சுருங்கிப் போகின்றதுலகம்

(சுருக்கமாய் ஒரு கதை)



அம்மாவின் சொல்கேட்கும் அருமைப்பெண், வாணீ !
அம்மா எதைச்சொன்னாலும் உடனே ஏற்றுக்கொண்டுவிடுவாள்!

பள்ளிக்குப் போகச் சொன்னால், அழுது அடம் பிடிக்காமல் செல்வாள்!

படிக்கச் சொன்னால், முதல் மதிப்பெண் பெற்று பூரிப்படையச் செய்வாள் .

பாட்டும் , நடனமும் கூட , இவ்விதம் அம்மா சொல்லித் தான் வாணிக்குக்
கைவசமாயின .

மகளின் செயல்பாட்டைக் கண்ணுங் கருத்துமாய் கவனிப்பதில்
வாணியின் தாய்க்கு நிகர், அவளே தான் !

புத்தகப் பைதூக்கிப் பள்ளிக்குக் கிளம்பும் நொடி முதற்கொண்டு ,
பாடம் முடிந்து வீடு திரும்பும் நேரம் வரையில், சேர்ந்த நண்பர்கள்,
நேர்ந்த காரியங்களென எல்லாமும் அவளால் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும்
என்பதை அறிந்தோ அறியாமலோ... வாணியும், அம்மாவின் பரிந்துரை பெற்ற
சில தோழிகளைத் தவிர்த்து யாரோடும் சேர்வதில்லை, உரையாடலும் கொள்வதில்லை.

அண்டைவீட்டிலுள்ளோர் விரும்பியூட்டும் திண்பண்டங்கள் வாணியின் உடல்நிலைக்கு
ஒவ்வாதென்பதாலும், அங்கே கூடிவிளையாடும் பிள்ளைகளின் கூட்டு,
அவள் உள்ளத்திற்கு ஒவ்வாதென்பதாலும், அவளுக்கு வேண்டும் பொம்மைகள்
புத்தகங்கள் என எல்லாவற்றையும் போதும் போதும் என்றான அளவிற்கு
வாங்கிக் குவித்து, அவளை வீட்டிற்குள்ளாகவே வைத்து வளர்த்துப் பராமரித்தாள்,
அவள் தாய்.

பயிற்றுவிக்கப்பட்டவை வளர்ந்து பழக்கங்களாயின! வாணியும் வளர்ந்தாள்!!
வாலிபனின் கரம் பிடித்தாள் !

இப்போது நகரத்தின் மாபெரும் அடுக்குமனைக் குடியிருப்பி னொருதளத்தில்
குடியிருக்கிறார்கள் வாணியும் குடும்பமும்!

”வாணி அங்கே, சமர்த்தாய் இருக்கிறாள். வீட்டுக்குள் சென்று கதவை
தாழிட்டுக் கொண்டால் இருக்கும் இடமே யாருக்கும் தெரிவதில்லையாம்”
சொல்லி சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்கிறாள் வாணியின் தாயார் !

”சாப்டுட்டு அறைக்குள்ளேயே இருக்கணும்,
யார் கூப்பிட்டாலும் வெளியே வரப்படாது.... புரிஞ்சுதா?”
அதே நேரம்,
இங்கே தன் ரெண்டு வயது மகளிடம் கட்டளையிட்டுக் கொண்டிருந்தாள்.....வாணீ !

(வாணியின் குழந்தையும், தாய்சொல் கேட்கும் சமர்த்துக்குழந்தைதான்!)


*******************************************************************************************************************************
அன்புடன் ,
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (23-Sep-14, 11:34 am)
பார்வை : 261

மேலே