எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன்

எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன்

பெண்ணிய எழுத்தாளர்களுக்கு முன்னோடியான மறைந்த எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன் அவர்களைப் பற்றிய பொதுவான சில செய்திகள் என்று பார்த்தோமானால்,இலக்கிய சிந்தனை அமைப்பின் பரிசினை இரண்டுமுறை வென்றவர்.தமிழின் முக்கியமான படைப்பாளிகளுள் ஒருவர் என்ற வகையில் ஒருமுறையும்,பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும்,திரு.வி.க.விருது,பாரதீய பாஷா பரிஷத் விருது, சுழலில் மிதக்கும் தீபங்கள் நாவலுக்காக,தமிழக அரசின் பரிசு..எனபல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரரான ராஜம் கிருஷ்ணன்,

பொதுவாக கற்பனையை ஆதாரமாகக் கொண்டு எழுதுபவர்களை எழுத்தாளராக ஏற்றுக் கொள்ள மனம் ஒப்பவில்லை என்று சொல்லிவந்தவர்.அவர் இவ்வாறு சொல்வதற்கு காரணம் உண்டு.

எது குறித்து எழுதினாலும்,அந்தக் கதைக்கேற்ற,கருவிற்கேற்ற களங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து,அந்தந்தப் பகுதியின் வட்டார வழக்குகளோடு தனது எழுத்துக்களைப் பதிவு செய்தவர். 1948.ல் அவர் எழுதிய முதல் நாவல் சுதந்திரஜோதி.இதற்காக,அவர் மேற்கொண்ட சுற்றுப்பயணம் கடைசிவரை தொடர்ந்தது.

1975.ல் சோவியத்லாந்து நேரு பரிசை வென்ற,கோவா விடுதலைப் போராட்டத்தை சித்தரிக்கும் வளைக்கரம் நாவலுக்காக,கோவாவில் சென்று தங்கி விபரங்களையும், ஆவணங்களையும் சேகரித்தார்.

உப்பளத்தொழிலாளர்கள் வாழ்க்கை குறித்த கரிப்பு மணிகள் நாவலுக்காக, உப்பளங்களுக்கே சென்று தங்கி வாழ்ந்தார்.அதேபோல் பெண்சிசுக் கொலையை மையப்படுத்தி எழுதிய,மண்ணகத்து பூந்துளிகள் நாவலுக்காக உசிலம்பட்டிக்கே சென்று தங்கியிருந்தவர்.

இதுபோன்ற அவரது நடவடிக்கையால்தான் அவரது எழுத்து உண்மைக்கு மிக அருகாமையிலும்,சில நேரம் அப்பட்டமான உண்மையாகவும் இருந்தது.இந்த உண்மைத்தன்மையே அவரது எழுத்துக்களுக்கு வசீகரத்தையும் கொடுத்தது என்றால் மிகையில்லை.இதுவே உலக சிறுகதைகளின் வரிசையிலும் அவருக்கு இடத்தைப் பெற்றுக் கொடுத்தது.

சமூகத்திற்காக எழுதிவிட்டோமே..பெண்விடுதலைக்காக எழுதிவிட்டோமே..ஒரு எழுத்தாளருக்கான கடமையை உரிய முறையில் நிறைவேற்றிவிட்டோமே.. அதுபோதும் என்று அவர் தனது வாழ்க்கையை சுருக்கிக் கொள்ளவில்லை. அவரது உடல் ஒத்துழைத்த வகையில்,அறிவொளி இயக்கத்துக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் மற்றும் களப்பணிகளையும் மேற்கொண்டிருக்கிறார் என்பதையும் பல எழுத்தாளர்கள் பதிவு செய்திருக்கின்றனர்.

வேருக்கு நீர் என்ற,சாகித்யஅகாதமி பரிசு வென்ற நாவலைப் பொறுத்தவரை, அதன் மையக்கருவாக காந்திய சிந்தனைகள்,சுதந்திரத்திற்குப் பின்னான இந்தியாவில் தோல்வியைத்தான் சந்தித்திருக்கிறது.தேசத்தின் அகச்சூழல், அதற்கான அரசியல் காரணங்கள்,ஆகியவற்றை சித்தரிப்பதாக இருக்கிறது.

1969.ம் ஆண்டில் உள்ள இந்தியாவின் நிலைதான் கதையின் காலம்,நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் உள்ள ஒரு ஆசிரமத்தில் காந்தியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களுடன் துவங்கும் கதைக்களம், கோவை, சென்னை,கல்கத்தா என்று நீண்டு பாட்னாவில் முடிகிறது.

காந்தி அறிவித்த போராட்டங்களில் பங்கேற்றவரும்,பிராமணராக இருந்தும் கலப்புமணம் புரிந்தவரும், சுதந்திரத்திற்குப் பின் நாடு செல்லும் போக்கினைக் கண்டு மனம் வருந்தி, மரணத்தை எதிர்நோக்கி நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடக்கும் தந்தையும்,

மலைவாழ் பழங்குடியான,இருளர் இனத்தைச் சேர்ந்தவளும்,அந்த இனத்து குழந்தைகளின் கல்வி மேம்படவேண்டும்,அங்கிருக்கும் இளைஞர்கள் இடதுசாரித் தீவிரவாதத்திற்கு பலியாகி விடக்கூடாது என்று அக்கறைப் படுகிறவளுமான தாயும்தான்,இந்நாவலின் கதாநாயகி யமுனாவின் பெற்றோர்கள்.

காலையில் எழுந்து பிரார்த்தனை செய்வது முதல்,உண்பதில்,உடுப்பதில் எளிமையும்,மற்றவர் மனம் கோணாத வகையில் தனது நடத்தையில் மேன்மையையும்,யாருடைய துன்பத்திற்கும் தான் காரணமாகிவிடக்கூடாது என்ற அக்கறையையும் கொண்டவளாக இருக்கும் யமுனா,அகிம்சையைப் போற்றிப் பின்பற்றுகிறவளாகவும்,அதனை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பிறருக்கு போதிப்பவளாகவும் இருக்கிறாள்.

போராடிப் பெற்ற சுதந்திரத்தின் பலன்,இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களான ஏழைகளுக்குப் போய்ச் சேரவில்லை என்று,இடதுசாரித் தீவிரவாதத்தைக் கையிலெடுக்கும் இளைஞன் மட்டுமின்றி,மகாத்மா காந்திதான் தங்கள் வாழ்வின் வழிகாட்டி என்று சொல்லிக் கொண்டே அரசியலைத் தனது சுயலாபத்திற்காகப் பயன்படுத்தும் சிலர்,சாதி மதப் பெருமையை விட்டுக் கொடுக்காத சிலர், தீண்டாமையை தொடர்ந்து கடைபிடித்தே வருபவர்கள்.. என இக்கதையில் பல பாத்திரங்கள் வருகின்றன.

காந்தியத்தை எங்கேயும் விட்டுக் கொடுக்காத,திருக்குறளில்கூட காந்திய சிந்தனைகளை அடையாளம் காணுகிறவளாக இருக்கும்,பட்டதாரிப் பெண்ணான யமுனா..,தனது வாழ்க்கைப் போக்கில் சந்திக்கும் அதிர்ச்சிகளின் பட்டியல் இதில் நிறைய உண்டு.

சிறுவயதில் இருந்து,தனது தந்தையின் உற்ற தோழராக இருந்து,சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற ஒருவரை யமுனா சந்திக்கும்போது,அந்த இடத்தில் நிற்கின்ற,கருநீல வண்ணத்தில் முன்னும் பின்னுமாக படகு போல நீண்டிருக்கும் காரைப் பார்த்து,இது யாருடைய வண்டி..? என்று கேட்கிறாள்.

அவர் சொல்கிறார்.இது என்ன கேள்வி..இந்தக் கோடிக் கோடி அணைத்திட்டத்தில் பெரியவர்களான பலரில்,ஒரு ஏழைக் குடிமகனுடைய வண்டி ஏறிக்கொள்..என்கிறார்.

இப்போதும் நீங்கள் போட்டிருக்கும் கதரும்,வெயிஸ்ட் கோட்டும்,காரும் பொருத்தமாக இல்லையே என்று அவள் கேட்க..,காந்pதிஜியே,பிர்லாவின் பாக்கார்டு காரில் பிரயாணம் செய்திருக்கிறார்..ஆறுதல் கொள்..என்கிறார் அந்த மனிதர்.

அதேபோல்,கோவை ரயில் நிலையத்தில்,ஒரு அரசியல் கட்சியின் பிரச்சார பீரங்கியாக இருக்கும்,தனது பள்ளிக்காலத் தோழியை எதேச்சையாக சந்திக்கிறாள் யமுனா.இருவரும் பல விஷயங்கள் குறித்தும் பேசிக் கொள்கின்றனர்.ஒரு கட்டத்தில் அரசியல் குறித்து பேச்சு வருகிறது. தோழி சொல்கிறாள்.எங்கள் கட்சி பதவிக்கு வருவதற்குமுன் இருபது வருடமாக ஆட்சியில் இருந்தவர்களால்,தங்களுக்கு அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்கவில்லை என்று மக்கள் புரிந்து கொண்டனர். தென்னாட்டு கிராமங்களில் காந்தியை பலருக்குத் தெரியாது. ஆனால்,அண்ணா என்று சொன்னால் லட்சோப லட்சம் மக்கள் உருகிப் போகிறார்கள்.ஒவ்வொரு குடிசையிலும் நான் உங்களில் ஒருவன் என்று கலந்து கொண்டவர் அவர்..என்று தோழி சொல்ல, இப்போது மட்டும் எல்லாம் கிடைக்கிறதா..? என்று கேட்டுவிட யமுனாவிற்கு ஆசைதான். கேட்டால் அவள் கிடைத்தது என்றுதான் சொல்வாள். இல்லை என்பதை தன்னால் நிரூபிக்க முடியாதே..என்று யமுனா கவலை கொள்கிறாள்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் சென்னையில் யமுனாவுக்காக பிரச்சாரக் கூட்டங்களை ஏற்பாடு செய்கின்ற ஒருவன்,“நான் ஏற்கனவே நாலுகூட்டங்களில் காந்தி நூற்றாண்டுவிழா கொண்டாட ஏற்பாடு பண்ணியாச்சு.உங்களுக்கு நல்ல பின்னனி,படிப்பு, பர்சனாலிட்டி, பெண்ங்கிற கிளாமர் எல்லாம் இருக்கு.நீங்க சும்மா வந்து மேடையிலே நின்னாலே போதும்.கூட்டம் தன்னாலே மயங்கிடும்.மத்ததெல்லாம் நான் பாத்துக்கிறேன்..” என்று சொல்கிறான்.

யமுனாவோ எனக்கு அந்த மாதிரி அரசியல் எல்லாம் வேண்டாம் என்று மறுக்கிறாள். அதற்கு அவன் சற்று காட்டமாகவே பதில் சொல்கிறான். அரசியல் வேண்டாமா..?அப்ப சர்வோதயம் அது இதெல்லாம் எப்படி செயல்படும்.பேப்பரில் நாலு வரிச் செய்தி வரணும்னாகூட,அதற்கு ஒரு மந்திரி பேர் இருந்தாத்தான் வருது.அரசியல் பதவிங்கிற துருப்புச் சீட்டு இல்லாம ஒண்ணும் நடக்காது.அதனால அரசியல்லே ஒரு பதவியை முதல்லே சம்பாதிக்கணும்.அதில்லாம ஒரு சுக்கும் நடக்காது.

அதுவுமில்லாம அரசியல்னா இப்ப அவனவன் பதவி,பணம்,அதிகாரம்னு முன்னேற வாய்ப்பளிக்கும் களம்னதான் அர்த்தம்,இதிலே புகுந்து வெற்றிகரமாக வரஒ ரு சாமர்த்தியம் வேணும்.நீங்க ஒரே நேர்கோட்டுலே,கொள்கைப்படிதான் போவேன்னு அடம்புடிச்சா நிலவரம் தெரியாம முட்டிக்கப் போறீங்கன்னுதான் அர்த்தம்..” என்று சொல்ல யமுனா வாயடைத்துப் போகிறாள்.

சில பள்ளிக்கூடங்களில் காந்தியின் நூற்றாண்டு விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சிகளை பார்வையிடப்போகிறாள் யமுனா.அங்கே காந்தி என்றால் உருகிப் போய்விடுவேன் என்று சொல்லும் நீச்ச உடை அழகியான திரைத்தாரகையின் படங்கள் உட்பட,அதைப்போலவே செய்திகள் வந்த பத்திரிகை அட்டைப் படங்கள் கத்தரித்து ஒட்டப்பட்டிருக்கின்றன.

காந்தியைப் பற்றிய பேச்சுப் போட்டிகளை ஏற்பாடு செய்த சில சங்கங்களுக்கு யமுனா சென்றபோது,அங்கு அடுக்கு மொழிகளே முதலிடம் பெற்று, சொல்லுக்குப் பொருளே தேவையில்லை என்றுதான் சிறுவர் சிறுமியர் பேசுகின்றனர்.மாதர் சங்கம் ஒன்றில் வைரமும்,பட்டும் மின்ன,பணக்காரத் தனம் உடலெங்கும் வழிய,நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய ஒரு அம்மாள்,காந்தி நம்நாட்டுக்கு சூது செய்து,வாது செய்து,சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் என்று தொடங்கி,தன்னையும் காந்தியோடு
ஒப்பிட்டு பேசிக் கொள்கிறாள்.யமுனாவோ ஐயோ என்று தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்து கொள்கிறாள்.

அரசியல்நெடி வீசும் ஆசாமிகள் தலைமை வகித்த சில கூட்டங்களில்,வடநாட்டுக் காந்தியிலிருந்து வழுக்கி,தென்னாட்டு காந்தியைப்பற்றிப்பேசி ஒப்புமைகாண்கின்றனர்.

அன்றாட வாழ்க்கையில்,குழந்தைகள் சத்தியம்,எளிமை,அகிம்சை ஆகிய லட்சியங்களோடு வாழமுயல வேண்டும் என்பதை,வலியுறுத்தி பிரச்சாரம் செய்ய வந்திருந்த யமுனாவிற்கு,தனது முயற்சிகள் பலிக்கப் போவதில்லை என்று நிராசையே உண்டாகிறது.

இதுபோல பல சிக்கல்களை சந்திக்கும் யமுனா ஒரு கட்டத்தில்,தங்கள் ஆசிரமத்தில் தங்கி வளர்ந்த,பிரார்த்தனைக் கூட்டங்களில் தவறாமல்;;;;;;;;;; பங்கேற்ற, ஓய்வு நேரத்தின் போதெல்லாம் சர்க்காவில் நூல் நூற்ற,மலைவாழ் பகுதி குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த ஒருவரை திருமணம் செய்து கொள்கிறாள்.அவருக்கு கல்கத்தாவில் வேலை கிடைக்கிறது.கணவன் மனைவியாக கல்கத்தாவில் வசிக்கச் செல்கிறார்கள்.
அங்கு கணவனின் வேலைத்தரத்துக்கு தகுந்தாற்போல,சற்றே வசதியான வீடு.அவன் வேலைக்கு செல்வதற்கு உதவியாக,இவளுக்கு வீட்டில் நிறைந்திருக்கும் வேலை..என காலம் ஓடுகிறபோது,அவள் அன்றாடம் மேற்கொள்ளும் பிரார்த்தனைகூட செய்ய முடிவதில்லை.இது குறித்தும் அவள் வருந்துகிறாள்.

அந்தப் பகுதியில் எப்போதும் சண்டையும் சச்சரவுமாகவே வசிக்கும் ஏழைகள் உணவின்றி,தங்குவதற்கு சரியான வீடுகளின்றி இருக்கும் நிலை யமுனாவிற்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்த, அவர்களுக்கு உதவ நினைத்து,கம்பளி போர்வைகள் மற்றும் துணிகளை,மற்ற வசதியுள்ள வீடுகளில் பெற்று,ஏழைகளுக்கு கொடுக்க நினைக்கிறாள்.ஆனால், அங்குள்ளவர்களோ அறிமுகமில்லாத அவளை தங்களது வீட்டிற்குள்கூட விடாமல்,விரட்டியடிக்காத குறையாகத் துரத்துகிறார்கள்.

அந்த நிலையில்,வயிற்றுப் பசிக்காக எதையோ திருடிய ஒரு சிறுவனை சிலர் துரத்திக் கொண்டு ஓடிவர,அந்த சிறுவன் அடைக்கலமாக இவள் வீட்டிற்குள் வந்து ஒளிந்து கொள்கிறான்.துரத்தி வந்தவர்களின் ஆவேசத்தைப் பார்த்து பயந்துபோகிற யமுனா,அவர்களை எவ்விதத்திலும் தடுக்கமுடியாமல் தடுமாறுகிறாள். துரத்திவந்தவர்கள் அந்த சிறுவனை அடித்து உதைத்து இழுத்துப் போகிறார்கள்.இந்தக் களேபரத்தில் வீட்டில் மாட்டி வைத்திருந்த காந்தியின் படம் கீழே விழுந்து உடைந்துபோகிறது.

மனதால் மிகவும் பாதிக்கப்பட்ட யமுனா,தனக்குள்ளாக ஒரு சுயவிமர்சனம் செய்து கொள்கிறாள்.அகிம்சை வழி,அன்புவழி என்று தன்னைப் பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தவள்,அறியாமையினால் அஞ்சி ஒளிந்த பெண்களைக் காட்டிலும் தான் உயர்வானவள் என்று இருந்தவள்,இப்போது இடறி விழுந்துவிட்டேனே.. அவர்களைத் தடுக்க முடியவில்லையே..என்று எண்ணுகிறாள்.தனது இயலாமை மற்றவர்கள் மீதான கோபமாகத் திரும்புகிறது. அகிம்சையின் வடிவமாக இருந்த மக்கள்,இப்போது சுயநல மூட்டைகளாகி விட்டார்களே..! என்று.

மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் கணவனிடம்,நடந்த சம்பவங்களை சொல்லும்போது,அவனோ.. “யமுனா..இந்தக் கல்கத்தா நகரம் எப்படியோ நாசமாகப் போகட்டும்.நாம் இங்கே அன்னியர்கள.பிழைக்க வந்த இடத்தில் நாம்தான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.இப்போது இந்த நகரத்தின் எந்தப்பகுதிக்குப் போனாலும் இன்குலாப் ஜிந்தாபாத் என்றே முழக்கங்கள் கேட்கிறது.ஆங்காங்கே தீ வைப்பு சம்பவங்களும்,பெட்ரோல் குண்டு வீச்சுக்களும் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.நான் பாட்னாவிற்கு மாற்றல் கேட்டிருக்கிறேன்.விரைவில் இங்கிருந்து செல்லும்வரை,அந்த காந்தியின் படத்தை கட்டிலுக்கு அடியிலே மறைத்து வை..என்கிறான்.கண்ணீருடன் அவள் மறைத்தும் வைக்கிறாள்.

ஒருமுறை கடைவீதி வழியாக,மனிதர்களால் இழுக்கப்படும் கை ரிக்ஷாவில் செல்கிறாள் யமுனா,போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிவிடுவதால்,வண்டி நிற்கிறது.சாலையோரத்தில் பலவிதமான துணிகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதிலிருந்து ஒரு சிறுமிக்குரிய சட்டையை எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் முதியவர்,துணியைத் தொட்டுப்பார்ப்பதும்,தனது சட்டைப்பையில் இருக்கும் பணத்தை எண்ணிப்பார்ப்பதுமாகவே நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார்.

இதைப் பார்க்கின்ற யமுனாவிற்கு,இந்த நகரத்திலிருக்கும் ஏழைகள் அத்தனை பேரும்,இந்தத் துணிகளை வாங்குவதென்றால்,இங்கு குவித்துவைக்கப் பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான துணிகள்போதாதே.ஆனாலும்,ஏன் விற்பனையாகாமல் குவிந்தே கிடக்கிறது.? அவர்களால் ஏன் வாங்கமுடியவில்லை.? என்ற கேள்விகள் மனதிற்குள் ஓடுகிறது.

பின்னர்,இளம் அதிகாரியாக பதவியுயர்வு பெற்றிருந்த தனது கணவனோடு,பாட்னா நகரில் இன்னும் சற்று வசதியான வீட்டில் குடியேறுகிறாள்.அங்கேயும்,நகரெங்கும் நிரம்பியுருக்கும் ஏழைகளைப் பார்க்கிறாள்.ஒட்டுமொத்தமாக நாடெங்கும் உள்ள காட்சிதானோ இது..? என்று அவளுக்கு சந்தேகமும் வருகிறது.

சுதந்திரப் போராட்டக் காலங்களில் தனது தந்தையோடு இணைந்து போராடிய ஒருவரின் வீடு,அந்த நகரத்துக்குள் இருக்கின்ற தகவலறிந்து,அந்தப் பகுதிக்கு செல்கிறாள் யமுனா.ஆனால்,அந்தப் பகுதிமுழுவதும் அரண்மனைகளைப் போல பிரம்மாண்ட வீடுகளாக இருக்கிறது.தவறான முகவரிக்கு வந்துவிட்டோமா என்று ஐயப்படுகிற யமுனா,அவருடைய பெயரைச் சொல்லி வழிப்போக்கரிடம் விசாரிக்க, அவர் இது அவருடைய வீடுதானம்மா..என்று சொல்லிப் போகிறார்.அந்த வரிசையில் இருக்கும் வீடுகளிலேயே அதுதான் பெரிதாக இருக்கிறது.

புல்வெளியும்,ஊஞ்சலும்,விளையாட்டு மைதானம்கூட அந்த வீட்டின் வெளியே இருக்கிறது.காவலாளிகளின் விசாரணைக்குப்பின் தயக்கத்துடன் உள்ளே செல்லும் அவளை, வைரமூக்குத்தி,கம்மலுடன்,உயர்ரக பட்டுசேலையுடன் அமர்ந்திருக்கும் ஒரு பெண் வரவேற்கிறார்.

தனது தந்தையின் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்ட யமுனாவை, அவருடைய மகளா..நீ..அவரை எங்களுக்கு நன்றாகவே தெரியுமென்று சொல்லி, மகிழ்ச்சியுடன் அணைத்துக் கொள்ளும் அந்த பெண்,யமுனாவிற்கு சிற்றுண்டியாக நெய்யில் வறுத்த முந்திரியும்,பலகாரங்களும் கொடுத்து உபசரிக்கிறாள்.

முந்திரியைப் பார்க்கும்போது,தன் வீட்டைச்சுற்றி வசிக்கும் ஏழைகள் ஒரு நேரம் உண்பதற்காக படுகின்ற பாடும்,கூலியாகக் கிடைத்த சத்துமாவையும்,ரொட்டியையும்
பங்கிட்டுத் தின்கிற அவலமும் நினைவுக்கு வர,அவள் முந்திரி எனக்கு பிடிக்காது என்கிறாள்.பரவாயில்லை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று சொல்லி அந்தப் பெண்ணே முழுதாகத் தின்று தீர்க்கிறாள்.

பிறகு தான் தேடிக் கொண்டு வந்தவரைப் பற்றி யமுனா விசாரிக்கும்போது,அந்த பெண் சொல்கிறாள்.அப்போதெல்லாம் முன்னிருந்து பாடுபட்டதற்கு இப்போது நல்ல பலன் கிடைத்திருப்பதாகவும்,அவர் தற்போது மத்தியமந்திரியாக இருப்பதையும் சொல்கிறாள். இதைக் கேட்டு ஆச்சரியப்படும் யமுனா,அவர் மந்திரியாக இருந்தும்,இந்த நாட்டில் இன்னும் ஏழைகள் மிகுந்து இருக்கின்றார்களே..?என்று கேட்கும்போது,அந்தப் பெண் மிகுந்த ஆச்சரியத்தோடு,..ஏழைகளா..நம் நாட்டிலா..இன்னுமா இருக்கிறார்கள்..? என்று கேட்க,நொறுங்கிப் போகும் யமுனா,அதற்குமேல் அவளிடம் பேசுவதற்கு எதுவுமில்லை என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறாள்.

அந்த நேரத்தில் அவளுக்கு ஒரு சந்தேகம் வருகிறது.இங்கு மிக அழகாய் வீடுகள் இருக்கின்றன.ஆனாலும்,வீட்டின் மேற் கூரையில்,சிலஅடி தூரத்திற்கு மட்டும் வெறும் செங்கல்களை வைத்துக் கட்டி,அதனை கட்டிடமாகக்கட்டிமுடிக்கவில்லையே ஏன்.?

இதுகுறித்துஈஅவள் கணவனிடம் கேட்க,அட இதுகூட உனக்குத் தெரியாதா..? முழுதாய் கட்டிமுடித்துவிட்டால்,அந்த கட்டிடத்திற்கு விதிக்கப்படும் வரி அதிகம். ஆனால்,இன்னும் பணிமுடியாத கட்டிடம் எனில்,அதற்கு குறைவான வரிதான். அதனால்தான் அப்படி கட்டி நிறுத்தியிருக்கிறார்கள் என்று சொல்ல,தாங்கள் அங்கம் வகிக்கும் அரசை,தாங்களே ஏமாற்ற இவர்களுக்கு எப்படி மனம்வந்தது என்று நொந்து கொள்கிறாள் யமுனா.

இன்னொரு சந்தர்ப்பத்தில்,அந்தப்பகுதி எம்எல்ஏ ஒருவரைப் பற்றியும் ஒரு தகவல் தெரிய வருகிறது யமுனாவிற்கு.யமுனாவின் வீடருகே வசிக்கும் ஏழைமக்களின் குடிசைப்பகுதியில்,அடிக்கடி வெள்ள சேதம் ஏற்படும் என்றும்,அப்போது,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு,யானையின் மீது அமர்ந்த வரும் எம்எல்ஏ,ஏழை மக்களுக்கான சாப்பாடு,துணி போன்ற நிவாரண உதவிகள் செய்வாராம்.
யானையின் மேல் எதற்கு வருகிறார்.,என்று தகவல் சொன்ன பெண்ணிடம் அவள் கேட்க,சாலையெல்லாம் வெள்ளத்தில் மூழ்கிவிட்டால்,வாகனங்கள் எதுவும் போக முடியாது.யானை மீதுதான் போகமுடியும்.வெள்ளம் வரும்போதெல்லாம் அவர் இப்படித்தான் வந்து உதவிகள் செய்வார்.இதுக்காகவே சொந்தமாக யானை வைத்திருக்கிறார்.அந்த எம்எல்ஏ மிகவும் நல்லவர் என்று அந்தப் பெண் சொல்ல,

யானைமேல் வந்து பார்ப்பதைவிட,சாலைகளைப் போட்டிருக்கலாம்,வெள்ளம் பாதிக்காத குடியிருப்புகளைக் கட்டிக் கொடுத்திருக்கலாமே.அதனை ஏன் இவர்கள் செய்யவில்லை என்ற யோசிக்கிறாள் யமுனா.அதனை செய்துதந்துவிட்டால்,
அடுத்தமுறை வெள்ளம் வரும்போது,யானைமீது அமர்ந்து வந்து,தனது பேரன்பை, தன்னைச்சுற்றியிருக்கும் ஏழைகளுக்கு காட்டமுடியாமல் போய்விடுமே என்பதும் யமுனாவிற்கு பின்னர் புரிகிறது.

இதைப்போல பல காட்சிகள்,விமர்சனங்களாகவும்,சுயவிமர்சனங்களாகவும், எழுத்தாளரின் குரலாகவும் இருக்கும் கதைப்போக்கில்,அன்றைய காலகட்டத்தின் அரசியல்,திட்டங்கள்,நடைமுறைகள்,மக்களின் வாழ்க்கை ச+ழல்கள்..என இன்னும் ஏராளமான விஷயங்கள் உள்ளன.

காந்திக்கும்,காந்தியத்துக்கும் துரோகம் செய்பவர்களாலேயே காந்தியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.காந்தியின் நூற்றாண்டிலேயே காந்தியவழி ஆட்சியமைப்பில், சமூகப் பழக்கவழக்கங்களில், நாகரீகத்தில் என மக்களின் வாழ்க்கை சார்ந்த எதிலும் செல்வாக்கைப் பெறவில்லை என்பதையும் கண்டு கொள்கிறாள் யமுனா.

உலக அளவில் வளர்ந்து வந்த,லாபநோக்கோடு கூடிய தொழில்கள்,வியாபார பரிவர்த்தனைகள்,அதனால் ஏற்பட்ட சமூக கலாச்சார மாற்றங்கள்,இந்தியாவிலும் அரசியல்சூழலை மாற்றும்.அது பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் என்பதையும்,ஒட்டுமொத்தமான சமுதாய விடுதலைக்கு காந்தியக் கொள்கைகள் வழி வகுக்காது என்பதையும்,காந்தியின் பெயரால் நடத்தப்பட்ட ஆசிரமத்தில் வளர்ந்த யமுனா புரிந்துகொள்வது போலவே,இந்நாவலின் மூலம் நாமும் புரிந்து கொள்ளமுடிகிறது.

காந்தியின் பெயரை,எதற்கெடுத்தாலும் ஒரு டிரேட்மார்க்கைப் போல,உபயோகப் படுத்திக்கொண்டிருக்கிற அரசியல் நிலவுகிற இந்தியாவில் இன்று வரை,ஒரு தலித் கோவிலுக்குள் நுழைய முடிவதில்லை.கௌரவக் கொலைகளுக்கும, பாலியல் குற்றங்களுக்கும்; குறைவில்லை.சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து,இன்னும் ஏழைகளின் சதவீதம் குறையவில்லை என்பது உட்பட ஆயிரமாயிரமாய் குறைகளும் குற்றங்களும் இருக்கத்தானே செய்கிறது.இதற்கெல்லாம் மாற்றுவழிதான் என்ன..? என்ற கேள்வியையும் இந்த நாவல் வாசகர்களின் மனதில் விதைத்துத்தான் செல்கிறது.!
----------------------

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (1-Nov-14, 3:59 pm)
பார்வை : 192

சிறந்த கட்டுரைகள்

மேலே