பொன்னினைப் போல்போற்றிக் காத்துய்க்க - ஆசாரக் கோவை 95

தன்னுடம்பு தாரம் அடைக்கலம் தன்னுயிர்க்கென்
றுன்னித்து வைத்த பொருளோ டிவைநான்கும்
பொன்னினைப் போல்போற்றிக் காத்துய்க்க உய்க்காக்கால்
மன்னிய ஏதந் தரும். 95 ஆசாரக் கோவை

பொருளுரை:

தன்னுடைய உடம்பு, தன் மனைவி, தன்னிடத்தில் அடைக்கலமாக ஒருவன் வைத்த பொருள்,
தன் உயிர்க்கு உதவியாகும் என்று நினைத்துச் சேர்த்து வைத்த பொருள் ஆகிய இந்த நான்கையும்
பொன்னைக் காப்பது போல கவனித்துப் பாதுகாத்து ஒழுக வேண்டும். அவ்விதம் பாதுகாத்து
ஒழுகாவிட்டால் மிகுந்த துன்பத்தைத் தரும்.

கருத்துரை:

தன்னுடம்பு, தன்னுடைய மனைவி, அடைக்கலப் பொருள், தான் சேர்த்துவைத்த பொருள்
இவற்றை அருமையாகப் பாதுகாக்க வேண்டும்.

"எண்ணி நினைத்த பொருளோடு" என்றும். ‘எண்ணித்து வைத்த பொருளோடு' என்றும்,
‘அன்றே விழுமந் தரும்' என்றும் பாடம். உய்க்காக்கால் என்பது ‘உய்யாக்கால்' என்றும் பாடம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Sep-14, 2:26 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 143

சிறந்த கட்டுரைகள்

மேலே