எருமைச்சாணி

பெரியவுக.. பெரியவாளுக்கெல்லாம் வணக்கமுங்க. எம்பேரு ஒதுங்குனவன்னு வச்சிகிங்க.. புரியலன்னா
ஒதுக்குனவனுங்க..இப்ப கண்டிப்பா புரியுமுங்க.

என்னத்தே சொல்லப் போறேஞ் சாமி புதுசா...? எம் பாட்டம்மாரு.. எங்கப்பாமாருங்க..எல்லாருஞ் சொன்னதுதேங்...எங்க சாமி சொல்லவிட்டீக...?! கேட்டதுதேங்..

" ஏலே .............மவனேன்னு நீங்க எகத்தாளமா கூப்புடுற கொரலுக்கு ஓடியாந்து வேல செஞ்சி தாறேம்லா..நீங்க சொல்ற ஒங்க சொந்த வேலைய ஒங்க புள்ளகூட செய்யாதுங்க..நாம செய்வமுங்க.. வீட்டுக்குள்ளே வரப்பெடாதுன்னா வீட்டக் கட்டுனது ஆரு சாமி..? எங்கல்லெ ஒருத்தென்தேங்.. பொதுவா நீங்க துண்டப்போட்டு " அவஞ் சாதி புத்திய காட்டிப்புட்டாம்லா..ன்னு நீங்க பேசறப்ப ... உங்க வீட்டுக்குள்ள அருவாக்கத்தி ரத்தம் பூசுதுங்க...

" உயிர்களைக் கொல்லுதல் பாவம்" மின்னு நூல்சுத்தித் திரியுமுங்க ஒரு கூட்டம் . ஒழைக்கிறத தவிர ஒண்ணுந் தெரியாத எம் மனுசம்..... எஞ்சனம் வெளில நிக்க..ரத்தவாட புடிச்ச உங்களக்கூட்டிக் கட்டுமுங்க மொதமரியாதத் துண்டு. .. ரத்தம் ஈரமா இருந்தா பணம் வச்சி தொடைக்கலாம் . காஞ்சி போயிருந்தா காசக்கொண்டு சொரண்டலாம் இல்லங்க..? எங்களுக்கு துண்டெல்லாம் வேணாமுங்க. அடுத்தவன் வயித்துல அடிச்ச துண்டு தலையில இருந்தா என்ன... இடுப்புல இருந்தா என்ன...எங்க வேர்வைக்கி பழக்கப்படா பட்டுத்துண்டு எஞ் சனத்துக்கு வெறுந்துணிதேங்....!கட்டிவிட்டவா மஞ்சள் பூசுறா... நீங்க அதுல ரத்தம் பூசுவீக... ரத்தமும் மஞ்சளும் சேந்து எங்க மூஞ்சில கரியா வடியுதுங்க. அந்தக் கரிக்கவிச்சில எஞ் சாதிப்புத்தி என்னன்னு எங்களுக்கே தெரியல சாமி. ஒன்னச் சொல்லிக்கிறெம் சாமி.............எங்களால கெட்டவன் ஒருபய இல்ல...

சேத்துல கெடக்கிறெம்... சேத்துல பொழங்குறெம்... சேத்துக்குள்ளதாஞ் சாமி வாழ்க்கையே.. அப்பதே சோறு.. நாங்க தீட்டுன்னா நாங்க வெதச்ச சோறுந் தீட்டுதேங்.. எப்பிடி சாமி திங்கிறீக... எப்பிடி படைக்கிறீக..? இங்கின ஒன்னு சொல்லியே ஆகணும் .. சேத்துக்கும் சாக்கடைக்கும் நெறைய வித்தியாசம் இருக்கு...

அப்பறஞ் சாமி... இந்த கருமம் புடிச்ச காதலு...எளவு... எப்படித்தே வருதுன்னு தெரியல. .. ஒங்க மயனும் எங்க மகளுமின்னா... மயன் புதுமாப்பிள... மக பொணமோ.. பொதுப்பொண்டாட்டியோ....!! ஒங்க மக.. எங்க மயன்னா..மக புதுப்பொண்ணு.. மயன் கண்டிப்பா பொணந்தேங்.... கொஞ்ச நஞ்ச ஈரமிருந்தா ஊனம்...இப்படியான ஒரு வாழ்க்கைக்கு........... ஒங்க உசுரெல்லாம் நீங்க கம்பீரமுன்னு காட்டிக்கிற வெறும் மீச மசுருதேங்...கொளுத்துறத்துக்குதே குடிசை கட்டச் சொல்றீயளோ.? எரிக்கிறது எவ்வளவு சுளுவோ அங்கிட்டு அரை பர்லாங்கு சுளுதே... இடிக்கிறதும்.. இடிஞ்சிறாம பாத்துக்கங்க..

எங்காளுக எப்பவாச்சும் ஏணில ஏறிப்புட்டா, உங்கப்பு பெரும பேசி... அவகப்பு கடம பேசி காரியத்த சாதிச்சிப் புடுவீக.... அவங்ககிட்ட மட்டும் சாதி குருடாப் போயிரும்... காரியம் முடிஞ்சதும் " வக்காலி.. அவனுக்கெல்லாம் வாழ்க்கைடான்னு சாதி முழிச்சிக்கிரும்.. அதுவேற கத...அப்பமட்டும் எங்காளு ஊர்க்காரன்...மித்த நெரெமெல்லா சேரிக்காரப் பயலுக... இல்ல சாமி..?

ஒரு வெசயத்துல சந்தோசமுங்க. அஞ்சு வருசத்துக்கு ஒருவாட்டி ஓலைக்குடிசைக்குள்ள ஒங்க கற வேட்டி கண்டிப்பா வந்து போயிருது. எங்க வட்டுல ஒங்க எச்சிலு பட்டுக்குது. எங்க கெடா வெட்டுக்கெல்லாம் வேண்டிக்கிறது ஒன்னுதேங்... அந்த அஞ்சிவருசம் ஒருநா அன்னாடம் வரக்கூடாதான்னுதேங்.....!! இதுக்காக வண்டில வச்சி சீரு கேக்கல சாமீயளா... மனுசப் பொறப்ப மனுசனா பாருங்கப்பு..வாழ்க்கைய பகிருங்க.. வாழப் பழகுங்க..

இன்னொரு முக்கியமான வெசயமுங்க... இதுல எழுதிக் கெடக்கது எல்லாந் தமிழுதேங்... நாங்களும் தமிழந்தேன்...!!!

(பி.கு : என்னை இந்தப் படைப்பை எழுதத் தூண்டிய நான் மதிக்கும் மூத்த எழுத்தாளர் ஐயா கி. ரா அவர்களுக்கும் அவரது தலித்துகள் தொடர்பான பேட்டிக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். செய்தி மூலம்: தமிழ் ஒன் இந்தியா இணைய செய்தித்தாள். நன்றி)

எழுதியவர் : நல்லை.சரவணா (28-Aug-14, 12:51 pm)
பார்வை : 251

மேலே