மலேசியப் புதுக்கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும் -திருமதி இராஜம் இராஜேந்திரன் - பாகம் 2

2.1 தொடக்க காலம் (வானம்பாடிக்கு முந்திய காலம்)


மலேசிய இலக்கிய துறைகளான கவிதை, சிறுகதை, நாவல் போன்ற துறைகளின் வளர்ச்சிக்குத் தமிழ்ப் பத்திரிகைகள் பெரும் பங்காற்றியுள்ளன. அதே போன்று புதிதாக அரும்பிய மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதையையும் அரவணைத்த பெருமை பத்திரிகைகளுக்கு உண்டு. 1935இல் தொடங்கப்பட்ட தமிழ் முரசு, 1964இல் தொடக்கப்பட்ட தமிழ் மலர் இதற்கு முன்னோடிகளாக இருந்துள்ளன. தமிழகத்தைப் போன்றே இந்நாட்டிலும் ஆரம்பக் காலக்கட்டத்தில் குறிப்பாக, 60களில் வரவேற்பில்லாத நிலையில் மரபை மீறும் இலக்கிய வகை என்பதால் எதிர்ப்பு அதிகமாக இருந்ததை அறிய முடிகிறது. வளர்ச்சி வளம் பெற முடியாத சூழ்நிலையில் இத்தகைய எதிர்ப்புகளுக்கிடையிலும் துணிவாகப் புதுக் கவிதை எழுதத் தொடங்கிய பெருமை சி. கமலநாதன் அவர்களையே சாரும்.


1960களின் பிற்பகுதியே மலேசியத் தமிழ் புதுக்கவிதைகளின் தொடக்க காலகட்டமாக கருதப்படுகிறது. அன்றைய பத்திரிகைகளில் அங்கும் இங்கும் உதிரிப்பூக்களாக சில புதுக்கவிதைகள் வெளிவந்துள்ளன. 21.5.1964ஆம் நாள் தமிழ் முரசில் சி. கமலநாதனின் கள்ளப்பார்ட்டுகள் என்னும் தலைப்பில் வெளிவந்த புதுக்கவிதையே மலேசியாவின் முதல் புதுக்கவிதையாகக் கொள்ளப்படுகிறது.


1975ஆம் ஆண்டு ஜூன் மாத தமிழ் மலர் நாளித௞ல் மலேசியத் தமிழ்க் கவிதைத் தொடர்பான தொடர்கட்டுரையில் சி.கமலநாதன் அவர்கள் 50க்கும் மேற்பட்ட புதுக்கவிதைகளை எழுதியுள்ளதாக கவிஞர் டி.வி. ராகவன்பிள்ளை குறிப்பிடுகிறார். எனவே, மலேசியப் புதுக்கவிதை முன்னோடி என்று இவரைக் குறிப்பிடலாம். இவரோடு இணைந்து பைரோஜி நாராயணன், எம். துரைராஜ், இராஜகுமாரன், ஆதி. குமணன், அக்கினி, எம். ஏ. இளஞ்செல்வன் போன்றோர் புதுக்கவிதைப் படைத்த குறிப்பிடத்தக்க சிலராவர். எனவே, மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதையின் முதல் காலகட்டத்தை வானம்பாடிக்கு முந்திய காலம் எனலாம். இக்காலகட்டத்தில் படைப்பும், படைப்பாளிகளும், படைப்புக்குரிய காலமும் சிலவாகவே சிதறிக்கிடந்தன. எனவே, உதிரிக்கவிதைகளான இப்புதுக்கவிதைகள் நூல் வடிவம் பெறும் வாய்ப்பை இழந்துள்ளன எனலாம்..


மேலும், புதுக்கவிதை மரபு மீறிய கவிதையாக வர்ணிக்கப்பட்டு, இலக்கியத்திற்கு ஒவ்வாத வகையாகக் கருதி புறக்கணிக்கப்பட்டன. புதுக்கவிதைகளுக்கு எதிர்ப்பு அலைகள் வீசத் தொடங்கிய காலக்கட்டம் அது. இதனூடே புதுக்கவிதைக்கு எதிராக நேரும் எதிர்ப்பை எதிர்க்கொள்ளும் எதிர்வினைகளும் புதுக்கவிதை உருவிலேயே மேற்கொள்ளப்பட்டன.






இவை
புதுப்பூக்கள்
காலம் இவற்றை
அடையாளங் காணும்
எதுகைகளும் மோனைகளும்
ஒதுங்கியிருந்தால் போதும்"





என்கிற மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதையின் காவலர் என்று போற்றப்படும் எம்.ஏ. இளஞ்செல்வனின் புதுக்கவிதை மரபுக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கையாக அமைந்தது.


2.2 வானம்பாடி காலம் (1977 - 1987)

மலேசியத் தமிழ்ப் பத்திரிகை உலகின் புதிய வரவாக 1977ஆம் ஆண்டு வானம்பாடி வார இதழ் ஆதி. குமணனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. வானம்பாடியில் புதுக்கவிதை சகாப்தம் உருவாகக் காரணமாகவும் வ௞காட்டியாகவும் இராஜகுமாரன் அவர்களும் அக்கினி என்கிற சுகுமார் அவர்களும் விளங்கியிருக்கின்றனர். இதன் பிறகே இந்நாட்டு இளைஞர்களின் இலக்கிய ஊற்றாக புதுக்கவிதை பரிணாமம் பெற்றது.


மலேசியப் புதுக்கவிதையின் திருப்புமுனை காலக்கட்டம் என்று இக்காலக்கட்டத்தைக் கூறலாம். புதுக்கவிதையின் எண்ணிக்கையும் படைப்பாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர ஆரம்பித்தது. இக்காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக புதுக்கவிதை நூல்களும் வெளிவந்தன. அதுவரை எதிர்ப்புக் காட்டி வந்த மற்ற பத்திரிகைகளும் புதுக்கவிதையை அங்கீகரிக்கத் தொடங்கின. வானம்பாடி தோன்றி சுமார் 10 ஆண்டுகள் வானம்பாடி காலம் என வரையறுக்கலாம்.


மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதையின் முதல் நூலான ஑நெருப்புப் பூக்கள்" மே, 1979இல் வெளிவந்தது. இந்நூல் உருவாக்கத்தைத் தொடர்ந்து மொத்தம் 6 புதுக்கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. (காண்க இணைப்பு 1)

1981ஆம் ஆண்டு மே மாதம் தமிழ் ஓசை தொடங்கப்பட்டு அதன் ஞாயிறு பதிப்பின் ஆசிரியராக இராஜகுமாரன் பொறுப்பேற்று இருந்த காலத்தில் வானம்பாடியில் வழங்கப்பட்டது போலவே தமிழ் ஓசையிலும் புதுக்கவிதைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.


இக்காலக்கட்டத்தில் மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதைத் துறையில் புதுவேகமும் எழுச்சியும் ஏற்பட்டது மறுக்க முடியாத உண்மையாகும். சமூக அவலங்களை, குறைகளை மிகக் கூர்மையான பார்வையோடு நோக்கும் பாங்கும், அதனைத் தார்மீகக் கோபத்துடனும், எள்ளல் தன்மையுடனும், கண்டிக்கும் போக்கும் புதுக்கவிதையின் தரத்தைத் தூக்கி நிறுத்தியுள்ளன. மேலும் புதுக்கவிஞர்கள் எழுதிய புதுக்கவிதைகள் தெளிவான உள்ளடக்கத்தாலும் புதுவகை உத்திமுறைகளாலும் சிறந்து விளங்குவதைக் காண முடிகின்றது. சமுதாய சிக்கல்களை உணர்ச்சி வேகத்துடன் உணர்த்தும் முறையாலும் தெளிவான மன உறுதியும் தன்னம்பிக்கையும் கொண்டு கவிதை வடிக்கும் பாங்கும் இக்கால புதுக்கவிதைகள் மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதை உலகின் விடிவெள்ளிகளாகப் போற்றப்படுகின்றன.

வானம்பாடி காலத்தில் நவீன இலக்கிய சிந்தனை நடத்திய முதலாவது புதுக்கவிதைக் கருத்தரங்கு (1979) டத்தோஸ்ரீ சா. சாமிவேலு அவர்களின் பொன்விழாவையொட்டிய புதுக்கவிதைப் பரிசுப் போட்டி, மலாயா பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் புதுக்கவிதை அரங்கம்ஒ (1987), ஆறாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் புதுக்கவிதை அரங்கம் (1987) ஆகிய முயற்சிகள் புதுக்கவிதையின் வளர்ச்சிக்கு வளமூட்டின.


வானம்பாடிக்கு பிந்திய காலம்


மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதையின் இந்தக் காலகட்டத்தை (1988 - 1998) வானம்பாடிக்குப் பிந்திய காலகட்டமாகக் கருதலாம்.

இக்காலகட்டத்தில் அனைத்து தின, வார, மாத இதழ்களும் புதுக்கவிதைக்குத் தளமாக அமைந்திருந்த காரணத்தினால் புற்றீசல் போல் புதுக்கவிதைகளும் புதுக்கவிஞர்களும் படையெடுத்திருந்தாலும் வானம்பாடி காலத்தின் வேகம், எழுச்சி, உத்வேகம் இக்காலக்கட்டத்தில் இல்லை என்றே கூற வேண்டும்.வானம்பாடி காலத்தில் சிறந்த புதுக்கவிதைகளைப் படைத்த பலர் இக்கால கட்டத்தில் புதுக்கவிதைத் துறையில் இருந்து விலகி ஓய்வு பெற்றுவிட்டதைப் படைப்புக்களின் மூலம் அறிய முடிகிறது.

இக்காலப் பகுதியில் 29 புதுக்கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. (காண்க இணைப்பு 2). உலகப் பார்வை உட்பட அனைத்துப் பாடுபொருள்களும் புதுமை போக்கில் சிறந்த உத்திமுறைகளுடன் படைக்கப்பட்டுள்ளன.


பத்திரிகைகளின் ஆதரவு, தனிநபர் முயற்சிகள் நீங்கலாகப் பார்த்தாலும், தமிழ்க் கவிதைக் கருத்தரங்கில் படைக்கப்பட்ட "மலேசியாவில் புதுக்கவிதை" எனும் ஆய்வு (1988), நவீன இலக்கியச் சிந்தனை இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இரண்டாவது புதுக்கவிதைக் கருத்தரங்கம் (1988), மூன்றாவது புதுக்கவிதைக் கருத்தரங்கம் (1995), "புது நோக்கில் புதுக்கவிதைகள்" எனும் கருப்பொருளில் புதுக்கவிதைக் கருத்தரங்கு (1996) போன்ற இலக்கிய முயற்சிகள் மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதை வளர்ச்சிக்குப் பயன்தரும் பங்களிப்பை ஆற்றியுள்ளன.


வானம்பாடிக்குப் பிந்திய காலக்கட்டத்தில் வெளிவந்த புதுக்கவிதையின் எண்ணிக்கை உயர்ந்த அளவிற்கு அதன் தரம் உயர்ந்து காணப்படாதது மூத்த புதுக்கவிதையாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தந்தன. இக்காலப் பகுதியில் பல ஆய்வுகள், கவிதை கருத்தரங்குகள், புதுக்கவிதை நூல் வெளியீடுகள் போன்றவை மேற்கொள்ளப்பட்டிருந்தும், மலேசியாவில் வெளியாகும் எல்லா நாள், வார, மாத இதழ்களும் புதுக்கவிதைப் பயிருக்கு நாற்றாங்கால்களாக விளங்கிய போதும் புதுக்கவிதைத் துறை வளர்ப்பிறையாய் வளர்வதை விட்டு தேய்ப்பிறையாகத் தேய்வது வியப்புக்குரியது, வேதனைக்குரியது என்ற எண்ணம் உருவாகி விட்டிருந்தது. வானம்பாடி காலத்தின் வேகம், எழுச்சி இக்காலக்கட்டத்தில் இல்லை எனவும் மூத்த புதுக்கவிஞர்கள்஠ இத்துறையில் ஓய்வுபெற்று கொண்டு, படைப்புக்குத் தரம் வேண்டும் என்பதற்காக வ௞காட்டல் தன்மையை உருவாக்க கருதியதால் என்னவோ படைப்பில் ஒரு தேக்க நிலை புதுக்கவிதைத் துறைக்கு ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர் சா. அன்பழகன் ஆதங்கப்படுகிறார்.

"பூப்பெய்தாதற்கு முன்னே பிள்ளை
பெற்றுக் கொள்ளத் துடிப்பவர்கள்"


என எம்.ஏ. இளஞ்செல்வனின் சாடலும் புரியாத கிறுக்கல்களும் காப்பியடிப்புகளும் களையப்படுதல் வேண்டும் எனும் பைரோஜி நாராயணனின் எதிர்பார்ப்பும் இக்காலப் பகுதியில் வெளிவந்த புதுக்கவிதைகளின் போக்கினை விமர்சனப் பாணியில் கூறுவதாக அமைந்துள்ளது. புதுக்கவிதை வளர்ச்சியிலும் முதிர்ச்சியிலும் முத்திரைப் பதித்துள்ளதா என்று பார்த்தால் அதில் சிறிது ஏமாற்றமே மிஞ்சுகிறது. 90களின் பிற்பகுதியில் புதுக்கவிதை தேக்க நிலையை அடைந்துள்ளது எனலாம்.


2.4 மறுமலர்ச்சி காலம் (1999 - இன்று வரை)

புதுக்கவிதையின் தொய்வு புதுக்கவிதை ஆர்வாளர்களிடையே தார்மீக பயத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தியது. புதுக்கவிதையை மீண்டும் தூக்கிப் பிடித்து, நிமிர்த்தி நிற்கவைக்க அதிரடி நடவடிக்கைகள் தேவைப்பட்டன. அக்காலக்கட்டத்தில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் சங்கத்தின் செயலாளராகவும் பின்னர் தலைவராகவும் பொறுப்பேற்ற பெ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் புதுக்கவிதை திறனாய்வு கருத்தரங்கு ஏற்பாட்டுக் குழு அமைக்கப் பெற்று புதுக்கவிதைக்கு புதிய ரத்தம் பாய்ச்சப்பட்டது.

முதல் புதுக்கவிதைத் திறனாய்வு கருத்தரங்கு 1999இல் மலாயா பல்கலைக்கழக வளாகத்தில் தொடக்க விழா கண்டது. புதுக்கவிதைக்குப் புத்துயிரும் புது எழுச்சியும் ஊட்டும் வகையில் தமிழகத்தில் இருந்து புதுக்கவிதை ஜாம்பவான்கள் வரவழைக்கப்பட்டனர். இவர்கள் வழங்கிய ஆய்வு, சொற்பொழிவுகள் மலேசிய புதுக்கவிதையாளர்களிடையே உத்வேகத்தையும் ஆர்வத்தையும் அதிகரிக்கச் செய்திருந்தது எனலாம். புதுக்கவிதைகளின் பால் புதிய அலைகள் வீசத் தொடங்கின.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை புதுக்கவிதைக் கருத்தரங்கு இலக்கிய விழாவாக இரண்டு நாள் நிகழ்வாகச் சிறப்பாக நடந்தேறியது. இதுவரை 14 கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்ட அந்த 3 அல்லது 4 மாதங்களில் தினசரி, மாத, வார இதழ்களில் வெளிவந்த புதுக்கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டன. ஒவ்வொரு கருத்தரங்குகளிலும் ஒவ்வோர் உத்தி முறைகளை அறிமுகப்படுத்தி பின்னர் தெளிவாகவும் மிகச் செறிவாகவும் விளக்கமளித்து கவிதைப் பட்டறைக்கான ஆய்த்தங்களை முனைப்புடன் செய்து வந்தார் இணைப்பேராசிரியர் முனைவர் வே. சபாபதி.

இந்த இரண்டு நாள் நிகழ்வில் ஆய்வுக்கட்டுரை, தமிழகக் கவிதைப் பிரபலங்களுடனான கலந்துரையாடல், கருத்து பரிமாற்றம், சொற்பொழிவுகள், கவியரங்கு, பட்டிமன்றம், கவிதைப் பட்டறை, திடீர் கவிதைகள், படக்கவிதைகள், பேருந்து கவிதைகள் ஆகியன நடந்தேறின.

கண்காணிப்பு இருக்கும்போதுதான் கவனிப்பு அதிகமாகும். அதுபோல தங்களுடைய கவிதைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பரிசீலிக்கப்படுகின்ற என்ற நம்பிக்கை வேர் விடும் போது கண்டதைக் கிறுக்காமல், சமூக கடப்பாடுக் கொண்டு கவிதைக்கு வளம் சேர்க்கும் விதத்தில் படைக்க வேண்டும் எனும் வேகம், வேட்கை கொப்பளிக்கின்றன. இதனை இந்தத் தொடர் கருத்தரங்குகள் ஏற்படுத்தித் தந்திருக்கின்றன என்றால் மிகையாகாது.

இக்கருத்தரங்குகள் வழி இளைய படைப்பாளிகள் முகங்காட்டத் தொடங்கினர். எழுச்சி மிக்க கவிதைகள் எழுத முனைந்து வெற்றியும் அடைந்தனர் எனலாம். இதனூடே இளைய படைப்பாளிகளோடு மூத்த படைப்பாளிகளும் இணைந்து கவிதைத் தேர் இழுத்து, தங்கள் பங்களிப்பைச் செய்து வருவது மிகவும் போற்றத்தக்கதாகும்.


இக்கருத்தரங்குகளில் அரங்கேறும் எல்லா நிகழ்வுகளும், கவிதைகளும் காற்றில் கரைந்து காணாமல் போகாதவாறு நூல் வடிவில் பதிவு செய்து கவனப்படுத்தி, சாதனைப் புரிந்துள்ளது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம். ஒவ்வொரு கருத்தரங்குகளின் போதும் வெளியீடு கண்ட நூல்கள் அந்தந்தக் காலக்கட்டங்களில் வெளிவந்த கவிதைகளின் சேமிப்பு வங்கியாக விளங்கி வருகின்றது.

ஆழ்ந்து, அகன்ற நுண்ணுணர்வு சமூக பார்வையுடன் வீரியமிக்க கவிதைகளைக் கருத்தரங்கு கவிதைப் பட்டறைகளில் பட்டைத் தீட்டப்பட்ட இளைய படைப்பாளிகள் படைத்து, முத்திரைப் பதித்து வருகின்றனர். கவிஞன் உருவாக மட்டுமல்ல, உருவாக்கவும் படுகிறான் என்ற உண்மை இக்கருத்தரங்குகள் வாயிலாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.


மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய கருத்தரங்குகள் மூலமாகவும் தேசிய பல்கலைக்கழக இந்தியப் பிரதிநிதித்துவ சபையின் வெளியீடுகள் மூலமாகவும் புதுக்கவிஞர்களின் சொந்த முயற்சியின் பலனாகவும் மொத்தம் 31 புதுக்கவிதை நூல்கள் மறுமலர்ச்சி காலகட்டத்தில் வெளிவந்துள்ளன. இக்காலகட்டம் புதுக்கவிதையின் பொற்காலம் என்று துணிந்து கூறலாம்

எழுதியவர் : திருமதி இராஜம் இராஜேந்தி (20-Oct-14, 4:27 pm)
பார்வை : 352

சிறந்த கட்டுரைகள்

மேலே