ஓர் எழுத்தாளனின் கதை -தொடர்ச்சி 01 - சந்தோஷ்

ஓர் எழுத்தாளனின் கதை...!

தொடர்கிறது


கோவை அரசு மருத்துவமனை..!

தினகரன் மற்றும் காவியா -வை சுமந்த வந்த அவசர ஊர்தி தனது கடமையை கச்சிதமாக செய்தது. அவசர சிகிச்சைப்பிரிவில் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு என்பதால் எப்போதும் போல கடமைக்கு பணியாற்றமால் கடமையை கடமையாக செய்தனர் மருத்துவர்கள்.

தினகரனின் நாசியில் சுவாசம் வருகிறதா. இதயத்துடிப்பு இருக்கிறதா என்று பரிசோதித்த மருத்துவக்குழு பரபரக்கிறது. ஆக்சிஜன் சிலிண்டர் அவன் முகத்தில் பொருத்தி போய் கொண்டிருக்கும் அவன் உயிர் மீளுமா மீளாதா என்பதை அருகிலுள்ள மெடிக்கல் மானிட்டரில் அலை அலையாக சென்று கேள்வி எழுப்புகிறது.

உடைந்த பின்னந்தலையில் இரத்தம் வராமல் கட்டுப்போட்டிருந்த நிலையில் இருந்த காவியா வை பரிசோதித்த மருத்துவர்களிடையே பலத்த ஆலோசனை.

“ டாக்டர்.. எதுக்கும் எந்த ரியாக்‌ஷன் ஒன்னும் இல்லையே.! ” மருத்துவர் ஒருவர் சகமருத்துவரிடம்.
“வெண்டிலேட்டர் யூஸ் பண்ணி பார்ப்போம்.. மூச்சு சுத்தமா இல்ல. ” மற்றொரு மருத்துவர்.

சுவாசம் முற்றிலும் தடைப்பட்ட அல்லது சுவாசிக்க இயலாத நோயாளிகளுக்கு ஓர் அழுத்தம் கொடுத்து தீடிர் செயற்கைசுவாசத்தை உருவாக்கி உயிரை காப்பாற்ற உதவுவதே இந்த வெண்டிலேட்டா எனும் அறிவியல் கண்டுப்பிடிப்பு. இந்த சிகிச்சை மிகவும் ஆபத்தானது. இருக்கும் உயிரை எடுக்கும் அல்லது உயிரை கொடுக்கும். வேறு எந்த வழியில்லாத போது மருத்துவர்கள் வெண்டிலேட்டரை பயன்படுத்துவார்கள்.


அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே செவிலியர் ஒருவர் “ இங்க அட்மிட் ஆகியிருக்கிற ஸ்டூடண்ட்ஸ் கூட வந்தவங்க யார் இருக்கீங்க ? “

பத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்.. ”நாங்க இருக்கோம் சிஸ்டர்”

” அந்த பையன், பொண்ணோட பேரண்ட்ஸ் இல்லையா. ?இந்த பேப்பர்ல கையெழுத்து போடணும்.”

“ அதோ தினா அப்பா வந்துட்டு இருக்கிறார். சிஸ்டர் அது தினகரன் அப்பா அவர்கிட்ட வாங்கிக்கோங்க” மாணவி ஒருத்தி.

“ அப்போ அந்த பொண்ணுக்கு யார் வருவாங்க ?”

“ நானே போடறேன்மா , காவியா அப்பா அம்மா வெளியூருக்கு போயிருக்காங்க” தினகரனின் தந்தை.

“ சார் அந்த பொண்ணு சொந்தக்காரங்க யாராவது இருந்தா கூட..... “ நர்ஸ் தயங்க

“ அவளும் என் பொண்ணு மாதிரிதான் .நான் அவளுக்கு அங்கிள். கொடுங்க இரண்டு சைன்னும் நானே போடுறேன்.. அம்மா... டாக்டருங்ககிட்ட எப்படியாவது என் பசங்கள காப்பாத்திட சொல்லுங்கமா. டாக்டர்ஸ் மனசு விட்டிட போறாங்க.. “ தினகரனின் தந்தையின் குரல் தளதளத்தாலும் எப்படியும் தினகரன் காவியா பிழைத்துவிடுவார்கள் என்ற தனனம்பிக்கையில் தைரியமாக பேசினார்.


“ அங்கிள்...! காவியாவுக்கு அடிப்பட்டபோதே மூச்சு நின்னப்போச்சு அங்கிள்.. ஆம்புலன்ஸ் ஏத்தும்போதே ஒரு ரியாக்ட்டும் அவகிட்ட இல்ல “ ஆர்த்தி, காவியாவின் தோழி.

“ ஒன்னும் ஆகாதும்மா. மயக்கம் வந்தா கூடத்தான் மூச்சு நின்னமாதிரி நமக்கு தோணும். மெடிக்கல் பீல்டு ரொம்ப டெவெலப் ஆச்சு கண்ணா. கவலை விடுங்க. காவியா கண்டிப்பா காலேஜ்க்கு வருவா என் பையனோட... “ ஆர்த்திக்கு ஆறுதல் கூறினாலும் தினகரனின் தந்தைக்கு ஒரு பயம் உண்டாகியது.

“ கடவுளே...! முதல்ல அந்த பொண்ணு உயிரை காப்பாத்து.. ” என்று மேல்நோக்கி எங்கேயோ இருக்கும் கடவுளிடம் மனதிற்குள் சத்தமிட்டு வேண்டுகிறார். கேட்குமோ? கேட்காதோ ?

----------------------------------------------------------------------------


கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டமாக திசைமாறிய போதே ஏன் மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தவில்லை.?

மாணவர்களை கலைக்க தடியடி பிரயோகம் நடத்த அவசியம் என்ன ? பேச்சுவார்த்தையில் உங்களால் மாணவர்களை சமாளிக்க முடியாதா ?

குறிப்பிட்ட அந்த இரு மாணவர்களையும் குறி வைத்து அடித்தது ஏன் ?

உண்ணாவிரதத்தின் போது மாணவர்களுக்கு ஒலி வாங்கி பயன்படுத்த ஏன் அனுமதித்தீர்கள். ?

சர்ச்சைக்குள்ளான கவிதை வாசிக்கும்வரை காவல்துறை அங்கு என்ன செய்திருந்தது.?


மிக நேர்மையான மிகமிக நேர்மையான மாவட்ட ஆட்சியர் கிறிஸ்டி சபாஸ்டின் IAS ., கேள்விகளை வீசுகிறார் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயபிரகாஷ் மீது.


“ மேம், ஸ்டூண்ட்ஸ் கிட்ட ஆரம்பத்திலே பேசினோம். ஆனா அவங்க பிடிவாதமா உண்ணாவிரதம் இருப்போம்ன்னு அடம்பிடிச்சாங்க. அப்போ நாங்க ஸ்டூண்ட்ஸ் தானே அப்படீன்னு ப்ர்மிஷன் கொடுத்தோம். ஆனா இப்படி இஸ்யூ ஆகும்ன்னு எங்களுக்கு தெரியாது. “ ஜெயபிரகாஷ் IPS.

”ஒஹோ... லேடி போலீஸ் போர்ஸ், ஸ்மோக்கிங் வேன் இதெல்லாம் போயிருக்கே.. ஸ்டூண்ட்ஸை அடிக்கனும்ன்னு ப்ளான் பண்ணின மாதிரி தெரியுது. உங்களால அட்லீஸ்ட் மாணவர்களை கூட பேசி சமாளிக்க முடியாது..இல்ல அமைதியா முடிஞ்சு இருக்க வேண்டிய கூட்டம் சென்சிட்டிவ் இஸ்யூ ஆக்கினதே நீங்கதான்னு நான் சொல்றேன் சார் “ கோபத்தில் மாவட்ட ஆட்சியர் பேச,

“ மேம் அப்போ இருந்த சூழ்நிலைக்கு ஏத்தமாதிரி நான் முடிவெடுக்கும் அதிகாரத்தில இருக்கேன். நீங்க ஹையர் லெவல்ல இத மூவ் பண்ணிக்கோங்க. விசாரணை கமிஷன் வரும் அவ்வளவுதானே.. ? அந்த கமிஷனை எப்படி விசாரணை பண்ணினா எப்படி சரியாகும்ன்னு எனக்கு தெரியும்.” தன் நிர்வாக திறனை ஒரு பெண் குறைசொல்கிறார் என்பதை ஆணாதிக்க புத்தியுள்ள போலீஸ் எஸ் பி யால் பொறுக்கமுடியவில்லை.

”விசாரணை கமிஷனை எப்படி விசாரணை செய்தால் சரியாகும் ”என்று அலட்சியமாக பேசும் எஸ்.பிக்கு தெரிந்திருக்கிறது. நம் நாட்டில் விசாரணை கமிஷன் என்பது எப்போதும் ஏசி அறையில் முந்திரி பக்கோடா தின்று கொழிக்கும் கமிஷன் என்று.
-----------------------------------------------------------------------------

”சார் உங்க பையன் கண்ணு முழிச்சுட்டான். நீங்க மட்டும் வந்து பார்க்கலாம் “ நர்ஸ் ... தினகரனின் தந்தையிடம் நல்ல செய்தி சொல்கிறார்.

” தேங்க் காட் .. தேங்க்ஸ்மா.. “ என்று ஓட்டமும் நடையுமாக மகனை காண ஓடுகிறார்.

அவசர சிகிச்சை பிரிவில் தினகரன்....................

முகம் வீங்கி விழிகள் சிவந்திருக்கிறது. கால் பழத்திருக்கிறது. முட்டியில் கட்டு போடப்பட்டுள்ளது. இடது கை பெருவிரல் பிளந்திருக்கிறது. முதுகில் போலீஸ் லத்தியின் தடயங்கள். வாயில் சிவப்பு கறைகள். உடல் முழுவதும் இ.சி.ஜி ஒயர்கள், இரத்த துளிகள்.

” டேய் டேய் தினா... நான் சொல்லியும் கேட்காம போனீயா டா.. கவிதை கிவிதை லாம் உனக்கு வேண்டாம் டா... நீ நல்லா இருந்தா போதும் தினா... இப்படி உன்னை பார்க்கவா நான் உயிரோட இருக்கேன். கடவுளே....... கடவுளே...... ” தினகரனின் தந்தை பாசத்தின் மிகுதியில் கண்ணீர் விட்டு கதற.


“ அ.................. ........அப்பா ! கா ......கா ஆ .. கா.............வி காவி “ வழக்கத்திற்கு மாறாக அதிக உணர்ச்சியில் திக்கி திக்கி.. காவியா பெயரை உச்சரித்து நலம் விசாரிக்க முயலுகிறான் என்பதை புரிந்துக்கொண்டவராக .....


“ இங்க இங்கதான் தினா..அடுத்த ரூம்ல ட்ரீட்மெண்ட் ல இருக்கா...... ஒன்னும் ஆகியிருக்காது “ என்று ஆறுதல் சொல்லும்போதே மீண்டும் நர்ஸ் பதட்டத்துடன் ஓடிவந்து.. “ சார் அந்த பொண்ணோட பேரண்ட்ஸ் க்கு போன் பண்ணிடுங்க “

“ஏம்மா என்ன ஆச்சு.. .... ? “


தினகரன் இதயத்தில் எழுதப்பட்ட காவியா...................................................... ????????



( தொ..ட...ரு.. ம்)



--இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (11-Sep-14, 6:13 am)
பார்வை : 322

மேலே