கொலுவின் தாத்பரியம்

முன் ஒரு காலத்தில் தன் எதிரிகளை அழிப்பதற்காக சுரதா என்ற மகாராஜா, தன் குரு சுமதாவின் ஆலோசனையைக் கேட்டார். அந்த குருவின் அறிவுரைப்படி, தூய்மையான ஆற்றுக் களிமண்ணைக் கொண்டு, காளி உருவத்தைச் செய்து, அதை ஆவாஹனம் செய்து, உண்ணாவிரதம் இருந்து, காளி தேவியை வேண்டினான், மன்னன் சுரதா.

அந்த வேண்டுதலின் பயனாக அந்த மகாராஜா தன் பகைவர்களை அழித்து, மிகப்பெரிய சாம்ராஜியத்தை உருவாக்கினான். ‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், நான் பூஜிப்போருக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று, தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளபடி, சுரதா மகாராஜா செயல்பட்டதால், அவன் தனது பகைவர்களை வீழ்த்தி, தனக்கு வந்த இடர்களில் இருந்து மீண்டான்.

எனவே, அம்பிகைக்கு பிடித்த பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து வழிபாடு செய்வது, நவராத்திரியில், குறிப்பாக சரஸ்வதி பூஜை வழிபாட்டின் முக்கிய அங்கம் பெறுகிறது.

மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. ஒன்பது படிகள் அமைப்பது மரபு. ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை அடுக்கி வைப்பது முக்கியமானது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முதலாம் படி:– ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகள்.

இரண்டாம் படி: – ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.

மூன்றாம் படி:– மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு ஆகிய பொம்மைகள்.

நான்காம்படி:– நான்கறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு போன்றவைகளின் உருவம் கொண்ட பொம்மைகள்.

ஐந்தாம்படி:– ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகளின் பொம்மைகள்

ஆறாம்படி:– ஆறறிவு படைத்த மனித பொம்மைகள்.

ஏழாம்படி:– மனித நிலையில் இருந்து உயர்நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் போன்றோரின் பொம்மைகள்.

எட்டாம் படி:– தேவர்கள், அட்டதிக்கு பாலகர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகளின் பொம்மைகள்.

ஒன்பதாம் படி:– பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் அமர்ந்திருக்கும் பொம்மைகள், அதற்கு நடுநாயகமாக ஆதிசக்தியை (கலசம்) வைக்க வேண்டும்.

மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கமாக கூறப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தலைப்பு படம் எங்கள் வீட்டு கொலு

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (1-Oct-14, 10:10 pm)
பார்வை : 224

மேலே