து) வாடா, உன்னை அறிமுகப்படுத்தி விடறேன்...
சேர்ல உட்கார்ந்திருக்காரே இவர் டாப்பா, பக்கத்துல அம்மி, அதோ வராளே.. சிங்கச்சி...
ராமகி: என்னடா சொல்ற?
மாத: அதை ஏண்டா கேக்கற? அம்மாவுக்கு நான் தமிழ்ல பேசணும்னு ஆசை, அப்பாவுக்கு இங்கிலீசுல பேசணும். அதான் ரீமிக்ஸ் பண்ணிட்டேன்.
ராமகி: சரி, என்னை எப்படி அறிமுகப்படுத்தப் போற? ஃபிண்பன்னா? இல்லே நரண்டுன்னா?
மாத: அத விடுடா...என் சிங்கச்சி இருக்காளே ருபேலா...
ராமகி: (தூக்கி வாரிப் போட) என்னது?
மாத: ஏண்டா, ருபேலாதானே சொன்னேன்? எபோலா வந்த மாதிரி குதிக்கிறே? அவ கல்யாணமே வேணாங்கறாடா. ராகி மிஷன்ல சேரணுமாம்.
ராமகி: ஏன் உங்க ஊர்ல வேற மாவு மிஷின் இல்லியா?
ருபேலா:(வந்து கொண்டே) அது ராம கிருஷ்ணா மிஷன். எனக்கு கல்யாணம்னாலே பிடிக்காது.
ராமகி: எனக்கும் கல்யாணம்னா பிடிக்காதுங்க.. இந்த தாலியெல்லாம் கட்டி, ‘‘மனுஷன் சாப்புடுவானா" ன்னு வச்சிட்டு போற காபியை ஒரு மணி நேரம் கழிச்சி நாமளே சாப்புடுறதெல்லாம் பிடிக்காதுங்க. நான் வளர்ந்தது, படிச்சது எல்லாமே ராமகிருஷ்ணாவில தாங்க. வந்து... எம் பேரும் ராமகிருஷ்ணா தாங்க.

ருபேலா: நான் மிஷன சொன்னேன், உங்கள மாதிரி மிஷின சொல்லலே. ஆமா, உங்க டேஸ்ட்டும் என் டேஸ்ட்டும் ஒத்துப்போற மாதிரி இருக்கே. (கொஞ்ச தூரம் போய் நின்று ஒரு பார்வை பார்த்து விட்டுப் போகிறாள்)

ராமகி:டேய்.. நான் வந்த விஷயத்தை சொல்லிடுறேன்... நான் துபாயை விட்டு நேரா ஆப்...(பைக் ஹாரன் சப்தம் கேட்டு நிறுத்தி விடுகிறான்; பைக் வீட்டினுள் முன் வாசல் வழியாக நுழைந்து பின்வாசல் வழியே வெளியேறுகிறது) என்னடா இது?

மாத: அது.. எங்க வீடு கொஞ்சம் நீளமாச்சா.. முன் வாசல் இந்த தெருவிலும் பின் வாசல் அடுத்த தெருவிலும் திறக்கும். எங்க வீடு வழியா போனா கடைத்தெரு, பஸ் ஸ்டாண்டுக்கெல்லாம் ஈசியா போயிடலாம். இல்லேன்னா அஞ்சு கிலோ மீட்டர் சுத்திப் போகணும். சில சமயம் டிராபிக் ஜாம் கூட ஆகும். இங்க பார்..கூடத்தில சிக்னல் போட்டு வச்சிருக்கோம். இதுல அடுக்களை பக்கம் வர்றவங்க முறுக்கு சீடையெல்லாம் தின்னுட்டு போயிடறாங்கடா...சரி.. நீ சீக்கிரம் குளிச்சிட்டு வா. அம்மாவும், அப்பாவும் கோயிலுக்குப் போகணுங்கறாங்க.

ராமகி: (பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டே) சொல்ல விட மாட்டேங்கறானே.. என்ன ஆகப் போகுதோ?

(சற்று நேரத்தில் பாத்ரூமுக்குள்ளிருந்து ‘‘வயிறு வலிக்குதே...ரத்த வாந்தி வருதே’’...என்கிற ஓலம் கேட்கிறது. . மாதவன் & ஃபேமிலி ஓடி வருகிறார்கள். ராமகிருஷ்ணன் சுதாரித்துக் கொள்கிறான்.)

பகுதி 2

இடம்: மாதவன் வீடு. நேரம் : 14.8.2014 இரவு எட்டு மணி

பாத்திரங்கள்: மாதவன், ராமகிருஷ்ணன், இன்னொரு நண்பன் பூபதி

மாத: என்னடா, ராமகிருஷ்ணா, இங்கிருந்து கிளம்பிப் போனவன் பத்து நாளா பூபதி ரூம்ல தங்கிட்ட. எங்க வீட்ல தங்குடான்னா ருபேலா இருக்கான்னே. இப்ப எதுக்கு பூபதியோட திரும்பி வந்தே?
ராமகி: (தனக்குள்) அடப்பாவமே, நான் எபோலான்னு சொன்னதை ருபேலான்னு கேட்டிருக்கானே.
பூபதி: டேய்.. எனக்கு நாலஞ்சு நாளா காய்ச்சல்டா. பின்மண்டை குத்தலெடுக்குது. ஒரு நல்ல டாக்டரா சொல்லு.
மாத: நம்ம டாக்டர் தேவாமிர்தம் இருக்காரே, இப்பவே போலாம்.

அனைவரும் போகிறார்கள்.

ராமகி: (நடந்துகொண்டே) ஆமா, இந்த டாக்டர் எம் எஸ்ஸா, எம்டியா?
மாத: எஸ்எஸ்எல்ஸில ஏழு வருசம் ஃபெயில்.
ராமகி: ஐயையோ!
மாத: ஏன் பதர்ற? இவர் போட்ட பணத்தை எடுக்கணுங்கிற டென்ஷனில்லாம பிசினஸ் பண்ணுவாரில்லே?

பகுதி 3

இடம்: டாக்டர் தேவாமிர்தம் கிளினிக். நேரம் : 14.8.2014 இரவு ஒன்பது மணி

பாத்திரங்கள்: மாதவன், ராமகிருஷ்ணன், பூபதி, ருபேலா, டாக்டர் தேவாமிர்தம்

டாக்டர் தேவாமிர்தம் : (மொபைலில் ஒரு நோயாளியிடம்) நீர் பாட்டுக்கு மனைவி துணைவி தழுவி நழுவின்னு போயிண்டே இருக்காதேள்... எச்ஐவியும் உண்டு; பத்திரம்.(திரும்பி பார்த்து) வாங்கோ மாதவன்! அசௌக்கியமா இருக்கேளா?

(மாதவன் பதில் சொல்வதற்குள் பூபதி மயங்கி கோமாவில் போகிறான். டாக்டர் தேவாமிர்தம் உட்பட எல்லோரும் ‘‘டாக்டர் டாக்டர்’’ என்று கூச்சலிடுகிறார்கள். டாக்டர் சமாளித்து ஒரு டஜன் மருந்துகளை மாற்றி மாற்றி மூன்று மணி நேரம் போடுகிறார். பூபதி மயக்கம் தெளிந்து வெளியில் வருகிறான்.)

பூபதி : என்ன ஒரு பலம்! என்ன ஒரு புத்துணர்ச்சி! என்ன மருந்து டாக்டர் போட்டீங்க?
டாக்டர் : ஹி.. ஹி.. ஹி! நம்ம நர்ஸ் தேவகி குளுக்கோஸ் பாட்டில்ல ரசம் கொண்டு வருவா. பதட்டத்துல அதத் தூக்கி உன் நரம்புல ஏத்திட்டேன். சும்மா சொல்லக் கூடாது, வேப்பம்பூ ரசம் நல்லாவே வேலை செஞ்சிருக்கு.
ராமகி: சரி, இது என்ன காய்ச்சல்னு கண்டு பிடிங்க டாக்டர்
டாக்டர்: ம்...ம்.. பூபதி, நீங்க சமீபத்துல ஆப்பிரிக்கா போனீங்களா?
பூபதி: இல்லை.
(அதற்குள் ருபேலா வந்து ராமகிருஷ்ணனை தனியாக அழைத்துக் கொண்டு போய் என்னவோ பேசுகிறாள்)
டாக்டர்: நீங்க ஆப்பிரிக்கா போகல; ஆப்பிரிக்காவிலேர்ந்து வந்தவங்க கூட தங்கினீங்களா?
பூபதி: இல்லை.
டாக்டர்: ஆப்பிரிக்காவிலேர்ந்து வந்தவங்க கூட தங்கினவங்களுக்கு ஜூரம் வந்து அவங்க கூட நீங்க தங்கினீங்களா?
பூபதி: தலை சுத்துது.
ராமகி: (வந்து கொண்டே, அவசரமாக) டாக்டர், நான் துபாய்லேர்ந்து நேரா ஆப்பிரிக்கா போயிட்டேன். அங்க எபோலா வைரஸ் என்னை பிடிச்சுகிச்சு. அப்படியே இந்தியா வந்துட்டேன்.

மாதவன் & பூபதி: பாவி.. படுபாவி... அப்பவே சொல்ல வேண்டியது தானேடா?

ராமகி: சொன்னேனேடா... நீதான் பரவாயில்லேன்னு சொன்னியேடா. இப்பத்தான் தெரியுது, உன் வீட்டு டிராபிக் சத்தத்துல நீ சரியா கேக்கலேங்கிறது.
மாத: டாக்டர், இப்ப என்ன செய்றது? இவன் கதி என்ன? எங்க கதி என்ன?
டாக்டர்: சித்தே இருங்கோ. ரத்த டெஸ்ட் பண்ணிடறேன்.

(டாக்டர், ராமகிருஷ்ணனின் ரத்தத்தை சோதனைக் குழாயில் சேகரிக்கிறார். ‘தொப்’ என்ற சத்தமும், ‘திடுதிடு’ என்ற சத்தமும் கேட்கிறது. டாக்டர் பரிசோதனை செய்ய, மற்றவர்கள் பயத்துடனும் பதட்டத்துடனும் காத்திருக்கின்றனர்)

டாக்டர்: (வந்து கொண்டே) பொழைக்கிறதுக்கு ஒரு சான்ஸ் கூட இல்ல!
அனைவரும்: டாக்டர் ! ! !
டாக்டர்: நான் இவரைச் சொல்லல. இவர் உடம்புக்குள்ள புகுந்த எபோலா வைரசுங்களச் சொன்னேன். ஒவ்வொண்ணும் குத்துயிரும் கொலை உயிருமா கெடக்குது.

மாத: ஒரு தரம் ‘‘வயிறு வலிக்குதே...ரத்த வாந்தி வருதே"ன்னு இவன் கத்தினானே!

டாக்டர்: அது இவரா இருக்க முடியாது.. இந்த வைரசுங்க கத்தியிருக்கும். இவர் ரத்தத்தை எடுத்தபோது ஒரே ஒரு வைரஸ் விட்டா போதும்னு ஓடிப் போச்சு. மைக்ராஸ்கோப் கிட்ட வந்து பாருங்க!

அனைவரும் மைக்ராஸ்கோப் அருகில் வந்து பார்க்கிறார்கள்.

மாத: இது என்ன டாக்டர்? மைக்ரோ சைஸ் கண்ணாடி செப்பல்?
டாக்டர்: அந்த வைரஸ் அவசரமா ஓடி போச்சில்லையா, அப்ப அதோட கால்லேர்ந்து கழண்டு விழுந்த செப்பல் இது. அது ஒண்ணுதான் பொழச்சிருக்கு.
மாத: எப்படி?
டாக்டர்: மத்த வைரசுங்க கலீஜா இருக்கச்சொல்ல இது ஒண்ணுதான் படா நீட்டா இருந்ததுபா. வூட்டுக்கு வெளியேயும் தண்ணி தேங்க வுடாம, குப்பை போடாம வச்சிகிச்சு.கண்ட இடத்துல எச்சில் துப்பல.டெய்லி குளிச்சி அடிக்கடி கை வாஷ் பண்ணிகிச்சு. இருமல் தும்மல் வந்தா முகத்தை மூடிகிச்சு...
ராமகி: இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?
டாக்டர்: நாந்தான் மைக்ராஸ்கோப் வழியா பார்த்தேனே?
மாத: குளிக்கிறத கூடவா?
டாக்டர்: சே..சே..அதுதான் இவர் நுரையீரலுக்குள்ள புகுந்து கதவை சாத்திகிச்சே !

பகுதி 4

இடம்: மாதவன் வீடு. நேரம் : 17.8.2014 காலை எட்டு மணி

பாத்திரங்கள்: மாதவன், ராமகிருஷ்ணன், ருபேலா.

மாத: டேய் ராமகிருஷ்ணா! நீ வந்து ரொம்ப நாளாச்சு. எப்ப துபாய் போகப் போற?
ருபேலா: அண்ணா!
மாத: என்னா?
ருபேலா: ஒண்ணுமில்லே !
மாத: சரி. நீ பாஸ்போர்ட் விசா எல்லாம் எடுத்து வச்சிக்கோ.
ருபேலா: ஏய் அண்ணா!
மாத: என்னா?
ருபேலா: ஒண்ணுமில்லே !
மாத: ராமகிருஷ்ணா! உன்னை ஏர்போர்ட்டுல கொண்டு போய் டிராப் பண்ணிடறேன்.
ருபேலா: மட அண்ணா! நான் அப்போதிருந்து ‘ஒண்ணுமில்லே ஒண்ணுமில்லே’ ன்னு கத்திகிட்டிருக்கேன்; காதுல வாங்க மாட்டேங்கிற? அந்தாளு தனியா துபாய் போறதுல எனக்கு இஷ்டமில்லே!
மாத: புரியறது. அப்பா அம்மா கிட்ட சொல்லி உங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றேன்.
(ராமகிருஷ்ணன் நாணி கோணி நிற்கிறான்.)
மாத: என்னா அசட்டுத்தனம்; என்னா பவ்யம்! இதான் கல்யாணக் களையாடா? ராமகிருஷ்ணா, எபோலாவோடு வந்தே, ருபேலாவோடு போய் வாழப் போற. வாழ்த்துக்கள்.
முற்றும்.
அருணை ஜெயசீலி

எழுதியவர் : அருணை ஜெயசீலி (17-Aug-14, 7:18 pm)
பார்வை : 241

மேலே