ஒரு சிறு கதை

ஒரு சிறு கதை ..

வேனல் காலம்.

மலையடி வாரத்தில் மேய்ந்துகொண்டிருந்த ஆடுகளை வழக்கம் போல் வீட்டிற்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தான் ஒரு சிறுவன்.

கதிரவன் மெள்ள மெள்ள மறையத் தொடங்கவும் வழியில் இருள் படரத் தொடங்கிய அந்நேரம் மந்தையிலிருந்து இரு இளம் ஆடுகள் விலகிச் செல்வதை அச்சிறுவன் காணவில்லை.

பூவரசம் இலையில் செய்த ஊதிலியை இசைத்தவாறே நடந்துகொண்டிருந்தான்.

திசை மாறிய இளம் ஆடுகள் மலையடிவாரத்தில் அங்கும் இங்கும் ஒன்றாகவே சென்றன. அப்பொழுது, வழியில் அது ஒரு குள்ள நரியைச் சந்தித்தது.

குள்ள நரி ஆட்டுக்குட்டியிடம் “எங்கே போகிறாய்?” என்று கேட்டது.

அதற்கு ஆட்டுக்குட்டி இரண்டும் “நரியாரே, எங்களை ஒரு விவசாயி வளர்த்து வருகிறான். வேளாவேளைக்கு உணவு படைத்து நாங்கள் வளர்ந்ததும் எங்களை நகரத்தில் இருக்கும் கசாப்புக் கடைக்காரனிடம் விற்று பணம் சம்பாதிக் கொள்கிறான். இது எங்களுக்குப் பிடிக்கவில்லை. நீ செய்வது சரியா என்று கேட்ட என் தாய் தந்தையரை அவன் பழித்து அடுத்த தினமே கசாப்புக் கடைக்காரனிடம் விற்றுவிட்டான் எங்கள் இனமே அவன் பிடியில் சிக்கி கஷ்டப்படுகிறது. எனவே, நாங்கள் இருவரும் தப்பித்து வந்து விட்டோம். இப்பொழுது எங்கு செல்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் இந்த இருளில் அலைகிறோம். விதி விட்ட வழி போய்க் கொண்டிருக்கிறோம்” என்று பதிலளித்தது.

இதைக்கேட்ட நரி “என் நிலை உங்கள் நிலையை விட மோசமானது. கழுகோ, பருந்தோ கோழிக் குஞ்சைத் தூக்கிக் கொண்டு போய் விட்டால் எப்போதும் என்மீதே பழி சுமத்துகிறார்கள். காக்கை வடை திருடியது என்று இன்றும் குழந்தைகளுக்கு கதை சொல்லுகிறார்களே. அதுபோலத் தான் என்மீதும் திருட்டுக் குற்றம் சுமத்துகிறது இந்த சமுதாயம். அதனால் நானும் தந்த வாழ்க்கையை வெறுத்து இங்கு வந்துவிட்டேன். நாம் இருவரும் இன்றுமுதல் நண்பர்கள். ஒன்றாகவே வாழ்வோம்” என்று கூறியது.

குள்ள நரியும் ஆட்டுக்குட்டிகளும் இணைந்து சென்றன. கொஞ்ச தூரம் சென்றதும் அவை பசியோடிருந்த ஒரு ஓநாயைச் சந்தித்தன.

ஓநாய் அவர்களைப் பார்த்து “எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டது.

அதற்கு நரி “நாங்கள் விதிவிட்ட வழியே போகிறோம்”என்றது.

ஓநாய் உடனே “அப்படியானால் நானும் உங்கள் கூடவே வருகிறேன்” என்றது.

ஆட்டுக்குட்டி, நரி, ஓநாய் மூன்றும் ஒன்றாய் நடந்தன.

ஓநாய் திடீரென ஆட்டுக்குட்டியைப் பார்த்து “என்ன ஆட்டுக்குட்டியே, நீ ஏன் எனது கம்பளியை எடுத்துப் அணிந்துகொண்டிருக்கிறாய்?" என்று கேட்டது.

உடனே குள்ளநரி குறுக்கிட்டு “உண்மையிலேயே இது உனது கம்பளி தானா?” என்று கேட்க ஓநாய், “உறுதியாக இது என்னுடைய கம்பளி தான்” என்றது.

“அப்படியானால் உன் பொருளை நீ எடுத்து கொள்வது தான் நியாயம்” என்று குள்ளநரி தர்மம் பற்றி வியாக்யானம் செய்தது.

இளம் ஆடுகளை பீதி பற்றிக்கொள்ள "இல்லை .. இல்லை" என்று கத்தியது.

ஆனால் ஓநாய் ஆட்டுக்குட்டிகளை விடுவதாக இல்லை. அவைகள் மீது பாய்ந்து தோலை உரித்து எடுத்துவிட்டுத் தன் பசியைத் தீர்த்துக் கொண்டது.

குள்ள நரிக்கும் ஒரு பங்கு கிடைக்க நரியும் மகிழ்ச்சியில் திளைத்தது.

நீதி: மாறாதைய்யா மாறாது .. மனமும் குணமும் மாறாது.

எழுதியவர் : (18-Sep-14, 10:25 am)
Tanglish : oru siru kathai
பார்வை : 324

மேலே