அம்முக்குட்டி என்ற கவிதா

ரோட்டுக்கு இந்தப்பக்கம் மல்லிகா பூ தொடுத்துக்கொண்டே அந்தப்பக்கம் அமர்ந்து ரோட்டையே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் மகளையும் பார்த்துக்கொண்டே புலம்புகிறாள்...

"ம் இன்னைக்கி எந்தக்கோட்டைய கனவிலேயே புடிச்சாலோ தெரியில", என்று புலம்பிக்கொண்டே பூ அனைத்தும் விற்றுவிட ரோட்டை கடந்து தனது குடிசைக்கு வருகிறாள்..

"அம்மாடி செல்லக்குட்டி! தூங்கிட்டிங்களா? இந்தாங்க நீங்ககேட்ட பரோட்டாவும் சால்னாவும்..."

"அம்மா ..."

"என்னம்மா....?"

"இந்த உலகத்துல எல்லாரும் பணக்காரங்களா இருக்காங்க.... நாம மட்டும் ஏன்மா ஏழையா இருக்கோம்...?"

"அச்சச்சோ... யாரு சொன்னா நம்ம ஏழைன்னு... நாமலும் பணக்காரங்கதான்.... எப்படி செல்லக்குட்டி சொல்ற எல்லாரும்
பணக்காரங்கன்னு....."

"இல்லம்மா.... ரோட்ல உட்கார்ந்து பார்க்கும்போது போறவங்க வர்றவங்க எல்லாம் காருல போறாங்க... பைக்ல போறாங்க... சைக்கிள்ள போறாங்க .... நம்ம கிட்ட ஒரு வீடு கூட இல்ல... இங்கதான் படுத்துக்குறோம்.... எழுந்திருக்கிறோம்... மழை வந்தா எங்கையாவது போயிடறோம்... மழை விட்டதுக்கு பிறகு இங்கேயே வர்றோம்........."

"அம்மாடி! நீ படிச்சி நல்ல வேலைக்கு போயி... நம்ம மாதிரி ரோட்ல‌ கஷ்டப்படுறவங்களுக்கு எல்லாம் நல்லது செஞ்சி முன்னேற்றபாரேன்...."

"சரிம்மா .... நானும் படிச்சி நமக்கு ஒரு வீடு வாங்கி அதுல எங்கம்மாவ ராணி மாதிரி வச்சிப்பேன்...", என்று சொல்லி கல கல வெனச் சிரித்தாள் செல்லக்குட்டி...

"ம் நம்மதான் கஷ்டப்பட்டோம்... நம்ம பிள்ளைகளாவது கஷ்டப்படாம வறுமை தெரியாம வளர்க்கணும்ன்னு ஆசைப்பட்டா...
வறுமை வாசலை தட்டிக்கொண்டு நிக்கும்போது நாம என்ன செய்ய.. முதல் வேலையா நாளைக்கு ஒரு சின்ன வீடா வாடகைக்கு பார்க்கணும்",..... என்று நினைத்துக்கொண்டு உறங்கிப்போனாள் மல்லிகா...

காலையில் எழுந்த மல்லிகா முதலில் நம் பிள்ளையை பள்ளியில் சேர்த்துவிடுவோம்... அப்புறம் வீட்டை பற்றி யோசிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தவளாய்.....

தன்னிடம் பூ தினமும் வாங்கும் அந்த ஆசிரியையிடம் விசாரிக்கிறாள்.

"தாயி! என் மகளுக்கு ஆறு வயசாகுது... உங்க பள்ளிக்கூடத்துல‌ சேர்த்துப்பாங்களா...?"

"என்னக்கா இப்படி கேக்குறீங்க? ஆறு வயசாயிடுச்சி இன்னும் பள்ளிக்கூடத்துல‌ சேர்க்கலையா..?!??", என்று ஆசிரியர் கவிதா கேட்க .....

"அது வந்தும்மா... நாங்க இருக்குறது பிளாட்பாரத்துல.... குடிசை போட்டுக்கிட்டு இருக்கோம் தாயி....

என் மகளுக்கு படிக்கணும் பெரியவீட்ல குடியிருக்கணும் இன்னும் என்னன்னமோ கனவு தாயி....

நான் என்ன தாயி செய்ய? இந்த பூ வித்து தான் இரண்டு பேரும் வயித்த கழுவுறோம்... அவுங்கப்பன் இந்த பொண்ணு பொறந்தவுடனே மேல போயி சேர்ந்துட்டான்..."

"சரிக்கா நான் எங்க தலைமை ஆசிரியரிடம் கேட்டுட்டு நாளைக்கு நல்ல பதிலா சொல்றேன்.."

"சரி தாயி! நீ எனக்கு தெய்வம் தாயி...."

"அச்சச்சோ! அக்கா இப்படியெல்லாம் சொல்லாதிங்க... நான் ரொம்ப சின்னப் பொண்ணு தான்..."



கவிதா அரசுப்பள்ளியில் அனைவருக்கும் பிடித்த ஒரு தமிழ் ஆசிரியர். தன் தலைமை ஆசிரியரிடம் செல்கிறாள்.

"வணக்கம் ஐயா..."

"வருக வருக தமிழ் கவியே", என்று தலைமை ஆசிரியர் அழைக்க,

"எனக்கு ஒரு உதவி வேண்டும்.. "

"சொல்லு கவிதா..."

கவிதா மல்லிகா மகளை பற்றி சொல்லி முடிக்க..

"நாமெல்லாம் ஆசிரியராக இருந்து கொண்டு கல்வியை இல்லையென்று சொல்லக்கூடாது....

அந்தப் பெண்ணை பள்ளியில் சேர்க்கும் போது முகவரி தேவைப்படுமேமா... என்ன செய்வது", என்று யோசிக்க

"தாங்கள் சரியென்று சொன்னால் நான் என் வீட்டு முகவரியை தருகிறேனே...."

"கவிதா உங்க அப்பா அம்மா என்ன சொல்வார்களோ?"

"அந்தக்கவலை வேண்டாம் அய்யா...."

"என் அப்பா சம்மதம் கிடைத்த மாதிரி தான்... அம்மாவை அப்பா பார்த்துக்கொள்வார்கள்..."

"என்ன அய்யா தயக்கம்..."

"சரிம்மா! நீ நாளை அந்தக் குழந்தையையும் தாயையும் அழைத்து வா", என்றார்...

"மிக மிக நன்றிப்பா" என்று கவிதா வகுப்புக்குச் சென்றாள்.




இரவு வீட்டில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சரியான விவாதம்...

கடைசியில் ஜெயித்ததென்னவோ அப்பா தான்....

கவிதாவுக்கு பயங்கர சந்தோஷம்....

மல்லிகாவிடம் விசயத்தை சொன்னாள் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை..

"தாயி நான் என்னத்த சொல்ல நீ நல்லாயிருக்கணும் புள்ள குட்டியோட ..... "

"சரி சரி நான் ஸ்கூலுக்கு போறேன்.... நீங்க உங்க மகளை அழைச்சிகிட்டு வாங்க" என்று சொல்லிவிட்டு கவிதா சென்று விட்டாள்...

தன் மகளுக்கு இருப்பதிலேயே நல்ல உடுப்பாக உடுத்தி அழைத்துச்சென்றாள் மல்லிகா...

கவிதா பள்ளி வராண்டாவில் எட்டி எட்டி பார்த்து நின்றாள்...

அவர்கள் வந்தவுடன் அழைத்துக்கொண்டு தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றாள்..

மல்லிகாவை பார்த்து தலைமை ஆசிரியர், "ஏன்மா உங்களுக்காக இந்த டீச்சர் தன் வீட்டு முகவரியை தந்து இருக்காங்க... இப்போதைக்கு இது சரி... எப்படியாவது ஒரு வாடகை வீடெடுத்து எனக்கு முகவரி தரணும் சரியா...."

"சரிங்கய்யா....."

"குழந்தை பேர் என்ன...?"

"அம்முக் குட்டிங்க...."

"பேரே அம்முக்குட்டிதானா...."

"நான் அப்படிதாங்க கூப்புடுவேன்..."

"நீங்க கூப்பட்றது வேற... இங்க பள்ளி கூடத்துல‌ அப்படி கூப்ட்டா.. குழந்தை வளர வளர சரியா இருக்காதே.... நாளைக்கு உங்கலையே ஏன்மா எனக்கு இந்த பேர் வச்சேன்னு கேட்டுச்சின்னா...."

"மல்லிகா திரும்பி கவிதாவை பார்த்து தாயி உங்க பேரன்ன என்றாள்....?"

"கவிதா" என்று அவள் சொல்ல...

"அய்யா இந்த பேரையே என் மகளுக்கும் வச்சிடுங்க...

என் மகளுக்கு வாழ்க்கை கொடுத்த மகராசி இவங்க தான்..

ஏன் தாயி உங்களுக்கு ஏதும் மனஸ்தாபம் இல்லைங்களே....?"

கவிதா தன் தலைமை ஆசிரியராகிய தன் தந்தையை பார்த்து...

"அய்யா இவங்க சொல்றமாதிரியே செய்யலாமே", என்றாள்...

அவரும் வருகை பதிவேட்டில் பதித்துக்கொண்டார்...

அம்முவை வகுப்புக்கு அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினாள்
ஆசிரியர் கவிதா.

மல்லிகா பள்ளி விளையாட்டு மைதானத்திலேயே அமர்ந்திருந்தாள்.

அம்முக்குட்டியாக வந்த கவிதா இதோ வருடங்கள் ஓடி இதே பள்ளிக்கு தலைமை ஆசிரியர் ஆகி பல குழந்தைகளுக்கு படிப்பு சொல்லி தருகிறாள்..

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (10-Oct-14, 10:46 pm)
பார்வை : 305

மேலே