அழியும் அவிழாத மொட்டுகள்

சமுதாய சீர்கேட்டின் உச்சம். ஆண்களை விட அதிக மனபலம் உடைய பெண்கள் உடல் பலத்தால் பலவீனமானவர்கள் என்பதால் மட்டுமே சில வன்மம் பிடித்தவர்களிடம் தோற்க வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்.நாங்கள் பெண்களுக்கு மதிப்பளிப்பவர்கள் ,பெண்களை கடவுளாய் மதிப்பவர்கள், எங்கள் நாட்டில் நதிகளுக்கு கூட பெண்களின் பெயர்களைத் தான் வைத்திருக்கிறோம் என்று சொல்லும் ஒவ்வொரு இந்தியரும் இன்று ஒரு நாள் மட்டும் தலை குனிந்து கொள்ளுங்கள். 4 வயது சிறுமிக்கு நடந்த அந்த கொடுமையை தட்டிக் கேட்க முடியாதவர்கள் அதை மட்டுமாவது செய்யலாம் .இதை நாம் அனைவரும் எப்படியும் இன்னும் சில நாட்களில் மறந்து போகலாம். ஆனால் அந்த சிறு குழந்தையின் மனதில் பதிந்ததை யாரால் அழிக்க முடியும்.தனக்கு நேர்ந்த இந்த விபத்தின் முழுமையான அர்த்தம் கூட தெரியாத அந்த மழலைக்கு நாளை என்ன நீதி அளிக்கும் இந்த சமுதாயம்?. தன்னுடைய சில மணி நேர மகிழ்ச்சிக்காக ஒரு குழந்தையின் அழகான மழலை பருவத்தை சிதைத்த அந்த வெறி பிடித்த மிருகத்துக்கு மரண தண்டனை கூட குறைவு தான் . ஆனால் அந்த குறைந்தபட்ச தண்டனையை வழங்க கூட இந்த ஜனநாயக நாட்டிற்கு மனம் வராது .ஏனென்றால் "ஓர் உயிரை கொள்ளும் உரிமை மனிதனுக்கு கிடையாதாம் ,அது மனித உரிமைகள் மீறலாய் கருதப்படுமாம் .குற்றம் செய்தவர் திருந்துவதற்கும் வாய்ப்பளிக்க வேண்டுமாமம் ". இங்கு மனித உயிரைத் தவிர எதை வேண்டுமானலும் எளிதாக அழிக்கலாம் .அதற்கான அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் உண்டு என்பதனால் அந்த தண்டனையும் கிடையாது .அப்படியே கிடைத்தாலும் அடுத்த நடவடிக்கையாய் பாவப்பட்ட ,அநியாயமாய் பழி சுமத்தப்பட்ட அந்த அப்பாவிக்கான கருணை மனு கருணையோடு பரிசீலிக்கப்பட்டு விடுதலை அடைவார் . மற்ற நாடுகளில் தண்டனைகள் கடுமை ஆனால் தான் தவறுகள் குறையும் என்ற கொள்கை இருந்தால் நம் நாட்டில் மட்டும் தான் தண்டனைகள் குறைந்தால் தான் தவறுகள் அதிகமாகும் என்ற கொள்கை உள்ளது .இன்று அடுத்தவருடைய மகளை சிதைக்கும், ரசிக்க வேண்டிய மலரை காலில் இட்டு மிதிக்கும் அந்த ரசனையற்ற வெறியர்கள் நாளை இதே நிலை தன் சகோதரிக்கோ , தன் மகளுக்கோ நேர்ந்தால் என்ன செய்வார்கள்.அதை எதிர்த்து குரல் கொடுப்பார்களா? அல்லது இனம் இனத்தோடு என்பது போல் அவர்களுக்காக இவர்கள் கருணை மனு போடுவார்களா?.தந்தையாய்,சகோதரனாய் குழந்தையாய்,தோழனாய்,காதலனாய்,கணவனாய் ,பிரித்து பார்த்து பழகும் பெண்களை சிலர் குழந்தையாய்,தோழியாய் ,தாயாய் பார்ப்பதே இல்லை.பெண்னை விலை பட்டியல் இட்ட ஒரு விலை பொருளாய் மட்டுமே பார்த்து உபயோகித்து உடைத்து எறியும் பலருக்கு ஒரு உண்மை மட்டும் புரிவதே இல்லை. "புயல் என்பது தென்றலின் வேறு ஓர் பரிணாமமே" என்பது தான் அது .ரசிக்க வேண்டிய தென்றலை சிதைக்கும் போது உருவாகும் புயலின் வேகத்தை யாராலும் தாங்க முடியாது.

எழுதியவர் : வேதா அரவிந்தன் (26-Oct-14, 11:24 pm)
பார்வை : 191

மேலே