ஆறில் ஒன்றன்றோ புரவலர் கொள்ளும் பொருள் - முத்தொள்ளாயிரம் 34

நேரிசை வெண்பா

என்நெஞ்சும் நாணு நலனும் இவையெல்லாம்
மன்னன் புனல்நாடன் வௌவினான் - என்னே
அரவகல் அல்குலாய் ஆறில்ஒன் றன்றோ
புரவலர் கொள்ளும் பொருள். முத்தொள்ளாயிரம் 34 சோழன் 12

பொருளுரை:

நாகப் பாம்பின் படம் போன்று அகன்ற அல்குலினை உடையவளே,
நாட்டைப் பாதுகாக்கும் மன்னர்கள் மக்களிடமிருந்து ஏற்கும் வரிப் பொருள்
ஆறில் ஒரு பகுதிதானே!

என் நெஞ்சம், நாணம், அழகு ஆகிய அனைத்தையும் காவிரியாறு பாயும்
நீர்வளம் மிக்க நாடனாகிய சோழமன்னன் கவர்ந்து கொண்டது என்ன நியாயம்?

விளக்கம்:

அரவு அகல் - நாகப் பாம்பின் படம் போல் அகன்ற

அல்குல் - அரை, பெண்குறியின் மேல்பக்கம்

பண்டைத் தமிழ் மன்னர்கள் மக்களிடமிருந்து அவர்களுடைய வருவாயில் ஆறில் ஒரு பகுதி வரிப் பணமாகப் பெற்றனர்.

சோழமன்னனாகிய தலைவனோ தலைவியின் மனம், நாணம், அழகு ஆகிய அனைத்தையும் பறித்துக் கொண்டான் என்பது அரசனது முறை தவறிய கொடுஞ்செயலாக உணர்த்தப் பெறுவது,

தலைவியின் காதல் மிகுதியை, சோழமன்னன் அவளது துன்பத்தைக் களையாமையைக்
காட்டுகிறது. .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Aug-14, 2:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 134

மேலே