முதுகெலும்பி 8

“ இப்பிடியே எம்புட்டு வ்ருசந்தே.. காடு... காளமாடுன்னு சுத்திக்கி கெடப்பானாம் ..? கால காலத்துல ஒரு கால்கட்டப்போட்டு குடும்பங் குட்டியுமா இருப்பான்னா.... எப்பப் பாத்தாலும் இந்த வயலு.. ஒழவு..... கத சொல்லுறது..... எனக்கும் இடுப்பு கடுகடுத்து வருதாத்தா...”, பக்கத்து வீட்டு அம்மாச்சிகிட்ட பொலம்பிகிட்டு கெடக்கும் அம்மா.... நா வாறவரைக்கும்....! .எந்தல தெரிஞ்சா போதும்... வளக்குள்ள பதுங்குன எலி கணக்கா ...அப்பிடியே எதுவும் பேசாம கல்லுக்குட்டாம் மாதிரி மூஞ்ச இறுக்கமா வச்சிக்கிட்டு திரும்பிக்கிரும்...

அம்மாச்சியும் “ ஏண்டா.. சின்னக்கெழவா.. நா குளுப்பாட்டி விட்டது....! குளிக்கிரது எப்பன்னு.........”, வாங்குன வெத்தலைக்கி ஏதாவது சொல்லணுமின்னு நக்கலு பேசிட்டு எந்திரிச்சி போயிரும்....

நா இன்னமும் மொட்ட மரமாக் கெடக்குறேன்னு தீரா வெசனம் அம்மாவுக்கு... ஆமாங்க இந்தத் தையில எப்படியும் கட்டிப்புடணும்.ஏதோ இந்த வருசந்தே வானம் மொகம்பாத்து நல்லா வெதச்சி விட்ருக்கோம். பயிரெல்லாம் பச்ச போர்வ போத்துனா மாதிரி பூச்சிக்கடி புழுச்சுருட்டு எதுவும் இல்லாம அப்பிடியே கம்பீரமா நிமிந்து நிக்கி... அறுக்குற நேரத்துல மட்டும் வானம் இடுப்புத் துணிய கட்டிக்கிருச்சினா எங்க கோமணம் அவுறாம இருக்கும்.. அறுப்ப அறுத்து வீடு சேத்துருவம். அப்பறம் ஒரு கவலையும் இல்ல.. வாரவுகளுக்கு வயிறார பொங்கிப் போடுவம்ல...

இப்பிடியே பல யோசனையாவே சாமித்தாத்தா கடக்கி வந்தெம். ஒரே சலசலப்பு....எல்லா சனமும் கொஞ்சம் வேகமாத்தா பேசிக்கிருந்தாய்ங்க... என்னடா....ன்னு போயிப் பாத்தா.... அட நம்ம மயிலன்.... அஞ்சி வருசத்துக்கு முன்னாடி ஊரவிட்டுப் போயிருந்த .... அப்படின்னு பொய் சொல்லப்புடாது உங்ககிட்ட... ஊருக்காரவுக சேந்து போகவச்சிருந்தன்னு சொன்னா சரியா இருக்கும்.. எனக்கு வயசுல மூத்தவம்ன்னாலும்.... மயிலா..ன்னுதேம் கூப்பிடுவெம்..

“ நீ எதுக்கு இப்ப இங்கிட்டு வந்த ? நீ இங்க இல்லாத புண்ணியத்துல எதோ இந்த வருசந்தேன் சாமி மொகம்பாத்து மழபேஞ்சி வெதச்சி விட்ருக்கோம். அதுல நெருப்ப வைக்க வந்தியாடா..? கடையில எரியிற அடுப்பு மாதிரியே வேகமா கத்திக்கிருந்தாரு இன்னொரு கோமணத் தாத்தா...

“ மயிலா... நல்லருக்கியாடா...? எப்படா வந்த..?”

“வாடா.. முதுகெலும்பி... என்னமோ கத சொல்லிக்கிட்டு திரியிறியாம்ல... டவுனுக்குள்ள பேச்சி வந்திச்சி...அவிங்களும் நம்ம ஊருக்கு வர ஆசப்படுறாய்ங்கடா... நம்ம மனுசப்பயலுகள நல்லாத்தா சொல்லிகிருக்க...” அதே பாசம் மாறாம சொல்லிப்புட்டு ....

“இப்ப என்னத்துக்கு கொதிக்கிறிய சித்தப்பு..?நா ஒன்னும் ஒங்க கொழாயடில வாங்கிக்குடிக்க வல்ல..மழ நல்லா பேஞ்சி கெடக்குல்ல... வெதச்சி விட்ருக்கிய... அறுத்து அடுக்கியும் வப்பிய... நெறம்ப சந்தோசம் சாமி....! ஆமா.. எம்புட்டுன்னு சொல்லி யாவாரம் பண்ணுவிய...? வெளில நடக்குற நாட்டு நெலவரம் என்னனு தெரியுமா..? நாக்க வெட்டுனவனுக்கு எம்புட்டு காலந்தான் நன்றிக்கடனா இருப்பிய..?,” சூட்டுல கொதிக்கிற எண்ண கணக்கா பொரிஞ்சி தள்ளிக்கிருந்தாம் மயிலன்...

அவம் ஊரவிட்டுப்போக காரணம் என்னன்னா..... நானெல்லா அப்ப வயலுக்கு பழகாத காலமுங்க.இவம் அப்பவே நல்லா ஒழப்பாம்... கூடவே நெறையா படிப்பாம். வெளியூருல நடக்குற செவப்புக்கொடி கூட்டத்துக்கெல்லாம் போயி அவக பேச்செல்லாம் கேப்பாம்..கொஞ்சம் வெவரமான ஆளுன்னே வச்சிக்கிரலாம்..அவன.....!

எங்க நெல்ல வருசா வருசம் மொத்தமா வந்து எடுத்துக்குற ஒரு யாவாரி.. யாவாரின்னு சொல்லுரதவிட அவுக பரம்பரன்னுதே சொல்லணும்.அவுக பாட்டம்.. அப்பாரு.. இவரு.. இப்பம் இவருபுள்ளையும் ... இந்த வேலதெம்.. எங்க ஊரு மட்டுமில்ல.. சுத்தியிருக்க எல்லா ஊரும் இவுககிட்டதே கணக்கு வழக்கு எல்லாம்...

என்ன வெல.. ஏது வெலன்னுல்லா நாங்க கேக்குறது இல்ல... அவுக சொல்றதுதெம். மறுபேச்சு பேசாம எங்காளுகளும் குடுத்துப்புடுவாக. மொத்தமா கணக்கு முடிக்கிற நாளைன்னைக்கி ஒரு கறிவிருந்து வச்சிட்டுப் போயிருவாக அவுக... அந்த சோத்துக்கடனுக்குதேம் மொத்த சனமும் அவுக சொன்ன சொல்லுக்கு வாக்கு மாறாது... அடுத்த பேச்சு பேசாது... அவுகளும் விருப்பத்துக்கு செஞ்சிக்கிருப்பாக...
மயிலன் மாதிரியே சாமித் தாத்தாவுக்கும் எல்லாந் தெரியும். இதே மாதிரி ஒரு நாளு பேசிக்கிருக்கப்ப...

“மயிலஞ் சொல்லுறதுல என்ன தப்பு....?அவம் பொருளுக்கு அவம் வெக்கிராம் வெல...அவம் என்ன அவுக வீடு சொத்தா எழுதிக் கேக்குறாம்..? வெளைய வச்சவம் வெலய வக்கிறதுல என்ன்.....” அப்பிடின்னு பேசிக்கிருக்கப்பவே...........

“சாமி.... நீரு ஆத்துறதோட நிறுத்திக்கிரும்...அப்பவே நீங்க ஊரவிட்டு தூரதேசம் போனவுக...உங்களுக்கு இங்கின நடப்பு ஒண்ணுந் தெரியாது...” பொசுக்குன்னு பல்லுமேல நாக்கப்போட்டு கொட்டிப்புட்டாரு இப்ப மயிலங்கிட்ட வாதம் பண்ண தாத்தா....
அன்னையில இருந்து இவருக்கும் சாமித்தாத்தவுக்கும் பேச்சே இல்ல...டீ குடிக்கிறதோட.. குடுக்குறதோட சரி...

இப்ப புரிஞ்சிருக்கும் என்ன காரணமின்னு...அத்தோட மயிலன எல்லாரும் “ நீ இங்க இருந்தா பேசியே கொஞ்ச நஞ்ச பொழப்பையும் கெடுத்துப்புடுவ... நீ மகராசனா இருப்ப...ன்னு சொல்லி அவன ஊரவிட்டே போகவச்சாக...அதுக்கு அப்பறம் இன்னைக்கிதா ஊருக்கு வந்திருக்காம்...

“ டேய்.. முதுகெலும்பி... நீ எம்புட்டுக்குடா ஒரம் வாங்குன..?

“ அது.......... ஒரு ஆயிரம் ரூவா இருக்கும்டா... ஆனா... வக்காலி ஒத்த ரூவா கொறையலடா”

“தண்ணி ஒழுங்கா வந்திச்சா...?”

“எங்க...............!! மழதேம்... இந்த வருசம் பரவால்லடா...!”

“வெதநெல்லு.... அவங்குடுத்தானா...?!”

“நீ என்ன பேசுறடா.... அவம் எப்ப குடுத்தாம்.. எல்லா நாம சேத்து வச்சிகிறதுதா...!!”

“ஆக.... எல்லாமே நம்மோட்டு.... இல்லையா...? அப்ப எதுக்கு அவம் நம்ம பொருளுக்கு வெல வக்கிறாம்? நீ கஷ்டப்பட்டு மழவெயிலு பாக்காம ஒழைக்கிற... அதுக்கு நீதாண்டா வெல வக்கணும். அவம் யாரு..? அவம் ஆயிரம் ரூவாய் கொள்ளையடிச்சி அதுல நூறு ரூவாய எலும்புத் துண்டா போட்றாம்... அதத் தின்னுப்புட்டு காலம்பூரா கையக்கட்டுவியளோ...?”

.......... இவிங்கதா கையக்கட்டி...கட்டி காலாவதியாப் போயிட்டாய்ங்கன்னா.. அவங் கையில உள்ள வெலங்க ஒங்கைக்கி ஏண்டா மாத்தி விட்றாம்..? ஒன்னோட எடம்.. ஒன்னோட பொருளு.... நீ வக்கிறதுதா வெல..... புரியுதா"ன்னு அவந் துண்டு இருக்கிற நெறக் கண்ணோட உருட்டி முழிச்சி.. கேக்க....

எனக்கு கொஞ்சம் பயமா இருந்தாலும்.... மயிலாஞ் சொன்னதும் ஞாயம்தானுங்களே...நாந் துணி எடுத்தாலும்... தூவக்கா வாங்குனாலும் அவம் வக்கிறதுதே வெல...அப்பறம் நா வெதச்சதுக்கும்... அறுத்ததுக்கும் அவம் எப்படி சொல்லலாம்..? நானுல்ல சொல்லணும்....?!

ஏதோ வெயிலடிச்சி வெலகுன பனிமூட்டம் மாதிரி... மயிலான கூட்டிகிட்டு ஊருக்குள்ள நடக்க ஆரம்பிச்செம்...சாமித்தாத்தா எப்பவும்போல அர்த்தமா சிரிச்சிக்கிட்டே அந்த கோமணக்கெழவனுக்கு சாயந்தர டீய ஆத்த ஆரம்பிச்சிருந்தாரு......

(இனி... வேகம்)

எழுதியவர் : நல்லை.சரவணா (7-Nov-14, 3:35 pm)
பார்வை : 168

சிறந்த கட்டுரைகள்

மேலே