இரண்டு ஜீவன்கள்

"என்ன பாப்பா! இவ்வளவு நேரம் தூக்கமா? மணி 7 ஆச்சு! இன்னும் எந்திரிக்கலயா", என்று தன் மகளை அதட்டிக்கொண்டே கவிதா வேலைக்கு கிளம்புகிறாள்.

"அம்மா நம்ம வீட்ல தான் கடிகாரமே இல்லையே! எப்டி மணி 7ன்னு சொல்ற?"

"ரேடியோல இப்பதாண்டி நீயூஸ் போட்டாங்க. அத வச்சுதான் சொன்னேன். சரி சரி எழுந்திரிச்சு போய் பல்ல தேச்சிட்டு படி"

"ச்சே! லீவு நாள்ல கூட கொஞ்ச நேரம் தூங்க விடமாட்டியே", என்று அம்மாவை கடிந்துகொண்டே பல்தேய்க்க செல்கிறாள் மகள் ஜெயா.

"அவனையும் எழுப்புமா. என்னமட்டுந்தான் எழுப்புவ! உன்னோட செல்லமகனை பத்துமணி வரைக்கும் தூங்கவிடுவ!"

"போடி வாய் பேசாம வாயாடி", என்று பேசிவிட்டு இரண்டு பேருக்கும் காலை உணவை எடுத்து வைத்துவிட்டு, "இரண்டு பேரும் சாப்டிட்டு படீங்க", என்று சொல்லிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டாள் கவிதா. மகளும், மகனும் நான்கு மற்றும் இரண்டாம் வகுப்பில் படித்து வந்தனர்.

மறு நாள் இருவரும் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினர்.

"அம்மா வருவதற்கு லேட்டாகும்போல. எங்க வீட்டுக்கு வந்து உட்காருங்களே!", என்று பக்கத்துவீட்டு பெண்மணி அழைத்தார். ஆனால் இருவரும் செல்லவில்லை. ஏனென்றால் அக்கம் பக்கத்து வீட்டுக்கு சென்றால் உதைவிழும் என்று அம்மா சொல்லியிருக்கிறார். இரவு அம்மா வந்தவுடன் மூவரும் சாப்பிட்டுவிட்டு உறங்கச்சென்றனர்.

படுத்தவுடனே கவிதா எப்போதும்போல ஆரம்பித்தாள். "ஜெயா! காலை கொஞ்சம் மிதிடி. காலெல்லாம் வலிக்குது".

"ஏம்மா! பஸ்ல போவேண்டியது தானே! தினமும் காலை மிதி! காலை மிதின்னு ஏம்மா படுத்தற"

"பஸ்ல போற காசை மிச்சம்பண்ணி தாண்டி உங்களுக்கு பீஸ் கட்டவேண்டியிருக்கு. நீ ஒழுங்கா படிச்சு பெரிய ஆளா வந்து உங்க அம்மாவுக்கு காரே வாங்கித்தா. சரியா"

அன்று ஞாயிற்றுக்கிழமை. வீட்டுக்கு பாட்டி ஒருவர் வந்தார்.

"ஜெயா! இந்தா மிட்டாய். தம்பிக்கும் கொடு. இந்தா மருதாணி. கை நிறைய போட்டுக்க. ஆமா அம்மா எங்க?"

"அம்மா வேலைக்கு போயாச்சு, நீங்க யாரு?"

"நான் ஒங்க அம்மாவோட பாட்டி. இந்த ஞாயித்துக்கிழமையிலும் ஓய்வில்லாம உழைக்கிறாளா ஒங்க அம்மா?"

"அம்மாவோட பாட்டியா? நாங்க பாத்ததே இல்லையே! இத்தன நாளா ஏன் எங்கள நீங்க பாக்க வரவேயில்லை. அம்மா சொந்தக்காரங்க யாரும் இல்லேனுல்ல சொன்னாங்க!"

"நீங்க குழந்தையா இருக்கும்போது பாத்திருக்கேன். அம்மா அப்படி சொல்லியிருந்தா அதுக்கு ஒரு காரணம் இருக்கு. எனக்கு ரொம்ப நாளா ஒடம்பு சரியில்ல. இப்பதான் கொஞ்சம் பரவால்ல. அதான் பாத்துட்டு போலாம்னு வந்தேன். எப்படி வாழ்ந்தவ தெரியுமா ஒங்க அம்மா? ஒங்க அம்மாவுக்கு எல்லாருமே இருக்காங்க"

"என்ன? அம்மாவோட அப்பா, அம்மாவெல்லாம் இருக்காங்களா?. எங்கள ஏன் யாரும் பாக்க வரதில்ல"

"சொல்றேன். சொல்றேன். உங்க அம்மாவுக்கு அம்மா, அண்ணன், அக்கா, தங்கச்சி எல்லாம் இருக்காங்க. ஆனா அப்பா மட்டும் இல்ல. ஏன்னா உங்கம்மா உங்கப்பாவ காதலிச்சு வீட்ட விட்டு ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அவங்க அப்படி கல்யாணம் செஞ்ச அன்னைக்கே உங்க அம்மாவோட அப்பா, அதாவது உங்க தாத்தா, துக்கம் தாங்க முடியாம இறந்துட்டார்."

"அப்பவே உங்கம்மாவ எல்லாரும் தலை முழுகிட்டாங்க. இந்த வீடு உங்க அப்பாவுடையது. இது மட்டும் இல்லேன்னா இன்னும் ரொம்ப கஷ்டப்படுவா. உங்கம்மாவ நான் மட்டும் பாக்க அப்பப்ப வருவேன். ஏன்னா என் பேத்தீன்னா எனக்கு உசுரு. அவ காதலிச்சு கல்யாணம் செஞ்சாலும் கொஞ்ச நாள் தான் சந்தோசமா இருந்தா. உங்கப்பாவுக்கு குடி பழக்கம் இருந்துச்சு. ஒருநாள் குடிச்சிட்டு கால் தவறி கீழே விழுந்து பின் தலையில் அடிபட்டு இறந்துட்டார். அவர் இறந்ததுக்கு கூட யாரும் வரல. நான் மட்டும் தூரத்துல இருந்து பாத்துட்டு போயிட்டேன்"

அம்மா வந்ததும் அவரை பார்த்துவிட்டு கிளம்பினார் பாட்டி.

இரண்டு மூன்று வருடங்களுக்குப்பின்...

பசங்கள் இருவரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து அம்மாவிற்காக காத்திருந்தனர்.

திடீரென்று கவிதாவுடன் வேலை செய்யும் ஒருவர் பதட்டமாக வீடு வந்தார்.

"ஜெயா! உங்க அம்மா வரும்போது ஒரு விபத்துல இறந்துட்டாங்க."

சுக்கு நூறாகிப்போயினர் இருவரும். எல்லாம் முடிந்தவுடன் பாட்டி வந்து இருவரையும் அழைத்துசெல்ல, அப்பாவுடைய சொந்தங்களிடம் இருவருக்கும் அடைக்கலம் கிடைத்தது.

வாழ்க்கை நரகமாக நகர்ந்தது. தம்பி படிக்காமல் வேலைக்கு செல்ல ஆரம்பித்தான். ஜெயாவும் வீட்டிலேயே வேலை செய்துகொண்டு காலத்தை கழித்தாள்.

ஜெயா திருமணமே செய்யக்கூடாது என்ற முடிவுடன் தன் தம்பிக்காக வாழவேண்டும் என்று நினைத்துக்கொண்டு வேலையைத் தொடர்கிறாள். நாட்கள் நகர்கின்றன.

இருவரும் பெரியவர்களாக தன் தம்பிக்கு நல்ல இடத்தில் பெண் எடுத்து திருமணம் செய்துவைக்கிறாள் ஜெயா.

தம்பியின் மனைவி ஜெயாவிடம், "நீங்க ஏன் கல்யாணம் வேணாம்னு சொல்றீங்க. நான் உங்களுக்கு கல்யாணம் செஞ்சுவைக்கிறேன்", என்று சொல்ல உடனே மறுக்கிறாள் ஜெயா.

"நீங்க யாரையாவது காதலிச்சீங்களா? ஏன் கல்யாணம் வேணாங்கறீங்க?"

"எங்கம்மாவும் அப்பாவும் காதலிச்சு தனியாய்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டனாலதான், நானும் என் தம்பியும் இன்னிக்கு யாரும் இல்லாம தனியா நிக்கறோம். காதலிக்கறது தப்புன்னு நான் சொல்லல. ஒவ்வொருத்தரும் கல்யாணம் செஞ்சுகிட்டு காதலிக்கணும். பெற்றோரை எதிர்த்து எங்கம்மா கல்யாணம் செஞ்சதாலதான் அவங்களோட வாழ்க்கையே சரியா அமையல. அவங்க செஞ்ச தப்புக்காக, தப்பே செய்யாத நாங்க ரெண்டு பேரும் எவ்வளவு கஷ்டப்பட்டோம்னு எங்களுக்குத்தான் தெரியும்"

"அம்மா! அம்மானுட்டு ராத்திரி படுக்கும்போதெல்லாம் கண்ல இருந்து தண்ணி தண்ணியா வரும். நாங்க என்ன தப்பு பண்ணோம். எங்களுக்கு ஏன் இந்த நிலைமைன்னு"

"எனக்கு ஒரு ஆசை தெரியுமா? எங்கம்மா ஆசபட்ட மாதிரி ஒரு கார் வாங்கணும். கல்யாணம் எல்லாம் வேண்டாம்"

"எவ்வளவோ பேர் காதலிச்சு கல்யாணம் செஞ்சவங்க எல்லாம் நல்லாத்தானே இருக்காங்க. ஒருசில பேரோட வாழ்க்கை தான் கேள்விக்குறியா இருக்கு"

எப்படியெல்லாமோ பேசி ஜெயாவிடம் திருமணத்திற்கு சம்மதம் வாங்குகிறாள் தம்பி மனைவி.

ஜெயாவிற்கு திருமணம் நல்லபடியாக முடிகிறது. கணவரும் மிகவும் நல்லவர். நல்ல பணியில் உள்ளவர்.

ஜெயா தன் கணவரிடம் முதல்முதலாக ஒரு சத்தியம் வாங்குகிறாள். எக்காரணம் கொண்டும் மதுவை தொடக்கூடாதென்று. அவரும் சத்தியம் செய்கிறார்.

ஜெயாவின் கணவர் அவள் ஆசைப்படியே கார் வாங்குகிறார். நால்வரும் சேர்ந்து சொந்த ஊருக்கு காரில் செல்கிறார்கள். அவர்கள் வருகைக்காக அங்கு இரண்டு ஜீவன்கள் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆம். கல்லறையில்....!

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (29-Sep-14, 8:37 pm)
Tanglish : irandu jeevankal
பார்வை : 331

மேலே