அழுகுரல் கேட்கிறதா அம்மா

ஆண்பிள்ளையே முதலில் வேண்டுமென்று
ஊரார் கைகளில் விழிமூடி
உனது வேண்டுதல்களா அம்மா

பேர்சொல்லும் மகன் பிறந்திடுவானென்றே
ஆசைகளோடு எனது அசைவுகளை
தொட்டு உணர்ந்திட்டாரா அப்பா

என்மகன் இவனென்று சொல்லிடவே
உங்களின் விருப்பங்களா அம்மா

எனை பார்க்காது முகம்திருப்பி
விழிநீரோடு மனம் கசந்து
என்மீதான உன் முதல்
ஸ்பரிசம் இருந்திடுமோ அம்மா

வேதனையோடு வேறு வழியின்றி
கருணைப் பால் தந்திடுவாயோ அம்மா

உன்மடிமீது எனைப் பார்த்து
தினம் அழுதிடுவாயோ அம்மா

தீர்ந்திடா பாரமாய் கடிந்து
பாவமென சுமப்பீரோ அம்மா

வருத்தங்களோடு எனை வளர்த்து
வாரிசுக்காய் தவமிருப்பீரோ அம்மா

பெற்றது மகளென்று
உறவுகளுக்கு சொல்லிட
நாவும் கூசி
நிற்பீரோ அம்மா

நான் பேசுவது உனக்கு கேட்குமெனில்
கருவிலேயே சொல்லிடுவேன் அம்மா
நீ சுமப்பது பெண்தான்
என்னை கொன்றுவிடென்று

நீ "என் மகனே" என்று
என்னோடு பேசும் போதெல்லாம்
உன் கருவறைச் சூடும்
இதமளிக்கவில்லை அம்மா

நீ பெறப்போகும் பிரசவவலியும்
குறைவேதான் அம்மா
என் மனவலி அதைவிட அதிகம்
நானும் உன்பிள்ளைதானே அம்மா

மகன் என்னும் உனது
கனவின் கதகதப்பில்
என்னால் தங்கிட
இயலவில்லையே அம்மா

கருவிலேயே கலைந்துவிடுகிறேன்
உனக்கு கவலை வேண்டாமே அம்மா

இப்போதும் ஆண்மகனே என்றே
என்னை நினைத்து அழுதிடுவாய்
உண்மைதானா அம்மா -நான்
பெண்மகவுதான்
கொஞ்சம் சிரித்துவிடு அம்மா...!!

எழுதியவர் : மணிமேகலை (25-Oct-14, 7:34 pm)
பார்வை : 269

மேலே