++எறும்பு தேசத்தின் கொண்டை ஊசி வளைவுகள்++விரல் மாறும் தொடர்கதை--பாகம் 16--கார்த்திகா

அடுத்து....

இருள் கவ்விய பயத்தில் மேகங்களிடையே இருந்து மெதுவாகத் தலை தூக்கிப் பார்க்கும் நிலவின் நிலையில் இப்போது ஜீவா....


"ஜீவா!!நான் உன் சத்யா டா!!உன் நண்பன் சத்யா வந்திருக்கேன் ...."என்று கெஞ்சும் குரலில் ஜீவாவை நெருங்கினாள் சரஸ்வதி...


"என்ன ....என்ன டா ??"தயங்கிக் குழறியபடியே வார்த்தைகள் தொண்டையில் இருந்து தெறித்து விழுந்தன...


"நான் வாழணும்னு ஆசையாகத்தானே வந்தேன் .....அது என்னால முடியலையே .....என்னைப் பிணமாக்கி விட்டார்களே...."என்று அரற்றிய சத்யாவின் குரலில் உடைந்து போனான் ஜீவா...


"அவங்களுக்கு தான் நாம நம்ம கையால தண்டனை தந்துட்டோமே ....இவங்களைப் போல தப்பு செய்றவங்களையும் கூடிய வரை அழிக்க முயற்சி பண்ணினோம் ....இப்போதுதான் சட்டத்தை மீறி செய்ததற்கு தண்டனை கிடைத்து முடிந்து மறுவாழ்வு வாழ முயற்சி பண்றோமே....இனிமேல் என் சமூகத்தை சேர்ந்தவங்களோட நலனுக்காக பாடுபட்டு அவர்களுக்கு முறையான கல்வி தந்து இந்த சமுதாயத்தின் உயர்ந்த இடத்தில் அமர வைக்கப் போகிறேன் நான்..."என்ற ஜீவாவைப் பார்த்து
பொங்கி எழுந்தது சத்யாவின் குரல்....


"உயர்ந்த இடத்திற்குப் போனாலும் எத்தனை படித்திருந்தாலும் இந்த சமுதாயம் என்ன செய்கிறது???வேடிக்கை மட்டும் பார்க்குது...மனிதம் புதைத்து மனிதர்கள் வாழ்கிறார்கள்....கல்வி அவசியம் தான்.....ஆனால் கல்வி மட்டுமே வாழ்க்கை அல்ல....."

"அடுத்தவர் வயிறு பசியால் பற்றி எரிய அதில் குளிர்காயும் கொள்ளைக்கார உலகமடா இது !!"

"கல்லுக்குச் சேலை சுற்றினாலும் எட்டிப்பார்க்கும் வீணர்களும் இருக்கிறார்கள் ....உடல் சிதறிச் செத்தாலும் பல்லை இளிக்கும் கொடும் பாவிகள் இவர்கள் .....


"கொஞ்ச நேர மயக்கத்தில் பாவைகளைப் பிய்த்து எரியும் ஊளைச் சதைப் பிண்டங்கள்....ஆன்மா இவர்கள் உடலில் இருந்து வெளியேறி பல நாட்களாயின....இருந்தும் இல்லாத பிணக்குவியல்கள் ....."


"பிஞ்சுக்களை மொட்டிலேயே கருக்கும் இந்த பகட்டுச் சூரியன்களைத் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் முதலில் ..."உச்சஸ்தாயில் ஒலித்தது சத்யாவின் குரல் ....


"களங்கத் தீயில் கருகி முடிவில் வெந்து மடிந்த சாம்பலிலிருந்து உதிரும் பாவத்தின் சின்னங்களாக கருவறை முகவரியறியாப் பிள்ளைகள் இனி மலரவேண்டாம் மண்ணில் ...."


"எங்களைப் போல் சத்யாக்களும் சரஸ்வதிகளும் இனியும் வேண்டாம் ..இந்த நிஜத்தை எப்படியாவது கொன்று விடு நீ............................... !"


உணர்ச்சிப் பெருக்கின் முடிவில் அழுது அரற்றி ஓய்ந்தது சரஸ்வதியின் உடல்...

மெல்ல சரஸ்வதியை எடுத்து படுக்கையில் கிடத்திவிட்டு யோசிக்கலானான் சத்யா ....

என்றோ ஒரு கவிஞன் எழுதிய வரி நினைவில் பளிச்சிட்டது .....

"சீதை தீக்குளித்ததால்
நிரூபிக்கப்பட்டது இராவணனின்
கற்பு ".


அடுத்தவர் உரிமையைக் களவாடியது குற்றமே என்றாலும் விருப்பமில்லா பெண்மையைத் தீண்டாத ராவண ஒழுக்கம் மறைந்தோடிவிட்டது.....

இங்கு,

"ராவணன்களுக்குத்தான் பஞ்சமே
தவிர துச்சாதனர்களுக்கு குறைவில்லை
ஏதுமறியா ராமன்களோ
வனவாசத்தில் இருக்கிறார்கள் "

நிச்சயம் இதற்கு தீர்வு வேண்டும்..


."சத்யா சொன்னதில் உண்மை இருக்கிறது.....தூர்வாரப்படாத இந்த சமுதாயத்தை வெளுக்க ஏட்டுக் கல்வி மட்டும் போதாது....அறிவைப் பெருக்கும் கல்வியின் அடிப்படை வாழ்வியலாக இருக்க வேண்டும்.. இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் உறுதியாய்...மிகத் தெளிவாய் ........"


.பளிச்சென்று பற்றி எரிந்த மின் விளக்கின் ஒளியினூடே ஜீவாவின் சிந்தனையும் கொழுந்துவிட்டு எரிந்தது!!எந்த புல்லுருவியை மாய்க்க இந்த வேள்வி என்று தெரியவில்லை ....................................!!



**************************************************************************************************************************
அதிகாலை 6 மணி.....

வழக்கம் போல் உள்ளங்கையில் கண் விழித்த ஜீவாவின் கண்களில் தென்பட்டது....
வெற்றுப் படுக்கை....

எழுந்து வெளியே வந்தபோது எதிர்ப்பட்ட முகங்களில் எல்லாம் மலர்ச்சி தென்பட்டது ....புத்துணர்வோடு விழித்த அன்றைய தினத்திற்கு நன்றி சொல்லியபடி நடந்த ஜீவா ,

அங்கிருந்தவர்களிடம் "குழந்தை சத்யா எங்கே??"என்று வினவினான்...

"அவனை அப்பொழுதே சரஸ்வதி வந்து எடுத்துப் போய்விட்டாளே!!"ஆனந்தி பதில் கூறினாள்...

இம்முறை விழிகளின் தேடுதலில் சரஸ்வதி கிடைத்தாள் ....

வாசல்க் கதவைத் திறந்து கொண்டு மெதுவாக வந்தவளை வெறித்தன விழிகள் .....


அவளைப் பார்த்த அதே கணத்தில் அதிர்ந்து சிலையாய் நின்றுவிட்டான் ஜீவா....

ஆயிரமாயிரம் இடிகள் சரமாரியாய்த் தாக்கியதில் ஒரு கணம் ஸ்தம்பித்துப் போய்த் தெளிந்தான் ஜீவா....

"சரஸ்வதி ஏன் .........??????"

வார்த்தைகள் குழறின.....


"எதற்காக??"

"எப்படி ?எனக்காகவா இதைச் செய்தாய் ??"


"சரஸ்வதீதீ ..........................................................!!"


வார்த்தைகள் தொலைத்து தனித்து நின்றான் ஜீவா!!


அது,அவள்........................................................................................................................................................





[நான் சொல்ல மாட்டேனே !!]

எழுதியவர் : கார்த்திகா AK (17-Oct-14, 1:35 am)
பார்வை : 162

மேலே