ஆஸ்கார் இசையும் தமிழ்நாட்டுப் பாமர ரசிகனும்

ரோஜா படம் வந்தப்பவேன்னு நான் எழுத ஆரம்பிக்கும் போதே 'ஜா'வுக்கு பதிலா 'சா' போட்டு ரோசான்னு எழுதலையே இது தப்பு இல்லையான்னு எனக்குள்ள ஒரு கவுலி கத்துது பாருங்க அந்த கவுலிக்குப் பேருதான் தமிழ்ப்பற்று. தூய தமிழ்ல தூபம் போடுறேன்னு சொல்லிக்கிட்டு வீட்ல பிள்ளைங்க கிட்ட அமெரிக்கன் ஸ்டைல்ல பேசி ட்ரெயினிங்க் கொடுக்குற அப்பாடக்கர் எல்லாம் இல்லைங்க...நா. அதுக்காக கொஞ்சம் கூட அப்டி இப்டி பாக்காம ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீசரா (அச்சச்சோ மறுபடி ஆங்கிலம்) இருக்கறதுலயும் எனக்கு உடன்பாடு இல்லை.

இந்த ரெண்டாவது பாரா ஆரம்பிக்கு போதே என் பிரச்சினை என்னனு கேட்டீங்கன்னான்னு சிம்பு மாதிரி ஒரு சொம்பு டைப்ல ஆரம்பிக்கலாம்னு நினைச்சு அப்புறம் அதை கைவிட்டத உங்ககிட்ட எல்லாம் நான் சொல்லியே ஆகணும். சொல்லியே ஆகணும்னு சொல்லும் போது சொல்லுக்கு 'சொ' போடாம ஜொ போட்டா எப்டி இருக்கும்? ரொம்ப கேவலமா இருக்கும்ல...? இப்போ என் பிரச்சினை என்னன்னானு சரியா ஆரம்பிச்சு நான் ஸொல்ல வந்ததை ஸொல்லிடுறேன். ரகுமான் சார பத்திப் பேச வந்துட்டு நீ ஏண்டா தமிழ்ல எழுதறதப் பத்தி பேசிட்டு இருக்கேன்னு கேக்குறீங்களே... ? நீங்க மட்டும் ஏன் எழுத வந்தவன பாத்து பேச வந்தேன்னு கேள்வி கேக்குறீங்க...?

ரோஜா படம் வந்தப்பவேன்னு மறுபடியும் இந்தக் கட்டுரையோட முதல் பாராவுக்கு உங்களை எல்லாம் ஈவு இரக்கம் இல்லாம கூட்டிட்டு போற என்னை கொஞ்சம் சகிச்சுக்கோங்க...மக்கள்ஸ்! ரோஜா படம் வந்தப்பவே எனக்கு...அடுத்தடுத்து ரகுமான் சார் எப்போ மியூசிக் போடுவார், அவர் மியூசிக் போட்ட படம் எப்போ ரிலீஸ் ஆகும்னு ஒரே ஒரே ட்ரீம்ஸா இருக்கும். காதல் ரோஜாவே பாட்டை பார்ட் பார்ட்டா கேட்டு ஹம்மிங்கோட காலர தூக்கி விட்டுக்கிட்டு உள்ளுக்குள்ள இருந்த காதலுக்கு உரம் போட்டு வளர்த்த கதைய இன்னிக்கு ஏதாச்சும் ஒரு நெடுந்தொடர் எடுக்குற டீம் கிட்ட கொடுத்தோம்னா சன் டிவில அட்டகாசமா 1200 நாள் ஓடுற ஒரு நாடகம் ரெடி. ரகுமானோட சவுண்ட் எஃபகட்ஸ்யும், மிக்ஸிங்கும் மேஜிக் பண்ணி நம்மள எல்லாம் தூக்கிக்கிட்டு ஏதோ ஒரு மாயஜால உலகத்துக்குள்ள கொண்டு போய் விட்டுடும். அதுக்கப்புறம் அது சிக்குபுக்கு ரயிலே ஆக இருக்கட்டும் இல்ல உசிலம்பட்டிப் பெண் குட்டியாகட்டும் மனசு ச்ச்சும்மா தில்லானா ஆடும்.

புதுப் புது பாடகர்கள அவர் அறிமுகப்படுத்தி புதிய குரல்களை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு கொண்டு வந்தது எல்லாம் சரிதான்னாலும் ரகுமானோட காலத்துலதான் தமிழ இங்கிலீஸ்லயோ இல்லை வேற மொழியிலயோ எழுதி வச்சுக்கிட்டு பாடகர்கள் பாடுறஒரு ட்ரெண்ட்...செம்மையா டெவலப்பானுச்சு. பாடகர்ன்னா உச்சரிப்பு தெளிவா இருக்கணும் அதுவும் தமிழ் மாதிரி செம்மையான ஒரு மொழியை தாய்மொழியா கொண்ட மக்களுக்கு ரகுமான் உதித் நாராயணன் மாதிரி ஆளுக வச்சு செஞ்சுப் போட்ட உப்புமா என்னவோ ருசியாத்தான் இருந்துச்சு ஆனால்....அவர் ' கொன்டு மல்லி ரெண்டு ரூபாய் உன் கொந்தால் ஏறி உதிரம் பூ கோடி ரூப்பாய்னு' பாடினத கேட்டுட்டு அப்டியே அதை உல்டா அடிச்சு பேச ஆரம்பிச்சுது பாத்தீங்களா ஒரு தலைமுறை அங்கதான் கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி மெல்ல நம்ம வழமைக்குள்ள ஊடுருவி பேச்சுத் தமிழுக்கு கொஞ்சம் பெண்ட் எடுக்க ஆரம்பிச்சுது...

ரகுமான் மட்டுமே இதைச் செஞ்சார்னு சொல்ல வரலை ஆனா அவர் நிறைய செஞ்சார். போறாளே பொன்னுத்தாயின்னு கணீர் குரல்களை பாடவச்சு தேசியவிருதுகள எல்லாம் வாங்க வச்ச அதே ரகுமான் புதுப் புதுக் குரல்களை கொண்டு வர்றேன் பேர்வழின்னு மொழியை சரியா உச்சரிக்காத பாடகர்களை தன் இசைக்கு ஏத்த மாதிரி வளைச்சுக்கவும் செய்தார்ன்றதுதான் வருத்தமான உண்மை. தமிழ் மொழியை சரியா உச்சரிக்காத வசனங்கள் நிரம்பிய தமிழ்ப்படத்தை தமிழ்நாட்ல ஓட்ட முடியுமா? ஆங்கில கலப்புங்கறது ஒரு மாதிரியான வலின்னு சொன்னா தமிழை வேறு ஒரு பாவத்தில் பேசுவது இன்னொரு மாதிரியான கொடுமை.

ஆரம்ப கால ரகுமான் தமிழ்நாட்டிற்குள் இசையமைத்துக் கொண்டிருந்தார், இப்போது உலக இசையமைப்பாளர் என்பதெல்லாம் சரிதான். அப்டி உலக மக்களுக்காக உலகத்தரத்தோட அவர் ஆல்பங்கள வெளியிட்டு அதை வியாபாரமாக்கிக் கொள்ளட்டும் ஆனா தமிழ் நாட்ல தமிழர் மண்ணுல தமிழர்களுக்காக வெளிடப்படுற திரைப்படங்கள்ள உலகத் தரம்ன்ற பேர்ல அன்னியமான இசையை அறிமுகம் செய்றது என்னைய மாதிரி பாமரத் தமிழர்களுக்கு செய்ற துரோகம் இல்லையா ரகுமான் சார்...? மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்தமயிலேன்னு நீங்க போட்ட ட்யூன கேட்டுக்கிட்டும், பாடிக்கிட்டும் இங்க சைக்கிள்லயும், மாட்டு வண்டியிலயும் பஸ்லயும் போன பயலுக எத்தனையோ பேரு...! எங்க ஊர்ல நாங்க பாக்கற படத்துக்கு கொஞ்சமாச்சும் தமிழுப்பயலுவ மனசுல நிக்கிற மாதிரி இசைமைச்சா கொறஞ்சா போய்டுவீங்க...?

ஆஸ்கார் பரிசு வாங்கிக்கிட்டு சென்னை வானூர்தி நிலையத்துல இறங்கி இந்த ஊரு சாலையிலதான சார் நீங்க உங்க வெளிநாட்டு கார ஓட்டிக்கிட்டுப் போனீங்க...? கோடம்பாக்கத்துல இருக்க சுப்பாராய நகர்லதான சார் அந்த ஆஸ்கார் அவார்ட வச்சி இருக்கீங்க..? ஆரம்ப காலத்துல வந்த அத்தனை ரகுமான் பாட்டுலயும் புதுமையும் தெளிவும் இருந்துச்சு. இப்போ சமீபமா எந்திரனுக்கு கொஞ்சம் முன்னாடி, ஆரம்பிச்ச அவரோட உலகத்தரம் 'கடல்' வழியா பயணிச்சு இப்போ.....ஐ படத்துல விஸ்வரூபம் எடுத்து தாண்டவம் ஆடிட்டு இருக்கு.

எங்கூருக்கு போகணும்னா சிவகங்கையில இருந்து காளையார்கோயில் போற பஸ்ல ஏறி கொல்லங்குடின்னு சொல்லிட்டு ஒரு சின்ன டவுன்ல இறங்கணும் அதத் தாண்டி அந்த கருவ முள்ளுக்காட்டுக்குள்ள ஒரு நாலஞ்சு மைலு கம்மாக்கரை ஓரமாவே நடந்து போனம்னா இன்னமும் பேருந்து வசதி இல்லாத கடை கண்ணி இல்லாத அந்த கிராமத்தைப் பாக்க முடியும். காலையில இருந்து அந்த வானம் பாத்த பூமியில வேல செஞ்சுட்டு, வத்திப் போயி கிடக்குற கம்மாய ஏக்கமா வேடிக்கை பாத்துக்கிட்டே.. ரெண்டு தூத்த எப்பப் போடும்னு வேடிக்கைப் பாத்துக்கிட்டே நான் சொன்னேனே அந்த கொல்லங்குடிக்கு சாங்காலமா டீ காப்பி குடிச்சுப்புட்டு பிஞ்சு நொஞ்சு கிடக்குற தினத்தந்தி பேப்பர வாசிக்க வர்ற எங்கூரு ஆளுக....

ஏப்பு சாயக்கடக்காரரே ஏதாச்சும் நல்ல பாட்டா சவுண்டு வச்சுப் போடுங்கன்னு சொன்னா....

அதுக்கு அந்த சாயக்கடைக்காரரு ....கசடதபற... ஞமண நமனன்னு ஆரம்பிக்கிற 'ஐ' படத்துப் பாட்டப் போட்டு அதுக்கப்புறம் வலிப்பு வந்த மாதிரி கத்துற இடத்துல சவுண்ட்ட கூட வச்சா...என்ன ஆகும்னு யோசிச்சுப் பாருங்க....! யெப்பே ரேடியாப் பொட்டியா அமத்துறியா இல்லை தூக்கிப் பொட்டு உடைக்கவான்னு தானா கேப்பாங்க..? அப்டி பாட்டும் புரியாம இசையும் புடிக்காம சாந்தமான புரியற மாதிரி பாடல்கள கேக்கணும்னு ஆசைப்படுறது எப்டி தப்பாகும்? இந்த மண்ணுல பொறந்த மனுசன் இந்த மண்ணுக்குரிய பாட்ட இந்த மண்ணுலதானே கேக்க ஆசைப்படுவான்...? உங்க கார்ப்பரேட் இசையப்பத்தி அவனுக்கு என்ன கவலை இருக்கு...?

தமிழ் பாரம்பரியத்தை எல்லாம் பின்பற்றி இசை அமைக்கக் கூட தேவையில்லை..., எஸ்பிபி, ஜேசுதாஸ் போன்ற ஜாம்பவான்களை ஓரம் கட்டிட்டுக் கூட போங்க, லபோதிபோன்னு என்ன ப்யூசனா வேணும்னாலும் அது இருந்துட்டுப் போகுது ஆனா....

குறைஞ்ச பட்சம் பாடலோட மொழி புரியற அளவுலயாவது இசை இருந்தா பாமர ரசிகர்களாலயும் அது ரசிக்கப்படும் அவ்வளவுதான். இப்டி எல்லாம் எழுதினதால ரகுமான் சாரோட இசைக்கு நான் எதிரின்னு எனக்கு முத்திரைக் குத்திடாதீங்க ஏன்னா...

ரோஜா படம் வந்தப்பவேன்னு நான் எழுத ஆரம்பிக்கும் போதே 'ஜா'வுக்கு பதிலா 'சா' போட்டு ரோசான்னு எழுதலையே இது தப்பு இல்லையான்னு எனக்குள்ள.....

.....மறுபடியும் முதல்ல இருந்தான்னு தானே யோசிக்கிறீங்க...இதோட டீல் முடிஞ்சுடுச்சு நீங்க உங்க பயணத்தை தொடருங்க மக்கள்ஸ்ஸ்ஸ்!!!!

எழுதியவர் : Dheva .S (16-Sep-14, 4:51 pm)
பார்வை : 292

மேலே