எல்லை

அது பாகிஸ்தான் ஃபைசலாபாத் நகரின் நடுத்தரக் குடும்பம். கார்கில் சண்டையில் ஈடுபட்டு அந்த முயற்சியில் ராணுவ அதிகாரி ஃபியாஸ்கான் மரணமடைந்து ஓரிரு மாதங்களே ஆகியிருந்தன. இந்நிலையில் ஃபியாஸ்கானின் ஒரே மகன் ரசூல் ராணுவத்தில் சேர விரும்பினான். இதற்கு அவன் தாயார் கதீஜா கொஞ்சம் கூட சம்மதிக்கவில்லை. வீட்டுப்பெரியவரும் தன் தாய் மாமனுமான கதீஜாவின் மூத்த சகோதரர் இஸ்மாயிலை விட்டு தன் தாயாரிடம் பேசச் சொன்னான்.

"மூன்று தலைமுறைகளாக நம் குடும்பம் ராணுவத்துக்கு ஆளனுப்பி சேவை செய்து கொண்டிருக்கிறது கதீஜா, நம் அப்பாவும் தாத்தாவும் அப்படித்தானே மடிந்தார்கள். ரசூலுக்கு மாத்திரம் அந்த குணம் ரத்தத்தில் இருக்காதா? ’’ மென்மையாக ஆரம்பித்தார் இஸ்மாயில்.

இஸ்மாயில் பாய்ஜானுக்கு கால் சற்று ஊனம். ராணுவத்தில் சேருமளவு உடல் தகுதி இல்லை. இல்லாவிட்டால் இந்நேரம் மேஜராகி இருப்பார்.

கதீஜா தரையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தார். ஏதோ சொல்ல வந்து வார்த்தைகள் வராமல் விம்மல் வெடித்தது.

" உன்னோட இழப்பும் ரொம்பப் பெரிசுதான். ஆனா, நீயும் உன் கணவரும் அல்லாவால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கீங்க. ரசூல் ஆண்பிள்ளை கதீஜா! நீ ஆறுதலுக்காக சாஞ்சுக்கற தலையணை இல்ல அவன்."

சட்டென்று அழுவதை நிறுத்தி விட்டு அவரையே தீர்க்கமாகப் பார்த்தார் கதீஜா.

எங்கோ பார்த்தபடி சொன்னார்.

" நீங்க மறந்துட்டீங்களா? ரசூலுக்கு ஏழு வயசா இருந்தபோது பட்டாசு வெடிக்கப் போய் அவன் மொத்தப் பார்வையும் போயிடுச்சு. தயக்கத்தோட அவனை தோள்ல போட்டுக்கிட்டு இந்தியா போனோம். இப்ப அவன் முகத்துல ஒளி வீசிட்டு இருக்கறது ஒரு இந்தியரோட கண்கள். அந்தக் கண்களோட எப்படி இவன் பாகிஸ்தான் ராணுவத்தில்...? "

பெரியவர் நெருப்புப் பட்டது போல் எழுந்தார். ஆமோதிப்போடு தலை அசைத்தவாறு அறையை விட்டு வெளியேறினார்.

எழுதியவர் : அருணை ஜெயசீலி (30-Sep-14, 4:29 pm)
Tanglish : ellai
பார்வை : 179

மேலே