சிந்தனைச் சிறகுகள் - சந்தோஷ்

உன்னையே உன்னை நேசி- பின்பு
இவ்வுலகம் உன்னை நேசிக்கும்.
சோகத்தில் சுகத்தை எடு.
சுகத்தில் உற்சாகம் தேடு.

நிழலை திரும்பி பார்க்காதே
உன் நிஜங்கள் பிடிக்காது
நினைவைப் பிடித்து வைக்காதே
உன் நிகழ்வுகள் தாங்காது
---

ஊர் வாயை மூட
உன் நாக்கை மெளனத்தில் பூட்டு.
துரோகியைத் தள்ளி வை
எதிரியை எண்ணி வை

அவமானத்தை அனுபவமாக்கிக்கொள்.
தன்மானத்தை தகுதியாக்கிக்கொள்.
---
இலட்சியத்தீ எரிய வை.
ஒவ்வொருத் தோல்வியிலும்
உன்னை எரித்துக்கொள்-அதில்
உன்பிழையை எடுத்துக்கொல்.

ஒவ்வொரு முயற்சியிலும்
உன்னை உயிர்ப்பித்துக்கொள்- அதில்
உன்பெருமையை எழுதிக்கொள்.

வெற்றியில் வெறியை ஏற்று
வெறியில் மீண்டும் வெற்றியைத் தேடு.

பாராட்டுக்களில் மனம் குளிரும்.
கைத்தட்டல்களில் காதுக் கிழியும்.
மனமே.. மனமே...! மயங்கிவிடாதே..!
புகழ் என்பது விஷமென்று அறி
அதை ரசித்துவிடு, ருசிக்க மறந்துவிடு.

அன்பானவர்களிடம் இணைந்துக்கொள்-
அவர்களிடம் நீ பிணையமாகிவிடாதே.
தோழனை தோழியாக்கி நெருங்கு.
தோழியை தோழனாக்கிப் பழகு.
--
மழையை ருசி, மழலையை ரசி.
தமிழை நேசி, பிறமொழியையும் வாசி.
பூமியை யாசி, வானத்தை யோசி.!

இயற்கையை வாழ விடு -நீயும்
இயறகையாய் வாழ்ந்துவிடு.

நீர்நிலைகளை தேடிச் செல் -நீயும்
நீரின்நிலையை அறிந்துக்கொள்.
ஒரு மரத்தினை வெட்ட
ஓராயிரம் மரக்கன்றுகளை நட்டு வை.

--
தனிமையான இடம் தேடு
வாய்விட்டு அழுதுவிடு
பலமாகச் சிரித்துவிடு
சங்கீதத்தைக் கேள்.
சங்கடத்தைக் களை.

கவிதை எழுதிப் பழகிக்கொள்
கவிதைக்குள் நீயும் கருவாகிக்கொள்.
சாவதற்குள் ஒரு காவியம் எழுது.
---
காமத்தில் காதலைத் தேடாதே..!
காதலில் காமத்தை மறக்காதே..! -உன்
மனம் புரிந்தவரை மணம் புரிந்துக்கொள்
மணம் புரிந்தவரின் மனம் புரிந்துக்கொள்..!

படுக்கையில் காமசூத்ரா படைத்துவிடு
விடியலில் காமத்திற்கு விடைக்கொடு
மனைவிக்கு மரியாதை செய்துவிடு
மக்களுக்கு சுயமரியாதை சொல்லிக்கொடு
உனக்கென்று கெளரவத்தை உருவாக்கிவிடு

மரணத்தை நீ விரும்பாதே..!
மரணம் வந்தால் வெறுக்காதே..!

மரணம்........!
நிகழம் போது நினைவிருக்காது
நினைவிலிருக்கும் போது மரணம் நிகழாது.

வாழ்க்கை.....!
புதிரானது அல்ல - இன்னும்
நீ புரிந்துக்கொள்ளாதது.


--------------------------------------------------

-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (26-Oct-14, 12:33 pm)
பார்வை : 302

மேலே