கத்தி

அட்டகாசமாய் தொடங்கும் படத்தின் ஆரம்பத்திலேயே நமக்குப் பரபரப்புத் தொற்றிக் கொள்கிறது. ஒவ்வொரு காட்சியையும் எப்படி பரபரவென்று திரி பற்றிக் கொண்டு செல்வது போலவே கொண்டு செல்வது என்பதில் முருகதாஸ் கில்லாடி. முழுக்க முழுக்க லாஜிக்கை சினிமாவில் கொண்டு வர முடியாது என்றாலும் அதே திரைப்படத்தில் செவுட்டில் அடித்தாற் போல பகிரப்படும் கருத்துகள் திரைப்படத்தை வாழ்க்கையின் ஒரு பகுதியாய்க் கருதி நகரும் தமிழ் ரசிகப் பெருமக்களின் வாழ்க்கையில் மிகப் பிரம்மாண்டமாகவே பிரதிபலிக்கவும் செய்கிறது.

கத்தியைப் பொறுத்தவரையில் முருகதாஸ் அண்ட் விஜய் கேங்க் கையிலெடுத்திருக்கும் பிரச்சினை தமிழ்நாட்டிலிருக்கும் எல்லா சாமானிய தமிழர்களுக்கும் தெரிந்த ஒரு பிரச்சினைதான். கார்ப்பரேட் நிறுவனங்களின் கோடிக்கணக்கான பணமும் அதற்கு அதிகாரவர்க்கம் வலது கையாய் இருந்து செய்யும் உதவிகளும் அதில் சாமானியன் நசுங்கி செத்துக் கொண்டிருப்பதும் நமது தெருவில், நமது ஊரில் நமது மாவட்டத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள்தாம். இதைப்பற்றி எல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்லி போராட எத்தனையோ சமூக நல குழுக்கள் நம்மிடையே இருக்கவும்தான் செய்கின்றன. அரசியல் ஆதாயம் விரும்பி போராடும் தொழில்முறை சார்ந்த அரசியல் கட்சிகளைக் கடந்த ஒரு சில போராட்டங்களான மீத்தேன் வாயு எடுப்பதற்கு எதிரான ஐயா நம்மாழ்வாரின் போராட்டம், அணு உலைக்கு எதிரான ஐயா உதயகுமாரின் போராட்டம் என்று தேர்தல் அரசியலோடு தொடர்பற்ற இந்தப் போராட்டங்களின் தாக்கம் தமிழகம் முழுதும் எத்தனை சதவீதம் இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்....?

அந்த அந்த மண்ணின் மைந்தர்களுக்கும், அந்த மண்ணோடு தொடர்பு கொண்ட மனிதர்களையும் கடந்து ஒரு புரட்சிகரமான வீரியமிக்க எண்ணங்களைக் கொண்டவர்களாக ஓரளவு தெளிவான விசயம் தெரிந்த்தவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். மிகையான தமிழக மக்களுக்கு தஞ்சையில் நடைபெற்று வரும் விவசாய நிலத்தில் மீத்தேன் வாயு எடுப்பதால் எழப்போகும் பிரச்சினைகள் பற்றிய பிரஞ்ஞையும், கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தைப் பற்றிய தெளிவும், தாக்கமும் மிக மிக குறைவு. தமிழர் பூமியில் வாழும் ஏழரை கோடி தமிழர்களுக்கு சரியான செய்தியை கொண்டு செல்ல வேண்டிய ஊடகங்கள் பரபரப்பு செய்திகளின் முன்பும், பகட்டு அரசியல் முன்பும் மண்டியிட்டு நாயைப் போல நக்கிப் பிழைத்துக் கொண்டிருந்தால் மக்கள் எப்படி செய்திகளின் வீரியத்தையும் உண்மை நிலையையும் அறிவர்...?

சினிமா என்பது ஒரு கலை. சமூகத்தின் மீது கடுமையான தாக்கங்களை தமிழ் சினிமா ஏற்படுத்தி இருக்கிறது என்பது யாராலும் மறுக்கவே முடியாத வரலாறு. ஒரு கலைஞன் பிழைப்புக்காய் தன் நடிப்புத் தொழிலை செய்யும் அதே நேரத்தில் இந்த சமூகத்தில் உயரிய தாக்கத்தை உண்டாக்கும் ஒரு ஊடகத்தில் நாம் பணிபுரிகிறோம் என்ற விழிப்புணர்வையும் கொண்டிருக்க வேண்டும். கத்தி மாதிரி திரைப்படங்கள் தமிழகத்தில் நிகழ்ந்தேறிய, நிகழ்ந்து கொண்டிருக்கிற அல்லது நிகழப்போகிற வாழ்வியல் பிரச்சினைகளை ஆணித்தரமாக புனைவுத்தனமையோடு எடுத்து வைக்கிறது. நிலத்தடி நீரை உறிஞ்சி தமிழர் வாழ்வின் ஆதாரமான விவசாயத்தை எப்படி எல்லாம் ஆதிக்க சக்திகள் அழித்தொழிக்கின்றன என்று ஓராயிரம் கூட்டங்களும் போராட்டங்களும், செய்து கொடுக்க வேண்டிய தாக்கத்தை ஒரு இரண்டரை மணி நேர சினிமாவால் இந்த சமூகத்தில் ஏற்படுத்த முடியுமெனில் இது எத்தனை வலுவான ஒரு களம் என்பதை திரைப்படத்துறையில் இருப்பவர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

கொக்ககோலா விளம்பரத்தில் விஜய் நடித்திருக்கிறார் என்று மிகைப்படுத்தப்படும் குற்றச்சாட்டுகளை பற்றி விவாதித்து, விவாதித்து கத்தி திரைப்படம் நம் முன் வைக்கும் ஒரு பிரம்மாண்ட பிரச்சினையை நாம் மறந்து போகவேண்டும் என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம்? விஜயையும் முருகதாசையும், லைக்காவையும், ராஜபக்சேவையும் பிடிப்பது அல்லது எதிர்ப்பது என்பது வேறு.... கத்தி பேசும் கருத்தியலை கவனிப்பது என்பது வேறு...! கொக்ககோலா விளம்பரத்தில் விஜய் நடித்ததால் கத்தி படத்தில் சொல்ல வரும் கருத்தை முடமாக்க நினைப்பது புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடா? சினிமாவில் நடிப்பவர்களை தேடிப்பிடித்து நீங்கள் வீதியில் இறங்கிப் போராடத் தயாரா என்று கேள்விகள் கேட்கும் என் புரட்சித் தமிழினமே.....

போராட்டம் என்பதற்கு இதுதான் வழிமுறை, இன்னதுதான் வடிவம் என்று நீ நினைத்துக் கொண்டிருந்தால் அந்த எண்ணத்தில் இரண்டு லிட்டர் பெட்ரோலை ஊற்றி எரிக்கத்தான் வேண்டும். தெருவில் இறங்கிப் போராடும் யாரோ ஒரு சமூக நலம் விரும்பி சினிமாவில் நடித்து கருத்து சொன்னால் அதன் தாக்கம் தமிழகத்தில் தீயாய் பற்றிப் பரவி எல்லோரையும் யோசிக்க வைக்குமா? எல்லோரையும் மக்கள் நடிகனாய் ஏற்றுக் கொள்வார்களா? ஒரு நடிகன் தன்னுடைய நடிப்புத்திறனால் மக்களின் மனங்களை கவர்கிறான். அப்படியான நடிகன் திரையில் தோன்றிச் சொல்லும் செய்திகள் கெட்ட செய்திகளாய் இருக்கக் கூடாது நல்ல செய்திகளாய் சமூகத்தை கிடுக்கிப் பிடிபோட்டு யோசிக்க வைக்கும் திறன் கொண்டதாய் இருக்க வேண்டும் என்று சொல்வதுதானே தெளிந்த பார்வையாய் இருக்க முடியும்? தமிழ் சினிமாவில் விஜய் போன்ற நடிகர்கள் ஒரு குறிப்பிடத் தகுந்த உயரத்தை எட்டிப் பிடித்திருப்பது யாரோ போட்ட பிச்சையைப் போன்று சித்தரிக்கும் மனோவாதத்தை விடுத்து அப்படி ஒரு ஆளுமை கொண்ட நடிகர் எதைப் பேசுகிறார் என்பதைப் பொறுத்து நமது விமர்சனங்களை முன் வைக்கலாம்தானே...?

கத்தி திரைப்படத்தை விஜய், முருகதாஸ் இன்ன பிற அடையாளங்களின்றி எந்த காழ்ப்புணர்ச்சியுமின்றி பார்த்து விட்டு வெளியே வரும் போது கார்ப்பரேட் முதாலாளிகளின் அடாவடித்தனமும், உணர்ச்சி மிகுந்த பரபரப்பான செய்திகளை வெளியிடுவதில் முனைப்பு காட்டும் போலி ஊடகங்களின் மீதும் வரும் கோபத்தை அந்த திரைப்படத்தின் வெற்றியாகத்தான் நான் பார்க்கிறேன். இதற்கிடையில் படம் வருவதற்கு முன்பே லைக்கா முதலாளி ராஜபக்க்ஷேவோடு தொடர்புடையவர் என்று போராட்டத்தில் குதித்த சோ கால்ட் தமிழர் நல அமைப்புக்கள் வேறு, எந்த சித்தாந்தத்தை எதிர்க்கிறோம் என்று தெரியாமல் லைக்கா இலங்கையோடு வியாபாரத் தொடர்பு கொண்டிருக்கிறது என்பதற்காகவே கத்தியை எதிர்த்து விட்டு இப்போது லைக்காவின் பெயரை நீக்கி விட்டு படம் வெளியிட்டதில் ஜென்ம சாபல்யம் அடைந்தவர்களாய் தங்களை முடக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

விவசாயிகளுக்கு தமிழகத்தில் ஓராயிரம் காரணங்களால் பிரச்சினைகள் ஏற்பட்டு விவசாயம் தடைப்பட்டுக் கொண்டிருக்கிறது அதை எல்லாம் ஒரே ஒரு திரைப்படத்தில் எடுத்துச் சொல்லி விட முடியாது என்பது எப்படி அறிவு ஜீவிகளின் ஞானக்கண்களுக்குத் தெரியாமல் போய் விவசாயிகள் என்ன பன்னாட்டு நிறுவனங்களால் மட்டுமா பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற மந்தக் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். கத்தி என்னும் திரைப்படத்தில் பேசப்பட்டிருக்கும் அரசியலைப் பற்றி எல்லாம் பெரிதாக அக்கறை கிடையாது இந்தப்படத்தை எதிர்த்து விமர்சனம் செய்பவர்களுக்கு..., அவர்களின் பிரச்சினை எல்லாம் இதைப் பேசுபவன் சினிமாக்காரன், அவனுக்கு என்ன இதைப் பற்றிப் பேச யோக்கியதை இருக்கிறது என்று நினைக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை சமகாலத்தில் வந்த திரைப்படங்களிலேயே மிகத் தைரியமாக முதலாளித்துவத்தின் முகத்திரைகளை கிழித்தெறிந்ததோடு மட்டுமில்லாமல் ஊடக வியாபாரிகளை எல்லாம் ஊறுகாய் போட்டு ஊறவும் வைத்திருக்கிறது கத்தி அண்ட் டீம்.

லாஜிக் பார்த்துப் பார்த்து படம் பார்க்க நினைப்பவர்கள் எல்லாம் எந்த திரைப்படத்தையுமே பார்க்க கூடாது. ஒரு கதையைப் பின்னிக் கொண்டு செல்லும் போது சுவாரஸ்யக் காரணங்களுக்காக ஒரு படைப்பாளி பல அத்து மீறல்களை கதையின் மையக்கரு சிதையாமல் செய்வதில் என்ன தப்பு இருக்கிறது? விஜய் சிறைச்சாலையிலிருந்து தப்பிப்பதிலிருந்து தொடங்கும் கதை, அதிவேக தொடர் வண்டியைப் போல அதிரடியாய் நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு காட்சியையும் கடந்து செல்லும் போது ஒரு உற்சாக பரபரப்பு நமக்குள் தொற்றிக் கொள்ள, அட்டகாசமான திரைக்கதையும், அலட்டலான விஜயின் நடிப்பும் கூட்டணி போட்டு திரைப்படத்தை அதகளமாக்குகின்றன. ரஜினி எத்தனை பேரை அடித்தாலும் என்ன என்ன ஜிம்மிக்ஸ் வேலைகளை சண்டைக்காட்சிகளில் காட்டினாலும் எப்படி ஒரு ஆக்சன் ஹீரோவாக அவரை ஏற்றுக் கொண்டோமோ அதே வரிசையில் விஜய் இன்று எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுக்கக் கூடிய ஒரு ஆக்சன் ஹீரோவாய் பரிமாணம் எடுத்திருக்கிறார். 50 பேர்களை விளக்கை அணைத்து விட்டு சில்லறைக் காசுகளைத் தூக்கிப் போட்டு போட்டு அவர் அடித்து துவம்சம் செய்கையில் தியேட்டரில் விசில் பறக்கிறது.

விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினையை மிகவும் அழுத்தமாகவே பதிவு செய்திருக்கும் இயக்குனர் முருகதாஸுக்கு பாராட்டுக்கள். இரண்டு வேடங்களுக்கும் உருவத்தில் நிறைய மாறுதல்களைச் செய்து முருகதாஸ் அதிகம் மெனக்கெடவே இல்லை. ஜீவா விஜயும், கத்தி என்னும் கதிரேசனாய் நடித்திருக்கும் விஜயும் நடிப்பில் வித்தியாசம் காட்டுகிறார்கள். விஜய் இரண்டு வேடத்தையும் அல்வா சாப்பிடுவது போல சாப்பிட்டு இருக்கிறார். ஆக்சன் -ஹீரோக்களின் படத்தில் கதாநாயகிக்கு என்ன வேலை இருக்குமோ அந்த வேலையைச் சரியாய் செய்திருக்கிறார் சமந்தா. படத்தில் விவசாயிகளாய் நடித்திருக்கும் அத்தனை முதியவர்களின் செலக்சனிலும் முருகதாஸின் உழைப்பு தெரிகிறது.

அடுத்த தலைமுறையினருக்கான கம்போசராய் களம் இறங்கி இருக்கும் அனிருத் சோடை போகவில்லை. பாடல்களில் கலக்கி எடுத்திருக்கிறார் மனுசன். செல்ஃபி புள்ள பாட்டும், காட்சியமைப்பும் விஜயின் நடனமும்... அம்மாடியோவ் என்று சொல்ல வைக்கின்றன. கதையோடு ஒன்றி இதே போல அழுத்தமான எதார்த்த வேடங்களை ஏற்று விஜய் நடித்தால் விஜயை கலாய்க்கும் ஒரு கும்பல் கூண்டோடு காலி செய்து கொண்டு வேறு யாராவது நடிகர்கள் பக்கம் தங்கள் கூடாரத்தை அமைத்துக் கொள்ளத்தான் வேண்டும். படத்தைப் பார்த்து விட்டு வெளியே வரும் ஒவ்வொரு நகரத்து இளைஞனுக்குள்ளும் விவசாயம் செய்தால் என்ன என்ற எண்ணம் ஆழமாய் தோன்றுவதோடு.... இயற்கையாலும், அரசியலாலும் பொய்த்துப் போகும் விவசாயிகளின் தண்ணீர் தேவைகள்.... பன்னாட்டு முதலாளிகளாலும் எப்படி சூறையாடப்படுகிறது என்பதை ஓரளவிற்கு விளங்கிக் கொண்ட வேதனையும் கண்டிப்பாய் ஏற்படும்.

மொத்தத்தில் கத்தி வெறுமனே வீம்புக்காய் எல்லோரும் சொல்வது போல வெறும் அட்டைக் கத்தி அல்ல.......இது.... அட்டகாசமான கத்தி...!!!!!

எழுதியவர் : Dheva .S (28-Oct-14, 8:58 pm)
Tanglish : katthi
பார்வை : 235

சிறந்த கட்டுரைகள்

மேலே