சுற்றுப்புற சூழல் தினம் ஜூன் 5

உலகம் முழுவதும் சுற்றுப்புற சூழல் தினம் ஜூன் 5ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இயற்கையின் எல்லா பிரிவுகளோடும் மனிதனுக்கு ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு இருக்கிறது. தான் வாழும் இடத்தை தூய்மையாக வைத்திருக்கும் பொறுப்பு எல்லா தனி மனிதர்களுக்கும் உண்டு. சிறு சிறு அலட்சியங்களால் மாசுபடுத்தப்படும் சுற்றுப்புறம் இன்று பூமிக்கே பெரும் அச்சுறுத்தலாய் உருமாறியிருக்கிறது.

சுற்றுப்புறச்சூழலில் மாசு உருவாக்கியிருக்கும் மிகப் பெரிய சவால் உலக வெப்பம் அதிகரிப்பு என்று உலக நாடுகள் ஒத்துக்கொண்டிருக்கின்றன. பூமியின் வெப்ப அளவு அதிகரிப்பது என்பது ஏதோ ஒரு காலநிலைச் செய்தி போல வாசித்து கடந்து போக வேண்டியதல்ல. இது மிகப் பெரிய மாற்றங்களை பூமியில் ஏற்படுத்தி மனித குலத்துக்கே மாபெரும் அச்சுறுத்தலாய் உருமாறிவிடும்.

1995க்குப் பிறகு பூமியின் வெப்பம் பெருமளவுக்கு அதிகரித்திருக்கிறது. இது பூமியின் சாதாரண வெப்ப அளவின் விகிதத்தை பெருமளவுக்கு மீறியிருப்பது கவலைக்குரிய செய்தி. நீராவி, கரியமில வாயு, ஓசோன், மீத்தேன், நிட்ரஸ் ஆக்சைடு போன்றவற்றின் அளவு பூமியில் அதிகரித்திருப்பது பூமியின் வெப்ப அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகும். காடுகளை அழிப்பதும், எரிபொருட்களின் வெப்பமும் பூமியின் வெப்ப நிலை ஏற்றத்துக்கு இன்னும் சில காரணங்கள்.

முதலாவதாக உலக வெப்பம் அதிகரிப்பினால் கடல் மட்டம் உயரும். கடல் மட்டம் உயர்வதனால் பல நிலப்பரப்புகள் கடலுக்குள் மூழ்கிப் போகும் அபாயம் உண்டு. பங்களாதேஷ், நெதர்லாந்து, இங்கிலாந்தின் சில பகுதிகள் தாழ்வாக இருப்பதனால் முதல் பாதிப்பு அடையும் வாய்ப்பு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள். வெப்பம் சீராக இல்லாமல் அதிகரிப்பது இயல்பாய் நடந்து கொண்டிருக்கும் காலநிலையை முற்றிலும் சிதைத்து விடுகிறது.

வெள்ளப்பெருக்கு, வெப்ப அலைகள் பூமியில் வீசுதல், சூறாவளி போன்ற பல இயற்கைச் சீற்றங்களுக்கும் இது காரணமாகி விடுகிறது. ஒழுங்கற்ற மழையும், கோடையில் அதிக வெப்பமும், பனிக்காலத்தில் கடும் பனியும் இந்த பூமியின் வெப்ப நிலை மாற்றத்தின் காரணமாக உருவாகும். தற்போதைய வெப்ப அளவு இது வரை இல்லாத அளவுக்கு வேகமாக அதிகரிப்பதாக அமெரிக்காவின் நாசா கவலை தெரிவித்துள்ளது. மலேரியா, டெங்கு காய்ச்சல் போன்ற பல நோய்கள் இந்த வெப்ப ஏற்றத்தினால் வெகு வேகமாகப் பரவுகின்றன.

நான்கு லட்சம் ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பூமியில் கார்பன்டை ஆக்ஸைடு அதிகரித்திருப்பதாகவும் இதற்கு முக்கியக் காரணம் தொழிற்சாலைகள் எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்த கரியமில வாயு பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள மிலன்கோவிட்ச் வளையத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் என்றும், அப்படி நிகழும் பட்சத்தில் துருவப்பனி வேகமாய் உருகி பூமியை மூடி விடும் என்றும் இன்னொரு ஆராய்ச்சி அச்சுறுத்துகிறது.

இந்த செயல் தொடர்ச்சியாக நடக்கும் போது பூமி முழுவதும் ஒருநாள் தண்ணீருக்குள் மூழ்கிவிடும் அபாயம் உண்டு. பசிபிக் பெருங்கடலும், அட்லாண்டிக் பெருங்கடலும் 1950களுக்குப்பின் பெருமளவில் வெப்பமடையத் துவங்கியிருக்கின்றன. இந்தியப் பெருங்கடலில் கடந்த 45 ஆண்டுகளாக வெப்பம் அதிகரித்திருக்கிறது. கார்பன்டை ஆக்ஸைடின் அதிகப்படியான தேக்கம் கால நிலையில் பெரும் மாறுதலை உருவாக்கியிருக்கிறது.

மரங்கள் குறைவாக இருப்பது காலநிலை மாற்றத்தின் காரணிகளில் ஒன்று. நானூறு ஆண்டுகளுக்கு முன் மரங்களை வெட்டியதற்காக மன்னனால் மரண தண்டனை பெற்ற ராஜஸ்தான் பஷானியர்களைப் பற்றிய குறிப்பே நமக்கு சுற்றுப்புறச்சூழல் குறித்து கிடைத்திருக்கும் மிகப் பழைய தகவல். வளரும் நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு சுற்றுப்புறச் சூழல் குறித்த விழிப்புணர்வு இன்னும் வரவில்லை என்பது கவலைக்குரிய செய்தியாகும்.

தூய்மையான இருப்பிடம் என்பது ஆரோக்கியமான வாழ்வின் அடிப்படை. மனிதன் இயற்கையை விட்டும், தூய்மையை விட்டும் தூரமாய் செல்லும்போது நோய்களின் கூடாரத்தைச் சென்றடைகிறான். நாடு என்பது வீடுகளின் கூட்டம். வீடும் அதைச் சுற்றிய இடங்களும் தூய்மையாக இருக்கும்போது ஒட்டுமொத்த நாடும் தூய்மையாகிறது.

அமெரிக்காவில் ஓடும் வாகனத்திலிருந்து எதையேனும் வெளியே எறிந்தால் $ 500 அபராதம் செலுத்தவேண்டும். எனவே அங்கே யாரும் பொது இடங்களை அசுத்தமாக்குவதில்லை. அமெரிக்காவில் இருக்கும்போது சுற்றுப்புறத்தை சுத்தமாய் வைத்திருக்கும் இந்தியர்கள் கூட, இந்தியா வந்ததும் அதை மறந்து விடுவது தான் வேதனை. மரங்கள் நடுவது பரவலாக செயலாக்கத்தில் இருக்கும் ஒரு வழிமுறை. இது ஒளிச்சேர்க்கைக்காக கரியமில வாயுவை அதிக அளவில் உள்ளிழுப்பதால் பூமியின் கரிய மில வாயு அளவு குறைகிறது. இது பூமியின் வெப்ப அளவை சற்று குறைக்கிறது.

வெப்பத்தையும், காற்றையும் வேறு சக்தியாக மாற்றும் பல புதுப்புது முயற்சிகளை ஆராய்ச்சியாளர்கள் செய்து வருகின்றார்கள். இது பூமியின் வெப்ப அளவை சற்றே மட்டுப்படுத்தும் என்பது அவர்களின் கணிப்பு. மக்கள் தொகைப்பெருக்கமும் பூமியின் வெப்ப அளவு அதிகரிப்பதற்கு ஒரு முக்கியமான காரணமாகும். வாகனங்களின் பெருக்கமும், அவை சரியான பராமரிப்புகளில் இல்லாததும் பூமியில் கரியமில வாயுவின் பெருக்கத்தை அதிகரிக்கிறது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனாவும், இந்தியாவும் அதிக கரியமில வாயுவை வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் இருக்கின்றன. மாசுகளை பல வகைகளாக பிரிக்கலாம். தூய்மையான இயற்கை காற்றில் கரியமில வாயுவின் அளவு அதிகரிப்பதும், தூசுகள் மிகுந்திருப்பதும், ஆலைகளின் புகைகளால் காற்று தன்னுடைய தூய்மையை இழப்பதும் காற்றை மாசுபடுத்தும் வகையில் சேர்கின்றன.

தண்ணீரை மாசுபடுத்துவது என்பது நிலத்தடி நீரை மாசுபடச் செய்யும் காரணிகளை உள்ளடக்கியது. தேங்கி நிற்கும் தண்ணீருக்கு சரியான வடிகால் வசதிகள் இல்லாமல் போகும் பட்சத்தில் தண்ணீர் மாசுபடுகிறது. கதிரியக்கம் போன்றவற்றால் சுற்றுப்புறம் மாசு அடைவது ஒரு வகை. தொழிற்சாலை அமிலங்களினால் சுற்றுப்புறங்கள் அசுத்தமடைவது இன்னொரு வகை. சாலை, விமான, தொழிற்சாலை சத்தங்களால் உடைக்கப்படும் இயற்கையான மௌனம் கூட ஒரு வகையான மாசு தான்.

அதிகப்படியான வெளிச்சத்தினாலும், வெளிச்சம் சார்ந்தவற்றாலும் சுற்றுப்புறத்துக்கு ஏற்படும் இன்னல்களை வெளிச்ச மாசு என்றழைக்கிறார்கள். தொழிற்சாலைக் கழிவுகள், மருத்துவ கழிவுகள், மின்பொருள் கழிவுகள், உணவு, தண்ணீர் என எல்லா வகையான கழிவுகளும் நம்மை சிக்கலுக்குள்ளாக்குகின்றன. ஆஸ்துமா, அலர்ஜி, புற்றுநோய், மன அழுத்தம், தூக்கமின்மை, தோல் நோய்கள், ரத்த அழுத்தம், கேட்கும் திறன் குறைதல் போன்ற பல நோய்கள் சுற்றுப்புறம் தூய்மையின்மையால் வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக அளவில் தண்ணீர் மாசு காரணமாக ஆண்டுக்கு 14,000 பேர் இறந்து கொண்டிருப்பதாக உலக சுகாதார நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது. அமெரிக்காவில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்காக பல சட்டங்கள் உள்ளன. தூய்மையான காற்று சட்டம், தூய்மையான தண்ணீர் சட்டம் என துறை வாரியாக இவை பெயரிடப்பட்டுள்ளன. சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு அமில மழையைப் பெய்ய வைக்கிறது.

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பெய்யும் அமில மழை ஏரிகளையும், நிலங்களையும் பாதிப்படையச் செய்கிறது. ஜெர்மனி, ஸ்காண்டினேவியா போன்ற இடங்களில் பெய்த அமில மழை காடுகளிலுள்ள மரங்களின் இலைகளையும், ஏன் வேர்களையும் கூட அழித்திருக்கிறது. பூமியின் கரியமில வாயு பெருக்கம், கடலின் கரியமில வாயு அளவை அதிகரிக்கிறது. இதனால் கடல் நீர் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறது.

கடல்நீர் மாசுபடுவதற்கு 60% விழுக்காடு சாக்கடை கடலில் கலப்பதே காரணமாகிறது. எண்ணைத் தன்மையும், சோப்பு போன்ற பிற ரசாயனங்களும் கடலில் தொடர்ந்து செல்வதால் கடல் அசுத்தமடைந்து கொண்டே இருக்கிறது. சுமார் இரண்டரை லட்சம் கடல் பறவைகள் இதன் மூலம் இறந்து விட்டதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. நிலம் உயிரினங்களின் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது என்பதறிவோம்.

நிலத்தில் கலக்கும் ஆலைக் கழிவுகளும், அணு கழிவுகளும், செயற்கை உரங்களும், பிற நச்சுப் பொருட்களும் நிலத்தின் தன்மையை மாற்றி விடுகின்றன. இதன் மூலம் பூமியுடன் தொடர்பு கொள்ளும் உயிரினங்கள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. நிலத்தில் விளையும் காய்கறிகளில் இந்த நச்சுத் தன்மை படர்ந்து மனிதர்களின் உடலிலும் கலந்துவிடுகிறது. குழந்தைக்கு ஊட்டப்படும் தாய்ப்பாலில் கூட இந்த காய்கறிகளின் நச்சு கலந்திருப்பதாக மருத்துவ ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

உலக அளவில் உள்ள தண்ணீரில் 0.01 விழுக்காடு மட்டுமே குடிநீர். அந்த தண்ணீரும் தற்போது குறைந்தும், மாசுபட்டும் வருவது உயிரினத்துக்கே விடுக்கப்பட்டிருக்கும் சவாலாகும். உலகையே அச்சுறுத்தும் இந்த பிரச்சனையில் தனி மனித ஈடுபாடே ஒரு தீர்வை நல்க முடியும். எனவே சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், செயலாக்கவும் ஒவ்வொருவரும் முன்வருதல் வேண்டும். அதுவே வருங்கால தலைமுறையினருக்கு தரமான பூமியை நல்கும்

எழுதியவர் : (19-Sep-14, 5:02 pm)
சேர்த்தது : Adam Biju1
பார்வை : 6034

சிறந்த கட்டுரைகள்

மேலே