ஓர் எழுத்தாளனின் கதை -தொடர்ச்சி 04 - சந்தோஷ்

தொடர்ச்சி :04
------------------------------

அரைஇமையில் விழித்த காவியாவிடம் முதன்மை மருத்துவர் முகமது ஜாபர் அவள் கன்னத்தை தட்டிக்கொண்டே ” காவியா.......இங்க பாரும்மா.. உன் பேரு காவியாதானே...........? ஞாபகம் இருக்கா உன் பேரு காவியா ? “

” தினா..... தினா............!! “ காவியா பேச ஆரம்பித்தாள்.

“தினா வா..? யாரு அது?. அவர் உனக்கு எப்படி தெரியும்.? “ மருத்துவர் ஆச்சரியத்துடன் கேட்க,

“ தினா.. தினா.. தினகரன்.” முழுப்பெயரை அரைமயக்கத்தில் காவியா உச்சரிக்க. மருத்துவர் மிக சரியாக புரிந்துக்கொண்டார். காவியாவிற்கு காதல் என்று.

“ ஓ தினகரன் ... ! அவர் பேரா.. சரிம்மா உன் பேரு என்ன ? நான் இப்போ சொன்னேன்ல”

“ காவியா”

“இஸ். இட்! காவியா.. கடைசியா எங்க போனீங்க. ஞாபகம் இருக்கா ? “

” அய்யோ... தினாவை அடிக்கிறாங்க.. அவன் கால் முட்டில அந்த போலீஸ்காரன் அடிக்கப்போறான். ஐய்யோ.....! தினா ..... தினா...... தினா......!!!!! ................” போராட்ட சம்பவத்தில் காவியா அடிப்படுவதற்கு முன் அவள் பதறிய மனநிலையை வார்த்தையாக இப்போது வருகிறது.

“ ஓ தினாவை அடிக்கிறாங்கன்னு ஞாபகம் இருக்கா. ஏன் அடிக்கிறாங்க. ? தினா யாரு உனக்கு ?.. “

“ போராட்டம் செஞ்சோம்... அதான் அடிச்சாங்க. தினா என்னோட என்னோட .. “

” ம்ம் சொல்லுமமா உன்னுடைய..... ப்ரெண்டா...? “ டாக்டர் அந்த நேரத்திலும் சற்று புன்முறுவலுடன் கேட்க.

“ ஆமா ஆமா அவன் என்னோட கிளோஸ் கிளோஸ் ப்ரெண்ட்.” மயக்கத்தில் இருந்த காவியாவின் இதழில் காதல் புன்சிரிப்பு.
“ ஓ சரி சரி கிளோஸ்ஸ்ஸ் ப்ரெண்டா...? “ நீட்டி முழுக்கி மருத்துவர் கிண்டலாக தொடர்கிறார். “ போராட்டத்தில தினா க்கு என்னாச்சு. ஞாபக இருக்கா ?

“ அவனுக்கு இரத்தம் வந்துச்சு.. கையில, மூக்குல.... அப்புறம் என்னாச்சுன்னு தெரியல டாக்டர். அவன் எங்க. நான் ஏன் இங்க இருக்கேன்...? “

“ ஓகே கூல் கூல். ஒன்னும் ஆகலம்மா உங்க ரெண்டு பேருக்கும் அடிப்பட்டு ஆஸ்பிட்டல் வந்துட்டீங்க.உனக்கு தலையில அடிப்பட்டு சுயநினைவு போயிடுச்சு. இப்போ ஆல்ரைட். உன் தினா-க்கு லேசா அடிப்பட்டு இங்க தான் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கான். “

“ டாக்டர் ... தினா வை நான் பார்க்கனும். நீங்க பொய் சொல்றீங்க. ப்ளீஸ்”

“ ஒகே காவியா பார்க்கலாம்... இப்போ உனக்கு ஒரு ஊசி போடுறேன். நீங்க கொஞ்ச நேரம் தூங்கிட்டு அப்புறம் பார்க்கலாம்” மருத்துவர் காவியாவிற்கு ஏதோ ஒரு ஊசி போட்டு அவளை கொஞ்ச நேரம் உறங்க வைக்கிறார். முழுவதும் குணமடைய அவளுக்கு தேவை இப்போது ஓர் ஆழ்ந்த உறக்கம்.
-------------------------------------------------------------------------------------------------------

கோவை-பீளமேடு காவல் நிலையம்..!

தினகரனின் தந்தை இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதத்தில் ..

“ சார். என் பையன் அடிப்பட்டு டீரிட்மெண்டுல இருக்கும் போது நீங்க அராஜகமா தூக்கிட்டுவந்தது சரியில்ல. ஹாஸ்பிட்டல் டாக்டருக்கிட்ட நீங்க எந்த பர்மிஷன் ரிக்வெஸ்டும் பண்ணாம எபபடி என் பையனை தூக்கிட்டு வரலாம். ? “ தினகரனின் தந்தை ஆவேசத்துடன்.

” பொறுங்க சார். எங்களுக்கு வந்த ஆர்டர் அப்படி. எல்லாம் ரூல்ஸ் படிதான். பொடா ஆக்ட் ல அரெஸ்ட் பண்ணியிருக்கோம். சட்டவிரோதமான பேச்சு. வன்முறை தூண்டுதல் கேஸ். இதுக்கு யார்கிட்டயும் பர்மிஷன் கேட்க அவசியமில்ல. ரூல்ஸ் படிதான் அரெஸ்ட் பண்ணியிருக்கோம். ம்ம்ம் உங்களுக்கு தெரிஞ்ச ரூல்ஸ் படி நீங்க உங்க பையனை திரும்பவும் ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போங்க யார் வேண்டாமுன்னு சொன்னா ? ”

“ என்ன சார் பொல்லாத ரூல்ஸ்.. மனிதாபிமானம் சட்டத்திற்கு இல்லையா.? ஓரு அப்பாவி மாணவனை அடிச்சிட்டு இழுத்துட்டு வருவீங்க. கோடி கோடியா கொள்ளையடிச்சவன் நெஞ்சு வலிக்குதுன்னு ஹாஸ்பிட்டல படுத்துப்பான் . அவனுக்கு போயி குனிஞ்சு குட்மார்னிங் சொல்லிட்டு அரெஸ்ட் பண்ணாம பம்முவீங்க அவனும் பெயில் வாங்கிட்டு ஜகா வாங்கிடுவான். இதுதான் சட்டமா.? .ஒன்னுத்துக்கும் புடுஙக முடியாத சட்டத்தை வச்சி எங்க உசிரதான் புடுங்குவீங்களோ? காக்கி சட்டை போட்டா பெரிய மனுஷனங்க கண்ணுக்கு தெரியாதோ....? .எனக்கு உங்க சட்டம் மண்ணாஙகட்டி எல்லாம் தெரியாது சார் ஒரு உயிருக்கு போராடும் நோயாளியை ஈவு இரக்கம் இல்லாம அடிச்சு இழுத்துட்டு வந்து இருக்கீங்க. மனசாட்சிப்படி பேசுங்க. உங்க பையனை எந்த போலீஸ்காரனாவது அடிச்சா உங்களுக்கு பொறுக்கமுடியுமா ? ”

“ சார்.......... இது கவர்மெண்ட் ஆர்டர். போங்க இவ்வளவு நியாயம் பேசுறீங்கதானே.. போயி ஆர்டர் போட்ட சி. எம் , பி. எம் யை கேள்வி கேளுங்க. ஏன் சார் ஏன்.. நாங்க வேலைக்காரனுங்க. எங்கள கேள்வி கேட்டு ஒரு பிரயோஜனமும் இல்ல சொன்ன வேலையை நாங்க செய்றோம். போங்க போங்க சார். போயி வக்கீலை பார்த்து எதாவது பண்ணமுடியுமான்னு பாருங்க. ”

“ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நல்லா பேசுறீங்க சார். அநியாயங்களை கேள்வி கேட்க வேண்டிய இடத்தில இருந்துட்டு எங்கள கேள்வி கேட்க சொல்றீங்க. அப்புறம் எதுக்கு உங்களுக்கு காக்கி சட்டையும் கவர்மெண்டு சம்பளமும்.. ? இப்படி ஆட்சிக்கு ஆட்சி கட்சிகாரனின் உப்பு திங்க தப்பு பண்ணத்தான் டிரெயினிங் எடுத்தீங்களோ. வரும் சார் காலம் வரும் உங்களையும் உங்களை ஆட்டுவிக்கிற அரசாங்கத்தையும் கேள்வி கேட்கும் காலம் வரும் சார் . எவனாவது வருவான். இந்த மக்களுக்கு சூடு சொரணை வர மாதிரி எதாவது பண்ணுவான். கவர்மெண்ட் பவர். போலீஸ் பவர். கட்சி பவர் எல்லா பவரும் வச்சி சாமானிய மக்கள்கிட்ட மட்டும் பலம் காட்டுவீங்க. அடச்சீ...!! “

ஒரு பொதுஜனத்தின் எந்த வாக்குவாதமும் சட்டம் காக்கும் காக்கி சட்டைகளிடம் எடுபடாது. காக்கிகளுக்கு மனசாட்சி இருப்பது அரிது. காந்தி படம் அச்சிட்ட காகிதங்களை காட்டினால் மென்று திங்கும் கழுதைகளாக சில காக்கிகள் இருக்கும் வரை காவல் துறை என்பது வெறும் குப்பை வாரியத்துறைதான். ஆம் சட்டத்தை வைத்து அப்பாவிகளை மட்டும் வாரியெடுக்கும் குப்பைத்துறை.

தினகரனின் தந்தை ஒர் அனுபவம் வாய்ந்த வழக்கறிஞருடன் தீவிரமாக ஆலோசனை செய்து, மனித உரிமை ஆணையம், தமிழக கவர்னர், உள்துறை அமைச்சர், உயர்/உச்ச நீதிமன்ற நீதிபதி, குடியரசுத்தலைவர் ஆகியோருக்கு ஓர் அவசர விண்ணப்பம் அனுப்பினார்.
ஒரு கல்லூரி மாணவன் சமூக நலனுக்காக போராடும் போது அவன் ஆவேசத்தில் பேசும் பேச்சுகளுக்கு கண்டனம் தெரிவித்து அறிவுறுத்தலாம். அதைவிடுத்து அவனின் பிண்ணனியை பார்க்காமல் ஒரு மாணவன் மீது பொடா சட்டம் பாய்ச்சுவது எந்த விதத்தில் நியாயம். இந்த அரசாங்கத்திற்கு தேவை என்ன. ஒரு நல்ல குடிமகனை உருவாக்குவதா.? அல்லது ஒரு மாணவனை தீவிரவாதியாக சித்தரிப்பதா..? இதுப்போன்ற கடுமையான வரிகளுடன் விண்ணப்பம் அனுப்பட்டது. தினகரன் தந்தையின் பெயரில்....!

இந்நிலையில்.... அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருக்கும் காவியா நல்ல உடலநல முன்னேற்றம் அடைந்தாள்.

” காவியா ..! ஏன் டா உனக்கு இந்த வேலை. படிக்கவந்த இடத்தில இந்த போராட்டம் லாம் எதுக்குடா “ காவியாவின் அம்மா.

“ அம்மா,, தினா எங்கம்மா.? யார் கேட்டாலும் சரியா பதில் சொல்லமாட்டிங்கிறாங்க.? “ காவியாவின் எண்ணம் எல்லாம் தினகரனின் மீதே இருந்தது.

“ ஏய்.. காவியா.. இங்க நானும் அம்மாவும் உனக்கு என்னாச்சுன்னு பதறி துடிச்சு வந்திருக்கோம். எங்கள விட உனக்கு அவன் மேலதான் அக்கறை இருக்கா.. உடம்பு சரியில்லன்னு பார்க்கிறேன். இல்ல தொலைச்சுடுவேன் தொலைச்சு. “ காவியாவின் முன்கோபக்கார தந்தை.

“ டாடி.. சும்மா கத்தாதீங்க... தினா என் ப்ரெண்ட். நாங்க ஒன்னா படிக்கிறோம். அக்கறையில்லாம இருக்குமா. ? ஏன் டாடி இப்படி இருக்கீங்க.. ச்சே...

அம்மா. நீ சொன்னமாதிரி படிக்க வந்த இடத்தில படிச்சா மட்டும் போதுமா? ஏன் பொண்ணுங்க எங்களுக்கு சமூக அக்கறை இருக்க கூடாதா. ? நீ காய்கறிகாரன் கிட்ட காய் வாங்கும் போது என்ன என்ன கேள்வி கேட்டுகிற..? இப்போ மார்கெட்டுக்கு வந்ததா.? பழசா ? ஏன் கேரட் மண்ணா இருக்கு. முருங்ககாய் ஏன் ஒல்லியா இருக்கு . .அது இதுன்னு ஏன் கேட்குகிற?

நல்ல காய்கறி வாங்கினா.. நல்ல சமையல் பண்ணலாம்ன்னு தானே... . நீ பொம்ளதானே , இல்லத்தரசிதானே.. அப்படியே எதுவும் கேட்காம உன் வேலையை மட்டும் பார்த்தா என்னாகும்...?

அதுப்போலதாம்மா.. நாம சாப்பிடுற மீனை பிடிச்சிகொடுக்கிறவங்களை அங்க சிங்களத்தவன் பிடிச்சு கொன்னுட்டு இருக்கான். நமக்கு சாப்பிட கொடுத்தவஙக கதியை நாம கவனிக்காம விட்டா... பாவம் இல்லையா அம்மா.... நம்ம நாடு, நம்ம கவர்மெண்டு அதை பார்த்து சும்மா இருக்குது. தட்டி கேட்காம தப்பா முடிவு பண்ணுறாங்க. கேள்வி கேட்கிறோம். தனியா கேட்டா பதில் வராது. கூடி கோஷம் போடுறோம். அவங்க காதுல விழும். தொல்லை தாங்கமா எதாவது பண்ணுவாங்க/
ஏன் தெரியுமா?. நம்ம கவர்மெண்ட் ஒழங்கா இருந்தா. ஒழங்கா நம்ம சனங்களுக்கு நல்ல விஷயம் பண்ணினா , நாங்க படிச்ச பிறகு நல்ல வேலை தேடிவரும். நல்ல வாழ்க்கை அமையும். நாம இந்த நாட்டுல நிம்மதியா வாழனும். சோ , எல்லாம் ஒழங்கா இருந்தாதான் நம்ம வாழ்க்கையும் சந்தோஷமா இருக்கும் அம்மா. எந்த போராட்டத்திலும் ஒரு சுயநலம் இருக்கும் மா. அது தனிமனிதனின் சுயநலம் மட்டும் இல்ல. நம்மள சுத்தி எல்லாம் நல்லா இருந்தான் தான் நாம நல்லா இருக்கமுடியும்ன்னு ஒரு பொதுநல மாயையுள்ள சுயநலம். அம்மா.. எனக்கு இப்போ இருக்கிற டென்ஷன்ல தினா மட்டும் தான் ஞாபகத்திற்கு வரான். என்னால டீடெயிலா சொல்லமுடியல. அவன் எங்க அம்மா..? நர்ஸ் இங்க இல்லன்னு சொல்றாங்க “

என்று காவியா பேசிக்கொண்டிருக்கும் போதே....


“ மிஸ். காவியா. உங்கள அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம் ” காக்கிகள் காவியாவிற்கு முன்.



(தொ...ட..ரு..ம்)


--------------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (20-Sep-14, 7:17 am)
பார்வை : 244

மேலே