முதுகெலும்பி 7

ஸ்ஸப்பா.. என்ன மழ... இந்த வருசந்தே பூமி குளுந்திச்சி போங்க... இப்பதா வாமட(வயலுக்கு தண்ணீர் வரும் வழி ) கட்டிவிட்டுட்டு... தண்ணி வடிச்சிவிட்டுப்புட்டு வாறன். அப்புறம் இந்த கொட்டாய் வேற.. மோடுகீத்து பிஞ்சிபோயி ஒழுகிகிட்டு கெடந்திச்சி.. அதையும் நாலு பனைமட்ட வச்சி மோட்டக்கட்டி.. இப்பதா வந்து உக்கார்றேன்.. கோச்சிக்கிறாதீய.. கொஞ்ச நாளு சொனங்கிருச்சி.

அப்பறம்... எல்லாரும் தீவளி எப்படி கொண்டாடுனீய? நீங்க என்ன பட்டணத்துகாரவக..வெடியெல்லாம் வெடிச்சி நல்லா பவுசாத்தா கொண்டாடி இருப்பீக. இங்கிட்டெல்லாம் அப்படி இல்லைங்க... நாலு வெடி வாங்குனாக்கூட ஈரக்காத்துக்கும் நனைஞ்ச கூரைக்கும் புசுக்..புசுக்ன்னு கோச்சிக்கிட்ட புதுமாப்புள கணக்கா பொகையும். அம்புட்டுதேன்..

அப்பறம் அன்னைக்கிதா அம்மா தோசை இட்டிலி எல்லாம் சுடும். அப்பறம் அரிசி முறுக்கும்.. அதிரசமும் தின்னுபுட்டு மத்தியானம் 3 மணிக்கா டூரிங் கொட்டாயில போயி நின்னமுன்னா 2 ரூவா டிக்கெட்டு.. உள்ளார நெல்லு சாக்குகட்டி இருட்டாக்கி வச்சிருப்பாய்ங்க... கிழிஞ்ச சாக்குவழி வெளிச்சம் வந்தாலும் அதயெல்லாம் கண்டுக்குறாம மண்ணுமுட்டு குமிச்சி உக்காந்து படம் பாப்பம் பாருங்க.. அதுதெங் தீவாளி எங்களுக்கு... அப்பிடியே ஓடிப்போயிரும் அந்த நாளும்..

சரி.. இப்ப நாம யாரப் பத்தி பேசப்போறேம் தெரியுமா..? எங்க ஊருல ஒரு சில்லுண்டி இருக்கா... ஓடுநண்டு இருக்காம்ல...அவம் ஆளுன்னு சொல்லிக்கிட்டு திரிவாம் பய.. அந்தப்புள்ள பேரு நீலாத்தாள். புதுசா இருக்கா..? எங்க ஊரு பக்கம் இருக்க டவுனுல உள்ள கோயிலு பேரு நீலகண்ட புள்ளையாரு கோயிலு.அதனால எங்கள்ள பலபேருக்கு...நீலாத்தா... நீலகண்டன்...இப்படித்தாம் பேரு இருக்கும்.. நாங்க அவள நீலா ன்னு கூப்பிடுவம்...

ம்ம்ம்..நீலாத்தா... பதினாலு வயசு பட்டாம்பூச்சி. இவா ரெட்டப் பொறந்தாள செறு வயசுலையே சீக்கு கொண்டுபோக.. அப்பனாத்தா மொத்த செல்லமும் இவளுக்குதெம்.துறுதுறு கண்ணும் ரெட்டச்சடயுமா அவ வரப்புல வாற அழகு இருக்கே... அந்த பச்ச நாத்துக்கும் வாடாமல்லி கலரு பாவாட சட்டைக்கும்.... அடடா... புசுசா பொறந்த கன்னுக்குட்டி துள்ளிக்கிட்டு வருமே.. அப்பிடி இருக்கும். அம்புட்டு அழகுங்க...ஒரு வாட்டி வரப்புல அவா ஓடிவர...ஓடுநண்டு எதுக்கால ஓடியாராம்..அவ சறுக்கி விழுகப்போக..இவம் கையப்புடிச்சி தூக்கிவிட்டானாம். அதுல இருந்து அவம் ஒருத்தம் முன்னாடிதா வெக்கப்படுவா அவ.. என்னையெல்லாம் அண்ணேம்பா... தூரத்துல போனப்பறம்.. டேய்ய்ய்ய்ய்.. முதுகெலும்பியேயேய்..ன்னுட்டு வீட்டுக்குள்ள ஓடிருவா.... துறுதுறுத்த வாலு..

ஒருநா நா ஒழவு ஓட்டிக்கிருக்கப்ப.. வந்தா....

” அண்ணே... ஏம்புட்டு ஆட்டுக்குட்டிய பாத்தியளா..? செவளக் குட்டிண்ணே.. நெத்தில கூட வெள்ளையா பொட்டு இருக்கும்ல..... காணும்ணேய்...” எங்கம்மா என்னைய கொன்னேபுடும்ண்ணே...” அழுகாத கொறையா கேட்டா...

"என்னாடி சில்லுண்டி.... ஆட்டத்தேடி வாறீயா..... இல்ல ஒம் ஆளத்தேடி வாறீயா....? .......ந்தா பாரு.. அவம் நீர்க்குழலி வயலுக்கு பக்கம் ஓடிக்கிருக்காம்..ன்னேன்..

அவளும் வெக்கமும் பயமும் கலந்துக்கிட்டே....” அண்ணே... அம்மா திட்டும்ண்ணே.... சொல்லுங்கண்ணே...ன்னு கொஞ்சலா கெஞ்சுவா....

நானும்.. நாத்தங்கால மேஞ்சிபுடும்ன்னு எருக்கம்பொதருக்குள்ள கட்டிவச்சிருந்த அந்தக் குட்டிய “ அந்தா கெடக்கு போயி அவுத்துக்கம்பேன்.. அம்புட்டுதே.... ஒடனே வந்து சேந்துக்கிரும் துள்ளல்.. அந்தகுட்டிய அத பெத்த தாயி அப்படி பாத்துகிருமான்னு தெரியாது... அப்படி பாத்துகிருவா நீலா...

எங்க ஊரு கொளத்துக்கு நடுவால ஒரு பூவரச மரம்இருக்கும். மழை.... பனிகாலத்துல தண்ணி கெடக்குறதுனால அங்க யாரும் போகமாட்டேம்.. கோடையிலதாம் அங்கிட்டு போக்குவரத்து எல்லாம்... அவுகதா எங்க காவச்சாமி... ஆனிலயோ ஆடிலயோ ஏதாவது ஒரு நல்லநாளு கெழம பாத்து பூச வச்சிக்கிருவம்.அப்ப எங்க எல்லாரு வீட்டுக்குமா ஏதாவது ஆடோ கோழியோ நேந்து விட்டத அறுத்து சாமிக்கி படச்சிவச்சி கும்பிடுவம்.

கொளத்துல தண்ணி வத்த ஆரம்பிச்சா மொதமொதன்னு வெசனப்படறது நீலாதேம். தண்ணி வத்த வத்த அவ.. மொகமும் வாட ஆரம்பிக்கும்.. ஆட்டுக்குட்டிய அப்பிடியே நெஞ்சோட சேத்துவச்சி அணைச்சிக்கிருப்பா....

“அது.... நம்ம சாமிடா நல்லான்...(ஆட்டுக்குட்டிக்கு அவ வச்ச பேராம்) நா ஆடிக்கு முன்னாடி உன்னைய அங்க அனுப்பி வைக்கிறேம். நீ மட்டும் போயி.. சாமி..சாமி.. என்ன பலி கேக்காத... நீலாவுக்கு நான்னா ரொம்ப புடிக்கும்ன்னு சொல்லிட்டு ஓடியாந்துரு...நானும் கரையிலே நின்னு உன்ன விட்டுத்தர கேட்டுக்கிறேம்” ம்பா. நல்லானும் எதோ புரிஞ்ச மாதிரியே அவ ரெட்டச்சடைய மோந்து பாத்துக்கிட்டே முருங்கத்தளைய மென்னுக்கிருக்கும்.

போனவருசம் கொடைக்கி இப்படித்தான். நல்ல கருப்பும் வெள்ளையுமா கலந்த ஒரு குட்டிய இப்பிடித்தா வச்சி வளத்திக்கிருந்தா. அவுக அம்மாவுக்கு காலுலவலி சரியாகணுமின்னு அவுக அப்பா வேண்டிக்கிட்டாகளாம். காலுல வலியும் சரியாப் போச்சி. அன்னைக்கு ஆட்ட இழுத்துகிட்டு போறப்ப இவ அழுது எறஞ்சது இன்னும் கண்ணுக்குள்ளே நிக்கி.

ஒருநா வந்து கேட்டா..” முதுகெலும்பிண்ணே.... நாமள படைச்ச.... பாத்துக்கிற சாமிக்கி நாம ஆடு குடுக்குறேம்.. கோழி குடுக்குறேம்... அப்ப ஆட்டையும் கோழியும் அவருதான படைச்சாரு.. அவரே படைச்சி அவரே திம்பாரா? அப்பறம் ஏண்ணே.... உசுரா போனது கறியா வருது..? இந்த சினிமாவுல சடக்குன்னு காணாம போயிரும்ல.. அந்த மாதிரி சாமி வந்து எடுத்துக்கிட்டு போக மாட்டாரா? ம்பா.... பதிலு சொல்லத் தெரியாம முழிக்கிற எனக்கு நீர்குழலி சின்ன வயசுல கேட்டது நெனப்புக்குள்ள ஓடும்..

“ ஏண்டா இவனே.... நாம காவச்சாமிக்கு ஆடு வெட்றாகளே.... அப்ப ஆட்டுக்கும் அது சாமிதான..? அப்ப ஆட்டுக்கு ஒரு வெசனம் வந்தா என்னடா வெட்றேன்னு நேந்துக்கிரும்? “ ம்பா... அப்பவும் இப்பிடித்தா முழிச்சி நின்னுருப்பேன். ஆனா அதே நீர்க்குழலி இப்ப ஆட்டைப்புடிச்சி தரதரன்னு இழுத்துக்கிட்டு போறது வேற கதை..............

நீலாகிட்ட கேப்பேன்.. “ ஒனக்கு ஏம்லா.. ஆட்டுக்குட்டி மேல இம்புட்டு பிரியம்...?”,

“ நா நாலாப்பு படிக்கிறப்ப நம்ம ஊரு திருவிழாவுல படம் பாத்தேனே....
அந்த படத்துல ஆடு வந்து கெட்டவங்கிட்ட இருந்து அந்த அக்காவ காப்பாத்துமே. அந்த மாதிரி என் நல்லானும் என்ன பாத்துக்கிருவான்ல. ன்னு சொல்லிட்டு எப்பவும்மாதிரி ஓட ஆரம்பிச்சிருப்பா... கூடவே பாட்டும் ..

“நல்லானாடே... எந் நல்லானாடே...
நானும் ஓட வாடி ஆடே..
கொல்லைப் பக்கம் கொமட்டிக்காயும்
குருதுச்சந்துல கோவக்காயும்
தங்கம் ஒனக்கு வச்சிருக்கேம்....
தாவி ஓடி கடிச்சித் தின்னு.....”

அவ வாடாமல்லிக் கலரு பாவாட காத்துல பறக்க... எதோ கொடிதாம் பறக்குதுன்னு அதப் புடிக்க துள்ளிக்கிட்டே தொரத்திப்போகும் நல்லானும்.......
(இன்னும்....... வளரும்..)

எழுதியவர் : நல்லை.சரவணா (5-Nov-14, 12:32 pm)
பார்வை : 203

சிறந்த கட்டுரைகள்

மேலே