மலேசியப் புதுக்கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும் -திருமதி இராஜம் இராஜேந்திரன் - பாகம் 4

4. கம்பன் விழா - 3, 4, 5 பிப்ரவரி 2006
4.1. புதுக்கவிதை மன்றம்

மலேசிய கண்ணதாசன் அறவாரியமும் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும் இணைந்து நடத்திய "கம்பன் விழா" மூன்று நாள் நிகழ்வாக 3, 4, 5 பிப்ரவரி 2006-இல் மலாய்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இரண்டாவது நாளன்று பச்சைபாலன் அவர்களின் தலைமையில், எட்டு பேர் கொண்ட குழு "புதுக்கவிதை மன்றம்" எனும் நிகழ்வில் பங்கேற்றனர். கம்பன் கவியில் இராமன், இலக்குவன், சீதை, பரதன், குகன், அனுமன், சூர்ப்பனகை, இராவணன் ஆகிய பாத்திரப் படைப்புகள் புதுக்கவிதை பாணியில் புதுமையாக எடுத்தியம்பப்பட்டன. மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதைக்கு அளிக்கப்பட்ட ஓர் உயரிய அங்கீகாரமாக இதனைப் போற்றலாம். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற கவிதை கருத்தரங்குகளில் பட்டை தீட்டப்பட்டு, பக்குவப்பட்ட கவிஞர்களே மேற்கண்ட நிகழ்வில் பங்கெடுத்து சிறப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

5. புதுக்கவிதைப் போட்டி

5.1. மலேசிய தேசிய பல்கலைக்கழக புதுக்கவிதைப் போட்டி

பல்கலைக்கழகங்களில், உயர்க்கல்விக் கூடங்களில், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கென பிரத்தியேகமாக இப்போட்டி 1997 முதல் 2007 வரை தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது. தொடர்ந்தும் நடைபெறும். இப்பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை இல்லாத சூழலிலும் இந்திய மாணவர்களின் அரிய முயற்சியால் புதுக்கவிதைப் போட்டி ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்பட்டு, சிறந்த கவிதைகளுக்குப் பரிசுகள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

5.2 எம்.ஏ. இளஞ்செல்வன் புதுக்கவிதைப் போட்டி

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் புதுக்கவிதை முன்னோடியான எம்.ஏ. இளஞ்செல்வன் நினைவாக தொடர்ந்து 3 ஆண்டுகளாகக் கவிதைப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அப்போட்டியின் முதல் பரிசாக மூன்று பவுன் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது.
இப்போட்டியின் முதலாமாண்டில் முதல் பரிசை நடவரசும் (2002), இரண்டாம் ஆண்டில் பெ.சா. சூரியமூர்த்தியும் (2003), மூன்றாம் ஆண்டின் மீண்டும் நடவரசும் (2004) பெற்றனர். இத்தகைய போட்டி புதுக்கவிதையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

5.3 அஸ்ட்ரோ வானவில்லின் புதுக்கவிதைப் போட்டி

அஸ்ட்ரோ வானவில் ஒளிபரப்பு நிறுவனமாக இருப்பினும் இலக்கிய வளர்ச்சிக்கு பங்காற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்ட்ரோ வானவில், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் ஆகியோர் நினைவாக நடத்திய கவிதைப் போட்டியில் புதுக்கவிதை போட்டியையும் இணைத்துக் கொண்டது. இதன்வ௞ புதுக்கவிதைக்கு வழுவான விளம்பரங்களும் ஆரோக்கியமான அங்கீகாரமும் கிடைத்தன. எம்.ஜி.ஆர். நினைவுப் போட்டியில் பாலகோபாலன் நம்பியார் அவர்களும் சிவாஜி கணேசன் நினைவு போட்டியில் கோ. புண்ணியவான் அவர்களும் முதல் பரிசைப் பெற்றனர்.

5.4. தேசிய நில நிதி கூட்டறவுச் சங்கத்தின் புதுக்கவிதைப் போட்டி

தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கம், அமரர் வீ.தி. சம்பந்தன் அவர்களின் நினைவாக கடந்த 18 ஆண்டுகளாக இலக்கியப் போட்டிகளை நடத்தி வருகின்றனர். அண்மைய காலகட்டத்தில் புதுக்கவிதை அடைந்திருக்கும் வளர்ச்சியும் அதில் ஈடுபாடு காட்டுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருவதையும் கருத்தில் கொண்டு 2005ஆம் ஆண்டு போட்டியில் முதன் முறையாக புதுக்கவிதைப் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து 2006ஆம் ஆண்டிலும் புதுக்கவிதைப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

6 புதுக்கவிதை நூல் முயற்சிகள்

பத்தாண்டு காலகட்டத்தில் (1996 - 2006) சுமார் 39 நூல்கள் வெளிவந்துள்ளன. தனிநபர் முயற்சியாக 20 நூல்களும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க முயற்சியில் 10 நூல்களும், மலேசிய தேசியப் பல்கலைக்கழக இந்து பிரதிநிதித்துவச் சபையின் ஏற்பாட்டில் இதுவரை 9 நூல்களும் வெளியீடு கண்டுள்ளன. இக்கால பகுதியில் மேற்கொண்ட புதுக்கவிதை வளர்ச்சிக்கான விளைச்சல்களின் பலனாக கவிதைகள் நூல் வடிவம் கண்டுள்ளன எனலாம்.


7. மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதைகளின் நிலை

புதுக்கவிதை இந்நாட்டின் தமிழ் இலக்கியத்தில் வலுவான இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. இந்த இலக்கிய வடிவம் நாற்பத்து மூன்று வயதை அடைந்துள்ளது. எதிலும் எதிர்ப்பு இருந்தால் தான், நல்ல தரமான வளர்ச்சி இருக்கும். அதுபோல கண்டனங்களையும் சர்ச்சைகளையும் வரவாக்கிக் கொண்டு புதுக்கவிதை மற்ற இலக்கிய வடிவங்களோடு சரியாசனம் போட்டு அமர்ந்துவிட்டதால் அதனை யாரும் உதாசீனம் செய்ய இயலாது.
புதுக்கவிதைக்கு வரலாறும் நிரந்தரமான இடமும் இருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், இந்த இலக்கிய வடிவத்தில் ஒரு வளர்ச்சியும் முதிர்ச்சியும் அவ்வளவாகக் காணப்படவில்லை. எண்பதுகளிலும் தொண்ணூறுகளின் முற்பகுதியிலும் புதுக்கவிதை பெரிய தேக்க நிலையை அடைந்துள்ளது. மலேசியப் பத்திரிகைகள் புதுக்கவிதைக்கு விளைநிலமாக இருந்த போதிலும் புதுக்கவிதையின் தரம், முதிர்ச்சி மகிழ்ச்சியளிக்கும் வகையில் இல்லை எனலாம். இத்தகைய தேக்க நிலைக்கும் வீழ்ச்சிக்கும் காரணங்கள் பல இருக்கின்றன.

7.1 போராட்டம் குறைவு

தமிழ்நாட்டின் வறுமை, இலங்கையில் கொழுந்து விட்டெறியும் இனக்கலவரம், இலங்கையிலிருந்து வெளியேறி இன்று தமிழ்நாட்டிலும் வெள்ளைக்காரர் நாடுகளிலும் ஏதிலிகளாய் அனுபவித்து வரும் வாழ்க்கைப் போராட்டங்கள் ஆகியவை அவர்களின் இலக்கியப் படையல்களின் உலைக்களன்களாக மாறியிருக்கின்றன. எந்தக் காலத்திலும் வறுமையும், கொடுமையும் துன்பமும்தான் இலக்கியவாதிகளின் கற்பனா திறனுக்கு தீனியாக இருந்திருக்கிறது. போராட்டம் இல்லாத வாழ்க்கையில் இலக்கியம் ஒரு பொழுது போக்கு கருவி. ஆனால், அவசியம் நேரும் போது அதுவே போர்க் கருவியாக மாறி, வீச்சோடு வெளிப்படும். இத்தகைய போராட்டச் சூழலில் நமது தற்காலக் கவிஞர்கள் இல்லை. எனவே, பாடுபொருள்களில் திரட்சியான தெளிவான இலக்கு இல்லை. பரவலாக உணரும் விசயங்களளே கருக்களாக அமைகின்றன. பெரும்பான்மை காதல் பிதற்றல்களாகவே அமைகின்றன எனும் குற்றச்சாட்டையும் புதுக்கவிதை எதிர்நோக்கியுள்ளது.

7.2 வானம்பாடி இயக்க முன்னோடிகள் ஓய்வு

இராஜகுமாரன், அக்கினி போன்ற முன்னோடிக் கவிஞர் குழு தன்னை ஒரு படி உயர்த்திக் கொண்டு வெவ்வேறு துறைகளில் சென்றதால், வழிகாட்டல் தன்மை குறைந்துவிட்டது. புதிதாக எழுதுவோர் தங்களுக்குத் தெரிந்ததை எழுதி வைத்தனர். இதனால் புதுக்கவிதையின் தரம் குறைந்தது. தரம் குறைந்த காரணத்தினால் முன்னோடிகள் பலர், வழிகாட்ட மறந்து, இத்துறையில் ஓய்வுபெற தொடங்கிவிட்டனர்.

7.3 தமிழறிவு

ஆறு வருடம் மட்டுமே தமிழை முறையாக கற்க வாய்ப்புள்ளது. இடை நிலை, உயர் நிலை பள்ளிகளில் தமிழ் அல்லோலப்படுகிறது. அப்படியே தமிழ் கற்க வாய்ப்பு கிடைத்தாலும், பழந்தமிழ் இலக்கியங்களையும் நம் முன்னோர்களின் இலக்கியங்களையும் சுவைக்க, ஆழ்ந்து அகன்று கற்க நேர ஒதுக்கீடு குறுக்கிடுகிறது. தமிழகத்தில் புதுக்கவிதையில் புகழ்பெற்றவர்கள் யாப்பிலக்கணம், ஆழ்ந்த, அகன்ற தமிழறிவு கொண்டவர்கள். மெத்தப் படித்தவர்களும் அதிகம். இங்கே இவ்விரண்டு சிறப்புகளுமே நம் கவிஞர்களிடம் குறைவு. இதற்கு அரசியல் போக்கும் கல்விக் கொள்கையும் காரணமாக உள்ளன.

7.4 நினைத்தவுடன் கவிதை - முறையான பயிற்சி இல்லாமை

எழுத வரும் முன், தொடர்ந்த வாசிப்பு தீவிர இலக்கியப் பயிற்சி போன்ற முயற்சிகளால் கவிதைகளைச் செதுக்கி செப்பனியிட வேண்டும். இவ்வாறு அல்லாமல், நினைத்த மாத்திரத்தில் உள்ளத்தில் தோன்றுவதை எழுதுவதால் கவிதையின் தரம் வீழ்ச்சியடைந்து வருகிறது.

7.5 சுயத் தேடல் குறைவு

வாசிக்கின்ற பழக்கம் அற்று வரும் இக்காலகட்டத்தில் கவிதை சார்ந்த சுய தேடல் கவிதையாளர்களிடம் மிக அபூர்வமாக உள்ளது. ஆகையால், இலக்கிய வளர்ச்சிக்கு ஏற்ப நாம் நம்மை வளர்த்து கொள்ள தேடல் மிக அவசியம். பொருளாதாரத் தேடலில் மூழ்கிப் போகும் இவர்களால் கவிதை பரிணாம வளர்ச்சியில் பயணிக்க முடிவதில்லை. இயந்திர வாழ்க்கையில் இலக்கிய நெகிழ்வில்லாமல் இறுகிவிட்டிருக்கிறது.

8. மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதைகளின் இன்றைய நிலை

தொண்ணூறுகளின் பிற்பகுதியில் அதாவது 1996இல் நடைபெற்ற "புதுநோக்கில் புதுகவிதைகள்" எனும் கருத்தரங்கிற்குப் பிறகும் அடுத்து மறுமலர்ச்சி காலத்தில் நடத்தப்பட்ட தொடர் புதுக்கவிதை திறனாய்வு கருத்தரங்குகளுக்குப் பிறகும் மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதை துறையில் மாபெரும் வளர்ச்சி காணப்பட்டுள்ளதாக அந்தந்த காலகட்ட புதுக்கவிதை ஆய்வாளர்கள் சான்றுகளோடு குறிப்பிட்டுள்ளனர். உதாரணத்திற்கு, மலேசியத் தேசியப் பல்கலைக்கழக மாணவர்களின் "மெல்லப் பேசும் மேகங்கள்" தலைப்பிலான தொகுப்பு நூலில் "என் பார்வையில்" எனும் பகுதியில் பச்சைபாலன் அவர்கள், "கடந்த ஆண்டு புதுக்கவிதைப் போட்டிக்கு 60 படைப்புகள் வந்தன; இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 85 ஆக உயர்ந்திருப்பது மகிழ்வைத் தருகிறது; புதுக்கவிதைப் படைப்பில் இளையோரின் ஆர்வம் கூடிவருவதை இது மெய்ப்பிருக்கிறது; தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திறனாய்வு கருத்தரங்குகளும் தமிழ் ஏடுகளும் வழங்கி வரும் வாய்ப்பும் புதுக்கவிதைத் துறை மீது வெளிச்சம் பாய்ச்சி பலரின் கவனத்தை ஈர்த்து வருவதை யாரும் மறுக்கவியலாது" என குறிப்பிடுகின்றார்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் நடைபெற்று வரும் இத்தொடர் கவிதைத் திறனாய்வுக் கருத்தரங்குகள் மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதைகளுக்கான பொற்காலம் என துணிந்து கூறலாம். இவை புதுக்கவிதை வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கையாக மட்டுமல்லாமல் அந்தந்தக் காலகட்டத்தில் வெளிவருகின்ற கவிதைகளைப் பத்திரப்படுத்துகின்ற அரிய முயற்சியாகவும் சிறந்த ஆவணங்களாகவும் திகழ்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக, தங்களது படைப்புகளும் கவனிக்கப்படுகின்றன. தங்களது கவிதைகளும் நூல் வடிவம் பெறுகின்றன என்கிற ஓர் உந்துசக்தியை இந்தத் தொகுப்பு நூல்கள் ஏற்படுத்தி இருக்கின்றன. ஒரு படைப்பாளியை இதைவிட வேறு எதுவும் ஊக்க மூட்டி விட முடியாது.

எனவே, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இந்தப் புதுக்கவிதைத் திறனாய்வு கருத்தரங்கு முயற்சியானது இத்துறையில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதைத் திண்ணமாகக் கூறலாம்.

இன்றைய புதுக்கவிதைகளின் பாடுபொருள்கள் பன்முகங்களைக் கொண்டவையாகவும், குறிப்பாக இனம், தேசம் கடந்த உலகப் பார்வை விசாலமடைந்து வருவதாயும் புதுக்கவிதைகள் காட்டுகின்றன. மேலும், இனமான கவிதைகளும், சமூகப் பார்வை கொண்ட கவிதைகளும் புதுக்கவிதையின் தரத்தைத் தூக்கிப் பிடித்திருக்கின்றன எனலாம்.

படைப்பாளிகள் தங்களின் தேடல்களை விரிவுபடுத்திக் கொள்ளவும், தங்களின் படைப்புகளின் மீதான விமர்சனங்களை விசால மனத்துடன் உள்வாங்கிக் கொள்ளவும் தங்களின் பலம் - பலவீனம் ஆகியவற்றை அறிந்து தரமான கவிதைகளைப் படைக்கவும் இத்திறனாய்வுக் கருத்தரங்குகள் வழிகாட்டியாக அமைந்துள்ளன. இன்றைய சூழலில் எழுச்சி மிக்க, தரமிக்க, வீரியமிக்க புதுக்கவிதைகள் படைக்கப்பட்டு வருவது மலேசிய புதுக்கவிதையின் மீட்டுருவாக்கத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஆனால், கடந்த ஓராண்டு காலமாக புதுக்கவிதைக்கு சிறு தேக்கம் ஏற்பட்டுள்ள சாயல் தெரிகின்ற போதிலும் புதுக்கவிதை வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை விளைவிக்கவில்லை என்றே கூறத் தோன்றுகிறது.

2005ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கவிதையின் போக்கும், நிலையும் குறிப்பிட்ட இளம் தலைமுறையைச் சேர்ந்த படைப்பாளர்களால் நவீன கவிதைத் தளத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளதை உணர முடிகின்றது. ஒரு வருட காலத்தோடு தன் ஆயுளை முடித்துக் கொண்ட "காதல்" எனும் மாத இதழ் நவீனக் கவிதைகளை ஏந்திவரும் களமாக அமைந்திருந்தது. பின்னர் காலாண்டு இதழான "வல்லினம்" இவ்வாண்டு முதல் வெளிவருகிறது. இதில் பல்வேறு அம்சங்களுடன் நவீன கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.

ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன் போன்ற நவீன கவிதையாளர்களின் வருகையும் அதன் தாக்கமும் இளம் புதுக்கவிதையாளர்களை நவீன கவிதையின் பால் நாட்டம் கொள்ளச் செய்திருக்கிறது எனலாம். குறிப்பிட்ட சில படைப்பாளிகள் மட்டுமே நவீன கவிதைகளை எழுதி வருகின்றனர். இவ்விலக்கிய வட்டம் மிகச் சிறிய வட்டமாகும். இது பரவலாக வாசகர்களுக்கும் ஏனைய படைப்பாளிகளுக்கும் முழுமையாகப் போய்ச் சேரவில்லை எனலாம்.

மேலும் இவ்வகை நவீன கவிதைகளில் தனிமனித அந்தரங்க உணர்வுகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. சொந்த மன அரிப்புகளைச் சொறிந்து விடக்கூடிய கவிதைகளாகவே இந்த நவீன கவிதைகள் உள்ளனவோ எனத் தோன்றும் அளவிற்கு இவ்வகை கவிதைகள் பெரும்பான்மை அகவயப்பட்டவையாக உள்ளன. இத்தகைய கவிதைகளில் சமூகப் பார்வை அவ்வளவாகக் காட்டப்படவில்லை எனலாம். நவீன கவிதை முற்றிலும் உரையாடலை நோக்கி நகர்வதாகவும் கவித்துவம் அதில் குறைவாக உள்ளதாகவும் மூத்த புதுக்கவிதையாளர்களில் ஒருவரான கோ. முனியாண்டி அவர்கள் "காதல்" இதன் நேர்காணலின் போது தமது பார்வையில் பட்டதைப் பகிர்ந்து கொண்டுள்ளார். கவிதைத் துறையில் ஏற்படும் இத்தகைய பரிணாம வளர்ச்சியைப் புதிய இலக்கிய வரவாக எண்ணி, ஏற்று புதுக்கவிதைக்கு அணி சேர்க்கலாம்.

9. மலேசியப் புதுக்கவிதையின் எதிர்காலம்

1964இல் தொடங்கப்பட்ட புதுக்கவிதை முயற்சி 70களின் பிற்பகுதியில் பலனளிக்கத் தொடங்கியது. வானம்பாடி புதுக்கவிதையை "ஓர் இயக்கமாகக்" கருதி, புதுக்கவிதைத் துறையை வளர்த்தனர். 80களில் ஒரு தேக்கம் ஏற்பட்டது. ஆனால், 1988க்கு பிறகு தமிழ் ஓசை, நயனம், உதயம் போன்ற இதழ்களின் ஆதரவால் புதுக்கவிதை புத்துயிர் பெற்றது. இதனால் புதுக்கவிதைக்கு பெரும் ஆதரவும் கவனிப்பும் கிடைத்தது. மரபில் சொல்ல முடியாததை புதுக்கவிதையில் சொல்ல முடியும் என்ற உணர்வு பழம் எழுத்தாளர்களுக்கு உதயமானது. அன்புச்செல்வன், சை.பீர்முகம்மது, மெ. அறிவானந்தன் போன்றவர்கள் புதுக்கவிதை உலகில் கால் பதித்தது, புதுக்கவிதைக்கு ஓர் அங்கீகாரமாகும்.

சமீப காலத்தில் ஹைக்கூ மோகம், நவீன கவிதையில் நாட்டம் கவிஞர்களுக்கு ஏற்பட்டிருந்தாலும் புதுக்கவிதையை அது வெகுவாகப் பாதிக்கவில்லை என்றே கூற வேண்டும். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் கருத்தரங்குகள், பல்கலைக்கழக இந்திய மாணவர்களின் புதுக்கவிதைப் போட்டி, கவிதைத் தொகுப்பு நூல் போன்றவை புதுக்கவிதை வளர்ச்சிக்கு வித்தாக அமைந்து வருகின்றன.

உண்மையில் புதுக்கவிதை வளர்ந்து கொண்டு தான் வருகிறது என்பதை டாக்டர் கா. திலகவதி அவர்களின் "மொத்தத்தில் மலேசியாவில் புதுக்கவிதை திருப்தி அளிக்கும் வகையில், நம்பிக்கையூட்டும் முறையில் இருந்து வருகிறது" எனும் கூற்று மெய்ப்பிக்கிறது.

10. முடிவுரை

புதுக்கவிதை நம் நாட்டில் வேரூன்றத் தொடங்கிவிட்டது. ஆயினும் எல்லா தரப்பினரும் இவ்விலக்கியத் தேரை இழுத்து செல்ல கடமைப்பட்டவர்கள். இது ஒரு தொடர் ஓட்டம். இடையில் இறுகி விடக்கூடாது. அப்புதுக்கவிதைத் தீப்பந்தத்தைக் கையில் ஏந்திக் கொள்ள புது வாரிசுகள் தங்கள் தகுதிகளை உயர்த்திக் கொள்ள தயார் செய்து கொள்ள வேண்டும்.

தொடர்ந்து வாசிப்பு, தீவிர இலக்கியப் பயிற்.இ, நவீன இலக்கியத்தில் அதிக ஈடுபாடு, கடந்த கால வரலாறுகளை நோக்கும் இலக்கியப் பார்வைகள், நமது வேர்களைத் தெரிந்து கொள்ளும் மனப்பான்மை ஆகியவை ஒருவனைச் சிறந்த இலக்கியவாதியாக ஆக்கும்.

கருத்தரங்குகளின் கவிதைப் பட்டறையில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளைப் பட்டை தீட்டிக் கொள்ள வேண்டும். இடைநிலை, உயர்நிலைக் கல்விக் கூடங்களில் பயிலும் இளைய சமுதாயம் புதுக்கவிதை தொடர்பான இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ள முன்வர வேண்டும். புதிய நோக்கோடு, புதுச் சுவையோடு பல தரப்பட்ட விரிவான பாடுபொருள்களோடு கூற வேண்டும் என்னும் சிந்தனையை மனதில் கொண்டு, நம் 'வலியை', நம் 'மண்ணின் மணத்தைச்' சொல்லும் கவிதைகள் இங்கே படைக்கப்பட வேண்டும். இவ்வாறு நம் கவிஞர்கள் செயல்பட்டால், புதுக்கவிதை நம் நாட்டில் வளமுடன் வரலாறு படைக்கும் என்பது உறுதி.

படைப்பு: திருமதி இராஜம் இராஜேந்திரன
------------------------------------------------------------------------------------

மலேசியாவில் புதுக் கவிதை


மலேசியத் தமிழ்ப்புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும
தமிழ் இலக்கிய உலகில் மூத்த வடிவம், முதல் வடிவம் என்கிற சிறப்பு கவிதைக் கலைக்கே உரியதாகும். கி.பி.18-ஆம் நூற்றாண்டு வரை செய்யுள் எனும் பெயரில் வழங்கப்பட்டாலும் 19-ஆம் நூற்றாண்டு முதல், தமிழ் இலக்கியத்தின் மற்றுமொரு வாயிலாக உருவெடுத்த உரைநடை இலக்கியத்தின் பிரவேசத்திற்குப் பிறகு கவிதைக் கலையெனும் தனி இலக்கிய வடிவமாக இது வளர்ச்சிப் பெற்றதை இலக்கிய வரலாறு நமக்குப் புகட்டுகிறது. அத்தகைய கவிதைக் கலையின் புதிய ஊற்றாக புதிய வரவாக உருவெடுத்திருப்பதுதான் கவிதை.
தமிழில் புதுக் கவிதை வடிவம
புதுக் கவிதைக்கு வடிவம் உண்டா? இலக்கண வரம்பு உள்ளதா? என்பதே அனைவருடைய கேள்விக் கணைகளாக இருக்கிறது. இங்கே 'புது' என்கிற சொல்லே அதன் வடிவத்தை வரையறுக்கக் கூடிய சிறப்புப் பெறுகிறது. உருவத்தில் புதுமை உள்ளடக்கத்தில் புதுமை, உணர்த்தும் முறையால் புதுமை ஆகிய இந்த தன்மைகள்தான் இன்றைய புதுக் கவிதையின் வடிவமாகக் கருதப்படவேண்டும். மரபை மீறிய அல்லது மரபில் மாறுபட்ட தன்மையும் இதில் அடங்கும். எனவே, புதுக் கவிதையின் வடிவமானது புறத்தோற்றத்தில் இல்லை என்கிற தெளிவு முதலில் அவசியமாகும். 'யாப்பு என்பது புற வடிவமே. புதுக் கவிதை அக வடிவத்தையே முதன்மைப் படுத்துகிறது''. என்கிற கவிக்கோ அப்துல் ரகுமானின் வாக்கு மூலம் விசாரணை இல்லாமல் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும். புதுக் கவிதைக் குரிய இந்த அகல புலங்களைத்தான், அங்கதம், முரண், குறியீடு, படிமம் போன்ற பல உத்திகளாக அறிஞர்கள் படைத்துக் காட்டுகின்றனர். கூறுகின்ற கருத்தை அப்படியே பட்டவர்த்தமாகக் காட்டுவது படிமம் போன்ற பல உத்திகளாக அறிஞர்கள் படைத்துக் காட்டுகின்றனர். குறியீடு என்பது கூறுகின்ற கருத்தை அழகுபட - எழிலூட்டிச் சொல்வதற்குப் பயன்படுத்துகின்ற உத்தி. மாறுபட்ட கருத்தின் தன்மை அல்லது ஒன்றை அமைத்துக் கொண்டு எழுதுவது முரண்வகை உத்தி எனப் படுகிறது. அங்கதம் என்பது மருந்தை இனிப்பாகக் கொடுக்கின்ற - மறைவாக உணர்த்தும் மற்றுமொரு உத்தி ஆகும். தவிர்த்து தெளிவு, சுருக்கம் போன்ற உத்திகளும் இன்று புதுக் கவிதையின் அகலபுலன்களாகக் காட்டப் படுகின்றன. இத்தகைய அகல வடிவங்களை புதுக் கவிதையின் வடிவமாக மிகத் தெளிவாக ஒரு புதுக் கவிதை விளக்குகிறது.
மலேசியாவில் புதுக் கவிதையின் தோற்றம


மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் 1887-ஆம் ஆண்டு வெளிவந்த சி.ந. சதாசிவ பண்டிதரின் வண்ணையந்தாதி, வண்ணை நகரூஞ்சல், சிங்கை நகரந்தாதி, சித்திரக் கவிகள் என்கிற நூல்களே புதுக்கவிதையின் முதற்படைப்புகள். அவ்வகையில் முதற்குழந்தை, மூத்த குழந்தை என்கிற வரலாறு கொண்டது மரபுக் கவிதை. நாவல் இலக்கியம், நாடக இலக்கியம், சிறுகதை இலக்கியம் தோன்றிய பிறகு அண்மைக் காலத்தில் தோன்றிய ஓர் இலக்கிய அரும்புதான் புதுக் கவிதை.

1960-களின் பிற்பகுதியே மலேசியத் தமிழ்ப் புதுக் கவிதைகளின் தொடக்க காலக் கட்டம் எனப் படுகிறது. அன்றைய பத்திரிகைகளில் அங்கும் இங்குமாகச் சில உதிரிப்பூக்களாகப் புதுக் கவிதைகள் வெளிவந்துள்ளன. 21.05.1964-ஆம் நாள் தமிழ் முரசு ஏட்டில் வெளிவந்த கமலநாத் அவர்களின் 'கள்ள பார்ட்டுகள்' என்கிற தலைப்பில் வெளிவந்த புதுக் கவிதை மலேசியாவின் முதல் புதுக் கவிதையாகக் கருதப் படுகிறது. அன்றைய தமிழ் மக்களின் அவலத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்ற புதுக் கவிதையாக இஃது அமைந்துள்ளது.
தொடக்க காலம
மலேசிய இலக்கியத் துறைகளான கவிதை மற்றும் சிறுகதை, நாவல் துறையைச் செவிலித் தாயாக இருந்து வளர்த்த பெருமை தமிழ்ப் பத்திரிகைகளுக்கு உண்டு. அதே போன்று, புதிதாக அரும்பிய மலேசியத் தமிழ்ப் புதுக் கவிதையையும் அரவணைத்த பெருமை பத்திரிகைகளுக்கு உண்டு. 1935-களில் தொடக்கப்பட்ட 'தமிழ் முரசு', 1964-இல் தொடங்கப்பட்ட 'தமிழ் மலர்' இதற்கு முன்னோடிகளாக இருந்துள்ளன.

========================முடிவு ===========================

எழுதியவர் : திருமதி இராஜம் இராஜேந்தி (20-Oct-14, 5:03 pm)
சேர்த்தது : வேலு
பார்வை : 675

மேலே