குணா

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று.

கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்? இந்த உடலுக்குள் தோன்றும் பல ரசாயன மாற்றங்களுக்கு எது காரணம் என்றெல்லாம் யோசித்து அந்த உணர்வுகளை மனதைக் கடந்து வெளிப்படுத்த முயலும் போது ஆன்மீகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால்தான் என்ன? பயன்படுத்தாமல் இருந்தால்தான் என்ன? 1992ல் அதாவது 24 வருடங்களுக்கு முன்பே கமல் குணா என்ற திரைப்படம் மூலம் பேச முயன்றிருக்கும் இரசவாதம் இதுவாய்த்தான் இருக்க வேண்டும் என்று கமல்ஹாசன் எதை நினைத்தார் என்று எனக்குத் தெரியவில்லை ஆனால் இத்தனை வருடங்கள் கடந்து அந்தத் திரைப்படம் ஏற்படுத்தும் அதிர்வலைகளையும், உணர்வெழுச்சிகளையும் இன்னதுதான் என்று வரையறுத்து என்னால் கூறமுடியவில்லை.

ஒரு படைப்பாளி ஏதோ ஒன்றைப் பேச வருகிறான். அப்படி பேச வருவதற்கு அவனுக்கு ஏதோ ஒரு தாக்கமிகு நிகழ்வு காரணமாயிருக்கிறது ஆனால் அவன் பதிவு செய்யும் படைப்பு வேறு ஒரு பரிமாணத்தில் அவன் பெற்ற தாக்கங்களை உள்ளடக்கிக் கொண்டு அவனின் அனுபவங்களோடு வெடித்துச் சிதறி வேறு ஒரு புதியதாய் பரிணாமிக்கிறது. குணா திரைப்படத்தில் கதாநாயகனான குணாவை மனநிலை சரியில்லாதவராய் அவரைச் சுற்றி இருப்பவர்கள் நினைப்பதாய் கதை சொல்லிக் கொண்டே சென்றாலும் திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் குணாவைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு கதை மாந்தரும்தான் மனநிலை சரியில்லாதவர்களாய் இருக்கிறார்கள் என்பதை மறைமுகமாய் விளக்கிக் கொண்டே செல்கிறார் கதாசிரியர். தன்னுடைய பிறப்பே பிடிக்காத ஒருவன், தன்னுடைய சூழலை வெறுக்கும் ஒருவன் அதை விட்டு விடுபட்டு ஒரு பரிபூரண தெளிவான மனோநிலைக்குள்ளும், சூழலுக்குள்ளும் பயணிக்க அவனுக்குள் யாரோ தோற்றுவித்த அபிராமி உதவுவாள் என்று கருதுகிறான். அபிராமி என்ற பிம்பம் அவன் மனதில் பரிபூரணமாய் நிறைந்து நின்று காதலாய் மாறி என்றோ ஒரு நாள் அவனுக்கான அபிராமி வந்து தகப்பன் யாரென்றே தெரியாத அவனை, தவறான தொழில் நடத்தும் தாயிடமிருந்து, உடலை விற்றுப் பிழைக்கும் கஷ்டங்கள் நிறைந்த பல பெண்களுக்கு நடுவே வாழ்வதிலிருந்து, தினமும் பணம் கொடுத்துவிட்டு பெண்களை மிருகமாய் புணர்ந்து செல்லும் அழுக்கு மனிதர்களிடமிருந்து, தவறான தொழில் செய்யும் தன்னைச் சுற்றி இருக்கும் அனைவரிடமுமிருந்து விடுதலையாக்கி கொண்டு செல்வாள் என்று நம்புகிறான்.

குணாவிற்கு டாக்டர் நல்லவாராய்த் தெரிகிறார், ரோசி நல்லவள் என்றாலும் அவள் சூழ்நிலைக்காக உடலை விற்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. அம்மா மீது வெறுமனே பாசம் மட்டுமே இருக்கிறது. மொத்தமாய் இந்த அடையாளத்தை எல்லாம் தொலைத்து விட்டு தனக்குள் இருக்கும் ஆழமான உணர்வுகளுக்குள் வாழ ஆசைப்படும் குணா போன்ற கதாபாத்திரங்களைப் படைத்தல் மட்டும் பெரிய விசயமில்லை, அந்த பாத்திரத்தின் தன்மைக்கு ஏற்றார் போல சரியான அளவுகளில் வசனங்களும் எழுதப்படத்தானே வேண்டும். குணாவிற்காக பாலகுமாரன் எழுதி இருக்கும் வசனம் வெற்று வார்த்தைகள் கிடையாது. குணா பேசும் ஒவ்வொரு வசனத்தையும் பாலகுமாரனை அன்றி வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாய் எழுதி இருக்கவும் முடியாது. ஒவ்வொரு வசனமும் அந்த கதாபாத்திரத்தோடும் காட்சியமைப்போடும் மட்டும் தொடர்புடையது கிடையாது.

சூட்சுமமாய் ஒவ்வொரு வசனமும் விவரிக்க முடியாத வெளிக்குள் நம்மைக் கூட்டிச் சென்று நம் வாழ்க்கை என்று கருதிக் கொண்டிருக்கும் இந்த தினசரி நிகழ்வுகளில் எத்தனையோ முரண்பாடுகள் கொண்ட மனிதர்களுக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் நமது கறைபடிந்த அவல நிலையை எடுத்துரைக்கிறது. தனக்குள் தானே முரணாய் நின்று கொண்டு ஒட்டு மொத்த பிரபஞ்ச இயக்கமும் இருப்பதை இருக்கிறதா என்று வேவு பார்த்துச் சரி செய்து கொண்டே அசுர வேகத்தில் யுகங்களாய்ப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இப்படி அசுரவேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த பேரியக்கத்தின் ஆதி இயல்பு எந்த வித சரிபார்த்தலும் அற்றது. கற்றுக் கொள்ள அங்கே எதுவுமில்லை, கற்றுக் கொடுக்கவும் யாருமில்லை. மனம் இல்லை.இயக்கம் இல்லை. அங்கே இருந்த ஒரே ஒரு உணர்வு காதல். காதல்தான் பிரபஞ்சத்தின் ஆதி உணர்வு. காதலோடு நின்று போகும் எல்லா விசயங்களும் சுவாரஸ்யப் பெருங்கடல்கள் தாம். அங்கே சந்தோசம் மட்டுமே நிலைத்து நின்று கொண்டிருக்கிறது.

காதல் என்ற உணர்வே இன்று வரை இந்தப் பிரபஞ்சத்தை இழுத்துப் பிடித்து எல்லா சமமற்ற நிலைகளையும் சரி செய்து கொண்டே பயணித்துக் கொண்டிருக்கிறது. காதல் என்ற உணர்வைத் தாண்டி மீதி எல்லாமே இங்கே வியாபாரம்தான். இதைக் கொடுத்தால் அதைத் தருவாயா? அதைச் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்? என்ற எதிர்பார்ப்புகள் நிறைந்த வியாபாரம். இங்கே ஆன்மீகம் என்ற விசயம் எப்படித் தவறாகப் பிரயோகம் செய்யப்பட்டு சிதைந்து கிடக்கிறதோ அதைப் போலவேதான் காதல் என்ற வார்த்தையும் ஏதேதோ காரணங்களுக்காய் பயன்பாடு செய்யப்பட்டு சிதைந்து கிடக்கிறது. தொடுவது காதலாகாது. பிள்ளைகள் பெற்றுக் கொள்வது மட்டும் காதலாகாது. பொருளீட்டுவது மட்டும் காதலாகாது ஆனால் இங்கே எல்லா விசயத்திற்கும் காதல் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. காதலைச் சொல்லி கல்யாணம், பிள்ளைப் பேறு, பிள்ளைகளை வளர்த்தல், சொத்து சேர்த்தல், இன்பம் துய்த்தல், வியாபாரம் செய்தல் என்று இங்கே எல்லாமே காதலை உள்ளாடையாக உடுத்திக் கொண்டு மேலே பட்டுப்புடவையையும், பட்டு வேட்டியையும், அங்கவஸ்திரத்தையும், நகை நட்டுக்களையும் போட்டுக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்கின்றன.

காதலின் பொருட்டு நிகழும் எதற்கும் காதலைத் தவிர வேறொன்றுமே தேவை கிடையாது. காதலிக்க மட்டுமே உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லும் எவனும் அல்லது எவளும் குணாவாகத்தான் பார்க்கப்படுவார்கள். குணா அபிராமியைத் தன்னை மீட்டெடுத்து கொண்டு சென்று பேரன்பில் திளைக்க வைக்கும் ரட்சகியாய்த்தான் தன்னுள் வரிந்து கொள்கிறான். அவனுக்கு அபிராமிதான் எல்லாமே. இப்படியான ஒரு மனோநிலைக்கு அவன் வருவதற்கு தன்னை விடுவித்துக் கொண்டு எங்கோ சென்று விடத் தோன்றுவதற்கு அவன் எப்போதோ வாசித்து மனனம் செய்த அபிராமி அந்தாதி உதவ அபிராமி என்னும் பெண் அவனுக்குள் காதலாய் உருவமற்று அலைய ஆரம்பிக்கிறாள். குணாவால் உறங்க முடியாது, சரியாக உண்ண முடியாது, அவனால் சராசரி மனிதனாய் இருக்கவும் முடியாது.

அவனுக்கு அபிராமி வேண்டும், அபிராமியைக் காணும் வரை அவனால் சராசரியாக இருக்க முடியாது ஏனென்றால் அபிராமி அவனை மீட்டெடுத்து சிக்கலில்லாத வாழ்க்கைக்குள் கூட்டிச் செல்லப் போகும் ஒரு சாமி. எதேச்சையாய் நிகழும் சம்பவங்களும், சுயநலத்துக்காய் குணாவைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் மனிதர்களும் குணாவை அபிராமி என்னும் காந்தத்தை வைத்து இரும்பை இழுப்பது போல இழுத்து காரியங்கள் சாதித்துக் கொள்ள, எதேச்சையாய் குணாவின் அபிராமி தேடலில் வந்து சிக்கிக் கொள்கிறார் அந்தப்படத்தின் கதாநாயகி ரோஷிணி. அவ்வளவுதான் அந்த கணத்தில் நிகழும் யாவும் குணாவிற்கு அவளை அபிராமியாய் அடையாளம் காட்ட....தன் தேடல் நிறைவு பெற்ற பெருமகிழ்ச்சியில் " பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க " என்று அவன் ஆனந்தக் கூத்தாடுகிறான்.

கமல்ஹாசன் என்னும் பிரம்மாண்டக் கலைஞனுக்குச் சொல்லியும் கொடுக்க வேண்டுமா என்ன? முக்தி, பேரின்பம், பரவசம் இவற்றை எல்லாம்
வார்த்தைகளாகப் படித்து விட முடியும், அதை அடைந்தவர்கள் அதை எப்படி சொல்ல முடியும்? கூடலின் உச்சத்தை சரியாய்ச் சொல்ல எந்த வார்தைக்குத்தான் தைரியம் இருக்கிறது? வெயிலை, கடும் குளிரை, தாகம் தீர்த்துக் கொண்ட அந்த நிறைவை எப்படி வார்த்தைப்படுத்த அல்லது எப்படி காட்சிப்படுத்த? என்று தெரியாமல் மிகையானவர்கள் குழம்பிக் கிடக்க, பேரின்ப நிலையை எய்திய ஞானியர்கள் தத்தமது பரவச நிலையை எடுத்துரைத்தல் அஞ்ஞானம் என்று ஒடுங்கிக் கொள்ள, தேடலில் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு கமல்ஹாசன் என்னும் கலைஞன் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதி. தனக்குள் இருக்கும் பெண்ணைத் தனக்குள் இருக்கும் ரட்சகியைக் கண்ட அந்த நொடி எப்படி இருக்கும்? அவளோடுதான் இனி என் வாழ்வு சிறக்கப் போகிறது, பிறப்பிலிருந்து என் மீது படிந்து கிடக்கும் பெருஞ்சுமை ஒன்று அழிந்து கரையப்போகிறது என்று அவன் நினைத்து பரவசப்படும் அந்த மோட்ச நிலையக் காணவேண்டுமெனில் நீங்கள் ஓய்வான தொந்தரவற்ற ஒரு சூழலில் பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க என்ற பாடலைக் காணொளியாகப் பாருங்கள்.

தான் காதலிப்பவளுக்கு தன்னுடைய நிலையை எடுத்துச் சொல்லும் ஒரு சராசரி மனோநிலையில் குணா அங்கே இல்லை. குணாவை யாரென்றே தெரியாத கதாநாயகி ரோஷிணிக்கும் குணாவிற்கும் உள்ள ஒரே தொடர்பு குணாவிற்கு அவள் அபிராமி என்பது மட்டுமே. குணாவின் மனம் எங்கெங்கெல்லாம் சஞ்சரித்திருக்கிறது அவனுக்கு அபிராமி எப்படியானவள் என்பதை எல்லாம் விளக்கிச் சொல்லும் லெளகீக விசய ஞானம் கொண்டவன் அல்ல குணா. எடுத்துச் சொல்வதும், விளக்கிச் செயல்கள் செய்வதும் ஏதேதோ நாடகங்கள் நடத்தி, கொடுத்து, எடுத்துக் கொள்ளத் தெரிந்தவனல்ல குணா. அவனுக்குத் தெரிந்தது, அவனிடம் உள்ளதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் அதன் பெயர் காதல். அந்தக் காதலும் கூட எதையோ எதிர்பார்த்து வந்ததல்ல அது ஒரு முக்தி அவனுக்கு. காட்சிகளின் ஓட்டத்தில் குணா தான் அபிராமி மீது வைத்திருக்கும் அன்பினை இயல்பாய் வெளிப்படுத்த வெளிப்படுத்த அந்த சுத்தமான காதல் அந்தக் கதாநாயகிக்கும் பிடிபடாமல் போகிறது. அவளின் பார்வையிலும் அவன் பைத்தியக்காரனாய்த்தான் தெரிகிறான். கபட கூட்டுகளும்,குறுக்குப் புத்தி சிந்தனைகளும் இல்லாத ஒவ்வொருவரும் இந்த சமூகத்தின் முன்பு பைத்தியக்காரர்கள் தானே...?!

குணா என்னும் திரைப்படம் சிக்கலான படமாய், புரிந்து கொள்ள முடியாத ஒரு திரைப்படமாய், எங்கிருந்தோ வெளிநாட்டுத் திரைப்படத்தைக் காப்பியடித்துக் கொண்டு வந்தது என்றெல்லாம் குறைகள் சொல்லப்பட்டாலும் குணாவில் கமல் பேசி இருக்கும், சொல்ல முயன்றிருக்கும் சித்தாந்தம் சிந்தனைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது. சூட்சுமமான பல விசயங்களைத் திரையில் கொண்டு வருவது அத்தனை சாதாரணமான விசயமில்லை என்றாலும் இதைச் செய்ய கமல் போன்ற அறிவு ஜீவிகளால் மட்டுமே எளிதாக முடிகிறது. அடிப்படையில் தவறான ஒரு அரக்க மனிதனை அடித்து மரத்தில் சொருகி சர்வ சாதரணமாய்ச் சாகடிக்கும் அதே குணாவால் ஒரு சிட்டுக்குருவியின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இங்கேயும் ஒரு உயிர், அங்கேயும் ஒரு உயிர்தான் என்றாலும் உயிரின் தன்மை அதன் குணம் இரண்டும் வெவ்வேறு, சிட்டுக்குருவி யாருக்கும் துன்பம் செய்யாத பேராசைகள் இல்லாத மனமற்ற நிலையில் வாழும் ஒரு ஜீவன் ஆனால் இஸ்மாயில் என்னும் கதாபாத்திரம் மனிதனாய் இருந்தாலும் வஞ்சங்கள் நிறைந்தவன், சுயநலத்துக்காய் மனிதர்களுக்குத் துன்பங்களைச் செய்து கொண்டிருப்பவன் என்பதால் அவன் மரணம் குணாவைப் பாதிக்காமலேயே போகிறது. ஆறறிவு என்பது வெறுமனே ஒரு எண்ணிக்கைதான் என்பதை இங்கே நம்மால் உணர முடியும்.

இயல்பாகவே அமானுஷ்யத்தன்மைப் படர்ந்து கிடக்கும் கொடைக்கானல் காடுகளைத் தேர்ந்தெடுத்திருப்பது இந்தப் படத்திற்கு கூடுதல் வலு சேர்த்திருக்கிறது. மனிதர்கள் இல்லாத இடங்களில் எல்லாம் கட்டற்ற ஒரு பெரும் சுதந்திரம் பரந்து விரிந்துதான் கிடக்கிறது. சமூக வாழ்க்கைக்குள்தான் ஓராயிரம் கட்டுப்பாடுகளும் பொதுப்புத்தியின் திணிப்புகளும் என்பதை எண்ணி பார்க்கும் போது அயற்சியாய்த்தானிருக்கிறது. காட்சிகளின் ஓட்டத்தில் அபிராமியாய்த் தன்னை உணரத் தொடங்கி,பொய்யான சமூக அடையாளத்திலிருந்து மெலிதாக விடுபட்டு குணா அபிராமியை எப்படி பார்த்தானோ அதே போல கதாநாயகியான ரோஷிணியும் பார்க்க ஆரம்பிக்கும் இடத்தில் மெலிதாய் தெய்வீகம் தனது முடிச்சவிழ்த்துக் கொண்டு பூவின் மொட்டாய் தன் இதழ்களை விரிக்கிறது.

எனக்குத் திருப்பிக் கொடுக்க
வேறு ஒன்றும் வேண்டாம் காதலியே, நீ மீண்டும் என்னை காதலாய்ப் பார்;
உன் விழிகளால் என்னை விழுங்கு,
ஆழமாய் சுவாசி; இடைவெளி விட்டு அமர்ந்து கொள்;
நீ கவிதைகள் சொல்; நான் உனக்கு கதைகள் சொல்கிறேன்;
நீ புறத்தை அறித்தெறி; புது கனவுலகிற்குள் உன்னைக் கூட்டிச் செல்கிறேன்;
நீ ப்ரியத்தை எனக்கு சுவாசமாய்க் கொடு...
நான் என் ஜீவனை உன் இதயத் துடிப்பாக்குகிறேன்,
நீ என் ரட்சகி; காதலால் என்னை ஆட்கொண்ட ராட்சசி
விடியாத இரவுகளுக்குள்ளும், முடியாத பகல்களுக்குள்ளும்
என்னைக் இழுத்துச் சென்று கரைத்துப் போடும்
என் கனவு தேவதையே வா....
என் கவிதைகளின் கருப்பொருளே வா...

சலனமற்ற ஒரு நதியின் நகர்வைப் போல குணாவுக்குள்ளும் அபிராமிக்குள்ளும் காதல் மெல்ல மெல்ல நகர்ந்து பேரன்புக் கடல் நோக்கிச் செல்லும் காட்சி விவரணைகள் எல்லாமே கவிதைகள் தாம். குணாவும் அபிராமியும், அபிராமியும் குணாவுமாய் மாறிப் போக தொல்லைகள் நிறைந்த இந்த வியாபார சமூகத்திற்குள் அவர்கள் வாழத் தகுதியற்றவர்களாகிப் போகிறார்கள். வில்லனை மலை உச்சியில் இருந்து தூக்கி அடித்து விட்டு "த்த்தூ... மனுசன்" என்று குணா காறி உமிழ்வது குறுக்குப் புத்திகள் கொண்ட 24மணி நேரமும் பலன்களை எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த எச்சில் சமூகத்தைப் பார்த்துதான் என்பது எத்தனை பேருக்குப் புரிந்திருக்கும் என்று தெரியவில்லை. கடைசியில்....அபிராமி இறந்து போனதை நம்ப மறுக்கிறான் குணா, அவள் இறப்பை மறுக்கிறான், அது ஒரு பொய் நிகழ்வு என்று நிராகரிக்கிறான், ஏனென்றால் அவன் காதலும், காதலியும் பரம நித்யமானவர்கள், அவர்களுக்கு அழிவென்பதே கிடையாது, அது ஒரு நாளும் இல்லாமல் போகாது என்பதை குணா ஆழமாய் நம்புகிறான்.

புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே

இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து
வடங்கொண்ட கொங்கை மலை கொண்ட் இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல் அரவின்
படம் கொண்ட அல்குல் பனி மொழி வேதப் பரிபுரையே.....

என்ற அபிராமி அந்தாதிப் பாடலை வலியோடு குணா உச்சரிக்க.... மனிதர்களால் உணர்ந்து கொள்ளப் படாத அந்த நித்யக் காதல் மானுட வாழ்க்கை என்னும் மரணத்திலிருந்து விடுபட்டு பேரமைதியை முட்டி மோதி மீண்டும் தன் ஆதி சொரூபத்திற்குள் மீள் பிறப்பு எடுத்துக் கொள்கிறது. வணிகரீதியாய் குணா தோல்விப்படமாய் இருக்கலாம் ஆனால் கமலஹாசன் என்ற கலைஞன் சொல்ல வந்த செய்தி என்னவென்பதை விளங்கிக் கொண்ட எங்களைப் போன்ற பல குணாக்களை இந்தப்படம் இறுகத் தழுவி வாழ்க்கைச் சிக்கல்களிலிருந்து விடுவித்து அழைத்துச் சென்று மாபெரும் வெற்றியைத்தான் அடைந்திருக்கிறது. திரைப்படம் முழுதும் பின்னணி இசையாகவும், தெய்வீகமான பாடல் மெட்டுக்களாலும் தனது ஆளுமையைச் செலுத்தியிருக்கும் இளையராஜா என்னும் பிரம்மாண்டம் இந்த விடுபடலை மிகப்பெரிய ஒரு சுகானுபவமாக்கியும் இருக்கிறது.

நிஜத்தில் மனிதர்கள் உணர்ந்து கொள்ள குணா ஒன்றும் சராசரியான மனிதக் காதலைச் சொல்லும் படமில்லை என்பது உண்மைதான்!!!!!

எழுதியவர் : Dheva .S (19-Nov-14, 7:44 am)
சேர்த்தது : Dheva.S
Tanglish : kuna
பார்வை : 348

மேலே