தாகம்

வழக்கத்திற்கு மாறாக இன்று பஸ் சரியான நேரத்திற்கு வந்துவிட்டது. இதை
எதிர்பார்க்காத பலர் ஏமாந்தனர். ரிக்கட் வாங்குமிடத்திலும் கூட்டம் குறைவுதான்.
முன்பே ரிக்கட் வாங்கி காத்திருந்தவர்களை வரிசையில் நிற்க வைத்து பெட்டிக்குள்
அனுப்பிக்கொண்டிருந்தனர். குறுக்கே வந்து ஏற முயற்சித்தவர்களைக் கண்டித்து வரிசைக்கு
பின்னால் அனுப்பத் தவறிவில்லை.
காந்தி வழக்கம் போல் அலட்சியமாக வந்து வரிசையில்
சேர்ந்து கொண்டான். இடம் கிடைப்பது கடினம் தான் இருந்தாலும் நின்று பார்ப்போம்
என்றுதான் நின்றான். ஒரு பெரியவர் ஒருவரிடம் வயசானவன் என்னால் நிக்க முடியல இது
மாதிரி அனுப்புவீங்கன்னு தெரியாது கொஞ்சம் விடுங்கம்மா என்று கனிவாகக்
கேட்டுப்பார்த்தார். ஒங்கள மாதிரி வயசானவங்களல்லாம் நிக்கிறாங்க பாருங்க தெரியலன்னா
இப்ப தெரிஞ்சிக்கோங்க என்று கூறியபடி வரிசையை ஒழுங்கு படுத்த தொடங்கினார்.
ஒரு வழியாக காந்தி உள்ளே சென்றான் எல்லா இருக்கைகளும் நிறைந்திருந்தன. உள்ளே செல்லச்
செல்ல இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது.

இரண்டு குழந்தைகளும்
ஒரு முதியவரும் அமர்ந்திருந்த இருக்கையில் இன்னொருவர் அமரலாம் அங்கு பையை
வைத்திருந்தனர். எதற்கும் கேட்டுப் பார்ப்போமே என்றுதான் கேட்டான் அவன் எதிர்பாராத
விதமாக எதிரே அமர்ந்திருந்த பெண் அந்த பையை எடுங்கப்பா அவரு உக்காரட்டும் என்று கூற
எதிர்பாராமல் இடம் கிடைத்த மகிழ்ச்சியை புன்னகைத்து நன்றி கூறி வெளிப்படுத்தினான்.
மெல்ல மெல்ல வண்டி நிறையத் தொடங்கியது. காந்திக்கு அருகில் வந்த நடுத்தர வயதுக்காரர்
இன்னைக்கு வண்டி நேரத்தோட வந்துட்டுதோ எனக் கேட்க வண்டி சரியான நேரத்துக்குத்தான்
வந்துது நீங்கதான் லேட் என்று தலையை ஆட்டி கேட்பவர் புன்னகைக்கும்படி தனக்கே உரிய
நகைச்சுவை உணர்வோடு பதிலளிக்க இடம் கிடைக்காத வருத்தத்தை மறந்து சிரிக்கத்
தொடங்கினார். பக்கத்திலிருந்தவர்களும் காந்தியின் பதிலுக்கு சத்தமில்லாமல்
சிரித்தனர்.
பெட்டிக்குள் மின் விசிறிகளிருந்தும் வேர்த்துக் கொட்டியது. இவனுக்கு தாகம் நாக்கை
வரட்டியது. தண்ணீர் வாங்கி வந்திருக்கலாம். இனிமேல் போவது கிடைத்த இடத்திற்கு
ஆபத்தாகி விடும் பையை வைத்துவிட்டு பக்கத்திலிருப்பவரிடம் சொல்லிவிட்டுப் போகலாம்.
ஏனோ அப்படிச் செய்ய மனமில்லை எல்லோர் கைகளிலும் தண்ணீரு பாட்டிலிருந்தது.

கேட்டு
வாங்கிக் குடிக்க சுயமரியாதை இடமளிக்கவில்லை. தண்ணீர் விற்பவர்கள் வந்தால் வாங்கிக்
கொள்ளலாம் என்று இருந்து விட்டான். ஒருவரும் வருவது போல் தெரியவில்லை. வேறு
வழியின்றி வேர்வை சொட்டச்சொட்ட காப்பி வாங்கி குடித்தான்.

எதிரில் அமர்ந்திருந்த
மற்றொரு அம்மாவை வழியனுப்ப வந்திருந்த அவர் தம்பி குடும்பத்தினர் மஞ்சள் நிற
குளிர்பான பாட்டிலை வாங்கி நீட்ட எதுக்கு அதான் தண்ணி இருக்கில்ல நீங்க குடிங்க
இந்தா கோபி நீ குடிச்சுட்டு குடு என்று வெளியில் நின்று கொண்டிருந்த சிறுவனிடம்
நீட்ட அவன் வேண்டாம் அத்த.... என்று தலையை ஆட்டினான். கட்டாயப்படுத்தவே வாங்கி
ஒருவாய் குடித்தான்.

வெளியில் நின்றவர்கள் ஆளுக்கு ஒருவாய் குடித்து அரை
பாட்டிலுக்கு மேல் காலி செய்து திருப்பிக் கொடுத்தனர். வாங்கி குடிக்கும் போது
காந்தி சாடையாகப் பார்த்தான். நாம் பார்ப்பதை வேறுயாராவது பார்க்கிறார்களா என்று
கண்களைச் சுழற்றி நோட்டம் விட்டான். பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெரியவர்
இவனைப் போலவே குளிர்பானம் குடித்த அம்மாவை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரும் நம்மைப்போல தாகத்தோடு இருக்கிறார் என்பதை அவரின் அந்தப் பார்வை உணர்த்தியது.
வண்டி கிளம்பத் தயாரானது வழியனுப்ப வந்தவர்கள் விடை பெறத் தொடங்கினர். பக்கத்து
இருக்கையில் அமர்ந்திருந்த பெரியவருக்கும் தண்ணீர் தாகமாகத்தானிருக்க வேண்டும்.
தண்ணிர் குடிப்பவர்கள் வாயை அண்ணாந்து ஏக்கமாகப் பாத்த்தார். ஒருவர்கூட அவரைக்
கண்டுகொள்ளவில்லை.

அவர் முகத்தைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. செங்கல்பட்டு,
மேல்மருவத்தூர், திண்டிவனம் என எந்த நிலையத்திலும் தண்ணீர் விற்பவர்கள் வராமல் போனது
வியப்பாக இருந்தது. தாகம் நாக்கை வரட்டியது. தொண்டை வரண்டு உதடுகளுக்கும் பரவியது
வரட்சி. யார் யாரெல்லாம் தண்ணீர் வைத்திருக்கிறார்கள் என நோட்டம் விட்டான்
இவனைத்தவிர எல்லோரிடமும் இருந்தது.
ஒருத்தரின் முகமும் தண்ணீர் கேட்டால் கொடுப்பது போலில்லை. காசு கொடுத்து வாங்குகிற
பொருளாகிவிட்ட தண்ணீரைக் குடிக்க ஓசியில் கேட்பது நியாயமில்லை. அப்படியே கேட்டாலும்
வாங்கிக் வேண்டியதானே என்ற பதில்தான் வரும். அதற்குக் கேட்காமலிருப்பதே
புத்திசாலித்தனம்.

இருந்தாலும் நா வரட்சி தாக்குப் பிடிக்க முடியல. அந்தப்
பெரியவருக்கும் அப்படித்தானிருந்திருக்க வேண்டும். அவர் தாகத்தில் தவிப்பது
முகத்தில் தெரிகிறது. மெல்லிய தூரல் விழத் தொடங்கியது. சற்று குளிர்ந்த காற்று வீசத்
தொடங்கியது. பெரியவர் முகம் சற்று மலர்ந்தது. தாகம் தணிந்தது போல உணர்ந்திருக்க
வேண்டும். அவருக்கு பக்கத்தில் அவரைப் போலவே வேட்டி கட்டியிருந்தவர் வீட்டிலிருந்து
கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்தார்.

இவர் மீண்டும் அண்ணாந்து அவர்
வாயைப் பார்த்தார் குடித்து முடித்ததும் கெஞ்சுவது போல் முகத்தை வைத்துக்கொண்டு கையை
நீட்டினார் கொடுத்ததும் கொஞ்சமாகத் தொண்டையை நனைத்துக் கொண்டு சுடுது இல்ல. என்னா
வெய்யிலு ஏ அப்பா என்று பெருமூச்சு விட்டார். ஒரு வாய் மட்டும் குடித்துவிட்டு
தந்துவிட்டார். தாகம் அடங்கவில்லைதான் என்ன செய்வது ஓசியில வாங்கி தாகம் தீரக்
குடிக்க முடியுமா.
பொறியியல் கலந்தாய்வுக்கு சென்று வந்த மகளும் தந்தையும் தாங்கள் தேர்வு செய்த
கல்லூரியின் சிறப்புகளை பேசியபடி கையிலிருந்த குளிர்பானத்தை குடித்துக் கொண்டு
வந்தனர். அவர் அதையும் ஏக்கமாகப் பார்த்தது காந்தி மனதுக்கு சங்கடமாக இருந்தது.

இன்னும் அஞ்சு வருடம் கழிச்சு நான் ஒன்னோட அதிகமா சம்பளம் வாங்குவன் மகள் கூறியதைக்
கேட்ட அப்பாவுக்கு பூரிப்பு. இவனுக்கு இடம் தந்த முதியவர் எதிரில் அமர்ந்திருந்த தன்
மகளிடம் ஏதோ கிசுகிசுக்க பையைத் திறந்து முறுக்குப் பொட்டலத்தை எடுத்து
குழந்தைகளுக்குக் கொடுத்தார். நமக்கும் கொடுத்துவிடுவார்களோ கொடுத்தால் எப்படி
மறுப்பது என்று யோசித்தபடி முகத்தை வேறுபக்கம் வேடிக்கை பார்ப்பது போல் திருப்பிக்
கொண்டான்.

நல்ல வேளை அப்படி நடக்கவில்லை. இருந்தாலும் என்ன மனிதர்கள் இவர்கள்.
பக்கத்திருப்பவர்களிடம் ஒரு மரியாதைக்காகவாவது கேட்க வேண்டாமா என்று மனதுக்குள்
கூறிக்கொண்டான். குழந்தைகள் முறுக்கைத் தின்று முடித்ததும் தண்ணீர் கேட்கத்
தொடங்கிவிட்டனர்.
தண்ணீர் பாட்டிலைக் கொடுக்க ஒரு பாட்டிலைக் காலி செய்தனர். அதையும் பெரியவர்
உமிழ்நீரை விழுங்கியபடி பார்த்துக் கொண்டிருந்தார். விழுப்புரம் வந்துவிட்டது தோச
வட சம்சா டீ.... காபி... வாட்டர்.... கூல்டிரிங்ஸ் என பல வித சத்தம் கேட்க காந்தி
ஒரு பாட்டில் தண்ணீரை வாங்கி கட கட வென குடித்தான் பெரியவர் பழயபடி பார்க்கத்
தொடங்கினார். பதினைந்து ரூபாய் கொடுத்து வாங்கியதைப் பார்த்துக் கொண்டுதானிருந்தார்.


அதனால் நம்மிடம் கேட்க மாட்டார் என்றுதான் நினைத்தான் ஆனாலும் அவர் கைகள் அவனை
நோக்கி நீண்டன அவனும் கொடுத்தான் இரண்டு வாய் குடித்துவிட்டு கொடுத்ததும் காந்தி
கேட்டேவிட்டான். நானும் பாத்துகிட்டுதான் வரன் இம்மான் தாகத்தோட வரீங்கள ஒரு தண்ணீர்
பாட்டிலுதான் வாங்குனா என்ன? நம்ம வசதிக்கு பதினைஞ்சு ரூவா குடுத்து தண்ணி வாங்கி
குடிக்க முடியுங்களா?


இரத்தின புகழேந்தி

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (31-Oct-14, 9:08 am)
Tanglish : thaagam
பார்வை : 169

மேலே